கேள்வி:
லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா?
பதில் :
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
முதலில் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் மற்ற நாட்களில் செய்யாத அளவிற்கு வணக்கத்தில் கடுமையாக ஈடுபட்டு, தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:
(ரமழான் மாதத்தின்) இறுதிப்பத்து (நாட்கள்) துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாட்டின் மூலம்) இரவுகளுக்கு உயிரூட்டுவார்கள்; (வழிபாட்டில் ஈடுபடுவதற்காக) தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள்; (வழக்கத்தைவிட அதிகமாக வழிபாட்டில்) அதிகக் கவனம் செலுத்துவார்கள்; தமது கீழாடையை இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள்.
(நூல் : ஸஹுஹுல்-புகாரி, முஸ்லிம் 2184)
அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் மற்ற நேரங்களில் செய்ததை விட ரமழானின் கடைசி பத்து இரவுகளில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட கடினமாக முயற்சி செய்வார்.
(நூல் : அஹ்மத் மற்றும் முஸ்லிம்)
இரண்டாவதாக:
லைலத்துல் கத்ர் இரவை நம்பிக்கையுடனும்,நன்மையை எதிர்பார்த்தும் வணக்க வழிபாடுகளில் கழிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் ) அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறியதாக அறிவிப்பதாவது :
“லைலத்துல் கத்ரின் இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் யார் வணங்குகிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
(இப்னு மாஜாவைத் தவிர மற்ற அனைத்து ஹதீஸ் தொகுப்பிலும் இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)
இந்த ஹதீஸ் விழித்திருந்து இந்த இரவை வணக்க வழிபாட்டில் கழிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக:
லைலத்துல் கத்ரில் ஓதக்கூடிய சிறந்த துஆக்களில் ஒன்று ஆயிஷா (ரழியல்லாஹுஅன்ஹா) அவர்களுக்கு நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே, லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால் நான் என்ன கூற வேண்டும்?”
அதற்கு “அல்லாஹும்ம இன்னகா ‘அஃபுவ்வுன் துஹிப்புல் ‘அஃப்வ ஃபஃஃபு’ அன்னி (அல்லாஹ், நீ மன்னிப்பவன் மற்றும் மன்னிப்பை விரும்புபவன், எனவே என்னை மன்னிப்பானாக)” என்று அவர் கூறினார்கள்.
இமாம் திர்மிதி இதனை ‘ஸஹீஹ்’ என்று கூறியுள்ளார்கள்.
நான்காவதாக:
ரமழானின் ஒரு இரவை மட்டும் தேர்வு செய்து மற்றும் அதை “லைலத்துல் கத்ர்” என்று கூறுவதற்கு ஆதாரம் தேவை.!
எனவே லைலத்துல் கத்ரானது கடைசி பத்து இரவுகளின் ஒற்றைப்படை இரவுகளில் (21, 23, 25, 27, 29) அமைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இருபத்தி ஏழாவது இரவு லைலத்துல் கத்ராக இருக்கவும் வாய்ப்புள்ளது, ஏனெனில் அவ்வாறாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன.
ஐந்தாவது:
ரமழானிலோ அல்லது மற்ற நேரங்களிலோ மார்க்கத்தின் பெயரால் எவ்வித பித்அத்களை செய்வதற்கு நமக்கு அனுமதியில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : “நம்முடைய [இஸ்லாத்தின்] இந்த விஷயத்தில் எவரொருவர் புதுமை செய்தாலும் அது நிராகரிக்கப்படும்.” மேலும் கூறினார்கள்: “நம்முடைய இந்த விஷயத்தில் [இஸ்லாத்தில் ஒரு பகுதியாக] இல்லாத எந்த ஒரு செயலை யார் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்.”
(நூல் : ஸஹுஹ் முஸ்லிம் 3540, 3541)
ரமழானின் சில இரவுகளில் கொண்டாடப்படும் கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை, அதற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை.
ஏனெனில் அல்லாஹுவின் தூதருடைய வழிகாட்டுதலே சிறந்த வழிகாட்டல் ஆகும், அதனை தவிர மீதமுள்ள புதுமைப்படுத்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ‘பித்அத்’ ஆகும்.
அல்லாஹுவிடமே அனைத்து ஆற்றலும் உள்ளது. மேலும் அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் அல்லாஹுவின் தூதர் மீதும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.
பார்க்க : ஃபதாவா அல்-லஜ்னதுத் தாயிமா, 10/413
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: