ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்

 

ஷஃபான் மாதத்தின் 15வது இரவுக்கு அல்லது பகலுக்கு எந்த ஒரு சிறப்பும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை.

 

ஒரு ஹதீஸில், “அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியின் இரவில் இணை வைப்பவரையும் மற்றவர்களுடன் பகைமை பாராட்டிக்கொண்டிருப்பவரையும் தவிரவுள்ள தன்னுடைய படைப்புகள் அனைவருக்கும் மன்னிப்பை வழங்குகின்றான்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசைகள் பலவீனமாக இருந்தாலும், இது பல வழிகளாலும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதனை சில அறிஞர்கள் ஆதாரபூர்வமானது என்று கருதுகின்றனர். இந்த ஹதீஸின் முக்கியமான அறிவிப்பாளர் வரிசைகள் குறித்து அவை பலவீனமானவை என்பதை இமாம் அபூஹாதம், இமாம் தாறகுத்னி போன்ற ஹதீஸ்களில் உள்ள குறைகளை துல்லியமாக ஆராயும் அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதனை நாம் பலமானது என்று வைத்துக் கொண்டாலும் இதில் அந்த நாள் இரவில் விசேடமான தொழுகை தொழுவதற்கோ அல்லது அதன் பகலில் நோன்பு நோற்பதற்கோ எந்த ஒரு சான்றும் இல்லை.

 

ஷஃபான் மாதத்தில் 15வது இரவில் அல்லது பகலில் எந்த விஷேடமான அமலும் செய்யப்படுவதற்கு எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை.

 

இப்னு மாஜஹ்வில் ஒரு ஹதீஸில், “அதனுடைய இரவில் நின்று வணங்குங்கள் பகலில் நோன்பு பிடியுங்கள்” என்று இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ பக்ர் இப்னு அபீ ஸப்றஹ் என்பவர் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யும் முற்கால ஹதீஸ் துறை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இவரைப் பற்றிய முற்கால அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்து இமாம் இப்னு ஹஜர் (ஹி852) றஹிமஹுல்லாஹ் அவர்கள், “அறிஞர்கள் இவரை இட்டுக்கட்டக்கூடியவர் என விமர்சித்துள்ளனர்” என்று கூறுகிறார்கள்.

 

ஒவ்வொரு மாதமும் 13, 14, 15 ஆகிய வெள்ளை நாட்களில் நோன்பு பிடிப்பது நபிவழி என்பதனால் ஒருவர் அந்நாட்களில் நோன்பு நோற்றால் அது தவறில்லை அல்லது ஒருவர் வழமையாக திங்கள், வியாழன் நோன்பு நோற்றுவருகிறார்; இந்த மாதத்தின் 15வது நாள் திங்களாக அல்லது வியாழனாக அமைந்துவிட்டது என்பதனால் அவர் அந்நாட்களில் நோன்பு நோற்றால் அதுவும் தவறில்லை அல்லது ஷஃபான் மாதம் நோன்பு நோற்பதற்கு சிறப்பான மாதம் என்பதனால் ஒருவர் நோன்பு நோற்க நினைக்கிறார்; அவருக்கு 15வது நாள் தான் நோன்பு நோற்பதற்கு வசதி ஏற்படுகிறது என்றால் அவரும் அந்நாளில் நோன்பு நோற்பதில் தவறில்லை. ஆனால் ஷஃபான் மாதத்தில் அந்த நாளுக்கு மாத்திரம் தனிச்சிறப்பு இருக்கிறது என்று கருதி அந்த நாளில் நோன்பு நோற்பது கூடாது. இவ்வாறு செய்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நபித்தோழர்களும் இவ்வாறு செய்யவில்லை; அவர்களிடத்தில் இம்மாதத்தின் 15 வது நாள் விசேடமான நாளாக அறியப்பட்டிருந்தது என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

 

தயாரிப்பு:

 

ஸுன்னஹ் அகாடமி

 

கீழே உள்ள Link-களின் மேலே Click செய்து ஸுன்னஹ் அகாடமியின் சமுக வலைதளங்களில் இணைந்து கொள்ளுங்கள்.

 

WhatsApp:

 

chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp

 

Telegram:

 

t.me/sunnah_academy

 

facebook.com/Sunnah.Acad

 

instagram.com/sunnah_academy

 

youtube.com/@Sunnah_academy

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply