சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?

கேள்வி :

 

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?

 

விடை :

 

தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளத்தை சலனமடையச் செய்வது ஷைத்தானின் செயல்களில் ஒன்றாகும். இதற்கு பின்வரும் நபி வழிகாட்டல்கள் தீர்வை தருகின்றன :

 

1. ‘மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகங்களை ஏற்படுத்திகொண்டிருப்பார்கள். எது வரை எனில், ‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான். அல்லாஹ்வை யார் படைத்தான்?’ என்று கேட்கும் நிலைக்கு அது செல்லும். அவ்வாறான சந்தேக நிலையை அடையும் ஒருவர் ‘ஆமன்து பில்லாஹ்’ (அல்லாஹ்வை ஈமான் கொண்டேன்) என்று கூறிக் கொள்ளவும் ‘ (முஸ்லிம்).

 

2. ‘உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து ‘பூமியை படைத்தது யார்?’ என்று கேட்க அவர் ‘அல்லாஹ்’ என்று கூறுவார். மீண்டும் ஷைத்தான் ‘ அல்லாஹ்வை படைத்தது யார்?’ என்று கேட்பான். இவ்வாறான கேள்வி எழுவதை ஒருவர் தனக்குள் உணர்ந்தால் அவர் ‘ஆமன்து பில்லாஹி வபிருஸுலிஹீ ‘ (அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் ஈமான்கொண்டேன்) என்று கூறவும் (முஸ்லிம், அஹ்மத்).

 

3. ‘ உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து ‘ இதை படைத்தது யார்?’ , ‘ அதை படைத்தது யார் ?’ என்று கேள்வி எழுப்பி, இறுதியில் ‘அல்லாஹ்வை படைத்தது யார்?’ என்று கேட்பான். அந்த நிலையை அடைந்தால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடிக்கொள்ளவும். அதற்கு மேல் கேள்வி எழாமல் தவிர்ந்துகொள்ளவும்’ (புஹாரி, முஸ்லிம்).

 

ஈமான் கொள்ள வேண்டிய மறைவான அம்சங்கள் பற்றி வீண் சந்தேகங்கள் ஏற்படுவது ஷைத்தானின் தூண்டுதல் என்பது மேற்படி ஹதீஸ்கள் உணர்த்தும் உண்மையாகும்.

 

அல்லாஹ் பற்றி மட்டுமல்லாது கப்ருடைய வாழ்வு, அதில் கிடைக்கும் இன்பம் அல்லது வேதனை, மறுமை ஏற்படுதல், நன்மை, தீமை பற்றிய விசாரணை, சுவர்க்கம், நரகம் ஆகியன குறித்து வீண் சந்தேகங்கள், சலனங்கள் ஏற்படும் போது ஒரு முஃமின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மேற்படி ஹதீஸ்கள் விளக்குகின்றன :

 

1. இவ்வாறான சலனங்கள் ஏற்பட்டவுடன் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டும்.

 

2. இத்தகைய சந்தேகங்கள் வளர்ந்து செல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். முதல் தடவை சந்தேகம் எழுந்தவுடனே அதை வளரவிடாமல் நிறுத்திவிட்டால் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

 

3. ‘ஆமன்து பில்லாஹ்’ அல்லது ‘ஆமன்து பில்லாஹி வருஸுலிஹி’ என்று கூறி ஈமானை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

 

– அஷ்ஷெய்க் இப்னு ஜப்ரீன் (ரஹ்)

நூல் : ‘அல் கன்ஸுத் தமீன்’

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply