ஸுன்னாவின் ஒளியில் வுழூ
– தொடர் : 05
8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) :
முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின் தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6).
நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.
தலைப்பாகை அணிந்திருக்கும் போது அவர்கள் மஸ்ஹு செய்த முறைகளாவன :
1. இரு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து அவ்விரு கைகளையும் பிடரி வரை கொண்டு சென்று பின்னர் ஆரம்பித்த இடத்திற்கே கைகளை கொண்டுவந்து சேர்த்தல். இதன் மூலம் தலை முழுவதும் மஸ்ஹு செய்யப்படும்.
பின்வரும் ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது :
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தலையை மஸ்ஹு செய்யும் போது தமது இரு கைகளையும் தலையின் முன் பகுதியில் வைத்து பிடரி வரை பின்னோக்கி கொண்டு சென்று மீண்டும் அதே கைகளை தலையின் முன் பகுதியை நோக்கி ஆரம்பித்த இடத்துக்கு கொண்டு வந்தார்கள் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி).
2. தலையின் மேற்பகுதியிலிருந்து கீழ் பகுதி நோக்கி இரு கைகளாலும் தண்ணீரால் தடவுதல் (மீண்டும் மேல் பகுதி நோக்கி கொண்டு செல்வதில்லை).
பெண் ஸஹாபியாவான ருபையிஃ (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்த போது தமது கைகளை தலையின் மேற்பகுதியில் வைத்து கீழ் பகுதி நோக்கி தண்ணீரால் தடவினார்கள். அவர்களது தலைமுடி கலையாமலே நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள் (அபூதாவூத், அஹ்மத்).
தலைப்பாகை அணிந்திருக்கும் போது மஸ்ஹு செய்த முறைகளாவன :
1. தலைப்பாகை மீது மாத்திரம் மஸ்ஹு செய்தல் :
அம்ர் இப்னு உமையா (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தலைப்பாகையின் மீது மஸ்ஹு செய்வதை நான் கண்டேன் (புஹாரி, நஸாஈ, இப்னு மாஜஹ்).
2. தலைப்பாகை மீதும் முன் நெற்றி முடியின் மீதும் மஸ்ஹூ செய்தல் :
அல்முகீரா இப்னு ஷுஃபா (றழி) கூறுகிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்த போது தலைப்பாகை மீதும் முன் நெற்றி முடியிலும் மஸ்ஹு செய்தார்கள்…(முஸ்லிம், அபூதாவூத்)
(பார்க்க : ‘தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா’ , 1/72, 73).
சுருங்கக் கூறின், நபிகளார் தலைப்பாகை அணியாமல் இருந்த போது இரு முறைகளிலும் தலைப்பாகை அணிந்திருந்த போது இரு முறைகளிலும் தலையை மஸ்ஹு செய்திருப்பதை அவதானிக்கலாம்.
இவ் அடிப்படையில் இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலானோர் தலைப்பாகை அணியாத நிலையிருப்பதனால் மேற்குறிப்பிட்டவாறு நபிகளார் தலைப்பாகை அணியாத நிலையில் எவ்வாறு இரு முறைகளில் தலையை மஸ்ஹு செய்தார்களோ அவற்றுள் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி அல்லது இரு முறைகளையும் மாறி மாறி பின்பற்றி தலை முழுவதையும் மஸ்ஹு செய்வதே ஸுன்னாவை சரிவர பின்பற்றுவதாக அமையும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் தலைப்பாகை அணியாத நிலையிலும் முன்னெற்றி முடி மீது மாத்திரம் மஸ்ஹு செய்வது சரியான முறையல்ல என்பதை மேற்படி ஹதீஸ்களிலிருந்து புரிந்துகொள்கிறோம். எனவே நமது வழிகாட்டியும் முன்மாதிரியுமான நபிகளாரை பின்பற்றி இதை முற்றிலுமாக திருத்தியமைத்து நமது வுழூவை சீரமைத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
பெண்கள் தலையை மஸ்ஹு செய்வதை பொறுத்தவரை நபியவர்கள் பெண்களுக்கென வேறான ஒரு முறையை கற்றுத்தரவில்லை என்பதனால், மேலே குறிப்பிடப்பட்ட முறையையே அவர்களும் பின்பற்ற வேண்டும். ஆயினும் பெண்கள் பிடரிக்கு நகர்த்திய கைகளை மீண்டும் முன்னோக்கி கொண்டு வரவேண்டியதில்லை என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது :
ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் வுழூ செய்த முறையை கற்றுக்கொடுத்தார்கள். அப்போது தலையை மஸ்ஹு செய்த வேளை தனது தலையின் முன் பகுதியில் இரு கைகளையும் வைத்து பிடரி வரை கொண்டு சென்று விட்டார்கள். இவ்வறு ஒரு தடவை செய்தார்கள் (நஸாஈ).
எனவே பெண்கள் தலையின் பின்பகுதி வரை அதாவது பிடரி வரை கொண்டு சென்று விட்டால் போதுமானது, மீண்டும் தலையின் முன்பகுதிக்கு கைகளை கொண்டு வரத் தேவையில்லை என்பது மேற்படி ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.
அதே வேளை அவர்கள் தலை மறைத்து ஹிஜாப் அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் தலைத் திரை மீது மஸ்ஹு செய்ய முடியும் என்பதை கீழ்வரும் செய்தி தெளிவுபடுத்துகிறது :
உம்மு ஸலமா (றழி) அவர்கள் வுழூ செய்த போது தனது தலைத் திரை மீது மஸ்ஹு செய்தார்கள் (முஸன்னப் இப்னு அபீஷைபா).
இது ஆதாரபூர்வமான தகவல் என பிரபல ஹதீஸ் துறை அறிஞர் ஹாயிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (பார்க்க : ‘தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா, 1/73 ).
அடுத்து, தலையை மஸ்ஹு செய்த பின் இரு காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும்.
நபிகளார் கூறினார்கள் : ‘இரு காதுகளும் தலையை சேர்ந்ததாகும்’ (திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜஹ்)
அதாவது தலையை மஸ்ஹு செய்த பின் அதே நீரினால் காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும் என்பதனாலேயே நபியவர்கள் ‘இரு காதுகளும் தலையை சேர்ந்தது’ எனக் கூறினார்கள்.
தலையை மஸ்ஹு செய்த பின் காதுகளை மஸ்ஹு செய்வதற்கென புதிதாக நீரை எடுப்பதற்கு ஸுன்னாவில் ஆதாரங்கள் இல்லை என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே தலையை மஸ்ஹு செய்த அதே நீரினாலேயே காதுகளை மஸ்ஹு செய்வதே நபிகளாரின் நடைமுறையாகும்.
அதே நேரம் (சில வேளைகளில்) ‘நபியவர்கள் தமது இரு கைகளையும் முழங்கை வரை கழுவிய பின் கையில் எஞ்சியுள்ள நீரினாலும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்’ என ருபையிஃ (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)
💥காதுகளை எவ்வாறு மஸ்ஹு செய்வது என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது :
‘நபிகளார் தமது தலையை மஸ்ஹு செய்த பின் இரு ஆட்காட்டி விரல்களையும் இரு காதுகளுக்குள் நுழைத்து இரு பெருவிரல்களினாலும் காதுகளின் வெளிப்புறங்களை மஸ்ஹு செய்தார்கள்’ (அபூதாவூத், நஸாஈ, இப்னு மாஜஹ்).
பலர் காதுகளை மஸ்ஹு செய்யும் முறையை அறியாததால் தவறாக செய்வதை அவதானிக்கிறோம். அத்தகையோர் மேலுள்ள முறைப் பிரகாரம் தவறை திருத்திக்கொள்வது அவசியமாகும்.
இவ்வாறே நபிகளார் ஏனைய உறுப்புகளை ஒரு தடவை, அல்லது இரு தடவைகள், அல்லது மூன்று தடவைகள் கழுவியிருக்கிறார்கள். ஆனால் தலையையும் அதனுடன் சேர்த்து இரு காதுகளையும் ஒரு தடவை மாத்திரம் மஸ்ஹு செய்திருக்கிறார்கள். நபிகளார் வுழூ செய்த முறை பற்றி குறிப்பிடுகின்ற அனைத்து ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் தலையையும் இரு காதுகளையும் ஒரு தடவை மஸ்ஹு செய்ததாகவே அமைந்துள்ளன.
‘தலையை நபியவர்கள் மூன்று தடவை மஸ்ஹு செய்தார்கள்’ என அபூதாவூத், தாரகுத்னீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெறும் ஹதீஸ் ஆதாரமாக கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸ் ஆகும் என இமாம் இப்னுல் கையிம் (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : ‘பத்ஹுல் பாரீ’, 1/298 மற்றும் ‘ஸாதுல் மஆத்’ , 1/186).
இன் ஷா அல்லாஹ் தொடரும்…
ஆக்கம் :ஏ.ஆர்.எம்.ரிஸ்வான் (ஷர்கி) M.A.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: