ஷஃபான் 15ம் இரவு பற்றி மத்கப் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன?
ஷஃபானுக்கு சிறப்புண்டு அல்லது அதன் 15ம் இரவுக்கு சிறப்புண்டு என்பதற்காக அதில் விஷேடமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடையாது. ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்குமாறு மாத்திரமே ஆதாரபூர்வமான அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளன. அதைத்தவிர உள்ள வணக்கங்களில் பல ஆதாரமற்றவை. இன்னும் சில பலவீனமான ஆதாரங்களையுடையவை. இக்கருத்து எனது சொந்தக் கருத்தோ வஹ்ஹாபிகளின் கருத்தோ அல்ல. மாறாக பல மத்கப் அறிஞர்கள் குறிப்பாக ஷாபி மத்ஹப் அறிஞர்கள் சிலரின் கருத்தும் இதுதான்.
ஷாபி மத்கபின் முக்கிய அறிஞர்களில் ஒருவாரான இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் அவர்களின் பிரதான நூலான الفتاوى الفقهية الكبرى என்ற நூலில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
📒 அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பை இங்கு நாம் வழங்குகின்றோம்.
🙋♂ கேள்வி:
ஷெய்க் அவர்களே! இப்னு மாஜாவில் இடம்பெறும் ஷஃபானுடைய நடுப்பகுதி வந்துவிட்டால், அதன் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்குங்கள் என்ற ஹதீஸின் படி, அந்நாளில் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதா? இல்லையா? குறித்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதா? இல்லையா? விரும்பத்தக்கது என நீங்கள் கூறினால், ஏன் மார்க்க சட்ட அறிஞர்கள் அதனைக் குறிப்பிடுவதில்லை? அதன் இரவில் நின்று வணங்குவதன் நோக்கம் என்ன? அது பராத் தொழுகையா இல்லையா?
🟰 பதில்:
🟢 நவவி ரஹ் அவர்கள் மஜ்மூஃ என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதன் படி, ரஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று மஃரிப் இஷாவுக்கு இடையில் தொழப்படும் 12 ரக்அத்களைக் கொண்ட ரஙாஇப் (رغائب) தொழுகை, ஷஃபான் மாத நடுப்பகுதியில் தொழப்படும் 100 ரக்அத் தொழுகை ஆகிய இரண்டும் மோசமான இரு பித்அத்களாகும். கூதுல் குலூப், இஹ்யாஉ உலூமித்தீன் ஆகிய நூல்களில் அவை கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோ, அது சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸைப் பார்த்தோ ஏமாந்துவிடக் கூடாது. ஏனெனில் அவை அனைத்தும் பாதிலாகும். தவறுதலாக சில அறிஞர்கள் அவற்றை ஆதரித்து எழுதியிருப்பதைப் பார்த்தும் ஏமாந்துவிடக்கூடாது. அவர்களும் தவறிலே உள்ளார்கள். இவற்றைத் தவறு என நிரூபித்து, இப்னு அப்திஸ்ஸலாம் சிறியதொரு நூலை அழகிய முறையில் தொகுத்துள்ளார். இமாம் நவவியும் அவை மோசமான தவறு என விமர்சித்து, மிக நீண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
🟢 இந்த விடயத்தில், இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் தீர்ப்புக்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவரது இன்னொரு பத்வாவில், குறித்த இரு தொழுகைகளும் பித்அத்தாக இருந்தாலும், தொழுமாறு இடம்பெற்றுள்ள பொதுக்கட்டளையில் அது நுழைந்துவிடும் எனக் கூறியுள்ளார். ஆனால், இமாம் ஸுப்கி அதனை மறுத்து, தொழுமாறு வந்துள்ள பொதுக்கட்டளையை வைத்து, பிரத்யேகமான ஒன்றைச் செய்ய முடியாது என்கிறார். பொதுவாக வந்த ஒன்றுக்கு, காலம், இடம் போன்றவற்றைப் பிரத்யேகமாக ஏற்படுத்தினால், அது பித்ஆவில் நுழைந்துவிடும். பொதுவாக வந்தவற்றை அவ்வாறே விட்டுவிட வேண்டும்.
🟢 எனவே, இவ்வாறான தொழுகைகளை தனியாகவோ கூட்டாகவோ நிறைவேற்றுவதை விட்டும் தடுப்பது கட்டாயக் கடமையாகும். பொது மக்கள், சில பிக்ஹ் பேசும் சிலர் மற்றும் வணக்கசாலிகள் ஆகியோரிடம் காணப்படும் குறித்த தொழுகைகள் முக்கிய சுன்னத் என்ற எண்ணத்தை நீக்க வேண்டும். இதுதான் ஷஃபானின் நடுப்பகுதி இரவுத் தொழுகையின் சட்டமாகும்.
🟢 ஷஃபான் 15ம் தின நோன்பைப் பொருத்தவரை, வெள்ளை நாட்கள் (அய்யாமுல் பீல்) நோன்பு என்ற வகையில் நோற்க முடியுமே தவிர, பிரத்யேகமாக நோற்க முடியாது. இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ள ஷஃபான் 15ம் இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள் என்ற ஹதீஸ் பலவீனமானதாகும். இவ்விரவு சம்பந்தமாக இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. அவை ஆதாரமானவையா என்பதில் கருத்து வேற்றுமை உண்டு. அதிகமானவர்கள் அவற்றை பலவீனப்படுத்தியுள்ளனர். இப்னு மாஜா அவற்றில் சிலதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். (அதில் ஆயிஷா ரழி அவர்கள் நபியவர்கள் பகீஃக்கு சென்றதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸை இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுவிட்டு) அதனை இமாம் புகாரி பலவீனப்படுத்தியுள்ளதாக இமாம் திர்மிதி கூறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து இன்னும் இரு ஹதீஸ்களைக் குறிப்பிட்டுவிட்டு இன்னும் எஞ்சியுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகும் எனக் குறிப்பிடுள்ளார்கள்.
📝 சுருக்கம் என்னவெனில்:
இந்த இரவுக்கு ஒரு சிறப்பு உண்டு. அதில் பிரத்யேகமாக பாவமன்னிப்பு மற்றும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும். இதனால்தான் ஷாபிஈ (ரஹ்) அதில் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்கள். பிரச்சினை, அவ்விரவில் தொழப்படும் பிரத்யேகமான தொழுகையில்தான். அது மோசமான பித்அத். அதனைச் செய்பவரைத் தடுக்க வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம்.
ஷாம் தேசத்தைச் சேர்ந்த தாபிஈன்கள், அவ்விரவைக் கண்ணியப்படுத்தி, அதில் அதிக வணக்கவழிபாடுகளைச் செய்திருப்பாக வந்திருந்த போதிலும் சரியே. அவர்கள் அவ்விரவில் பித்அத்தாக உருவாக்கியதைத்தான் மக்களும் செய்துவருகின்றனர். இதற்கு எவ்வித சரியான ஆதாரமும் இல்லை. யூத, கிறிஸ்தவ கூறுக்களை வைத்தே இதனை அவர்கள் செய்கின்றனர் எனக் கூறப்படுகின்றது. எனவேதான், ஹிஜாஸ் பிரதேசத்தின் அதிகமான அறிஞர்களும், மதீனாவின் சட்டஅறிஞர்களும் அதனைத் தடுத்தார்கள். அதுவே ஷாபிஈ, மாலிக் போன்ற இமாம்களின் மாணவர்களது கருத்துமாகும். நபியவர்களோ, அவர்களின் தோழர்களில் எவருமோ செய்யவில்லை என்பதனால், இவை அனைத்தும் பித்அத்களோகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
📚 الفتاوى الفقهية الكبرى (2/ 80)
பொதுவாக வந்த வணக்கங்களுக்க காலம், இடம் குறிப்பிட்டு செயற்படுவது பித்அத் என்பது வஹ்ஹாபிகளின் கண்டுபிடிப்பு என்பது போல் சிலர் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால் அதே விடயத்தை இங்கு இப்னு ஹஜர் ஹைதமி அவர்களும் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
அது மாத்திரமின்றி இந்த இரவுகளில் இடம்பெறும் விஷேட தொழுகைகள் பித்அத் என்பதும் பல அறிஞர்களின் கூற்றாகும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். 100 ரக்அத் தொழுவதை மட்டும்தான் பித்அத் எனக் கூறப்பட்டுள்ளது எனக் கூறி சிலர் விடயத்தைத் திசை திருப்ப முனையலாம். ஆனால் அது தவறான வாதமாகும். ஏனெனில் தாபிஈன்கள் தொழுது வந்த தொழுகையைக் குறித்தும் அறிஞர்கள் பித்அத் எனக் கூறிய விடயத்தை இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தாபிஈன்களில் யாரும் 100 ரக்அத் தொழுகையில் ஈடுபட்டதாக எங்கும் கூறப்படவில்லை.
அது மாத்திரமின்றி ஷஃபான் 15ம் நோன்பு ஒன்று கிடையாது. அய்யாமுல் பீழ் பிறை 13,14,15 ஆகிய நோன்புதான் நோற்க முடியும் என்பதையும் கூறியுள்ளார்கள்.
இவ்விரவின் சிறப்பு சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி பலவீனமானவையே என்பதும் இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் கருத்தேயன்றி வஹ்ஹாபிகளின் கருத்தல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமது கருத்தை நிறுவ ஆதாரமில்லாத போது வஹ்ஹாபிப் பட்டம் சூட்டி இலகுவாக நழுவிச் செல்வது சிலருக்கு கைவந்த கலையாகும்.
இதன் நிலமையே இவ்வாறிருக்கும் போது இன்று ஷபே பராத் என்ற பெயரில் இடம்பெறும் மஃரிபிலிருந்து இஷா வரை யாஸீன் ஓதுதல் குறிப்பிட்ட சில திக்ருகளை எண்ணிக்கை வரையறுத்து ஒதி ரொட்டி வாழைப்பழம் பகிர்தல் போன்ற பல்வேறு வகையான நவீன கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாத்திலோ அறிஞர்களின் கூற்றுக்களிலோ எவ்வாறு ஆதாரமிருக்க முடியும்?!
– ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: