ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 03
சகுனம் என்பது பொய்யானது;இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது
குறிப்பிட்ட வகை மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பொருற்கள், செயல்கள் போன்றவற்றைக் காண்பதாலோ, அல்லது குறிப்பிட்ட வார்த்தைகள், ஓசைகள் போன்றவற்றைச் செவிமடுப்பதாலோ அல்லது குறிப்பிட்ட கால, நேரங்களாலோ ஏதும் ஆபத்து விளைந்துவிடலாம் என்று நினைப்பதும் அவை கெட்ட சகுனம் என்று கருதுவதும் இஸ்லாத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, காலத்தை, நேரத்தை சகுனமாகப் பார்ப்பதும் பாவமானதாகும். சகுனத்தை நம்பி விரும்பும் ஒரு விடயத்தைச் செய்யாமல் இருப்பதோ அல்லது செய்ய முற்படுவதோ பிழையானதாகும். இதன் மூலம் மனிதன் அல்லாஹ் அல்லாத ஒன்றுடன் தனது உள்ளத்தைத் தொடர்பு படுத்துகின்றான். அதேபோன்று சம்பந்தமில்லாத ஒன்றை வைத்து அல்லாஹ் தனக்கு ஆபத்து விளைவித்து விடுவான் என்று அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் கொள்கின்றான். அத்தோடு இந்தப் பண்பானது அல்லாஹ்வுக்கு இணைவைத்து வாழ்ந்த, வாழுகின்ற சமூகங்களின் ஒரு பண்பாகவும் இருக்கிறது. (பார்க்க: அல்குர்ஆன் 27:47, 36:18, 7:131, 4:78) அந்த வகையில் இது ஈமானில் உள்ள கோளாறுக்குரிய ஒரு அடையாளமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஜாஹிலிய்யஹ் மக்களிடத்தில் இந்தப் பண்பு அதிகமாகக் காணப்பட்டது. அவர்கள் ஒரு பயணம் மேற்கொள்ளும் பொழுது அல்லது ஏதாவது தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்படும்பொழுது பறவைகள், மான்கள் போன்றவற்றைத் துரத்தி விடுவார்கள். அவை வலப்பக்கமாகச் சென்றால் தாங்கள் விரும்பிய பயணத்தை அல்லது காரியத்தை தொடர்வார்கள். அவை இடப்பக்கமாகச் சென்றுவிட்டால் தாங்கள் விரும்பியதை நிறுத்திக் கொள்வார்கள்; பயணத்திலிருந்து திரும்பி விடுவார்கள். அல்லாஹ் சில விடயங்கள் நடப்பதற்கு வேறு சில விடயங்களைக் காரணங்களாக வைத்திருக்கிறான். அல்லாஹ் ஒரு விடயத்திற்குக் காரணமாக வைக்காத ஒன்றைக் காரணம் என்று கருதுவது ஒருவகை இணை வைத்தலாகும். சகுனமும் அந்த வகையில் தான் அடங்கும். இத்தகைய இணைவைத்தலுக்கு சிறிய இணைவைத்தல் என்று கூறப்படும். பெரிய இணைவைத்தலுடன் ஒப்பிடும் பொழுது இது மார்க்கத்தை விட்டும் வெளியேற்றாத சிறிய இணைவைத்தலாக இருந்தாலும் இது பெரும் பாவமாகும். எந்த வகையான இணைவைத்தலும் பெரும் பாவமாகும். அதே நேரத்தில் எந்தப் பொருளை ஒருவர் சகுனமாகக் கருதுகிறாரோ அந்தப் பொருளை அல்லாஹ் வைத்திருக்கக் கூடிய காரணம் என்று கருதாமல் – அதுவாகவே தானாகவே நலவையோ கெடுதியையோ ஏற்படுத்தும் என்று நம்புவது பெரிய இணைவைத்தலாகும்.
عن عبد الله بن مسعود مرفوعا: «الطِّيرةُ شركٌ والطيرةُ شركٌ ثلاثًا». وما منا إلا، ولكن اللهَ يُذهبُه بالتوكلِ. أبو داود (٣٩١٠) واللفظ له، والترمذي (١٦١٤)، وابن ماجه (٣٥٣٨)، وأحمد (٣٦٨٧). وصححه الألباني، والوادعي، وش الأرناؤوط.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், *”சகுனம் ஷிர்க் – இணை வைத்தலாகும்”* என்று மூன்று முறை கூறினார்கள். இதனை அறிவிக்கும் இப்னு மஸ்ஊத் றளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: எங்களில் எவருக்கும் இது போன்ற எண்ணம் உள்ளத்தில் ஊசலாடாமல் இருப்பதில்லை. ஆனால் அல்லாஹ் மீது தவக்குல் வைப்பதன் மூலமாக அதனை அவன் இல்லாமல் செய்து விடுகிறான். [அபூதாவூத் 3910, திருமிதி 1614, இப்னு மாஜஹ் 3538, அஹமத் 3689]
عن عبد الله بن عمرو مرفوعا: مَن ردته الطِّيَرَة عن حاجته فقد أشرك، قالوا: فما كفارة ذلك؟ قال: أن تقول: اللهم لا خير إلا خيرك، ولا طَيْرَ إِلَّا طَيْرُكَ ولا إله غيرك. أحمد (٧٠٤٥) واللفظ له، والطبراني (١٤٦٢٢) وصححه الألباني، وحسنه شعيب الأرنؤوط. وعن فضالة بن عبيد مرفوعا: مَن ردَّتْه الطِّيَرةُ، فقد قارَفَ الشِّركَ. ابن وهب في الجامع (٦٥٦).
“யாரை சகுனம் ஒரு தேவையை விட்டும் தடுத்து விடுகிறதோ அவர் நிச்சயமாக இணைவைத்து விட்டார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அதற்கான குற்றப்பரிகாரம் என்ன? என்று வினவினார்கள். அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அத்தகையவர்களில் ஒருவர் பின்வருமாறு கூற வேண்டும்” என்று கூறினார்கள்: “அல்லாஹ்வே! உன்னுடைய நலவைத் தவிர நலவு கிடையாது. சகுனத்துக்குரிய பொருள் உனக்குச் சொந்தமானதே தவிர வேறில்லை (அதாவது அதனால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது). உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் கிடையாது.” [அஹ்மத் 7045, தபறானி 14622]
[* அல்பானி, ஷுஜபுல் அர்ணாஊத் ஆகிய ஹதீஸ்களை ஆய்வாளர்கள் மேற்படி ஹதீஸ்களை ஆதாரபூர்வமானவை என உறுதி செய்துள்ளனர்.]
عن معاوية بن الحكم السلمي: قُلتُ: يا رَسولَ اللهِ، أُمُورًا كُنّا نَصْنَعُها في الجاهِلِيَّةِ، كُنّا نَأْتي الكُهّانَ، قالَ: فلا تَأْتُوا الكُهّانَ قالَ قُلتُ: كُنّا نَتَطَيَّرُ قالَ: ذاكَ شيءٌ يَجِدُهُ أحَدُكُمْ في نَفْسِهِ، فلا يَصُدَّنَّكُمْ. مسلم ٥٣٧
முஆவியஹ் இப்னுல் ஹகம் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நாம் ஜாஹிலிய்யஹ் காலத்தில் சில விடயங்களைச் செய்யக்கூடியவர்களாக இருந்தோம்; குறி பார்ப்பவர்களிடம் செல்வோம்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், *”குறிபார்ப்பவர்களிடம் செல்ல வேண்டாம்”* என்று கூறினார்கள். “நாம் சகுனம் பார்ப்பவர்களாக இருந்தோம்” என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: *”அது உங்களில் ஒருவர் (எந்த அடிப்படையும் இல்லாமல்) தனது உள்ளத்தில் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயம்; அது உங்களை (எந்தக் காரியங்களில் இருந்தும்) தடுத்துவிட வேண்டாம்”.* (முஸ்லிம் 537)
தொடரும் இன்ஷாஅல்லாஹ் …
– ஹுஸைன் இப்னு றபீக் மதனி ( Sunnah Academy Telegram Channel )
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: