கேள்வி:
ஒரு கதீப் ஜும்ஆ உரை ஒன்று வழங்கினார், அதில் ஷியாக்களைப் பற்றி, அவர்களின் அசிங்கங்களைப் பற்றிப் பேசினார், பிறகு குமைநி ஒரு காஃபிர் என்றார். லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று கலிமா சொல்லிய ஒருவரைக் காஃபிர் என்று கூறுபவர் குறித்து உங்களது கருத்து என்ன?!
பதில்:
ஷியாக்கள் பல வகைப்படுவர். ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் 22 உட்பிரிவுகள் கொண்டுள்ளனர் என்று கூறுகின்றார். அவர்களில் ஒரு பிரிவினர், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை வணங்கவும் செய்கின்றனர். அலீ, ஹசன், ஹுசைன், ஃபாத்திமா, பாகிர், அஸ்ஸாதிக் போன்றவர்களுக்கு கடவுள் தன்மையைக் கொடுத்து வணங்குகின்றனர். அவர்களிடம் துஆ கேட்கின்றனர், மேலும் அவர்களுக்கு மறைவானவற்றின் அறிவும் உள்ளது என்கின்றனர். இவர்கள் காஃபிர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. அது குமைநியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரியே.
ஆனால் இது போன்ற விஷயங்கள் இல்லாமல், குஃப்ரின் அளவை அடையாத சில பித்அத்துகள் மட்டும் இருந்தால், அவர் குஃப்ரான செயல்களைச் செய்யாத வரை, அவரை காஃபிர் என்று கூற மாட்டோம். ஆனால், அவர்கள் அந்த இமாம்களுக்கு இறைப்பண்பைக் கொடுப்பது, அவர்களை வணங்குவது, அவர்களிடம் துஆ கேட்பது, உதவி தேடுவது, நோயாளிகளுக்கு நிவாரணம் தேடுவது, எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தேடுவது, அவர்களுக்கு மறைவானவற்றின் அறிவு உள்ளது போன்ற நம்பிக்கை கொள்வது போன்ற விடயங்கள் இருந்தால், அது குஃப்ர் அக்பர் (பெரும் நிராகரிப்பு) ஆகும்.
அபூ பக்ர் (ரழி), உமர் (ரழி) போன்றவர்களை ஏசுபவர், அல்லது சஹாபாக்களில் ஒரு பிரிவினரை ஏசுபவர், இவர் வழி கெட்டவர், பெரும் பித்அத் செய்பவர், மக்களில் மிக மோசமானவர். ஆனால் அவர் காஃபிரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இமாம் மாலிக் மற்றும் பல அறிஞர்கள் இவர்களைக் காஃபிர்கள் என்றே கூறுகின்றனர். சஹாபாக்களின் மீது இவர்கள் கொண்டுள்ள வெறுப்பு, குஃப்ராகும் என்றே கூறுகின்றனர். ஏனென்றால் சஹாபாக்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்: {لِيَغِيظَ بِهِمُ ٱلْكُفَّارَ} – “இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான்.” ஆகவே, இவர்களை வெறுப்பவர் காஃபிர் ஆகுவார் என்று கூறுகின்றனர். மேலும் அபூ பக்ர் (ரழி), முஸ்லிம்களின் தலைவர். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னர் இவரே முஸ்லிம்களின் இமாம். அவ்வாறு இருக்க, அவரைக் காஃபிர் என்று கூறினால், ஏசினால், உமரை (ரழி) காஃபிர் என்று கூறினால், யார் தான் எஞ்சுவார்?! இவர்கள் தான் சஹாபாக்களின் தலைவர்கள். இவர்களை ஏசுபவர்கள் காஃபிர்கள் என்று கூறுவது வலுவான கருத்து. ஏனென்றால் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளதோ, அவர் அபூ பக்கரையும் உமரையும் ஒருபோதும் ஏச மாட்டார். அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுகிறோம்.
மேலும் குமைநி போன்றவர்கள் தங்களின் 12 இமாம்கள், மலக்குமார்கள், நபிமார்களை விடச் சிறந்த நிலையை அடைந்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். ‘ஹுகூம் அல் இஸ்லாமியா’ என்ற அவரின் புத்தகத்தில் அவ்வாறு கூறுகின்றான். நபிமார்களை விட இவர்கள் சிறந்தவர்கள் என்கிறான்.
ஆதாரம்:
https://binbaz.org.sa/fatwas/1229/
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:


