பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 02 |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 02 |

-அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…

 

மாதவிடாய் மாற்றங்கள்/ வித்தியாசங்கள்:

மாதவிடாயில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியும். அது பல வகைப்படும்

முதலாவது வகை: மாதவிடாய் ஏற்படும் நாட்கள் கூடுதல் அல்லது குறைதல்.; உதாரணமாக ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் நாட்கள் சாதாரணமாக ஆறு நாட்கள் வரை இருக்கும். பின் அந்த கால எல்லை ஏழாவது நாள் வரை நீடிக்கும். அல்லது ஏழு நாட்கள் வரை நீடிக்க வேண்டிய கால எல்லை ஆறாவது நாளுடன் முடிவடையும்.

இரண்டாவது வகை : குறித்த காலத்திற்கு முன் வருதல் அல்லது தாமதித்து வருதல். உதாரணமாக: வழமையாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் ஏற்படும். ஆனாலும் அதை மாதத்தின் ஆரம்பத்தில் காண்கிறாள். அல்லது அதற்கு நேரெதிராக அவளின் வழமையான மாதவிடாய் மாத ஆரம்பத்தில் இருக்க அதனை மாத இறுதியில் வரக் காண்கிறாள்.

இந்த இரண்டு நிலை தொடர்பான இறை மார்க்கத்தின் முடிவு என்ன என்பதில் அறிஞர்கள் கருத்து முரண்படு கின்றனர். இது பற்றிய மிகவும் சரியான நிலைப்பாடு என்னவெனில், அவள் எப்பொழுது இரத்தத்தைக் காண்கின்றாளோ அப்பொழுது அதை மாதவிடாய் எனக் கருத வேண்டும்; எப்பொழுது இரத்தம் நின்று சுத்தமடைகின்றாளோ அப்பொழுது தூய்மை அடைந்து விட்டதாகக் கருத வேண்டும். இதில் நாட்கள் கூடிக் குறைதல் என்பதையோ குறித்த காலத்திற்கு முன் வருதல் அல்லது தாமதித்து வருதல் என்பதையோ கருத்திற் கொள்ளத் தேவையில்லை. முன் சென்ற பகுதியில் குறிப்பிட்டது போன்று மாதவிடாய் பற்றிய சட்டங்கள் யாவும் ‘மாதவிடாய் காணப்படுவது’ என்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இது இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நிலைப்பாடாகவும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தெரிவாகவும் காணப்படுகிறது.

முஃனி என்ற நூலின் ஆசிரியரும் (இமாம் இப்னு குதாமா அல் மக்திஸி) இந்தக் கருத்தைப் பலப்படுத்தி ஆதரவளித்துள்ளார். அவர்கள் இவ்வாறு தனது கருத்தை குறிப்பிடுகிறார்கள்:

“மேலே மத்ஹபில் குறிப்பிடப்பட்டது போன்று வழமை கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்றிருந்தால் அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள், தெளிவுபடுத்த வேண்டிய ஒரு விடயத்தை தெளிவுபடுத்தாது பிற்படுத்துவது நபியவர்களுக்கு அனுமதிக்கப்படாத விடயமாகும். தெளிவுபடுத்த வேண்டிய ஒரு விடயத்தை கால தாமதம் செய்வது கூடாது. காரணம் மாதவிடாய் தொடர்பான விடயங்கள் குறித்த விளக்கம் எல்லா நேரத்திலும் அவர்களின் மனைவியருக்கும் தேவைப்பட்டது. அவ்வாறிருந்தும் அதனை தெளிவுபடுத்தாது அவர்கள் இருக்கவில்லை. மாதவிடாய் தொடர்பான விவகாரத்தில் கால வரையரை தொடர்பாக தொடர் உதிரப் போக்குள்ள பெண்ணுக்கான வரையரையே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மூலம் குறிப்பிடப் பட்டுள்ளது.”

மூன்றாவது வகை : காயங்களிலிருந்து வடியும் சீழ் போன்றுள்ள மஞ்சள் நிறமுடைய அல்லது மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களுக்கு இடையிலான கலங்களான நிலையில் மாதவிடாய் காலத்தின் போது இவ்வாறு ஏதும் வெளிப்படுமானால் அல்லது அதற்கு அடுத்தாற் போன்று சுத்த நிலையை அடைவதற்கு முன்போ இது நிகழுமானால், இதை மாதவிடாய் என்று கருதுவதோடு மாதவிடாய் தொடர்பான அனைத்து சட்டங்களையும் பின்பற்ற வேண்டும்;. சிலவேளை, இத்தகைய ஏதும் சுத்தத்தை அடைந்ததன் பின் நிகழுமாயின், அந்நிலையை மாதவிடாய் எனக் கருதலாகாது. இதனை உம்மு அதிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

உம்மு அதிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:

‘சுத்தமானதின் பின் வெளிவரும் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களை நாம் மாதவிடாயாகக் கருதுவதில்லை.’

புஹாரியில் ‘சுத்தம் அடைந்ததன் பின்’ என்ற கூற்று இன்றி அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இமாம் புஹாரி அவர்கள் மாதவிடாய் அல்லாத நாட்களில் வெளிவரும் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்கள் பற்றிய பாடம் என குறித்த ஹதீஸிற்கு தலைப்பிட்டுள்ளார்கள்.

புஹாரி விரிவுரையான பத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் இவ்வாறு குறிப்பிடு கிறார்கள்:

‘நீங்கள் வெள்ளைப்படுதலை காணும் வரையில் என்ற இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட ஆஇஷா ரழியின் ஹதீஸையும் இந்தத் தலைப்பில் குறிப்பிடப்பட்ட உம்மு அதிய்யா அவர்களின் ஹதீஸையும் இணைத்து இங்கு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸ் மாதவிடாய் நாட்களில் மஞ்சள  மற்றும் பழுப்பு நிறத்தைக் கண்டால் ஒரு பெண் மாதவிடாய் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அது அல்லாத நாட்களில் அதாவது சுத்தத்தின் பின் இவற்றைக் கண்டால் அவை மாதவிடாயாகக் கருதப் பட மாட்டாது என்ற உம்மு அதிய்யா அவர்களின் ஹதீஸை பின்பற்ற வேண்டும். இங்கு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸ் மேற்குறிப்பிட்ட தலைப்பிற்கு முன் உறுதிமிக்க முஅல்லகான ஹதீஸாக இமாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சில பெண்கள் (மாதவிடாயின் அடையாளங்கள் ஏதும் எஞ்சியுள்ளதா அதாவது சுத்தம் அடைந்துவிட்டோமா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவென) மாதவிடாயின் மஞ்சள் நிறத்தில் அடையாளம் உள்ள தமது பருத்தியை ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். (அப்பொழுது) ஆஇஷா (ரழி) அவர்கள் ‘நீங்கள் ‘அல்குஸ்ஸத்துல் பைழாவை’ வெள்ளை நீரைக் (திரவத்தை) காணும் வரையில் அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை கூறுவார்கள். அதாவது மாதவிடாய் முற்றாக நீங்கும் வரை என்பது இதன் கருத்தாகும். ‘அல்குஸ்ஸத்துல் பைழா’ என்பது மாதவிடாய் நின்றுவிடும்போது கருப்பையிலிருந்து வெளிவரும் வெள்ளை திரவத்தைக் குறிக்கும்.

நான்காவது வகை: மாதவிடாய் ஒழுங்கின்மை (மாதவிடாய் விட்டு விட்டு வருதல்). அதாவது ஒருநாள் இரத்தம் வெளி வருவதையும்; (மாதவிடாய் நிலை) மறுநாள் அது நின்று சுத்தமாகிய நிலையையும் காண்கிறாள் இது தொடர்பாக இரண்டு நிலைகளை அவதானிக்க முடிகிறது.

முதலாவது நிலை : இத்தகைய ஒழுங்கின்மை எல்லா நேரங்களிலும் இடம் பெருமாயின், அப்போது வெளிவரும் இரத்தம் இஸ்திஹாழாவாகும் (தொடர் உதிரப்போக்கு). இவ்வேளை இஸ்திஹாழாஹ்வுக்குரிய எல்லா சட்டங்களும் பேணப்படும்.

இரண்டாவது நிலை : இவ்வொழுங்கின்மை தொடராக அன்றி சிற்சில நேரங்களில் இடம் பெரும் அவள் சுத்தமாக இருக்கும் நேரத்தில் காணப்படும். எனவே, இது உண்மையிலேயே மாதவிடாய்க்கான சட்டங்கள் பொருந்தாத சுத்தமுடைய காலமா? அல்லது அது மாதவிடாய்க் காலத்தின் ஒரு பகுதியா என அறிஞர்கள் கருத்து முரண்படுகின்றனர்.

இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இரு கூற்றுகளில் மிகச் சரியான கூற்றின் படி அது மாதவிடாயாகும். இவ்வேளை மாதவிடாய்க்கான சட்டங்களை அப்பெண் பின்பற்ற வேண்டும். இது ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் இமாம் ஸாஹிபுல் பாஇக் இப்னு காழி அல் ஜபல் போன்றோரினது தெரிவாகவும். இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ், அவர்களது மத்ஹபின் கருத்தும் இதுவே. ஏனெனில் ‘குஸ்ஸதுல் பைழா’ வெள்ளை நீர் காணப்படவில்லை. அது ‘துஹ்ர்’ சுத்த நிலையாக இருந்திருந்தால் அதற்கு முன்னரும் பின்னரும் மாதவிடாயாக இருந்திருக்க வேண்டும் அவ்வாறு யாரும் குறிப்பிடமாட்டார். அவ்வாறெனில் இத்தா ஐந்து நாட்களுக்குள் முடிந்துவிடும். அதனை தூய்மையானதாக கொள்வதற்கு முற்பட்டால் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் இடையில் குளிக்க வேண்டும். அது பெறும் சிரமத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும். சிரமத்தை நீக்குவதே இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கமாகும். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.

மேலும் ஹன்பலி மத்ஹபின் மிகப்பிரபல்யமான கருத்தாவது, இரத்தம் வருவது மாதவிடாயாகும். அது நின்று விட்டால் அது தூய்மையான நிலையாகும். மாதவிடாய் காலமும் தூய்மையடையும் காலமும் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியை கடந்து விட்டால், அதை இஸ்திஹாழா தொடர் உதிரப்போக்கு வந்த நாட்களாக கருதவேண்டும்.

(ஹம்பலி மத்ஹபின் பிக்ஹ் நூலான) அல் முஃனியின் ஆசிரியர் இவ்வாறு கூறுகின்றார்:

‘ஒரு நாளை விடவும் குறைவாக இரத்தம் நிற்குமாயின் அவள் தெளிவான ஆதாரத்தைக் கண்டாலன்றி அதைத் ‘தஹாரா’ (சுத்தம்) உடைய நிலை எனக் கருத முடியாது. இது குறித்து நிபாஸ் பற்றிய இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாவின் அறிவிப்பை மேலே குறிப்பிட்டிருந்தோம். இதுவே சரியான கருத்தாகும். அதே போன்று குறிப்பிட்ட நேரத்தில் வருவதும் பின்னர் நின்றுவிடுவதும் என்ற நிலைக்கு அடிக்கடி குளித்து சுத்த மாகிக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது, மார்க்கத்தில் இச்சிரமம் இல்லை.

அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகிறான்;

‘மார்க்கத்தில் எவ்விதச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை’ (அல் ஹஜ் :78)

தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,

ஒரு பெண் தனது வழமையான மாதவிடாயின் இறுதியில் மாத விடாய் நின்றுவிடுதல் அல்லது வெள்ளை நீரைக் காணுதல் என்ற இரு காரணங்களும் அல்லாது ஒரு நாளைக்கு குறைவான காலப்பகுதியில் இரத்தம் நின்று விடுவதை அவதா னித்தால்; அது துஹ்ர் சுத்த நிலையை அடைந்ததாக கருதப் படமாட்டாது.

‘முஃனி’ என்ற நூல் ஆசிரியரின் இக்கூற்று, மேற்காணும் இரண்டு கருத்துக்களுக்கும் இடைப்பட்ட நடுநிலையான கருத்தாகும். மிகச் சரியானதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்! எனக் கூறுகிறார்.

ஐந்தாவது வகை : இரத்தம் வரண்டு காணப்படுதல். அதாவது ஈரமான திரவம் வெளியேறுவதைக் காண்கின்றாள். இவ்வாறு மாதவிடாயின் போது நிகழுமாயின் அல்லது சுத்த நிலையை அடைய முன் அதனுடன் தொடர்புற்று இருக்குமாயின் அப்பொழுது அது மாதவிடாயாகக் கருதப்படும். சுத்தத்தின் பின்னர் அது நிகழுமாயின் அப்பொழுது அது மாதவிடாயாக கருதப்படமாட்டாது. ஏனெனில் இதன் உச்சகட்ட நிலமை, மஞ்சல் மற்றும் பழுப்பு நிறமாக வெளி வரும் திரவம் போன்றதே. எனவே, அதற்குறிய சட்டமே இதற்குமாகும்.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

தமிழில்:இஸ்லாம்ஹவுஸ் இணையதளம்

 

முந்தைய தொடரை வாசிக்க இங்கே CLICK செய்யவும் 

 

 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply