ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06
16) ஸுஜூத் செய்தலும் அதில் தாமதித்தலும்:
இஃதிதால்’ நிலையிலிருந்து தக்பீர் கூறிய வண்ணம் ஸுஜூதுக்கு செல்ல வேண்டும்.
“நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் ஸுஜூதுக்கு செல்வார்கள்’ (இப்னு ஹஸைமா, அபூ யஃலா).
தொழுகையின் நிலைகளில் ஸுஜூத் மிகுந்த முக்கியத்துவமுடைய, அல்லாஹ்வுக்கு மிக
நெருக்கமாக இருக்கும் நிலையாகும்.
நபிகளார் கூறினார்கள் :”ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸுஜூதில் இருக்கும் போதாகும். எனவே அதில் அதிகமாக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” (முஸ்லிம்)
ஸுஜூத் செய்யும் போது பின்வரும் ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும்:
1 )ஸுஜூத் செய்யும் போது ஏழு உறுப்புகள் நிலத்தில் பட வேண்டும்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நான் நெற்றி, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸுஜூத் செய்யும்படி கட்டளையிடப் பட்டுள்ளேன். (நெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது) தமது கையால் தமது மூக்கை நோக்கி சுட்டிக்காட்டினார்கள்” (புஹாரி, முஸ்லிம்).
நபியவர்கள் கூறினார்கள்: நான் நெற்றி-மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு
பாதங்(களின் நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸுஜூத் செய்யும்படி
கட்டளையிடப்பட்டுள்ளேன் (புஹாரி, முஸ்லிம்).
மேற்படி இரு ஹதீஸ்களிலும் நெற்றி, மூக்கு ஆகிய இரு உறுப்புகளையும் நபிகளார் ஒன்றாக கணக்கிடுவதனாலேயே ஏழு உறுப்புகள் என குறிப்பிடுகிறார்கள்.
2 )இரு கை விரல்களையும் பொத்தாமல் விரித்து வைத்தல் :
நபியவர்கள் தமது இரு கைவிரல்களையும் (பொத்தாமல்) விரித்து வைப்பதோடு அவற்றை
ஒன்றோடொன்று சேர்த்தவர்களாக கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள் (அபூதாவூத், ஹாகிம்).
3 )இரு கைகளையும் தோள்புயங்களுக்கு ஃ காதுகளுக்கு நேராக வைத்தல் :
“இரு கைகளையும் (நிலத்தில் வைக்கும் போது) தங்களது தோள்புயங்களுக்கு நேராக வைப்பார்கள்” (அபூதாவூத், திர்மிதி).
“(சிலநேரங்களில்) இரு கைகளையும் தமது இரு காதுகளுக்கு நேராக வைப்பார்கள்’ (அபூதாவூத்,நஸாஈ).
4 )இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் தரையிலிருந்து உயர்த்தி வைத்தல் :
“நபியவர்கள் தமது இரு கைகளையும் தரையில் படுக்க வைக்காமல் உயர்த்தியவர்களாக, இரு
விலாக்களோடும் சேர்க்காமல் விலக்கிவைப்பார்கள்” (புஹாரி, முஸ்லிம்).
5 )கைகளுக்கும் தொடைகளுக்குமிடையே இடைவெளி விடுதல் :
“நபியவர்கள் ஸுஜூத் செய்தால் கைகளுக்கும் தொடைகளுக்குமிடையே ஆட்டுக் குட்டியொன்று செல்லுமளவு இடைவெளி இருக்கும்” (முஸ்லிம்)
6 )இரு கால் விரல்களையும் மடக்கி கிப்லாவை முன்னோக்கி வைத்திருப்பதோடு,இரு
பாதங்களையும் சேர்த்து வைத்தல் :
ஆயிஷா (றழி) அறிவிக்கிறார்கள் :”ஓர் இரவு படுக்கையில் இருந்த நபியவர்களை காணவில்லை,எங்கே என்று பார்த்த போது அவர்கள் இரு குதிகால்களையும் ஒன்றாக சேர்த்தவர்களாக, கால் விரல்களை மடக்கி அவற்றை கிப்லாவை முன்னோக்கி வைத்த நிலையில் ஸுஜூத் செய்தவர்களாக
இருக்க கண்டேன்” (இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்).
7 )ஆடைகளையோ, தலைமுடியையோ சேர்த்து பிடிக்க கூடாது :
” ஸுஜூத் செய்யும் போது ஆடைகளையோ, தலைமுடியையோ (கைகளால்) சேர்த்து பிடிக்க கூடாது “என அல்லாஹ்வினால் எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என நபியவர்கள் கூறினார்கள் (புஹாரி,முஸ்லிம்).
மேற்கூறப்பட்ட ஒழுங்குகள் அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் உரியவையாகும்.
மேற்கூறப்பட்ட ஒழுங்குகளுக்கு மாறாக,
- ஸுஜூத் செய்யும் போது கைகளை நிலத்தில் படுக்க வைத்தல்
- முழங்கைகளை தொடையோடு சேர்த்து வைத்தல்
- மூக்கை தரையில் படாமல் வைத்தல்
- கால்விரல்களை கிப்லாவை முன்னோக்கி மடக்காமல் குத்தி வைத்தல்
- ஸுஜூதுக்கு செல்லும் போது தலைமுடியையோ, ஆடைகளையோ கைகளால் கூட்டிப் பிடித்தல் ஆகிய அனைத்தும் பிழையானவையும் நபிவழிக்கு முரணானவையுமாகும்.
இரண்டு எச்சரிக்கைகள் :
1 )நபிகளார் கூறினார்கள் : ‘ஸுஜூதில் நடுநிலை பேணுங்கள். உங்களில் ஒருவர் (ஸுஜூதின் போது) தன் இரு முன்னங்கைகளையும் நாய் தன் முன்கைகளை விரித்து வைத்திருப்பது போன்று விரித்து
வைக்க வேண்டாம்” (புஹாரி, முஸ்லிம்).
2 )நபியவர்கள் ஒரு தடவை, ‘தொழுகையில் திருடுபவனே மிக மோசமான திருடன்” என கூறிய போது ஸஹாபாக்கள் ‘தொழுகையில் திருடுவது என்றால் எப்படி?” என்றார்கள். நபியவர்கள் “றுகூஉவையும் ஸுஜூதையும் பூரணமாக செய்யாமல் விடுவதே தொழுகையில் திருடுவதாகும்” என
கூறினார்கள் (தபரானி, ஹாகிம்).
மேலும் றுகூஉ, ஸுஜூத் ஆகிய நிலைகளில் (பர்ழ் மற்றும் ஸுன்னத் ஆகிய இரு
தொழுகைகளிலும்) அல்குர்ஆன் வசனங்களை ஓதுவது தடை செய்யப்பட்டதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :”றுகூஉவிலும் ஸுஜூதிலும் அல்குர்ஆனை ஓதுவது எனக்கு தடை செய்யப்பட்டுள்ளது’ (முஸ்லிம்).
ஸுஜூதில் நபியவர்கள் பல திக்ருகளை ஓதியுள்ளார்கள். அவற்றுள் சில :
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلٰى
‘ ஸுப்ஹான றப்பியல் அஃலா’(03 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள்) – (அஹ்மத், அபூதாவூத்).
سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ
‘ஸுப்பூஹுன் குத்தூஸுன் றப்புல் மலாஇகதி வர் ரூஹ்’ (முஸ்லிம்).
سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِـحَمْدِكَ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ
” ஸுப்ஹானகல்லாஹும்ம றப்பானா வபிஹம்திக அல்லாஹும்மஹ்பிர்லீ ’ (நபியவர்கள் இதை ருகூஉவிலும் ஸுஜூதிலும் அதிகமாக ஓதுவார்கள்) -(புஹாரி, முஸ்லிம்).
17) நடு இருப்பு:
முதல் ஸுஜூதை முடித்த பின் நடு இருப்பில் அமர வேண்டும்.
‘நபியவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக ஸுஜூதிலிருந்து தலையை
உயர்த்துவார்கள்” (புஹாரி, முஸ்லிம்).
பின்னர் நடு இருப்பில் அமர்வார்கள்.
நபியவர்கள் இரண்டு முறைகளில் நடு இருப்பில் அமர்ந்திருக்கிறார்கள் :
1 )’இடது பாதத்தை விரித்து அதன் மீது உட்காருவார்கள். வலது பாதத்தை நேராக
நட்டிவைப்பார்கள். வலது கால்விரல்களை (மடக்கி) கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள்” (புஹாரி,நஸாஈ). (இந்த இருப்புக்கு அரபியில் ‘இப்திராஷ்’ எனப்படும்).
2 )’சில வேளைகளில் தமது இரு குதிகால்களின் மீது உட்காருவார்வார்கள்” (முஸ்லிம்). (இந்த
இருப்புக்கு அரபியில் ‘இக்ஆஃ’ எனப்படும்.)
இந்த நடு இருப்பில் தாமதிப்பதும் அவசியமாகும்.
‘ நபிகளார் ஸுஜூதில் தாமதித்திருப்பது போன்ற அளவுக்கு இவ்விருப்பில் தாமதிப்பார்கள்’ (புஹாரி,முஸ்லிம்).
பின்வரும் துஆக்களை நபியவர்கள் இவ்விருப்பில் ஓதியிருக்கிறார்கள் :
رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ
” றப்பிஹ்பிர் லீ , றப்பிஹ்பிர்லீ ” (இப்னு மாஜஹ்).
றப்பிஹ்பிர் லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்பஃனீ வர்ஸுக்னீ வஹ்தினீ(முஸ்னத் அஹ்மத்).(சில ஹதீஸ் அறிவிப்புகளில் இந்த வாசகங்கள் சிறு மாற்றங்களோடு வந்திருக்கின்றன. அவையும்
ஆதாரபூர்வமானவை என்பதால் அவற்றையும் ஓதலாம்)
18) இரண்டாவது ஸுஜூத் :
நடு இருப்பிலிருந்த பின் இரண்டாவது ஸுஜூதுக்கு செல்ல வேண்டும்.
“நபியவர்கள் நடு இருப்பிலிருந்து அல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக இரண்டாவது ஸுஜூதை நிறைவேற்றுவார்கள்” (புஹாரி, முஸ்லிம்).
முதல் ஸுஜூதில் பேணப்பட்ட அனைத்து ஒழுங்குகளும் இரண்டாவது ஸுஜூதிலும் பேணப்படவேண்டும்.
19) ஆறுதல் பெறும் இருப்பு (ஜல்ஸதுல் இஸ்திராஹா) :
இரண்டாவது ஸுஜூதை முடித்த பின் இரண்டாவது றக்அத்துக்கு செல்ல முன் சொற்ப நேரம் அமர்ந்து ஆறுதல் பெறுவது நபியவர்களின் நடைமுறையாகும்.
” இரண்டாவது ஸுஜூதிலிருந்து அல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக எழுந்து ( நடு இருப்பில் அமர்வது போன்று) அமர்வார்கள். உடல் உறுப்புகள் அனைத்தும் ஆறுதல் பெறும் அளவுக்கு ஒரு சொற்ப நேரம் இவ்விருப்பில் தாமதிப்பார்கள்” (புஹாரி, அபூதாவூத்).
இவ்விருப்பில் எதுவும் ஓதுவதில்லை.
நபிகளார் இவ்விருப்பில் அமராமல் நேரடியாக மூன்றாம் றக்அத்துக்கு சென்றார்கள் என்று ஒரு சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் ஆதாரமற்ற பலவீனமான ஹதீஸ்களாகும் என
இமாம் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள் (பார்க்க :”அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி”, 1ஃ819-821).
பின்னர் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி எழுந்து இரண்டாவது றக்அத்துக்கு செல்ல வேண்டும்.
“….நடு இருப்பில் இருந்து நபியவர்கள் கைகளை நிலத்தில் ஊன்றி எழும்புவார்கள்’ (நஸாஈ,
பைஹகி).
இதே வேளை,”நபியவர்கள் கைகளை ஊன்றாமல் எழும்புவார்கள்” என்று வரக்கூடிய ஹதீஸ்களில் சில இட்டுகட்டப்பட்டவையும் மற்றும் சில பலவீனமானவையுமாகும் என இமாம் அல்பானி (ரஹ்)
நிறுவுகிறார்கள் (அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி 1ஃ824).
அதே நேரம், மற்றுமொரு ஹதீஸ் இவ்வாறு வருகிறது.
” நபியவர்கள் அடுத்த றக்அத்துக்கு செல்லும் போது கைகளை தமது தொடைகளில் ஊன்றி
எழும்புவார்கள்” (அபூதாவூத்).
ஆயினும் இந்த ஹதீஸின் இரு அறிவிப்பாளர்களிடையே தொடர்பறுந்து காணப்படுவதால் இது
பலவீனமான ஹதீஸ் என இமாம் நவவி (ரஹ்) மற்றும் அல்பானி (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (நூற்கள் :”அல்மஜ்மூஃ|, 3ஃ446,”ஸிபதுஸ் ஸலாஹ், 1ஃ819).
எனவே சுருங்கக் கூறின்,
அடுத்த றக்அத்துக்கு எழும்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய சரியான முறைகள்:
- இரண்டாவது ஸுஜூதுக்கு பின் சற்று நேரம் அமர்தல்
- பின்னர் கைகளை நிலத்தில் ஊன்றி எழும்புதல்
- இதே ஒழுங்குகளையே மூன்றாவது, நான்காவது றக்அத்துகளுக்கு எழும்பும் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
20) இரண்டாவது றக்அத் :
இரண்டாவது றக்அத்துக்கு எழுந்ததும் தாமதிக்காமல் ஸுறா பாதிஹா ஓத வேண்டும்.
“நபியவர்கள் இரண்டாவது றக்அத்துக்கு வந்துவிட்டால் தாமதிக்காமல் ஸுறா பாதிஹா ஓத ஆரம்பித்து விடுவார்கள்” (முஸ்லிம், அபூஅவானா).
பின்னர் முதலாவது றக்அத்தை நிறைவேற்றியது போன்று இரண்டாவது றக்அத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
21) முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) :
இரண்டாவது றக்அத்தின் முடிவில் முதலாவது அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத் ஓத வேண்டும்.
முதல் அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது பின்வருமாறு நபிகளார் அமர்வார்கள் :
‘இடது பாதத்தை விரித்து அதன் மீது உட்காருவார்கள். வலது பாதத்தை நேராக நட்டிவைப்பார்கள். வலது கால் விரல்களை (மடக்கி) கிப்லாவை முன்னோக்கிவைப்பார்கள்” (புஹாரி, நஸாஈ). (இந்த
இருப்புக்கு அரபியில் ‘இப்திராஷ்’ எனப்படும்).
முதல் அத்தஹிய்யாத்தில் உட்கார மறந்து விட்டால்…
‘நபியவர்கள் முதல் அத்தஹிய்யாத்தில் அமர மறந்து விட்டால் (தொழுகையின் இறுதியில்)
மறதிக்கான ஸுஜூத் செய்வார்கள்” (புஹாரி, முஸ்லிம்).
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: