ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் | தொடர் 04 |

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள்
தொடர் 4️⃣

 

இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்: 03

நிய்யத்:
3️⃣1️⃣ ஒருவர் தனக்காக ஹஜ்ஜோ உம்றஹ்வோ செய்வதற்கு இஹ்றாமை ஆரம்பிக்கின்ற நிய்யத்தை வைத்ததற்குப் பிறகு, அதனை இன்னொருவருக்குச் செய்வதற்காக நிய்யத்தை மாற்ற முடியாது. அதனை தனக்காகவே செய்து முடிக்க வேண்டும். அதேபோன்றுதான் இன்னொருவருக்காக செய்வதாக நிய்யத் வைத்தாலும் பின்னர் தனக்காக என்று அதனை மாற்றிக் கொள்ள முடியாது.

3️⃣2️⃣ ஆனால், ஒருவர் தனக்காக ஹஜ் செய்வதற்கு முன்னால் இன்னொருவருக்கு ஹஜ் செய்ய முடியாது. அவ்வாறு இன்னொருவருக்காக என்று அவர் நிய்யத் வைத்தால் அது அது தனக்குரியதாகவே நிறைவேறும்.

3️⃣3️⃣ தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் வேறு முறைக்கு நிய்யத்தை மாற்றிக் கொள்வது தவறாகும். சிலர் பணத்தைத் தொலைத்ததின் காரணமாக ஹதீ கொடுக்க வசதியில்லாததனால் தமத்துஃ முறையில் இருந்து இஃப்றாத் முறைக்கு நிய்யத்தை மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்ய முடியாது. தமத்துஃ முறையில்தான் அவர் ஹஜ் செய்து முடிக்க வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனில் ஹஜ்ஜையும் உம்றஹ்வையும் பூரணப்படுத்தச் சொல்லி இருக்கின்றான். அவரிடம் ஹதீ கொடுப்பதற்குப் பணம் இல்லாவிட்டால் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். அதாவது ஹஜ்ஜில் இருக்கும் போது மூன்று நாட்களும் அவர் தனது குடும்பத்துக்கு திரும்பியதிற்குப் பிறகு ஏழு நாட்களும் நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும். அறஃபஹ் தினத்துக்கு முன்னர் அம்மூன்று நோன்புகளையும் நோற்றுக்கொள்வது சிறந்தது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததைப் போன்று அறஃபஹ் தினத்தில் அறஃபஹ்வில் நோன்பு நோற்காமல் இருப்பது சிறந்தது.

3️⃣4️⃣ ஆனால், இஃப்றாத் முறையில் இருந்து தமத்துஃ முறைக்கு மாறுவது கூடாது என்ற நம்பிக்கை தவறானதாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃப்றாத் மற்றும் கிறான் முறைகளில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு வந்த தன்னுடைய தோழர்களிடம் மக்கஹ்வுக்கு நெருங்கும் போது ஹதீ எனும் பலிப் பிராணி கொண்டு வராதவர்களுக்கு தங்களுடைய ஹஜ்ஜை தமத்துஃ முறைக்கு மாற்றிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.

3️⃣5️⃣ நோய் அல்லது வேறு காரணங்களுக்காக உம்றஹ்வை அல்லது ஹஜ்ஜைப் பூரணப்படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சம் இருந்தால் இஹ்றாமை ஆரம்பிக்கின்ற பொழுது நிபந்தனையிட்டுக் கொள்வது சிறந்தது. சிலர் தேவையுள்ள நிலையிலும் இவ்வாறு செய்யாமல் இருப்பது நல்லதல்ல. எனக்கு தடங்கள் ஏற்படும் பொழுது நான் எனது இஹ்றாமை முறித்துக் கொள்கிறேன் என்று நிபந்தனை இடுவதன் மூலமாக உம்றஹ் அல்லது ஹஜ் வணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் அவர் எந்த ஒரு பரிகாரமும் செய்யாமல் அந்த வணக்கத்தில் இருந்து விடுபட முடியும். அதே நேரத்தில் தேவையில்லாமல், அச்சமில்லாமல் இருக்கும் பொழுது இவ்வாறு நிபந்தனை இடுவதும் சரியானதல்ல.

3️⃣6️⃣ தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஹஜ்ஜுக்காக இஹ்றாமை ஆரம்பிப்பார். இதற்காக மஸ்ஜிதுல் ஹறாமுக்கு சிலர் செல்கின்றனர். இச்செயல் தவறானதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்த அவர்களது தோழர்கள் அவர்கள் தங்கியிருந்த அப்தஹ் என்ற இடத்திலிருந்துதான் இஹ்றாமை ஆரம்பித்தார்கள்.

தல்பியஹ்:
3️⃣7️⃣ தல்பியஹ் சொல்லாமல் இருப்பது அல்லது அதில் பொடுபோக்காக நடந்து கொள்வது அல்லது தல்பியஹ் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தாமல் இருப்பது சுன்னஹ்வுக்கு மாற்றமானதாகும்.

3️⃣8️⃣ ஹஜ்ஜுக்குரிய இஹ்றாமில் இருப்பவர் பத்தாவது நாள் ஜம்றதுல் அகபஹ்வுக்குக் கல்லெறியும் வரையில் தல்பியஹ் சொல்வது சுன்னத் ஆகும். சிலர் இதில் பொடுபோக்காக நடந்து கொள்கின்றனர்.

3️⃣9️⃣ சில பெண்கள் சப்தமிட்டுத் தல்பியஹ் சொல்வதும் தவறானதாகும். ஒரு பெண் தனக்குக் கேட்கும் அளவிற்கு தல்பியஹ் சொல்லிக் கொள்ள வேண்டும்.

4️⃣0️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன தல்பியஹ்வை சொல்வது சிறந்ததாகும். அதில் வார்த்தைகளைக் கூட்டாமல் இருப்பது நல்லது. எனினும் அர்த்தம் தவறானதாக இல்லாத வார்த்தைகளைத் தல்பியஹ்வில் கூட்டுவது குற்றமுமல்ல. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்கள் வெவ்வேறு விதமான வார்த்தைகளைக் கூறி தல்பியஹ் சொல்லும் பொழுது தடுக்கவில்லை.

➡️ இன்-ஷாஅ-ல்லாஹ் தொடரும்…

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply