ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 02
1. கிப்லாவை முன்னோக்குதல் :
– தொழுகையை ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும்வரை கிப்லா திசையை முன்னோக்குவது கட்டாயமாகும். தொழுகையை முறை தவறி நிறைவேற்றிய ஒருவரைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“வுழுவை பூரணமாக செய்துகொள். பின்னர் கிப்லா திசையை முன்னோக்கி நில்…”(புஹாரி, முஸ்லிம்).
இது போன்ற இன்னும் பல ஹதீஸ்கள் கிப்லா திசையை முன்னோக்குவதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
[ ஆயினும் வாகனத்தில் பயணிக்கும்போது தொழ நேர்ந்தால் கிப்லாவை முன்னோக்குவது கடினமாகலாம்.]
அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒருவர் ஸுன்னத்தான தொழுகையை தொழ விரும்பினால் வாகனத்தில் இருந்தவாறு ஆரம்ப தக்பீரின் போது கிப்லாவை முன்னோக்குவார். பின்னர் வாகனம் கிப்லா திசையல்லாத வேறு திசைகளில் பயணித்தாலும் வாகனம் செல்லும் திசைகளில் தொழுகையை நிறைவுசெய்வது ஆகுமானதாகும்.
“நபியவர்கள் தமது ஒட்டகத்திலிருந்தவாறு ஸுன்னத்தான தொழுகையை தொழ நினைத்தால் கிப்லாவை முன்னோக்கி ஆரம்ப தக்பீர் சொல்வார்கள். பின்னர் வாகனம் செல்வதற்கேற்ப (கிப்லா திசையல்லாத வேறு திசைகளில் வாகனம் பயணித்தாலும்) தொழுகையை தொழுது முடிப்பார்கள்”(அபூதாவூத்).
ஆனால் வாகனத்திலிருக்கும் ஒரு பயணி பர்ழான தொழுகையை தொழுவதாயின் வாகனத்திலிருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கி தொழ வேண்டும்.
“நபியவர்கள் வாகனத்திலிருக்கும் போது பர்ழான தொழுகையை தொழ நாடினால் வாகனத்திலிருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கி தொழுவார்கள்” (புஹாரி, பைஹகி).
ஆயினும் வாகனத்திலிருந்து இறங்குவது சாத்தியமில்லை, தொழுகை தவறிப் போய்விடும் என்ற நிலையிருந்தால் பர்ழு தொழுகையை வாகனத்திலிருந்தவாறே – அது எத்திசையில் சென்றாலும் நிறைவேற்ற முடியும். ஏனெனில் இதுவொரு இக்கட்டான நிலையாகும். எங்காரணம் கொண்டும் தொழுகையை விட முடியாது. போர்க்களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போது கூட தொழுகை நேரம் வந்தவுடன் தொழுமாறு பணிக்கும் மார்க்கம் இஸ்லாம். வாகனத்திலிருந்து இறங்க வாய்ப்பும் இல்லை, தொழுகை தவறிப் போகும் நிலையும் இருக்கிறது, கிப்லா திசையை அறியும் வாய்ப்பும் அறவே இல்லை எனும் போது எத்திசையிலேனும் தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். நிர்ப்பந்த சூழ்நிலைகளில் இவ்வாறு நடந்து கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ் எவருக்கும் தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுப்பதில்லை”
(2:286).
பின்வரும் ஹதீஸும் இதற்கு ஆதாரமாக அமைகிறது :
ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள் : நாங்கள் ஒரு போருக்காக சென்றிருந்தோம். சென்ற இடத்தில் மேகம் மூட்டமாக இருந்ததால் கிப்லா திசையை அறிய முடியவில்லை. கிப்லா திசை பற்றி எங்களுக்குள் சிறு சர்ச்சை எழுந்தது. அதனால் ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த திசையை நோக்கி தொழுதோம். எங்களில் ஒருவர் நாங்கள் தொழுத திசையை குறித்து வைத்திருந்தார்.காலையில் எழுந்து பார்த்த போது நாம் தொழுத திசை கிப்லா திசையல்லாத வேறு திசையாக இருந்தது. நாம் நபியவர்களிடம் இது பற்றி கூறிய போது ‘உங்களது தொழுகை நிறைவேறிவிட்டது” என்று கூறினார்கள். அத்தொழுகையை மீட்டித் தொழுமாறும் நபியவர்கள் எங்களுக்கு கூறவில்லை.
(ஹாகிம், பைஹகி).
02) தடுப்பு (ஸுத்ரா) ஒன்றை முன்னால் வைத்தல் :
தனியாக தொழுபவர்களும் இமாமாக தொழுகை நடத்துபவரும் தமக்கு முன்னால் தடுப்பு (ஸுத்ரா) ஒன்றை வைத்துக் கொள்வது, அல்லது இருக்கின்ற தடுப்பொன்றை முன்னோக்கி தொழுவது நபியவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும்.
தடுப்பு என்பது சுவராகவோ, தூணாகவோ, கதிரையாகவோ,தடியாகவோ வேறு எதுவாகவும் இருக்கலாம். பலர் இது பற்றி அறியாதிருக்கின்றனர்.அறிந்திருந்தாலும் செயற்படுத்துவதில் மிக பொடுபோக்காக இருக்கின்றனர்.
நபியவர்கள் கூறினார்கள் : தடுப்பு ஒன்றை முன்னால் வைக்காமல் தொழவேண்டாம். (தொழும்போது) உங்களுக்கு முன்னால் யாரும் குறுக்கே செல்ல விட வேண்டாம்..(ஸஹீஹ் இப்னு ஹுஸைமா).
தடுப்பொன்றை முன்னோக்கி தொழுவது மாத்திரமல்ல,அத்தடுப்புக்கும் தொழுபவருக்கும் இடையே மூன்று முழம் இடைவெளி இருக்கும் வகையில் தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும்.
நபியவர்கள் தொழும்போது தடுப்புக்கு நெருக்கமாக நிற்பார்கள். அவர்களுக்கும் தடுப்புக்குமிடையே மூன்று முழம் இடைவெளி இருக்கும் (புஹாரி, அஹ்மத்).
1) நபியவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த மைதானத்தில் நிறைவேற்றும்போது முன்னால் தடியொன்றை நட்டி அதை தடுப்பாகக் கொண்டு தொழுகையை நிறைவேற்றுவார்கள் (நஸாஈ, இப்னு மாஜஹ்).
2) பிரயாணத்தில் இருக்கும் போது தொழ நேர்ந்தால் ஏதாவதொன்றை தடுப்பாக வைத்து அதை முன்னோக்கி தொழுவார்கள். எதுவும் கிடைக்காத போது தனது வாகனத்தையே தடுப்பாக வைத்துக்கொள்வார்கள் (புஹாரி, பைஹகி).
3) மதீனா பள்ளிவாசலில் சில வேளைகளில் அங்குள்ள தூணை தடுப்பாக முன்னோக்கி நபியவர்கள் தொழுவார்கள் (புஹாரி).
4) பத்ரு யுத்தத்திற்காக போர்க்களத்தில் நபியவர்களும்ஸஹாபாக்களும் தங்கியிருந்த போது இரவு வேளை அங்கிருந்த மரத்தை தடுப்பாக கொண்டு தொழுதார்கள் (அஹ்மத்).
இந்தளவுக்கு நபியவர்கள் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்து தொழுவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
இவ்வாறு ஸுத்ரா எனப்படும் தடுப்பொன்றை முன்வைத்து தொழுவதால் தொழுகையில் கவனம் கலையாமல் இருப்பதோடு, ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் பாதுகாப்பு பெறலாம்.
குறிப்பு : ஆண்கள் மட்டுமன்றி வீட்டில் தொழும்பெண்களும் சுவரையோ, கதிரை(நூற்காலி), மேசை போன்றவற்றையோ தடுப்பாக வைத்து தனக்கும் தடுப்புக்குமிடையில் ஸுஜூத் செய்வதற்கு வசதியாக மூன்று முழம் அளவுக்கு இடைவெளி விட்டு தொழுகையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இமாமை பின்பற்றி மஃமூமாக தொழுபவர்களுக்கு இமாமே ஸுத்ராவாக இருக்கிறார் என்பதால் அவர்கள் தடுப்பு வைக்கத் தேவையில்லை.
03) ஸப்பில் நிற்கும் ஒழுங்குகளை பேணல்:
ஜமாஅத்தாக தொழும்போது ஸப்புகளில் பின்வரும் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. நேராக நிற்றல் :
நபிகளார் ஸப்புகளில் நேராக நிற்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
ஸஹாபாக்கள் ஸப்புகளில் நேராக நிற்கும் வரை தொழுகையை ஆரம்பிக்க மாட்டார்கள். அது மட்டுமன்றி, ஸஹாபாக்கள் நேராக நிற்கிறார்களா என்று பார்ப்பதற்காக ஸப்புகளுக்கிடையே சென்று ஸஹாபாக்களின் தோள்களை தடவிச் செல்வார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).
நபியவர்கள் கூறினார்கள்: உங்களது ஸப்புகளை நேராக வைத்திருங்கள். இல்லையேல் அல்லாஹ் உங்கள் உள்ளங்களுக்கு மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் (புஹாரி, முஸ்லிம்).
மேலும்கூறினார்கள் : உங்கள் ஸப்புகளை நேராக வைத்திருங்கள். ஸப்புகளை நேராக வைத்திருப்பதில் தான் தொழுகையின் பூரணத்துவம் தங்கியிருக்கிறது (முஸ்லிம்).
2. நெருங்கமாக நிற்றல் :
ஸப்புகளில் நேராக மட்டுமன்றி நெருக்கமாகவும் நிற்க வேண்டும்.ஸஹாபாக்கள் எவ்வாறு நெருக்கமாக நின்றார்கள் என்பது பற்றி அனஸ் (றழி) கூறுகிறார்கள் :
எங்களில் ஒருவர் தனது தோள் புயத்தை மற்றவரின் தோள் புயத்தோடும் தனது பாதத்தை மற்றவரின் பாதத்தோடும் சேர்த்து வைத்து தொழுவார்கள் (புஹாரி).
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) கூறுகிறார்கள் : எங்களில் ஒவ்வொருவரும்அடுத்தவரின் காலோடு தனது காலை சேர்த்து வைப்பதை நான் பார்த்தேன் (அஹ்மத், பைஹகி).
ஆனால் இன்று பள்ளிவாசல்களில் தொழுகின்ற அதிகமானோர் ஸப்புகளில் ஸஹாபாக்கள் நின்றது போன்று தோளோடு தோள் சேர்த்து, பாதத்தோடு பாதம் சேர்த்து நிற்பதில்லை. ஒருவரோடு ஒருவர் கோபித்துக் கொண்டு நிற்பது போல் கணிசமான அளவு இடைவெளி விட்டே நிற்கின்றனர். நெருக்கமாக நிற்பதற்காக யாரேனும் நெருங்கிச் சென்றாலும் பலர் விலகிச் செல்வதையே காண முடிகிறது.
ஜமாஅத் தொழுகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையும் அன்பும் ஏற்பட வேண்டும் என்பதாகும். ஸஹாபாக்கள் நின்றது போன்று ஸப்புகளில் நிற்கும் போது தான் ஒற்றுமையும் அன்பும் ஏற்பட முடியும்.
நபியவர்கள் கூறினார்கள் : உங்கள் ஸப்புகளில் ஷைத்தான்களுக்கு இடைவெளி வைக்காதீர்கள். யார் ஸப்புகளில் அடுத்தவரோடு சேர்ந்து நிற்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸப்புகளில் விலகி நிற்கிறார்களோ அவர்களை விட்டு அல்லாஹ்வும்
விலகி விடுவான்(அபூதாவூத்).
3. ஒரு ஸப்பை பூர்த்தியாக்கிய பின் அடுத்தடுத்த ஸப்புகளில் நிற்றல் :
ஸப்புகளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு ஒழுங்கு இதுவாகும்.
நபியவர்கள் ஸஹாபாக்களிடம் வானவர்கள் தமது இறைவனிடம் ஸப்பாக நிற்பது போன்று நீங்களும் நிற்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். வானவர்கள் எப்படி நிற்பார்கள்? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் வானவர்கள் ஆரம்ப ஸப்புகளை பூரணப்படுத்துவார்கள். ஒவ்வொரு ஸப்பிலும் நெருக்கமாக நிற்பார்கள் என்று கூறினார்கள் (முஸ்லிம், அபூதாவூத்).
இன்றைய தொழுகையாளிகளில் அதிகமானோர் முன் ஸப்புகளில் இடமிருக்கும் போதே பின் ஸப்புகளில் தொழும் காட்சியை காண முடிகின்றது. இத்தகையோரின் தொழுகை பூரணத்துவமடையாது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: