இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |

 

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்இமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:

 

அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்ஜமாஅத்தினராகிய எம்மிடம்‌ காணப்படும்‌

ஷரீஆவின்‌ அடிப்படைகளாவன :-

 

1. நபித்தோழர்கள்‌ (ஸஹாபாக்கள்‌) இருந்த வழிமுறைகளைப்‌ பற்றிப்‌ பிடித்து அவர்களைப்‌ பின்பற்றுவதாகும்‌.

 

 

விளக்கம்‌ :

 

ஷரீஆவிற்குச்‌ சில மூலாதாரங்கள்‌ உள்ளன. அவை அல்லாஹ்வின்‌ வேதமாகிய அல்குர்‌ஆனும்‌, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்‌ வழிமுறையான ஸுன்னாவும்‌ ஆகும்‌. அவ்வாறே ஸஹாபாக்களின்‌ வழிவந்த செய்திகளும்‌, அவர்களின்‌ முன்மாதிரிகளும்‌ இஸ்லாத்தின்‌ அடிப்படைகளாகும்‌.

 

எனவே, மனிதர்கள்‌ இவ்வடிப்படைகளில்‌ அல்குர்‌ஆன்‌, ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்‌, ஸஹாபாக்களுடைய முன்மாதிரிகள்‌ போன்றவற்றை ஏற்று நடக்க வேண்டும்‌. இவற்றைப்‌ பின்பற்றுவதன்‌ மூலம்‌ இம்மூலாதாரங்களிலிருந்து பிரிகின்ற ஏனைய உட்பிரிவுகளையும்‌ பின்பற்றியவர்களாகக்‌ கருதப்படுவர்‌.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்‌ தோழர்களான ஸஹாபாக்கள்‌ வாழ்ந்த வழிமுறைகளை ஏற்று நடப்பதும்‌, அவர்களைப்‌ பின்பற்றுவதும்‌ அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின்‌ மிக முக்கியமான அடிப்படைகளில்‌ ஒன்றாகும்‌. இதனை வலியுறுத்துகின்ற ஏராளமான ஆதாரங்கள்‌ காணப்படுகின்றன.

 

அல்லாஹ்‌ கூறுகின்றான்‌:-

 

எவனொருவன்‌ நேர்வழி இன்னது என்று தனக்குத்தெளிவான பின்னரும்‌, அல்லாஹ்வின்‌ இத்தூதரை விட்டுப்பிரிந்து முஃமின்கள்‌ செல்லாத வழியில்‌ செல்கிறானோ அவனை அவன்‌ செல்லும்‌ தவறான வழியில்‌ செல்ல விட்டு நரகத்திலும்‌ அவனை நுழையச்‌ செய்வோம்‌. அதுவோ, சென்றடையும்‌ இடங்களில்‌ மிகக்‌ கெட்டதாகும்‌.

 

– அந்நிஸாஃ(4:115)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்‌ கூறினார்கள்‌:

 

எனக்குப்‌ பின்னர்‌ உங்களில்‌ உயிர்‌ வாழ்வோர்‌ ஏராளமான கருத்து வேற்றுமைகளைக்‌ காண்பார்கள்‌. அப்போது எனது வழிமுறைகளைகயும்‌, நேர்வழி நடந்த குலபாஉர்‌ ராஷிதீன்களின்‌ வழிமுறைகளையும்‌ மிக உறுதியாகப்‌ பற்றிப்‌ பிடித்துக்கொள்ளுங்கள்‌.

 

– அறிவிப்பவர்‌: இர்பாழ்‌ இப்னு ஸாரியா (ரழியல்லாஹு அன்ஹு) | அபூதாவூத்‌: 4607, திர்மிதி :2676, இப்னுமாஜா: 42.

 

இப்னு மஸ்ஊத்‌ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்‌ குறிப்பிடுவதாவது:

 

*உங்களில்‌ எவரேனும்‌ ஒரு வழிமுறையை முன்மாதிரியாகக்‌ கருதிப்‌ பின்பற்ற விரும்பினால்‌, அவர்‌ முஹ்ம்மத்‌ (ஸல்‌) அவர்களுடைய தோழர்களான ஸஹாபாக்களைப்‌ பின்பற்றி நடக்கட்டும்‌. இவர்கள்‌ இந்த உம்மத்தில்‌ மிகுந்த இதய சுத்தியும்‌, ஆழமான அறிவும்‌, அளவுக்கதிகமாகத்‌ தம்மை வருத்திக்கொள்ளாதவர்களாகவும்‌ வாழ்ந்தவர்கள்‌. மேலும்‌, நேர்வழி நடந்தோராகவும்‌, நற்குண சீலர்களாகவும்‌ காணப்பட்டனர்‌. நபியின்‌ தோழமைக்காக அல்லாஹ்‌ இவர்களைத்‌ தெரிவு செய்து கொண்டது, இவர்களுக்குக்‌ கிடைத்த மாபெரும்‌ நற்பேறாகும்‌. எனவே, இவர்களுடைய சிறப்புக்களை அறிந்து இவர்களின்‌ முன்மாதிரிகளைப்‌ பின்பற்றுங்கள்‌. ஏனெனில்‌, இவர்கள்‌ நேர்வழி நடந்தவர்களாவர்‌.*

 

நூல்‌: இப்னு அப்தில்பர்‌: ஜாமிஉ பயானில்‌ இல்ம்‌: 1810

 

விளக்கவுரை:

பேரறிஞர்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ அப்துர்‌ ரஹ்மான்‌ அல்‌ ஜப்ரீன்‌ (ரஹிமஹுல்லாஹ்)

தொகுப்பாசிரியர்: ஷேக்‌ அலிய்‌ பின்‌ ஹஸன்‌ அபூ லெளஸ்

மொழியாக்கம்‌: மெளலவியா எம்‌. வை. மஸிய்யா B.A (Hons)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply