ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா?
«إذا انتصف شعبان فلا تصوموا» أبو داود (٢٣٣٧) واللفظ له، والترمذي (٧٣٨)، وابن ماجه (١٦٥١)
“ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்ற ஒரு ஹதீஸ் அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜஹ் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் பலவீனமான ஒரு ஹதீஸ் என்பதை ஆரம்பகால ஹதீஸ் துறை வல்லுனர்களான அபூ சுர்அஹ் அர்-றாஸி, இப்னு மஈன், அஹ்மத் இப்னு ஹன்பல், அப்துர் றஹ்மான் இப்னு மஹ்தி போன்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதற்குக் காரணம் இதன் அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெறும் அறிவிப்பாளரான அலாஃ இப்னு அப்திர் றஹ்மான் என்பவர் தன் தந்தையிடம் இருந்து இதனை அறிவிக்கின்றார். வேறு எவரும் அறிவிக்காமல் அவர் மாத்திரம் தனித்து அறிவிக்கும் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர் பலமானவர் இல்லை என்பது அந்த அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
அது மாத்திரமல்லாமல் வேறு பலமான ஹதீஸ்கள் அதற்கு மாற்றமாக இடம்பெற்றுள்ளன. அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபானின் பெரும்பாலான பகுதியில் நோன்பு நோற்றுள்ளார்கள். அதே போன்று றமளானுக்கு முன்னால் ஓரிரு நாட்களுக்கு நோன்பு நோற்பதையும் தடை செய்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னுள்ள நாட்களில் நோன்பு நோற்பது தடை இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் இந்த ஹதீஸ் பலமானது என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். அவர்கள் அடுத்த ஹதீஸ்களுடன் முரண்படாமல் இதனை விளங்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
அவ்வாறு இதனை சரி காணக்கூடிய அறிஞர்களுள் திர்மிதி, இப்னு ஹிப்பான் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஷாஃபிஈ மத்ஹபினரும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஷஃபான் மாதத்தின் 15க்குப் பிறகு நோன்பை ஆரம்பிப்பது கூடாது என்று கூறுகின்றனர்.
அதாவது இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்று கருதக்கூடியவர்கள், ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்கு முன்னர் அம்மாதத்தில் சில நோன்புகளையேனும் நோற்றிருந்தால் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு அவர் நோன்பு பிடிப்பதில் பிரச்சனை இல்லை; ஆனால் ஷஃபான் மாதத்தின் நடு பகுதிக்குப் பிறகு நோன்பை ஆரம்பிக்கக் கூடாது என்று விளக்கம் கூறியுள்ளனர்.
ஆனாலும் அதிகமான அறிஞர்களின் நிலைப்பாடு பலமானதாகத் தெரிகிறது. ஏனெனில், இதனைச் சரி காணும் அறிஞர்களை விட பலவீனமானது என்று கூறும் அறிஞர்கள் ஹதீஸ் துறையில் பெரியவர்களாகவும் மிக அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதனை இமாம் இப்னு றஜப் அவர்கள் தன்னுடைய ‘லதாஇபுல் மஆரிப்’ (பக்136) எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே பலமான கருத்தாகும்.
அதன் அடிப்படையில் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு ஸுன்னத்தான நோன்புகளை நோற்க ஆரம்பித்தாலும் தவறில்லை.
ஆனால் றமளானுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் அவர் நோன்பை நிறுத்தி விட வேண்டும்.
திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு நோற்கும் வழமையுள்ளவர்கள் அம்மாததிலும் 15க்குப் பிறகு திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு நோற்பது அல்லது கடமையான நோன்புகளை நோற்பது பிரச்சனை இல்லை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
தயாரிப்பு:
ஸுன்னஹ் அகாடமி
கீழே உள்ள Link-களின் மேலே Click செய்து ஸுன்னஹ் அகாடமியின் சமுக வலைதளங்களில் இணைந்து கொள்ளுங்கள்.
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp
Telegram:
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: