பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |

 

 

-அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…

மாதவிடாய் வராது தடுக்கின்ற அல்லது அதனை வரவழைக்கத்தக்க, அல்லது கருவுறாது தடுக்கக்கூடிய அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை பயன்படுத்தல்:

 

ஒரு பெண் மாதவிடாயை தடுப்பதற்குரிய மாத்திரை அல்லது அது போன்றவற்றை பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் பயன்படுத்த அனுமதியுள்ளது.

முதலாவது : பெண்ணுக்கு அதனைப் பயன்படுத்துவதால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. அவ்வாறு பாதிப்பு ஏற்படுமாயின் அதனை பயன்படுத்துவது கூடாது.

இது குறித்து அல்லாஹ்

உங்களின் கைகளின் மூலமே உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள் எனக் கூறுகின் றான் (அல்பகரா :195).

மேலும் அல்லாஹ் குறிப்பிடுகையில் :

உங்களை நீங்களே கொன்று விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் அன்புடையவனாக இருக்கின் றான் (அந்நிஸா :29)

இரண்டாவது : மாதவிடாயை தடுக்கின்றவற்றை பயன்படுத்துவதால் அது கணவரைப் பாதிக்குமாயின் அப்பொழுது அவரது அனுமதியைப் பெறுவது பிரதானமாகும். உதாரணமாக, ஒரு பெண் விவாகரத்துக்கான இத்தாவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம், அப்பொழுது அவளுக்கான செலவை கணவரே பொறுப்பேற்றிருப்பார்;. அவள் தனது இத்தா காலத்தை நீடிக்க மாதவிடாய்த் தடுப்புகளைப் பயன்படுத்துகிறாள். இவ்வேளை கணவன் அவளுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவேதான், அவள் தனது கணவரிடம் அனுமதியைப் பெறாமல் அவற்றைப் பயன்படுத்துவது கூடாது.

அதேபோல், மாதவிடாய்த் தடுப்புக்களை பயன்படுத்துவதால் ஒரு பெண் கருத்தரிக்காது விடலாம் என்ற அச்சம் இருக்குமாயின், அப்பொழுதும் கணவரின் அனுமதியின்றி அத்தகைய தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவது கூடாது. இவ்வாறு தடுப்புகளை உபயோகிப்பது அனுமதிக்கப்பட்டதாக இருப்பினும் அதனை பயன்படுத்தாது இருப்பதே மிகவும் சிறந்தது. இயற்கையாக வெளிவரும் இந்த இரத்தத்தை அவ்வாறே விட்டுவிடுவது ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் நல்லதாகும்.

அதே போன்று மாதவிடாயை வரவழைக்கின்றவற்றை பயன்படுத்துவதும் பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதலாவது : ஒரு கடமையிலிந்து விலகிச் செல்வதற்கான உபாயமாக இருக்கக் கூடாது. அதாவது ரமழான் நெருங்கி வரும் வேளையில் நோன்பு நோற்காமலும், தொழாமலும் இருப்பதற்காக பயன்படுத்துதல்.

இரண்டாவது: மாதவிடாய் ஏற்படுவதற்கான மருந்துகளைப் பயன்படுத்த தனது கணவனின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான மருந்து உபயோகிப்பதன் மூலம் அவளுக்கு மாத விடாய் உண்டாகி, அவளது கணவன் அவளுடன் முழு இன்பத்தையும் அனுபவிக்க அது தடையாக இருக்கிறது. எனவே தான் அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியைப் அவள் தனது கணவனிடம் பெறவேண்டும். மேலும், அவள் விவாகரத்து செய்யப்பட்டிருந்து, அது மீட்டெடுப்புக்குரிய காலமாக இருப்பின் அவளது கணவன் அவளை மீட்டெடுக்கும் இத்தா காலம் துரிதமாக முடிவடைந்துவிடுவதற்கு காரணமாக அமையும். அதாவது இஸ்லாமிய ஷரீஆ வரையறுத்த கால எல்லைக்கு முன்னறே மீட்டெடுத்துக் கொள்வதற்கான காலம் முடிவடையும் அபாயம் உள்ளது.

கருத்தரிப்பதை தடுக்கக் கூடியவற்றைப் பயன்படுத்தல்.:

இது இரண்டு வகைப்படும்.

முதலாவது வகை : கருத்தரிப்பை முற்றாகத் தடுப்பவை. இவ்வாறானவற்றை உபயோகிப்பதற்கு அனுமதியில்லை, (இவற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதாகும்) காரணம் அது கருவுருவதை தடுத்து சந்ததிகளைக் குறைத்து விடுகிறது. இது முஸ்லிம்கள் பெருக வேண்டும் என்ற இஸ்லாமிய ஷரீஆவின் இலக்கிற்கு முரணான விடயமாகும். அத்துடன் இவ்வாறான நிரந்தர கருத்தடை மருந்துகளை உபயோகிப்பதால் ஒரு பெண் தனக்கிருக்கும் பிள்ளைகள் எல்லோரும் மரணமடையாது இருப்பர் என்று உறுதி கூற முடியாது. இக்கட்டத்தில் நிரந்தர கருத்தடை செய்து பிள்ளைப் பெறுவதை தடை செய்து கொண்டால் அவளது பிள்ளைகள் மரணித்து சந்ததியற்றவளாக இருக்கும் நிலை ஏற்படலாம்.

இரண்டாவது வகை: தற்காலிகமாக கருத்தரிப்பை தடுத்து கொள்ளல். இந்த வகையைப் பொருத்தவரை ஒரு பெண் அதிகம் கருத்தரிப்பவளாக இருக்கிறாள், அவ்வாறு அவள் அடிக்கடி ஒவ்வொரு வருடமும் கருத்தரிப்பது அவளைப் பலவீனமடையச் செய்கிறது. ஆதலால் அவள் தனது கருத் தரித்தலை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அல்லது அது போன்று ஒழுங்குபடுத்திக் கொள்ள விரும்புகிறாள். இவ்வாறு செய்வதில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது., அவளது கணவனும் அனுமதியளித்து, அந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதில் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனக் கண்டால் இக்கட்டத்தில் தற்காலிக கருத்தடை சாத னங்களை மருந்துகளை பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டதே!

இதற்கு ஆதாரமாக பின் பின்வரும் செய்தி உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் தமது பெண்கள் கருவுராமல் இருப்பதற் காக விந்து பெண்ணை சென்றடைவதை ‘அzஸ்ல்’ தடை செய்தார்கள்! இதனை அவர்களுக்கு நபியவர்கள் தடை செய்யவில்லை. ‘அzஸ்ல்’ என்பது ஒருவர் தன்னுடைய மனைவியுடன் பாலுறவு கொண்டு விந்து வரும் கட்டத்தில் தனது ஆணுறுப்பைப் பெண்ணுறுப்பிலிருந்து எடுத்து விந்தை வெளியில் விடுவதையே குறிக்கும்.

கருக்கலைப்பு செய்வதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவது:

இருவகைப்படும்.

முதலாவது வகை: ஒரு பெண்ணின் கருப்பையில் உள்ளதை அழித்துவிட நாடுதல். இந்த வகையைப் பொருத்த வரை அந்த கருவானது உயிரூட்டப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு செய்ய நாடினால் அது தடைசெய்யப்பட்டதாகும்- ஹராமாகும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஏனெனில், அது எவ்வித நியாயமான காரணமுமின்றி ஓர் உயிரைக் கொலைசெய்யும் கொடிய குற்றச் செயலாகும்’ இவ்வாறு செய்வது அல் குர்ஆன், ஸுன்னா, இஜ்மா போன்ற அடிப்படைகளின் படி ஹராமானதாகும்.

உயிர் ஊதப்படுமுன் கருவை கலைப்பதை பொருத்தவரை அறிஞர்களிடம் இரு வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சில அறிஞர்கள் ‘அனுமதிக்கத்தக்கது’ எனவும் மற்றும் சிலர் அனுமதிக்கத்தக்கதல்ல எனவும் கூறுகின்றனர். சில அறிஞர்கள் அது ‘அலகா’ (இரத்தக் கட்டி) என்ற நிலையில் இல்லாமலிருந்தால் அனுமதிக்கப்படலாம் என்று கூறுகின்றனர். அதாவது கருத்தரித்து நாற்பது நாட்களுக்குக் குறைவாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படலாம் என்பது அவர்கள் கருத்தாகும். எனினும் மற்றும் சிலரின் கருத்துப்படி கரு மனித உருவின் அமைப்பைப் பெறாத நிலை வரை இது அனுமதிக்கப்படலாம் எனக் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், நியாயமான எவ்விதக் காரணமுமின்றி கருவை கலைக்காமல் இருப்பதில் கவனம் செலுத்துவதே பேணுதலுக்குரிய காரியமாகும். உதாரணமாக ஒரு தாய் கருவை சுமக்க முடியாத அளவுக்கு சுகயீனமுற்று இருப்பாளாயின் அவளது அந்தக் கரு மனித உருவமைப்பை பெற்றில்லாவிட்டால் அதை கலைப்பது அனுமதிக்கப்படும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இரண்டாவது வகை : கருவை அழிக்கும் நோக்கம் இன்றி அதனை வெளியே எடுத்தல். அதாவது ஒரு பெண் கர்ப்ப காலம் முடிவுற்று பிரசவம் அண்மித்த வேளையில், தாய்க்கும் அவளின் பிள்ளைக்கும்; எவ்விதத் தீங்கு ஏற்படாதவாறு, சத்திரசிகிச்சை (Operation) இல்லாது மிகக் கவனமாகக் காரிய மாற்றி பிள்ளையை வெளியே எடுப்பது அனுமதிக்கப் பட்டுள்ளது. என்றாலும் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கருவை அகற்றுவதாக இருந்தால் அதற்கு பின்வரும் நான்கு வழி முறைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வழிமுறை (1) தாயும் சேயும் உயிருடன் இருக்கும் போது பிள்ளையைப் பெற்றெடுப்பதில் சிக்கல்கள் ஏதும் இருப்பின் இத்தகைய கட்டத்தில் மாத்திரம் சத்திர சிகிச்சை மூலம் பிள்ளையை வெளியே எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும். இதுவும் நிர்ப்பந்த நிலையில் அனுமதிக்கப்படுவதற்கான காரணம் யாதெனில் மனித உடல் அமானிதமாகும். அதனை மிகப்பெரும் நலனை முன்னிருத்தாது ஓர் ஆபத்தான நிலைமைக்கு உட்படுத்திவிடக் கூடாது. சில வேளை சத்திரசிகிச்சையினால் எவ்விதப்பாதிப்பும் கிடையாது என நினைத்து அதனை மேற்கொண்டு விடுவதனால் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

வழிமுறை (2) தாயும் சேயும் இறந்திருக்கும் போது சத்திர சிகிச்சை மேற்கொள்வதால் எத்தகைய பயனும் கிடையாது என்பதால் இது அனுமதிக்கப்படவில்லை.

வழிமுறை (3) தாய் உயிருடன் இருக்க. சேய் இறந்தபோது தாய்க்கு ஏதும் ஆபத்து நேரும் என்ற அச்சம் இல்லாதிருந்தால் இறந்திருக்கும் சேயை அகற்றுவதற்கு சத்திரசிகிச்சை செய்ய அனுமதியுண்டு. காரணம் இறந்த சேயை சத்திர சிகிச்சை மேற்கொள்ளாது அகற்ற முடியாது என்பது தெளிவான விடயமாகும். மேலும் மரணித்த அந்த சிசுவானது கருப்பையில் தொடர்ந்தும் வைத்திருப்பது அவளுடைய எதிர்கால பிரசவங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதுடன் பாதிப்பை ஏற்படுத்தலாம். அத்துடன், அவளது முந்திய கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று இத்தாவில் இருக்கும் பொழுது அந்நிலை இருந்தால் அவளை ஒரு துணையற்ற விதவையாகவே மாற்றிவிட இடமுண்டு. ஆகையால் இவ்வாறான நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதில் எவ் விதத்தடையும் கிடையாது.

வழிமுறை (4) தாய் இறந்து சேய் உயிருடன் இருந்தும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று இருந்தால் அப் பொழுது அதனை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றுவது அனுமதிக்கப்பட்டதல்ல.

ஆனால், உயிர் பிழைக்க வாய்ப்பிருந்து, அதன் சில பகுதிகள் வெளிவந்திருந்தால் அப்பொழுது –வயிற்றைப் பிளந்து-சத்திர சிகிச்சை மூலம் அதனை வெளியே எடுப்பது அனு மதிக்கத்தக்கதாகும். இதற்கு மாறாக சிசுவின் எதுவும் வெளி வராத கட்டத்தில் வயிற்றைப் பிளந்து சிசுவை வெளியே எடுப்பது அந்த உடலை வதைத்து ‘சித்திரவதை செய்தல் என்பதற்கு உட்படும் என்பதால் அதனை எமது ஹன்பலி மத்ஹபை சேர்ந்த சில சட்ட வல்லுனர்கள் அனுமதிக்க வில்லை. ஆனால் சத்திர சிகிச்சையின் மூலமே சிசுவை வெளியே எடுக்கலாம் என்றிருந்தால் அதனை மேற்கொள்வதில் எவ்விதத் தடையும் கிடையாது. இதுவே சரியான நிலைப்பாடுமாகும். இதுவே இமாம் இப்னு ஹுபைராவின் தெரிவுமாகும்.

இது குறித்து அவர் தனது இன்ஸாப் என்ற நூலில் தேவை யேற்படுமென்றிருந்தால் வயிற்றை பிளந்து எடுப்பது என்பதே பொருத்தமான கருத்தாகும் என்று குறிப்பிடுகிறார். குறிப்பாக, இந்த சட்டப்பிரச்சினை தொடர்பாக எனது கருத்து (ஸாலிஹ் இப்னுல் உஸைமீன் நிலைப்பாடு) என்ன வென்றால், வயிற்றை சத்திர சிகிச்சை மூலம் திறந்து உள்ளேயுள்ள பிள்ளையை வெளியே எடுப்பது குறிப்பாக இக் கால கட்டத்தில் அத்தியாவசியமானதாகும். அது சித்திரவதை என்று கூற முடியாது. காரணம், வயிற்றைத் திறந்து மீண்டும் முன்பிருந்தது போல் அதைத் தைத்து விடும் அளவுக்கு மருத்துவத்துறை வளர்ந்துள்ளது. அதே போல் இறந்து விட்ட ஒருவரை விடவும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை பாதுகாப்பது மிகவும் புனிதமானது. மேலும் ஒன்றுமே அறியாத ஒரு ஜீவனை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகப்பெரும் கடமையாகும். ஆகவே கருப்பையில் இருக்கும் உயிருள்ள ஜீவன் பாதுகாக்கப்படவேண்டியது அதனை மீட்டெடுப்பது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வே நன்கறிந்தவன்

குறிப்பு: கருவை கலைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலைகளில் அதற்குச் சொந்தக்காரரான கணவனின் அனுமதி யைப்பெறுவது அவசியமாகும்.

இறுதியாக, நான் எடுத்துக் கொண்ட இந்த முக்கிய தலைப்பில் நான் எழுத விரும்பிய என் கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பித்து விட்டேன். இங்கு நான், இது தொடர்பான அடிப்படை விடயங்களையும் வரையறைகளையும் மாத்திரமே குறிப்பிட்டுள்ளேன். இத்தலைப்போடு தொடர்பான கிளையம்சங்களும், அதன் உட்பிரிவுகளும், பெண்களுக்கு நிகழ்கின்ற விடயங்களும் கடல் போன்று மிகவும் விசாலமானவை. என்றாலும் இத்துறை பற்றி அறிவுள்ளோருக்கு கிளையம்சங்களை அடிப்படை அம்சங்களோடும் உட்பகுதி களை பொதுவானவற்றுடனும் அதன் வரையறைகளுடன் ஒப்பிட்டு விளங்கி மிகச் சிறந்த முடிவுகளை அவர்களால் பெறமுடியும். மார்க்கத்தீர்பு வழங்கும் முப்தி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொண்டு வந் ததை மக்களுக்கு எத்திவைப்பதில் அல்லாஹ்வுக்கும் அவனின் அடியார்களுக்கு மத்தியில் மத்தியஸ்தராக உள்ளார் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர் அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனிலும் நபி ஸல் லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாஹ்வி லும் வந்துள்ளவற்றை பின்பற்றி நடக்கும் பொறுப்புக்குரிய வர்.

ஏனெனில் அந்த இரண்டு மூலாதாரங்களில் உள்ளவற்றை விளங்கி அதன் படி ஒழுகவே அடியார்கள் பணிக்கப் பட்டுள்ளனர். அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணா னவை தவறுகளாகும். அந்த முரணான கருத்தை கூறியவரி டமே அதனை விட்டு விடுவதுடன் அத்தகைய தவறுகளை நடைமுறைப்படுத்தவோ பின்பற்றவோ கூடாது. அவற்றைத் தனது இஜ்திஹாத் மூலம் மன்னிக்கப்படக்கூடிய ஒரு முஜ்தஹித் முன்வைத்தாலும் சரியே. எனினும் அவரது தவறை அறிந்த பிற ஆலிம் அவரது கருத்தை ஏற்றுக் கொள்வது கூடாது.

ஒரு முஃப்தி இஹ்லாஸ் எனும் அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணத்தை கொண்டிருப்பது கடமையாகும். ஏற்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் (சட்டப் பிரச்சினைக்கும்) அவனிடமே உதவி தேட வேண்டும். மேலும் மிகச் சரியான முடிவுகளின் பால் வழிகாட்டப்படவும் உறுதியாக இருக்கவும் அவனிடமே பிரார்த்திக்க வேண்டும்.

மேலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர் (முப்தி) அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வந்தவற்றையே கருத்திற் கொள்ள வேண்டும். அதில் அவதானம் செலுத்தி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேட வேண்டும். அல்லது அவ்விரண்டையும் விளங்குவதில் அறிஞர்களின் கருத்துக்களை துணையாகக் கொள்வது அவசியமாகும்.

ஏதாவது சட்டப்பிரச்சினை ஒன்று தோன்றும் போது அது குறித்த தீர்வுகளை முன்வைப்பதற்காக அறிஞர்களின் கருத்துக்களைத் தேடிச் செல்வது அதிகம் நிகழும் விடயமாகும். பின்பு, அத்தீர்ப்புக்களில் திருப்திகரமான ஒன்றை பெற்றுக் கொள்ளமாட்டார். சில வேளை அது தொடர்பான விடயத்தை கண்டுகொள்ளவே முடியாது போகும். எனவே, அவர்களின் தூய எண்ணம், அறிவு, புரிதல் ஆகியவற்றினூடாக அல்குர்ஆனையும் நபிகளாரின் ஸுன்னாவையும் அணுகினால், தெளிவானதும் மிக நெருக்கமானதுமான தீர்வுகளை பெற்றுக்கொள்வார்கள் என்பதே யதார்த்தமாகும்.

மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அறிஞர் (முப்தி) கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில், மார்க்கத் தீர்ப்பு வழங்கு வதில் அவர் அவசரப்படாமலிருப்பதாகும். ஆய்வின்றி அவ சரமாக வழங்கப்பட்ட எத்தனையோ தீர்ப்புகள் குறுகிய காலத்தில் ஆய்வுக்குப் பிறகு அத்தீர்ப்பு பிழையென முடிவு கிடைக்கும். அதனால் பிழையான தீர்ப்பினை வழங்கி, அதன் விளைவுகள் காரணமாக பின்னர் வருந்த நேரிட லாம். சில வேலை அத்தீர்ப்பை அதிகமானோர் பின்பற்றும் நிலை தோன்றினால் அதனை மீளப்பெறவும் முடியாத துரதிஷ்ட நிலை உருவாகலாம். ஆகவே மார்கத்தீர்ப்பு வழங்குபவர் அவசரப்படக் கூடாது.

ஒரு குறிப்பிட்ட முப்தியிடம் (மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அறிஞர்) தீர்ப்புக் கோரி முன்வைக்கப்படும் விவகாரங்கள் தொடர்பாக மிகுந்த நிதானத்துடனும் குறித்த தகவல்களை திட்டப்படுத்திக் கொண்டும் தீர்ப்பு வழங்குவாராயின், அவரை மக்கள் நம்புவதோடு அவரது தீர்ப்புக்களை ஆர்வத்துடன் கருத்தில் கொள்வர். அவ்வாறில்லாது, தீர்ப்பு வழங்குவதில் அவர் அவசரப்பட்டால், அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாது போய்விடும். அது மாத் திரமின்றி அவரிடம் காணப்படும் அறிவு மற்றும் சரியான தீர்வுகளை மக்கள் அறிந்து பயன்பெறும் நிலையும் அற்றுப் போய்விடும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் எமக்கும் எமது முஸ் லிம் சகோதர, சகோதரிகளுக்கும் நேரான வழியை காட்டு மாறும் பிரார்த்திப்பதோடு, மேலும், அவனுடைய அருளி னால் எம்மை பொருப்பேற்க வேண்டுமெனவும்; அவனின் விசேட பாதுகாப்பின் மூலம் எம்மை தவறுகளிலிருந்து காத் தருள வேண்டுமெனவும் அவனிடம் நாம் பிரார்த்திக்கின் றோம். அவன் மிகப்பெரும் கொடையாளனும், தாராளத் தன்மையுடையனுமாவான். எமது தூதர் முஹம்மத் ஸல்லல் லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவரக்ளின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அருள் மூலமே நற்காரியங்கள் யாவும் நிறைவுபெறுகின்றன.

 

அல்லாஹ்வின் ஆசியை வேண்டி நிற்கும்

முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களால் ஜும்ஆத் தின முற்பகலில் ஷஃபான் மாதம் 14ம் திகதி, ஹிஜ்ரி 1392 ம் வருடம் இத்தொகுப்பு எழுதி முடிக்கப்பட்டது.

தமிழில்:இஸ்லாம்ஹவுஸ் இணையதளம்

 

முந்தைய தொடரை வாசிக்க இங்கே CLICK செய்யவும் 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d