அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | இறுதி தொடர் |  

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும்

| இறுதி தொடர் |

குறிப்பு 05:

தயம்மும் செய்த பின்னர் தண்ணீர் கிடைத்தல் தொடர்பான சட்டங்கள்:

இதை பின்வருமாறு பிரித்து நோக்கலாம் :

 

1. தயம்மும் செய்து தொழுவதற்கு முன்னரே தண்ணீர் கிடைத்தல் :

 

நீர் கிடைக்காததன் காரணமாக தயம்மும் செய்து, தொழுவதற்கு முன்னர் தண்ணீர் கிடைத்துவிட்டால், தயம்மும் முறிந்துவிடும். தண்ணீரினால் வுழூ செய்தே தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் இருக்கும் போது தயம்மும் செல்லுபடியாகாது.

 

நபிகளார் கூறினார்கள் : ‘ஒரு முஸ்லிம் பத்து வருடங்களாக தண்ணீரை பெற்றுக்கொள்ளாத போதிலும் சுத்தமான மண், மணல், கல் போன்றவை சுத்தம் செய்யத்தக்கவையாகும். ஆனால் தண்ணீரை பெற்றுவிட்டால் அல்லாஹ்வை பயந்து தனது உடலில் தண்ணீரை பயன்படுத்தவும். அதுவே நல்லதாகும்’ (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்).

 

2. தொழுது கொண்டிருக்கும் போது நீர் கிடைத்தல் :

 

தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மழை மூலமாகவோ, வேறு வழிகளிலோ நீர் கிடைத்தால் – என்ன செய்வது?

 

இதில் அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் உள்ளன :

 

அ) தொழுதுகொண்டிருப்பவர் தொழுகையை இடைநிறுத்தத் தேவையில்லை, அவர் தண்ணீர் கிடைக்காததன் காரணமாக முறையாக தயம்மும் செய்து தனது கடமையை நிறைவேற்றியிருப்பதனால் தொழுகையை பூர்த்திசெய்வார்; மீண்டும் வுழூ செய்து தொழுகையை மீட்டத் தேவையில்லை.

 

ஆ) நீர் கிடைத்தவுடன் தயம்மும் முறிந்துவிடும் என்பதனால் தொழுகையை இடைநிறுத்திவிட்டு, வுழூ செய்து மீண்டும் தொழ வேண்டும். இக்கருத்தை ஷாபிஈ மற்றும் ஹம்பலி மத்ஹப் அறிஞர்கள் கூறுகின்றனர். பிற்கால அறிஞர்களான அல்லாமா அல்பானி (றஹ்), அல்லாமா இப்னு பாஸ் (றஹ்), அல்லாமா இப்னு உதைமீன் (றஹ்) ஆகியோரும் இக்கருத்தையே கொண்டிருக்கின்றனர். இதற்கும் மேலுள்ள ஹதீஸையே ஆதாரமாக குறிப்பிடுகின்றனர் :

 

‘…. தண்ணீரை பெற்றுவிட்டால் அல்லாஹ்வை பயந்து தனது உடலில் தண்ணீரை பயன்படுத்தவும்…’ (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்). 

(பார்க்க : ‘அல்பிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லதுஹூ’, 1/579, 580, ‘பத்ஹு தில் ஜலாலி வல் இக்ராம்’, 1/369).

 

3. குறித்த தொழுகையின் நேரம் முடிவடைவதற்கு முன் நீர் கிடைத்தல் :

 

குறித்த ஒரு தொழுகையின் நேரம் முடிவதற்குள் – அதாவது அடுத்த தொழுகையின் நேரம் வருவதற்கு முன் நீர் கிடைத்தால் – அவர் வுழூ செய்து தொழுகையை மீட்டி தொழுவது அவசியமில்லை; மீட்டித் தொழுதால் அதில் குற்றமுமில்லை. பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைகிறது :

 

அபூஸஈத் அல்குத்ரீ (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘இரு மனிதர்கள் பயணம் மேற்கொண்டிருந்த போது தொழுகை நேரம் வந்தது. இருவரிடமும் தண்ணீர் இல்லாததால் இருவரும் தயம்மும் செய்து தொழுதார்கள். (தொழுது முடித்த) பின்னர் இருவருக்கும் தண்ணீர் கிடைத்தது. இருவரில் ஒருவர் வுழூ செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ, மற்றவரோ தொழாமல் இருந்து விட்டார். பின்னர் இருவரும் நபியவர்களிடம் வந்து விடயத்தை கூறினார்கள். அப்போது நபிகளார் தொழுகையை திரும்பத் தொழாதவரைப் பார்த்து, ‘நீங்கள் ஸுன்னாவை சரியாக அடைந்துகொண்டீர்கள், உங்களது தொழுகையும் நிறைவேறிவிட்டது’ என்று கூறினார்கள். (வுழூ செய்து) மீண்டும் தொழுதவரைப் பார்த்து, ‘உங்களுக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும்’ என்று கூறினார்கள் (அபூதாவூத், நஸாஈ).

 

மேற்படி ஹதீஸ் குறித்து சிறு விமர்சனம் இருந்தாலும் வேறு ஆதாரபூர்வமான அறிவிப்புகள், இப்னு உமர் (றழி) போன்ற ஸஹாபாக்கள் சிலரின் செயல்கள் இந்த ஹதீஸின் கருத்தை வலுப்படுத்துகின்றன (பார்க்க : ‘மின்ஹதுல் அல்லாம்’, 2/96).

 

4. குறித்த தொழுகையின் நேரம் முடிவடைந்த பின் நீர் கிடைத்தல் :

 

தயம்மும் செய்து தொழுத தொழுகையின் நேரம் கடந்து அடுத்த தொழுகையின் நேரம் வந்த பின்னரே நீர் கிடைத்தால் வுழூ செய்து மீண்டும் அந்த தொழுகையை மீட்டி தொழத் தேவையில்லை. இதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தை கொண்டிருக்கிறார்கள் (பார்க்க : ‘அல்பிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லதுஹூ’, 1/578).

 

குறிப்பு : 06

காயங்கள் மீது போடப்பட்ட கட்டுகள் (bandage, plaster) மீது தடவுதல்:

உடல் உறுப்புகளில் காயங்கள், நோவுகளுக்கு கட்டுகள் போடப்பட்டிருந்தால் வுழூ செய்யும் போது அல்லது குளிப்பை நிறைவேற்றும் போது அந்த கட்டுகள் மீது தண்ணீரால் தடவுதல் குறித்து அறிஞர்களிடையே பிரதானமாக மூன்று நிலைப்பாடுகள் உள்ளன :

1. வுழூவின் போதும் குளிப்பின் போதும் இத்தகைய கட்டுகள் மீது தண்ணீரால் தடவ வேண்டும். கட்டு போடப்படாத ஏனைய உறுப்புகளை கழுவ வேண்டும், தயம்மும் செய்யத் தேவையில்லை என்பது முதலாவது நிலைப்பாடு. இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

2. கட்டு போடப்படாத உறுப்புகளை மட்டும் வுழூவின் போதும் குளிப்பின் போதும் கழுவ வேண்டும்; கட்டுப் போடப்பட்ட உறுப்புகளை கழுவத் தேவையில்லை, தயம்மும் செய்யத் தேவையுமில்லை. அவற்றை அப்படியே விட்டுவிடலாம். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் : ‘அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை’ (2:286) என்ற வசனத்தை இத்தகையோர் ஆதாரமாக குறிப்பிடுகின்றனர். அத்தோடு குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ கட்டுகள் மீது தடவுதல் குறித்து எதுவும் வரவில்லை என்பது இவ்வறிஞர்களின் கருத்தாகும். கட்டுகள் மீது தடவுதல் பற்றி ஒரு சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் ஆதாரமாக கொள்ள முடியாதளவு மிக பலவீனமானவையாகும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். (பார்க்க : ‘தமாமுல் மின்னா பித் தஃலீகி அலா பிக்ஹிஸ் ஸுன்னா’, 133 -135).

3. கட்டுகள் மீது தண்ணீரால் தடவுவதும் இல்லை, கட்டு போடப்படாத உறுப்புகளை கழுவ வேண்டியதுமில்லை. பதிலாக தயம்மும் செய்தால் போதுமானதாகும்.

மேற்படி கருத்துகளுள் மூன்றாவது கருத்தே ஆதார வலுக்கூடியதாக அமைகிறது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகிறது :

பயணம் ஒன்றின் போது ஸஹாபி ஒருவர் கல்லில் தாக்குண்டு அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அன்றிரவு அவருக்கு குளிப்பு கடமையாகிவிட, தான் தயம்மும் செய்து தொழ முடியுமா என ஏனையோரிடம் கேட்ட போது அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது என கூறவே, அவர் குளித்தார். அதனால் மரணித்தும் போனார். பின்னர் நபியவர்களிடம் சென்று இது பற்றி கூறியதும் ‘அவரை அவர்கள் கொன்றுவிட்டார்களே…. அவர் தயம்மும் செய்திருந்தாலே அது அவருக்கு போதுமாக இருந்திருக்குமே’ என்று கூறினார்கள் (அபூதாவூத், இப்னு மாஜஹ்). இந்த ஹதீஸ் அறிவிப்பு பலவீனமானதெனினும் வேறு ஆதாரபூர்வமான வழிகளிலும் அறிவிக்கப்படுவதன் மூலம் ஆதாரபூர்வமானது என்ற தரத்தை அடைகிறது என ஹதீஸ்துறை அறிஞர்கள் கூறுகின்றனர் (பார்க்க : ‘தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா’, 1/122).

குறிப்பு : 07

வுழூவோ, தயம்முமோ செய்ய முடியாதவரின் நிலை:

வுழூவோ, தயம்முமோ செய்ய முடியாத நிலையில் இருப்பவர் நிர்ப்பந்த நிலைக்குள்ளானவராக கருதப்படுவதால் தொழுகை நேரம் வந்தவுடன் வுழூ, தயம்மும் செய்யாமலே தொழ வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் : ‘உங்களது சக்திக்குட்பட்ட வகையில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்’
(64 : 16).

நிர்ப்பந்தமான சூழ்நிலையிலும் அல்லாஹ்வை பயந்து தொழுகையை நிறைவேற்றியிருப்பதால் அந்த தொழுகையை பின்னர் தண்ணீர் கிடைத்தவுடன் வுழூ செய்து மீட்டித் தொழ வேண்டிய அவசியமுமில்லை.

அல்லாஹு அஃலம்.

முடிவுரை:

கடந்த சில தினங்களாக வெளிவந்த இத்தொடர் இத்துடன் நிறைவுபெறுகிறது. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ்வின் உதவியின்றி எக்காரியமும் நிறைவுபெறுவதில்லை. அவனது உன்னத மார்க்கத்துக்கான இச்சிறு பணியை நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்வானாக.

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply