ஹிஜ்ர் இஸ்மாயீலில் (கஅபாவுக்கு அருகில் அரைவட்டமாக உள்ள இடத்தில்) தொழுவதற்கு சிலர்
முண்டியடித்துக் கொண்டு செல்வதைக் காண்கிறோம். அவ்விடத்தில் தொழுவதன் சட்டமென்ன? அதற்கு ஏதும்
சிறப்பு உண்டா?
பதில்: ஹிஜ்ர் இஸ்மாயீலில் தொழுவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அது கஅபாவின் ஒரு பகுதியாகும்.
நபி(صلى الله عليه وسلم) அவர்கள் மக்கா வெற்றியின்போது கஅபாவுக்குள் நுழைந்து அங்கு இரண்டூ ரக்அத் தொழுததாக பிலால்(رضي الله عنه)அவர்கள் அறிவிக்கக்கூடிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரி(397), முஸ்லிமில்(1329) பதிவு செய்யயப்பட்டுள்ளது. மேலும் ஆயிஷா(رضي الله عنها) அவர்கள் கஅபாவுக்குள் நுழைய விரும்பியபோது, “ஹிஜ்ரில் தொழுதுகொள். ஏனெனில் அதுவும் கஅபாவைச் சேர்ந்ததுதான்” என நபி(صلى الله عليه وسلم)அவர்கள் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் வந்துள்ளது. (பார்க்க: திர்மிதி 876)
எனினும் கடமையான தொழுகையை கஅபாவுக்குள்ளோ, ஹிஜ்ர் இஸ்மாயிலிலோ தொழாமலிருப்பதே பேணுதலுக்குரிய செயலாகும். காரணம் நபி (صلى الله عليه وسلم) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மேலும், கஅபாவுக்கு உள்ளேயும், ஹிஜ்ர் இஸ்மாயிலிலும்- அதுவும் கஅபாவைச் சேர்ந்தது என்ற அடிப்படையில்- கடமையான தொழுகையை தொழுவது கூடாது என்று சில அறிஞகளும் கூறியுள்ளனர்.
எனவே இந்த ஆதாரங்கள் மூலம் தெரியவருவது இதுதான். கடமையான தொழுகையை கஅபாவுக்கு வெளியிலும் ஹிஜ்ருக்கும் வெளியிலும் தொழுவதே ஷரீஅத்தின் நடைமுறையாகும். அதுதான் நபி (صلى الله عليه وسلم) அவர்களைப் பின்பற்றுவதாகவும், கஅபாவுக்குள்ளேயும் ஹிஜ்ருக்கு உள்ளேயும் தொழுவது கூடாது என்று கூறுகின்ற அறிஞர்களின் கருத்து வேறுபாடிலிருந்து விலகுவதாகவும் அமையும். அல்லாஹ் மிக அறிந்தவன்!
-இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: