கேள்வி:
ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா?
பதில்:
ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடமாட்டார். ஆனாலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகும். அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய (ஸகாத்) கடமையை நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சுவர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்.
நூல்: முஸ்லிம் -987
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.
இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:- “(ஸகாத் கொடுக்காதவர்) நரகத்திற்கு மாத்திரம் செல்வார்” என்று கூறவில்லை. (மாறாக) “நரகத்திற்குச் செல்வார், அல்லது சுவர்க்கத்திற்குச் செல்வார்” என்றே கூறினார்கள்.
எனவே அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார் என்பதை இந்த ஹதீஸ் (மிகத் தெளிவாகக்) கூறுகிறது.
மேலும் விபச்சாரம் செய்வோர், (பெற்றோர்களுக்கு) நோவினை செய்வோர், வட்டி உண்போர் போன்றவர்கள் இஸ்லாத்திலும், ஏகத்துவக் கொள்கையிலும் மரணம் அடைந்தால் சில நேரம் நரகில் வேதனை செய்யப்பட்டு சுவர்க்த்தில் நுழைவிக்கப்படுவதைப் போன்று ஸகாத் கொடுக்காதவர்களும் நரகில் வேதனை செய்யப்பட்டதன் பின்னர் சுவர்க்கத்தில் நுழைவார்கள்.
அத்துடன் அவர்களிடம் நல்லமல்களும், நன்மையான காரியங்களும் காணப்பட்டால் சில நேரம் அவர்கள் நரகில் வேதனை செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் தான் நாடியோரை மன்னிப்பவனாக இருக்கின்றான்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறினான்:-
((நிச்சயமாக அல்லாஹ் இணை வைத்தவரை மன்னிக்க மாட்டான்)) அதன் பின்னர் ((அதுவல்லாத பாவங்களை தான் நாடியோருக்கு மன்னிக்கின்றான். ))
பார்க்க : ஸூரா நிஸா : 48 & 116
என்றும் கூறுகின்றான்.
அதுவல்லாத பாவங்கள் என்றால், இணைவைப்பு அல்லாத வேறு பாவங்களாகும். உதாரணமாக (பெற்றோர்களுக்கு) நோவினை செய்வது, ஸகாத் கொடுக்காமலிருப்பது, சக்தி இருந்தும் நோன்பையும், ஹஜ்ஜையும் விட்டு விடுவது, வட்டி உண்பது, போதை வஸ்துக்களைப் பாவிப்பது, இது போன்ற வேறு பாவங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் உள்ளவைகளாகும்.
சில நேரம் நரகில் நுழைவிக்கப்பட்டு வேதனை செய்யப்பட்டதன் பின்னர் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
என்றாலும் பாவங்கள் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள்.
அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப அதில் குறிப்பிடப்பட்ட காலம் வேதனை செய்யப்பட்டதன் பின்னர் நபி அவர்களின் சிபாரிசின் மூலமாகவோ அல்லது வேறு சிலரின் சிபாரிசின் மூலமாகவோ அல்லது அல்லாஹ்வின் அருள் மற்றும் மன்னிப்பின் மூலமாகவோ அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அதன் பின்னர் அவர்கள் சுத்தப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார்கள். நரகில் வேதனை செய்யப்படும் காலப்பகுதியை அல்லாஹ் மாத்திரமே அறிவான்.
இக்கருத்து முஃதஸிலாக்கள், ஹவாரிஜ்கள் போன்றோர்களுக்கு மாற்றமான கருத்தாகும்.
ஏனெனில் பாவம் செய்பவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இவ்விரு கூட்டத்தினர்களும் கூறுகின்றனர்.
அதாவது ஸகாத் கொடுக்காதவர்கள், விபச்சாரம் செய்பவர்கள், பெற்றோர்களுக்கு நோவினை செய்பவர்கள், போதை பொருட்களை பாவிப்பவர்கள், மேலும் இது போன்ற பாவங்களை செய்பவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இவர்கள் கூறுகின்றனர். இது மிகவும் தவறான கருத்தாகும்.
பார்க்க:-
அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
“فتاوى نور على الدرب” என்ற பத்வா தொகுப்பு
(பாகம் – 15/ பக்கம் 8-9)
தமிழாக்கம் : அபூ அப்திர் ரஹ்மான் (அப்பாஸி,மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:


