யார் அந்த அல்பானி?

அஷ்ஷைகு நாஸிருத்தீன்‌ அல்பானீ(رحمه الله) ஹதீஸ்‌ கலையின்‌ மாபெரும்‌ மேதை

  • வாழ்க்கைக்‌ குறிப்பு:

1914-ஆம்‌ ஆண்டு அல்பேனியாவில்‌ உள்ள ஷ்கூடர்‌ என்னுமிடத்தில்‌ பிறந்தார்‌. இவரது தந்‌தை நூஹ்‌ நஜாத்தி رحمه الله அவர்கள்‌ துருக்கியின்‌ இஸ்தான்புல்‌ நகரில்‌ இஸ்லாமியக்‌ கல்வி நிலையங்களில்‌ பயின்றவர்‌. பின்னர்‌ அல்பேனியா வந்த அவர்‌ அங்கு ஹனஃபி மத்ஹப்‌ சட்டங்களைப்‌ போதித்து வந்தார்‌. அன்றைய அல்பேனியாவின்‌ அதிபர்‌ அஹ்மது ஸோகோ அந்நாட்டில்‌ மதச்சார்பற்ற ஆட்சியைப்‌ பிரகடனம்‌ செய்ததாலும்‌, ஐரோப்பிய கலாச்சாரத்தை மக்கள்‌ மீது தினித்ததாலும்‌ பலர்‌ அந்நாட்டை விட்டு வெளியேறினர்‌. ஷெய்க்‌ அல்பானி அவர்களின்‌ தந்தையும்‌ சிரியாவின்‌ தலைநகரான டமாஸ்கஸ்‌ நகருக்குக்‌ குடிபெயர்ந்தார்‌. டமாஸ்கஸ்‌ நகரில்‌ பள்ளிக்குச்‌ செல்லும்‌ பருவம்‌ வந்தபின்‌ அவரது தந்‌தை பள்ளிக்‌ கூடங்களுக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே அவருக்கு குர்‌ஆன்‌, தஜ்வீது (ஓதும்‌ முறை), அரபி இலக்கணம்‌, ஹனஃபி மத்ஹப்‌ சட்டங்களைக்‌ கற்றுக்‌ கொடுத்தார்‌. அதே சமயத்தில்‌ அன்று டமாஸ்கஸ்‌ நகரில்‌ வாழ்ந்த, ஷெய்க்‌ ஸயித்‌ அல்‌ புர்ஹானி போன்ற இஸ்லாமிய அறிஞர்களிடமும்‌ அல்பானீ அவர்கள்‌ இஸ்லாத்தின்‌ பல்வேறு துறைகளைக்‌ கற்றுத்‌ தேர்ந்தார்‌. மாணவப்‌ பருவத்திலேயே ஹதீஸ்‌ தலையைக்‌ கற்பதில்‌ பெரும்‌ ஆர்வம்‌ காட்டினார்‌. கடிகாரம்‌ சரிபார்க்கும்‌ தொழிலைச்‌ செய்து வந்த அவர்‌, அல்லாஹ்வின்‌ அருளால்‌ நான்‌ இந்த வேலையைக்‌ கற்றுக்கொண்டேன்‌. தினமும்‌ 3 மணி நேரம்‌ மட்டும்‌ எனது குடும்பத்தை நடத்துவதற்காக உழைத்தேதன்‌. மீதி நேரங்களை நபிமொழிகளைப்‌ படிப்பதற்கும்‌, ளாஹிரியயா நூலகத்திலும்‌ சுமார்‌ 6 முதல்‌ 8 மணி நேரங்கள்‌ செலவிட்டேன்‌” என்று கூறியுள்ளார்‌. அவரது வருமானத்தில்‌ புத்தகங்களை வாங்குவதற்குச்‌ செலவழிக்க இயலாத நிலையில்‌ புதிய புத்தகங்களை புத்தக விற்பனை நிலையங்களிலிருந்து இலவசமாகப்‌ பெற்றுப்‌ படித்துவிட்டு திருப்பிக்‌ கொடுத்தார்‌. புத்தகக்‌ கடையினரும்‌ பெருந்தன்மையுடன்‌ அல்பானி அவர்களுக்குப்‌ புத்தகங்களைக்‌ கொடுத்து உதவினர்‌.
அச்சமயத்தில்‌ சிரியா, ஜோர்டான்‌ போன்ற நாடுகளிலிருந்து பல மாணவர்கள்‌ அவரிடம்‌ கல்வி கற்றனர்‌. தனது வாழ்நாள்‌ முழுவதும்‌ இறுதித்‌ தூதர்‌ முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்களின்‌ ஹதீஸ்களையும்‌. இமாம்களின்‌ வழிமுறைகளையும்‌ பின்பற்றி வந்த அவர்‌ எந்த மத்ஹபையும்‌ சார்ந்து இருக்கவில்லை.
அவரது உரைகள்‌ நடக்கும்‌ இடங்களில்‌ மார்க்கத்தில்‌ பித்‌அத்தை நுழைப்பவர்கள்‌, சூஃபிகள்‌ ஆகியோர்‌ பிரச்சினைகளை ஏற்படுத்தினர்‌. அவரைப்‌ பற்றித்‌ தவறாகவும்‌ பிரச்சாரம்‌ செய்ய ஆரம்பித்தனர்‌. ஆயினும்‌ அல்பானீ, அவர்கள்‌ பக்கம்‌ கவனம்‌ செலுத்தாமல்‌ தம்‌ பணியைத்‌ தொடர்ந்து செய்துவந்தார்‌.
இவரைப்‌ பற்றிக்‌ கேள்வியுற்ற மதீனா இஸ்லாமியப்‌பல்கலைக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ ஷெய்க்‌ முஹம்மது பின்‌ இப்ராஹிம்‌ ஆலி அஷ்ஷெய்க்‌ رحمه الله அவர்கள்‌ அல்பானீயை மதீனா பலகலைக்கழகத்தில்‌ ஹதீஸ்‌ கலையைப்‌ போதிக்கும்‌ பேராசிரியராக நியமித்தார்‌. அங்கு 3 வருடங்கள்‌ பணியாற்றிய அல்பானீ, அப்பல்கலைக்கழகத்தில்‌ இஸ்னாத்‌ – ஹதீஸ்‌ அறிவிப்பாளர்களைப்‌ பற்றிய புதிய கலையைத்‌ துவக்கினார்‌. புகழ்பெற்ற மிகப்‌ பழமையான அல்‌அஸ்ஹர்‌ பல்கலைக்‌ கழகத்தில்கூட இத்துறை போதிக்கப்படவில்லை. இஸ்லாமியப்‌ பல்கலைக்கழகங்களின்‌ வரலாற்றில்‌ முதன்முறையாக அல்பானி அவர்களால்‌ இக்கலை துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்‌தக்கது.

  • அல்பானீ வகித்த பதவிகள்‌:

1) சிரியாவின்‌ ஹதீஸ்‌ கமிட்டி உறுப்பினர்‌.
2) மதினா இஸ்லாமியப்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஹதீஸ்‌ துறைப்பேராசிரியர்‌.
3) சவூதி அரேபியாவின்‌ கல்வியமைச்சரின்‌ வேண்டுகோளுக்கிணங்க மக்கா பல்கலைக்கழகத்தின்‌ உயர்‌ கல்வி மேற்‌பார்வையாளர்‌.
4) சவூதியின்‌ முன்னாள்‌ மன்னர்‌ காலித்‌ பின்‌ அப்துல்‌ அஜிஸ்‌ رحمه اللهஅவர்கள்‌ இவரை மதினா இஸ்லாமியப்‌ பல்கலைக்கழகத்தின்‌ சுப்ரீம்‌ கவுன்சில்‌ உறுப்பினராக ஹிஜ்ரி 1395 முதல்‌ 1398 வரையிலான 3 ஆண்டுகளுக்கு நியமனம்‌ செய்தார்‌.
5) சிரியாவிலுள்ள புகழ்பெற்ற ளாஹிரிய்யா நூலகம்‌ இவருக்காக நூலகத்திலேயே ஓர்‌ அறையை ஹதீஸ்‌ துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கிக்‌ கொடுத்தது.
6) இதுமட்டுமல்லாமல்‌ அல்பானீ அவர்கள்‌ பெரும்பாலான முஸ்லிம்‌ நாடுகளுக்கும்‌ ஐரோப்பிய நாடுகளுக்கும்‌ இஸ்லாமிய அழைப்புப்‌ பணிகள்‌ செய்வதற்காக பயணங்கள்‌ மேற்கொண்டார்‌.
ஷெய்க்‌ நாஸிரித்தீன்‌ அல்பானீ அவர்கள்‌ தனது வாழ்நாளில்‌ பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களுடன்‌ தொடர்புகள்‌ வைத்திருந்தார்‌. அறிஞர்களிடமிருந்து இவரும்‌, இவரிடமிருந்து மற்றவர்களும்‌ கல்வியைப்‌ பரிமாறிக்‌ கொண்டனர்‌.
ஷெய்க்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ பாஸ்‌ رحمه الله அவர்களுக்கும்‌, அல்பானீ அவர்களுக்குமிடையில்‌ நல்லவலுவான தொடர்பிருந்தது. ஷெய்க்‌ பின்‌ பாஸ்‌ அவர்கள்‌ அல்பானீ அவர்கள்‌ குறித்து ‘இந்த நவீன உலகில்‌, வானத்திற்கு கீழே, ஷெய்க்‌ நாஸிரித்தீன்‌ அல்பானியை விட ஹதீஸ்‌ கலையில்‌ அதிக ஞானமுடைய ஒருவரை நான்‌ பார்க்கவில்லை” என்று புகழாரம்‌ சூட்டியுள்ளார்கள்‌.
ஷெய்க்‌ அல்பானீ அவர்கள்‌ இந்தியாவின்‌ இஸ்லாமிய அறிஞர்களான ஷெய்க்‌ ஹபிபுர்‌ ரஹ்மான்‌ அல்‌அத்ஹமி رحمه الله, முஸ்தஃபா அல்‌ அத்ஹமி رحمه الله, அப்துஸ்ஸமது ஷர்‌ஃபுத்தீன்‌ رحمه اللهபோன்றவர்களுடன்‌ தொடர்புகளை வைத்திருந்தார்கள்‌.
60 ஆண்டுகளாக ஹதீஸ்‌ துறையில்‌ தமது காலத்தைச்‌ செலவிட்ட ஷெய்க்‌ அவர்கள்‌ இத்துறையில்‌ தனது உழைப்பு பற்றி திருப்தியடையாதவராகவே இருந்தார்கள்‌. இவருடைய இறுதிக்‌ காலங்களில்‌, மற்ற நாடுகளுக்குப்‌ பயணம்‌ மேற்கொள்ளாமல்‌ தமது முழு வாழ்வையும்‌ ஹதீஸ்‌ துறைக்காக அர்ப்பணிக்க இயலவில்லையே என்று வருந்தினார்‌. தினமும்‌ 10 முதல்‌ 12 மணி நேரம்‌ தொழுகை நேரம்‌ தவிர, நூலகத்திலேயே அறிவைத்‌ தேடுவதில்‌ செலவிட்டார்‌. அல்பானீ அவர்கள்‌ ஹதீஸ்‌ துறையில்‌ மட்டும்‌ 100-க்கும்‌ மேற்பட்ட நூல்களை இவ்வுலகத்திற்குத்‌ தந்துள்ளார்கள்‌. அவற்றில்‌ மிகவும்‌ போற்றத்தக்கது ”ஸிஃபத்‌ ஸலாத்‌ அந்நபி” என்னும்‌ நூலாகும்‌. இந்நூலைப்‌ பற்றி ஓர்‌ அறிஞர்‌ கூறும்போது “இந்த ஒரு நூல்‌ போதும்‌ ஷெய்க்‌ அவர்களின்‌ திறமைக்கு சான்று கூற!” என்று குறிப்பிட்டார்‌.
நன்றி: (சமரசம்‌ – நவம்பர்‌ 1999)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply