அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 05 |  

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும்

| தொடர் : 05 |

 

குறிப்பு : 02

 

தயம்முமின் போது இரு கைககளிலும் தடவுகையில் முழங்கை வரை தடவ வேன்டும் என சில அறிஞர்கள் குறிப்பிடும் அதே வேளை, மணிக்கட்டுவரை மட்டுமே தடவ வேண்டும் என ஏனைய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

மணிக்கட்டு வரை தடவ வேண்டும் என்பதே ஆதாரபூர்வமானதாகும்.

முழங்கை வரை தடவ வேண்டும் என்று கூறுவோர் குறிப்பு 01ல் (முந்தைய தொடர்) குறிப்பிடப்பட்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர். அதில் ‘முழங்கை வரை’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அந்த ஹதீஸ் மிகப் பலவீனமானது என்பது முன்னர் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

அத்தோடு அம்மார் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸில் நபியவர்கள் மணிக்கட்டுவரைக்குமான இரு கைகளினதும் மேற்புறங்களின் மீது தடவினார்கள் என்றே பதிவாகியுள்ளது (ஸஹீஹுல் புஹாரி).

 

முழங்கை வரை தடவ வேண்டுமென கூறுவோர் அதற்கென ஒரு முறையை கூறுவார்கள். இது பற்றி இமாம் இப்னுல் கையிம் (றஹ்) (ஹி.691 – 751) அவர்கள் கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும் :

 

‘தயம்மும் செய்யும் போது இரு கைகளிலும் தடவுகையில் முதலாவதாக இடது கை விரல்களின் உட்பகுதியை வலது கையின் ஆரம்பத்தில் வைத்து அப்படியே முழங்கை வரை தடவிக்கொண்டு சென்று பின்னர் இடது கையை வலது முழங்கையின் உட்புறமாக திருப்பி கொண்டு சென்று பெருவிரலில் விட வேண்டும் எனவும், இவ்வாறே இடது கையிலும் செயற்படுத்த வேண்டும் எனவும் கூறப்படும் முறையானது நபியவர்கள் செயற்படுத்தியதாகவோ அல்லது ஸஹாபாக்களுக்கு அவ்வாறு நபிகளார் கற்றுக்கொடுத்ததாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வணக்கத்தின் செயல் முறையும் அதன் வடிவமும் நபியவர்களிடமிருந்தே வர வேண்டும்’ (பார்க்க : ‘ஸாதுல் மஆத்’, 1/72).

 

குறிப்பு : 03

 

தயம்மும் என்பது வுழூவுக்கு பதிலாக செய்யப்படுவது மட்டுமன்றி, கடமையான குளிப்புக்கு பதிலாகவும் செய்யப்படுவதாகும். இதற்கு குர்ஆனும் ஸுன்னாவும் ஆதாரமாய் அமைகின்றன :

 

1. ‘… நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் இயற்கைத் தேவையை நிறைவேற்றினால் அல்லது நீங்கள் குடும்ப உறவில் ஈடுபட்டிருந்தால் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்…'(5:6)

 

2. அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னை ஒரு தேவை நிமித்தம் (படைப்பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்கு குளிப்பு கடமையாகிவிட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளிப்புக்கு பதிலாக தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன்.

 

“ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து “நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?“ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், “நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி அவர்களிடம் நான் சொன்னபோது நபியவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து ‘இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்திருக்குமே’ ‘உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே!’ என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

இது போன்று இன்னும் பல ஹதீஸ்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் இல்லாத போது அல்லது தண்ணீர் இருந்தும் நோய், காயம், குளிர் போன்ற காரணங்களினால் அதை பயன்படுத்த முடியாத போது அதற்குப் பதிலாக தயம்மும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கின்றன.

 

குறிப்பு : 04

 

தயம்மும் என்பது வுழூவுக்கும் கடமையான குளிப்புக்குமான பதிலீடு என்ற வகையில், ஒரு தடவை செய்த வுழூவின் மூலமும், ஒரு தடவை குளித்த கடமையான குளிப்பின் மூலமும் எத்தனை பர்ழ் தொழுகைகளையும் எத்தனை ஸுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்ற முடியும் என்பது போல், ஒரு தடவை செய்த தயம்முமின் மூலமாகவும் எத்தனை பர்ழுகளையும் எத்தனை ஸுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்ற முடியும் என்பதே சரியான கருத்தாகும்.

 

ஒரு தடவை செய்த தயம்முமின் மூலம் ஒரு பர்ழ் தொழுகையை மாத்திரமே நிறைவேற்ற முடியும் ; ஸுன்னத்தான தொழுகைக்கு செய்த தயம்முமின் மூலமாக பர்ழ் தொழுகையை தொழ முடியாது என்பன போன்ற கருத்துகள் சில அறிஞர்களிடம் காணப்படுகின்றன.

 

இந்த கருத்துக்கு அடிப்படையாக இருப்பது என்னவெனில், தயம்முமானது தண்ணீரைப் போன்று தொடக்கை நீக்க கூடியதா, அல்லது தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கான தற்காலிக ஏற்பாடா என்பதில் அறிஞர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடாகும்.

 

தயம்முமானது தண்ணீரைப் போன்று தொடக்கை நீக்குவது என்று கூறுவோர், ஒரு தயம்முமின் மூலம் எத்தனை பர்ழ் தொழுகைகளையும் எத்தனை ஸுன்னத்துகளையும் நிறைவேற்றலாம் என்று கூறுகின்றனர். இக்கருத்தை இமாம் அபூஹனீபா, இமாம் அஹ்மத் (ஒரு அறிவிப்பின் பிரகாரம்), இமாம் இப்னு தைமியா, இமாம் இப்னுல் ஜவ்ஸி (றஹிமஹுமுல்லாஹ்) கொண்டிருக்கின்றனர்.

 

தயம்முமானது தொடக்கு நீக்கி அல்ல, தொழுகைக்கான ஒரு (தற்காலிக) ஏற்பாடு மட்டுமே என்று கூறுவோர் ஒவ்வொரு தொழுகைக்கும் தயம்மும் செய்தாக வேண்டும் எனக் கூறுகின்றனர். இந்நிலைப்பாட்டை இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (பிரபலமான அறிவிப்பு) (றஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் கொண்டிருக்கின்றனர். (பார்க்க : ‘தவ்ழீஹுல் அஹ்காம்’, 1/436).

 

இக்கருத்துக்கு பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாக காட்டுகிறார்கள் :

 

‘ஒருவர் ஒரு தயம்முமின் மூலம் ஒரு தொழுகையை நிறைவேற்றுவது ஸுன்னாவில் உள்ளதாகும். அடுத்த தொழுகைக்காக அவர் மீண்டும் தயம்மும் செய்வார்’ என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியதாக ஸுனனுத் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.

 

ஆனால் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அல்ஹஸன் பின் இமாரா என்பவர் பலவீனமானவர் என இமாம் தாரகுத்னீ அவர்களே மேற்படி ஹதீஸின் கீழ் குறித்துவைத்துள்ளார்கள். இமாம் இப்னுல் மதீனீ, இமாம் ஷுஃபா போன்ற ஹதீஸ்துறை மேதைகள் ஒரு படி மேலே சென்று மேற்படி அறிவிப்பாளர் ‘ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்’ என குறிப்பிடுகிறார்கள். பிரபல ஹதீஸ் துறை அறிஞரான ஹாபிழ் இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் மிக பலவீனமானது என்று குறிப்பிடும் அதே வேளை இமாம் அல்பானி (றஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என தீர்ப்பளித்துள்ளார் (பார்க்க : ‘மின்ஹதுல் அல்லாம்’ , 2/108).

 

இவ்விடயம் குறித்து ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (றஹ்) அவர்கள் கூறும் கருத்து இங்கு குறிப்பிடதக்கதாகும் :

 

‘தயம்மும் என்பது தண்ணீருக்கு பதிலாக நிறைவேற்றப்படுவதாகும்… எனவே, ஸுன்னத்தான தொழுகைக்காக செய்யப்பட்ட வுழூவின் மூலம் பர்ழ் தொழுகையையும் பர்ழ் தொழுகைக்காக செய்யப்பட்ட வுழூவின் மூலம் ஸுன்னத் தொழுகையையும் நிறைவேற்ற முடியும் என்பது போன்றே தயம்முமிற்கான சட்டமும் அமையும்… தண்ணீர் இல்லாத போது சுத்தம் செய்வதற்கான மாற்றீடாகவே அல்லாஹ் தயம்மும் என்ற ஏற்பாட்டை செய்துள்ளான். அல்லாஹ்வின் இந்த பரந்த ஏற்பாட்டை சுருக்குவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் நெருக்கடியை நிவர்த்திப்பதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தயம்மும் என்ற இந்த இலகுவான நடைமுறையை சிக்கல்தன்மைமிக்கதாக மாற்றுவது ஏற்கமுடியாத ஒன்றாகும்’ (பார்க்க : ‘அல்பதாவா’, 21/436, 459).

 

(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply