பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 03 |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 03 |

-அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…

மாதவிடாய் தொடர்பான சட்டங்கள்:

 

மாதவிடாய் தொடர்பாக இருபதிற்கும் மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு மிக அவசியமானவற்றை மட்டும் குறிப்பிடுவது போதுமானது எனக் கருதுகின்றோம். அவற்றுள் பின்வருவன முக்கியமானவை :

முதலாவது: (அஸ்ஸலாத்) தொழுகை பெண்களுக்கு மாத விடாய் ஏற்பட்டிருக்கும் போது பர்ளான மற்றும் ஸுன்னத் தான தொழுகைகளை தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது (ஹராமாகும்). அவ்வாறு நிறைவேற்றினால் அது நிறை வேற மாட்டாது. அதே போன்று குறிப்பிட்ட ஒரு தொழுகைக்குரிய நேரத்தில், அத்தொழுகையின் பூரணமான ஒரு ரக்அத்தைப் நிறைவேற்றுவதற்குரிய நேரத்தை அடைந்து கொண்டால் மாத்திரம் அத்தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயமாகும். அது ஆரம்ப நேரமாகவோ அல்லது இறுதி நேரமாகவோ இருக்கலாம். இதை விரிவாகக் காண்பதற்கு கீழ்க் காணும் உதாரணங்களை பார்ப்போம்.

ஆரம்ப நேரம் என்பதற்கான உதாரணம் : ஒரு பெண்ணுக்கு சூரியன் மறைந்த பின்னர் மாதவிடாய் ஏற்படுகிறது. அவ் வேளையில் மஃரிப் தொழுகையின் ஒரு ரக்அத்தை நிறை வேற்றும் அளவு காலம் அவள் சுத்தமாக இருந்திருந்தாள், அதற்காக அவள் பூரண சுத்தம் அடைந்த பின் அந்த மஃரிப் தொழுகையை நிறைவேற்றுவது அவசியமாகும். ஏனெனில் அவள் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஒரு ரக்அத் தொழுவதற்கான கால அவகாசத்தை பெற்றுக் கொண்டாள்.

இறுதி நேரம் என்பதற்கான உதாரணம்: ஒரு பெண்ணுக்கு சூரியன் உதயமாகும் முன்னர் ஃபஜ்ர் தொழுகையின் ஒரு ரக்அத் தொழுவதற்குரிய நேரம் எஞ்சியிருக்கின்ற நிலையில் மாதவிடாய் நின்று விடுகின்றது. அவள் தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்ட பின்னர் ஃபஜ்ர் தொழுகையைப் பூரணமாக நிறைவேற்றுவது அவசியமாகும். ஏனெனில் அவள் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஒரு ரக்அத் தொழுவதற் கான கால அவகாசத்தை பெற்றுக் கொண்டாள்.

எனினும், அவளுக்கு தொழுகையின் ஒரு ரக்அத்தை நிறை வேற்றுவதற்குரிய காலம் -நேரம்- கிடைக்காதிருந்தால் அவள் மீது அத் தொழுகையை நிறைவேற்றுவது அவசிய மில்லை. அதாவது மேலே குறிப்பிடப்பட்ட முதல் உதாரணத்தில் உள்ளதைப் போன்று சூரியன் மறைந்தன் பின் மற்றத் தொழுகைக்கான நேரம் நுழைவதற்கு ஒரு நொடிப் பொழுது இருந்தால் அல்லது இரண்டாவது உதாரணத்தில் உள்ளதைப் போன்று சூரியன் உதயத்திற்கு ஒரு நொடிப் பொழுது இருக்கும் நிலையில் அவள் சுத்தமடைந்தாள் அத் தொழுகைகளை நிறைவேற்றுவது அவசியமில்லை. இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.

யார் தொழுகையில் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் அத்தொழுகையை முழுமையாக அடைந்து கொண்ட வராவார். (புஹாரி, முஸ்லிம்)

எனவே, ஒரு ரக்அத்தை விட குறைவான அளவை அடைந்தால் அவர் அத்தொழுகையை அடைந்தவராகக் கருதப்படமாட்டார் என்பது இந்த ஹதீதின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

சிலவேளை, ஒரு பெண் அஸர் தொழுகையின் ஒரு ரக் அத்தை அத்தொழுகைக்குரிய நேரத்தில் அடைந்து கொண்டால் அப்பொழுது அவள் லுஹர் தொழுகையை அஸர் தொழுகையுடன் தொழுவது கட்டாயமாகுமா? அல்லது ஒரு பெண் இஷா தொழுகையின் ஒரு ரக்அத்தை அத் தொழுகைக்குரிய நேரத்தில் அடைந்து கொண்டால் அப்பொழுது அவள் மஃரிப் தொழுகையை இஷா தொழுகையுடன் தொழுவது கட்டாயமாகுமா?

இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு காணப் படுகிறது. இது தொடர்பான சரியான நிலைப்பாடு, அவள் எத்தொழுகையின் நேரத்தை அடைந்து கொண்டாளோ அதை மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். எனவே, அஸர் தொழுகையையும் இஷா தொழுகையையும் மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாக அமைந்துள்ளது.

நபி ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

“சூரியன் மறைவதற்கு முன்னர் அஸர் தொழுகையின் ஒரு ரக்அத்தை எவர் அடைந்து கொள்கின்றாரோ அவர் அஸர் தொழுகையை அடைந்து கொண்டவராவார்”. (புஹாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸில் நபியவர்கள்; லுஹர் மற்றும் அஸர் தொழுகையை அடைந்து கொண்டார் எனக் குறிப்பிடவில்லை. அதே போல் லுஹர் தொழுகை அவர் மீது கட்டாயம் எனவும் குறிப்பிடவில்லை. காரணம் “அடிப்படையில் ஒரு காரியத்தை செய்வதற்கான ஆதாரம் இல்லையென்றால் அப் பொறுப்பிலிருந்து ஒருவர் விடுபடுகிறார்” என்பது சட்ட விதியாகும்.

இமாம் மாலிக், இமாம் அபூஹனிஃபா (ரஹிமஹுமல்லாஹ்) மத்ஹப் நிலைப்பாடும் இதுவே. இதனை (இவ்விருவரின் இந்நிலைப்பாட்டை) இமாம் நவவி அவர்கள் மஜ்மூஃ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தக்பீர்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்), தஸ்பீஹ்: சுப்ஹானல் லாஹ் (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்), தஹ்மீத்: அல் ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே), உணவருந்தும் போது பிஸ்மில்லாஹ் கூறுவது, ஹதீஸ் மற்றும் பிக்ஹ் வாசிப்பது, பிரார்த்தனை செய்வது, அதற்கு ஆமீன் கூறுவது, அல்குர்ஆனை செவிமடுப்பது போன்றன அவள் மீது தடுக்கப்பட்டது அல்ல.

புஹாரி முஸ்லிம் மற்றும் ஏனைய கிரந்தங்களில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மாதவிடாயாக இருக்கும் நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னாரின் மடிமீது சாய்ந்து கொண்டு அல்குர்ஆன் ஓதுபவர்களாக இருந்தார்கள்’

அதே போன்று ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உம்மு அதிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், தான் நபியவர்கள் கூறுவதை செவிமடுத்ததாக கூறுகிறார்கள் :

“திரைக்குப் பின்னால் இருக்கும் மணமாகாத இளம் கன்னி பெண்களும், நன்கு வளர்ந்த பெண்பிள்ளைகளும், மாத விடாய் ஏற்பட்ட பெண்களும் இரு பெருநாட் தொழுகைக்கு வெளியே வந்து நற்காரியங்களில் பங்கெடுக்க வேண்டும். அத்துடன் இறை விசுவாசிகளின் பிராரத்தனைகளிலும் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், மாதவிடாய் உண்டான பெண்கள் முஸல்லாவை (தொழும் இடத்தை) விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.”

மாதவிடாய் உண்டான ஒரு பெண், தனது நாவால் ஓதாது நேரடியாகப் பார்த்தோ அல்லது உள்ளத்தால் சிந்தித்தோ (அமைதியாக) குர்ஆனை ஓதுவதற்கு அனுமதி உண்டு.

இமாம் நவவி அவர்கள் ஷர்ஹுல் முஹத்தப் என்ற நூலில் மேற்குறிப்பிட்டது போன்று அல்குர்ஆனை ஓதுவது அனைவராலும் அனுமதிக்கப்பட்டது என்றும் நாவால் உச்சரித்து தெளிவாக ஒதுவதை பெரும்பாலான அறிஞர்கள் தடை செய்துள்ளனர் என்றும் அது அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

எனினும், இமாம்களான புகாரி, இப்னு ஜரீர் அத்தபரீ, இப்னுல் முன்திர் (ரஹிமஹு முல்லாஹ்) ஆகியோர் அதனை (வாயால் மொழிந்து ஓது வதை) ஆகுமெனக் கூறியுள்ளனர்.

மற்றும் இமாம் மாலிக் அவர்களும் இமாம் ஷாபிஈ அவர்கள் தனது பழைய தீர்பிலும் இக்கருத்தை கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாம் புஹாரி அவர்கள் இப்ராஹீம் அந்நகஈ அவர்களின் தகவலை முஅல்லகான செய்தியாக பதிவு செய்துள்ளார். அதில் ‘அல்குர்ஆன் வசனங்களை ஒதுவதில் எவ்விதப்பிரச்சினையும் கிடையாது’ என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது மார்க்கத்தீர்புகள் (அல் பதாவா) நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

‘அடிப்படையில் மாத விடாய் ஏற்பட்ட ஒரு பெண் அல்குர்ஆன் ஓதுவதை தடை செய்யும் எந்த நபிவழிகாட்டலையும் காணக் கிடைக்க வில்லை.

அத்துடன், ‘மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண்ணும், ஜனாபத் துடன் இருக்கும் ஒருவரும் அல்குர்ஆனில் எதையும் ஓதக் கூடாது’ என்ற ஹதீஸ், ஹதீஸ் கலை பற்றிய ஆழ்ந்த புலமை உள்ளவர்களது ஏகோபித்த முடிவின்படி பலவீனமானதாகும். உண்மையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து பெண்களுக்கும் மாதவிடாய் இருக்கவே செய்தது. தொழுகையைப் போன்று குர்ஆன் ஓதுவது தடை செய்யப்பட்டிருந்தால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சமூகத்திற்கு அதை நன்கு தெளிவுபடுத்தியிருப்பார்கள். அவர்களது தூய மனைவியர் இதை அறிந்துவைத்து, மக்களுக்கு அறிவித்திருப்பார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை தடை செய்ததாக எவரும் அறிவிக்காத நிலையில், அதனை ஹராம் எனச் சொல்ல நமக்கு ஆகாது.

என்றாலும் ‘இந்த விடயம் (மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதுவது) தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் சர்ச்சை இருப்பதால் மாதவிடாய் உண்டான ஒரு பெண் அல் குர்ஆனை ஒப்புவித்து பாடம் நடாத்தும் ஆசிரியையாகவோ, ஒரு பரீட்சைக்குத் தமது பாடங்களைத் தயார் செய்பவளாகவோ இருக்கும் நிலை போன்ற தவிர்க்க முடியாத நிலைகளில் அன்றி மற்றைய நிலைகளில் குர்ஆனைத் தனது நாவினால் ஓதாமல் இருப்பதே மிகவும் ஏற்றமான தாகும்’

இரண்டாவது : (அஸ்ஸவ்ம்) நோன்பு நோற்றல் :

மாத விடாய் ஏற்பட்ட ஒரு பெண் பர்ளான மற்றும் ஸுன்னத்தான, நோன்பு நோற்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளாள். அவ்வாறு அவள் நோன்பு நோற்றாலும் அது நிறைவேறாது. ஆனால் விடுபட்ட நாட்களின் கட்டாய (பர்ழான) நோன்புகளை நோற்பது கடமையாகும், இதற்கு ஆதாரமாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.

“எமக்கு மாதவிடாய் ஏற்படும், அப்பொழுது நாம் எமது நோன்புகளைப் கழாச் செய்யுமாறு ஏவப்பட்டோம். ஆனால், தொழுகையைப் கழாச் செய்ய ஏவப்படவில்லை. (புஹாரி முஸ்லிம்)

ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும் நிலையில், சூரியன் மறைவதற்கு ஒரு நொடிப்பொழுது முன்னால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டாலும் அவளது நோன்பு வீணாகி விடும் (நிறைவேறாது). எனவே குறிப்பிட்ட நோன்பு பர்ழாக இருந்தால் அவள் சுத்தமான பின் அந்த நோன்பை மீண்டும் நோற்றாக – கழாச்செய்தாக – வேண்டும்

அதே நேரம், சூரியன் மறைவதற்கு முன்னால் மாதவிடாயை உணர்கிறாள்; ஆனால் சூரியன் மறைந்த பின்னரே இரத்தம் வெளிவருகிறது என்றால் இந்நிலையில், இது தொடர்பான மிகச் சரியான முடிவு என்னவெனில் அவளது நோன்பு பூரணமாகிவிடுவதுடன் அது வீணாகி விடமாட்டாது. ஏனெ னில், பெண்ணின் உடலினுள்ளே இருக்கும் இரத்தத்திற்கு எவ்வித சட்டங்களும் கிடையாது.

ஒரு பெண்ணுக்கு கனவில் ஸ்கலிதமானால் குளிப்பது கடமையா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள்: ஆம், அவள் நீர் வெளியேறியிருக்கக் கண்டால் என பதில் அளித்தார்கள்.

‘இதிலிருந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; ஏதும் வெளிவருவதை நிதர்சனமாகக் காண்பதை வைத்து சட்டம் வகுத்துள்ளார்களே தவிர வெளிவருவதாக உணர்வதை மாத்திரம் வைத்து சட்டம் வகுக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அதேபோன்றுதான் மாதவிடாயைப் பொறுத்தவரையிலும் ஏதும் வெளியாவதை நிதர்சனமாகக் காண்பதைப் பொறுத்தே அதற்குரிய சட்டம் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் (ஃபஜ்ர்) வைகறை உதயத்தின் பின்னரும் தொடர்ந்து இருந்து, வைகறை உதயமாகி ஒரு நொடிப்பொழுதில் அவள் சுத்தமாகி விட்டாலும் அவளது அன்றைய நோன்பு நிறைவேறாது.

அவள் ஃபஜ்ருக்கு முன் சுத்தமாகி நோன்பும் நோற்று, ஃபஜ்ர் பிந்தி பர்ழான கட்டாயக் குளிப்பைக் குளித்தாலும் அவளுடைய நோன்பு ஏற்கத்தக்கதாகும். ஜனாபத் ஏற்பட்ட ஒருவரின் நிலைமையை ஒத்ததாகவே இந்த நிலையும் காணப்படுகிறது ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு பெருந்தொடக்கு நிலையில் எழுந்து ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். (புஹாரி முஸ்லிம்)

மூன்றாவது: தவாஃப் செய்தல்:

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பர்ழான மற்றும் சுன்னத்தான தவாஃபை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அது நிறைவேறாது.

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு ஹஜ்ஜின் போது மாதவிடாய் ஏற்பட்டது. அப்பொழுது அவர்களுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“ஹாஜிகள் செய்யும் கிரியைகளை செய்வீராக. ஆனால் சுத்தமாகும்வரையில் தவாப் செய்ய வேண்டாம்” என்றார்கள்.

இது தவிர்ந்த ஹஜ்ஜுடன் தொடர்பான ஏனைய கடமைகளான ஸஈ செய்தல், அரபாவில் தரித்தல், முஸ்தலிபா மற்றும் மினாவில் இரவில் தங்குதல், ஜம்ராவில் கல்லெறிதல் போன்ற விடயங்களை செய்வது அவளுக்கு தடுக்கப்பட்டது அல்ல. இதன் அடிப்படையில் ஒரு பெண் சுத்தமாக இருக்கும் நிலையில் தவாப் செய்து பின் தவாப் முடிந்ததும் மாத விடாய் ஏற்பட்டால் அல்லது ஸஈ செய்யும் போது மாத விடாய் ஏற்பட்டால் அவளின் தவாபும் ஸஃயும் நிறைவேறிவிடும்.

நான்காவது : தவாபுல் வதாஃவை (பிரியாவிடை தவாப்) விட்டுவிடுவதற்கு அனுமதி;

ஒரு பெண் ஹஜ் உம்ரா ஆகிய கிரியைகள் யாவற்றையும் நிறைவேற்றிவிட்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்ல முன் மாதவிடாய் ஏற்பட்டு, அது ஊருக்கு புறப்பட்டுச் செல்லும் வரை நீடிக்குமாயின், அவள் தவாபுல் வதாஃ (பிரியாவிடை தவாஃபை) நிறைவேற்றாமலேயே செல்வதற்கு அனுமதியுள்ளது. இதற்கு ஆதாரமாக பின்வரும் இப்னு அப்பாஸ் ரழியல் லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், மக்கள் ஹஜ்ஜிலிருந்து செல்ல நாடினால் இறுதியாக தவாபுல் வதாவை செய்யுமாறு கட்டையிட்டார்கள். என்றாலும் மாதவிடாயுள்ள பெண்ணுக்கு இதில் சலுகை வழங்கினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

வணக்கவழிபாடுகள் யாவும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா வின் ஆதாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் மக்காவை விட்டு செல்லும் வேளை புனித மஸ்ஜிதின் அருகில் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. இவ்வாறு செய்வது தொடர்பாக நபியவர்களின் எந்த வழிகாட்டலும் கிடைக்கவில்லை. ஏனெனில், இது நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்த வழி காட்டல் இதற்கு மாற்றமாக உள்ளது.

ஸபிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு தவாஃபுல் இஃபாழாவின் பின் மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு நபியவர்கள், மக்காவை விட்டு வெளியேறி விடும்படி கட்டளையிட்டார்கள். (புஹாரி முஸ்லிம்)

இந்த ஹதீஸின் படி நபியவர்கள் ஸபிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பள்ளிக்குச் செல்லுமாறு கட்டளையிடவில்லை. அவ்வாறு அது அனுமதிக்கப்பட்ட காரியமாக இருந்தால் அதனை நபியவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள். எனினும், தவாஃப் அல் இஃபாழாவை அல்லது உம்ரா வுடைய தவாஃபை நிறைவேற்ற முன்னர் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அவள் சுத்தமான பின் அவை களை நிறைவேற்றுவாள்.

ஐந்தாவது சட்டம் : பள்ளிவாயலில் தங்குதல்:

இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. இந்த ஹதீஸில் மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் பெருநாள் தொழுகை நடாத்தப்படும் இடத்தில் அமர்வதற்கு அனுமதிக் கப்படவில்லை. அந்த அடிப்படையில் பள்ளியில் தங்குவதும் கூடாது.

உம்மு அத்திய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், தான் நபியவர்களிடம் கேட்டதாக கூறுகிறார்கள். ‘மணமாகாத இளம் கன்னிகளும், நன்கு வளர்ந்த பெண் பிள்ளைகளும் மாதவிடாய் உண்டான பெண்களும் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு செல்லவேண்டும் என்ற அந்த ஹதீஸில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழுகை நடக்கும் இடத்தைவிட்டு ஓதுங்கி இருப்பார்கள் என்று வந்துள்ளது. (புஹாரி முஸ்லிம்)

ஆறாவது சட்டம் : உடலுறவு கொள்ளல் :

ஒரு கணவர் மாதவிடாய் ஏற்பட்ட தனது மனைவியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கான சந்தர்ப்பத்தை அவள் ஏற்படுத்திக் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரமாக பின்வரும் அல்லாஹ்வின் கூற்று அமைந்துள்ளது.

அல்லாஹுதஆலா கூறுகிறான்:

இன்னும் மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின் றனர்;. நீர் கூறும்: ‘அது ஒரு தூய்மையற்ற (அசௌகரிய மான) நிலையாகும். ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்வதை விட்டும் விலகி இருங்கள்; மேலும், அவர்கள் தூய்மையடையும்; வரை (உட லுறவுக்காக) அவர்களை அணுகாதீர்கள்.’ (அல்பகரா : 222)

இங்கு குறிப்பிடப்பட்ட மஹீழ் என்ற வார்த்தை மாதவிடாய் காலத்தையும் அது வருமிடத்தையும் அதாவது யோனியையும் குறிக்கிறது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது குறித்து இவ்வாறு கூறுகிறார்கள்:

‘உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்யுங்கள்’. (முஸ்லிம்)

மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது தடை என்பதில் எல்லா மார்க்க அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். அல்லாஹ் மற்றும் அவனின் தூதரினாலும்; அறிஞர்களின் ஏகோபித்த முடிவாலும் தடுக்கப்பட்ட இச்செயலை அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்பும் எவரும் செய்யத் துணிவது ஹராமாகும். எவர் இக்காரியத்தில் ஈடுபடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் அடிபணியாது, விசுவாசிகளின் பாதையல்லாது ஏனைய வழி தவறியோரின் பாதையில் செல்வோராவார்.

இமாம் நவவி யின் அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப் என்ற நூலின் பாகம் 2 பக்கம் 374 ல் இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக பின்வருமாறு இடம்பெற்றுள்ளது

‘யாரேனும் இத்தகைய செயலில் ஈடுபட்டால் அவர் பெரும் பாவமொன்றை செய்தவர் ஆவார்.’ என்று அவர் கூறுகிறார். அதே மத்ஹபைச் சேர்ந்த ஏனைய அறிஞர்களும் ‘யாரேனும் ஒருவர் மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டது எனக் கருதுவாராயின் அவர் குப்ரில் (இறை நிராகரிப்பில்) வீழ்ந்துவிட்டவராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும். என்று கூறுகிறார்கள். (இமாம் நவவியின் கூற்று முற்றும்)

ஒருவரின் பாலியல் ஆசையை கட்டுப்படுத்துவதற்காக மாத விடாய் ஏற்பட்ட தனது மனைவியின் தடுக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து அவளை முத்தமிடவும். கட்டித் தழுவவும், அணைத்துக் கொள்ளவும் அனுமதியுண்டு. ஆனால், ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விடக் கூடாது. அதாவது, மனைவியின் தொப்புழுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியை எதைக் கொண்டேனும் மறைக்காது நெருங்குவது கூடாது. ஏனெனில், ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :

நபியவர்கள், நான் மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் இருக்கும் போது எனது இடுப்பில் ஆடையை கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டு, அதன் பின் என்னை அணைத்துக் கொள்வார்கள். (புஹாரி முஸ்லிம்)

ஏழாவது சட்டம் : அத்தலாக் (விவாகரத்து).

ஒருவர் தனது மனைவியை மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் வேளையில் விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹுதஆலா கூறுகிறான்:

நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களின் இத்தாவை கணக் கிடக்கூடிய (மாதவிடாய் இல்லாத) காலத்தில் விவாகரத்து செய்யுங்கள் (அத்தலாக்: 1)

இதன் கருத்து என்னவெனில், பெண்கள் விவாகரத்துச் செய்யப்படும் கட்டத்தில் அவர்கள் இத்தாவை நிரணயிக்கக் கூடிய நிலைமை இருக்க வேண்டும் என்பதாகும்.

அதாவது அவளை ஒருவர் விவாகரத்து செய்யும் போது கருவுற்ற நிலையில் அல்லது உடலுறவு இன்றி சுத்தமடைந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் விவாகரத்தாக கருதப்படும். ஒரு பெண் மாதவிடாயில் இருக்கும் பொழுது விவாகரத்து செய்யப்பட்டால், அதனை குறிப்பிட்ட இத்தா காலத்தின் ஒரு பகுதியாகக் கொள்ள முடியாது. காரணம் அவள் விவாகரத்து செய்யப்பட்ட மாத விடாய் நிலையை வைத்து இத்தா காலமாக கணிப்பது இயலாது.

உடலுறவின் பின் அவள் தூய்மையாக இருக்கும் நிலையில் விவாகரத்து செய்யப்பட்டால் குறிப்பிட்ட உடலுறவின் மூலம் கருவுற்றாளா இல்லையா என்பதிலும் அவ்வாறு அவள் கருவுரவில்லையாயின் மாதவிடாயின் மூலம் கணிப்பதா என்பதில் உறுதியற்ற நிலை காணப்படும். எனவே, அவளது இத்தா எந்த வகையானது என்ற உறுதியற்ற நிலையில் அவள் (சுத்தமானவளா அல்லது கர்ப்பிணியா என்று) தெளிவாகும் வரையில் அவளை அவளது கணவன் விவாகரத்து செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆக, மேற்படி அல்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் மாதவிடாயின் போது விவாகரத்து செய்வது (ஹராம்) தடைசெய்யப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது :

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது காலத்தில் என் மனைவியை (மாதவிடாய் காலத்தில்) மணவிலக்குச் செய்து விட்டேன். இதனை, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்போது அவர்கள் என் தந்தையிடம், ‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளை (தம்மிடமே) விட்டுவைக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாவது மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் தம்மிடமே (தம் மனைவி யாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பாக அவளை மண விலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2:228ஆவது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தா’ எனும் காத்திருப்புக் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) கால கட்டமாகும்’ என்று சொன்னார்கள்.

எனவே, தனது மனைவி மாதவிடாய் ஏற்பட்டுள்ள வேளையில் அவளை விவாகரத்து செய்பவன் பாவியாவான். அதற்காக அவன் பச்சாதாபப்பட்டு அல்லாஹ்விடம் பாவமீட்சி கோருவதுடன் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைக்கிணங்க மார்க்க சட்டத்தின் பிரகாரம் விவாகரத்து செய்வதற்காக அவளை தன்னிடம் திருப்பி அழைத்து கொண்டு அவளின் மாதவிடாய் முடிந்து அவள் சுத்தமாகும் வரை தன்னுடன் வைத்திருப்பதுடன் அடுத்த மாதவிடாய் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு, அவள் சுத்தமானதும் அவளை தன்னுடன் வைத்திருக்கவும் முடியும் அல்லது அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன், விவாகரத்துச் செய்யவும் முடியும். மாதவிடாயின் போது ஒரு பெண்ணை விவாகரத்துச் செய்வது தடுக்கப்பட்டதாகும்.

ஆனால் பின்வரும் மூன்று நிலைகளில் அனுமதிக்கப்படும்.

முதலாவது நிலை: அவளுடன் தனிமையில் இருப்பதற்கு முன்போ அல்லது அவளுடன் பாலியல் தொடர்பு கொள்ள முன்னோ, அவளை மாதவிடாய் காலத்தில் விவாகரத்து செய்வதில் தவறில்லை. இத்தகைய கட்டத்தில் அவளுக்கு இத்தா என்பது இல்லை என்பதுடன் அவளது விவாகரத்து அல்லாஹ்வின் கட்டளைக்கு முரனானதுமில்லை. இதற்கான ஆதாராமாக பின்வரும் அல்லாஹ்வின் கூற்று அமைந்துள்ளது.

அந்தப் பெண்களின் இத்தாவைக் கணக்கிடக் கூடிய மாதவிடாய் இல்லாத காலத்தில் விவாகரத்து செய்யுங்கள். (அத்தலாக்: 1)

இரண்டாவது நிலை:

ஒரு பெண் கருத்தரித்து இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் விவாகரத்து செய்தால் அதுவும் அனுமதிக்கத்தக்கதாகும். இது தொடர்பான விபரமும் காரணமும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு விட்டது.

மூன்றாவது நிலை:

கணவன் ஏதாவது இழப்பீட்டை பெற்றுக் கொண்டு மாதவிடாய் காலத்தில் அவளை விவாகரத்து செய்வது. அதுவும் குற்றமில்லை.

உதாரணமாக கணவன் மனைவிக்கிடையே தொடரான பெரும் தகராறும் பிரச்சினைகளும், மோசமாக நடந்து கொள்ளுதல் போன்றன இருக்குமாயின் அந்தக் கணவன் தனது மனைவியிடமிருந்து பணமோ அல்லது வேறு பொருட்களோ பெற்றுக்கொண்டு மாதவிடாய் இருக்கும் நிலையில் அவளை விவாகரத்து செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைகிறது.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

‘ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ் அவர்களது மனைவி நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான், ஸாபித்தின் குணத்திலோ அவரது மார்க்கத்திலோ குறை கூறவில்லை ஆனால், நான் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, (அவருடன் தொடர்ந்து வாழ்வதால்) இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு முரணாக நடந்து கொள்ள நான் விரும்பவில்லை.’ என்றார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ‘உமக்கு உமது கணவன் (மஹராக) மணக்கொடையாகத் தந்த தோட்டத்தை அவருக்குக் திருப்பிக் கொடுப்பீரா?’ எனக் கேட்டார்கள். அவர் ‘ஆம்!’ என்றார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஸாபிதைப் பார்த்து; ‘ஸாபிதே | உங்கள் தோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவளை முழுமையாக விவாகரத்து செய்யுங்கள். என்றார்கள். (புஹாரி)

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ‘அவள் மாதவிடாய் உண்டாகி இருக்கிறாளா இல்லையா’ எனக் கேட்காதது கவனிக்கத்தக்க விடயமாகும். ஏனெனில் இவ்வாறான தலாக் ஒரு பெண்ணே தான் முன்வந்து செய்யும் தலாகாகும். எந்நிலையில் அது இருப்பினும் ஆகுமானதாகும். இந்நிகழ்வை ஆதாரமாகக்; கொண்டு ஒரு பெண் அவள் மாதவிடாய் நிலையில் இருக்கும் போது கணவனிடம் விவாகரத்து (குல்உ) கோருவதற்கு அனுமதியுள்ளது என இமாம் இப்னு குதாமா அல் மக்திஸி அவர்கள் தனது முஃக்னி என்ற நூலில் குறிப்பிடுகிறார். (பக்கம் 52 பாகம் 7)

இங்கு கருத்திற் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விவாகரத்து செய்ய தடுத்திருப்பதற்கான காரணம் அவர்களது இத்தாக் காலம் நீடித்து அவர்களுக்குத் தீங்கு ஏற்பட முடியும் என்பதினாலாகும்; ஆனால் (குல்ஐ) பெண்தரப்பால் பிரிவதை பொருத்தமட்டில் அது மோசமான முறையில் நடந்து கொள்ளுதல், அசௌகரியம், பகை போன்ற தீங்குகளை நீக்குவதை அடிப்படையாகக் கொண்டது. அதனால்; மாதவிடாயின் போது விவாகரத்து செய்வதின் தீங்கை விட இது ஆபத்து நிறைந்தது. இந்த அடிப்படையில் ஆபத்து கூடிய நிலையான பெண்ணின் தரப்பால் விவாவரத்து பெறுதல் என்பதற்கு முன்னுரிமை அளிப்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸின் மனைவியிடம் அவளது மாத விடாய் நிலைமைப் பற்றிக் கேட்கவில்லை. (இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று முற்றும்)

“அடிப்படையில் அனைத்து விடயங்களும் அனுமதிக்கப் பட்டதாகும்” என்ற விதியின் படி ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவளுக்கு திருமண ஒப்பந்தம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கக்கூடிய ஆதாரம் எதுவும் கிடையாது. ஆயினும், குறிப்பிட்ட கணவன் தனது உடலியல் ஆசையை கட்டுப் படுத்திக் கொண்டு எச்சரிக்கையாய் இருக்க முடியும் என்றால் அக்காலப்பகுதியில் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அவரால் தனது உடலியல் ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதெனக் கண்டால், மாதவிடாயிலிருந்து சுத்தமாகும் வரை அவளுடன் தனித்திருக்கக் கூடாது.

எட்டாவது சட்டம் : விவாகரத்தின் இத்தா காலத்தை மாத விடாயைக் கொண்டு கணித்தல்.

ஒருவர் தனது மனைவியுடன் உடலுறவு கொண்ட பின்னரோ, அல்லது, அவளுடன் தனிமையில் இருந்த பின்னரோ, அவளை விவாகரத்து செய்தால், அவள் இத்தாவாக மூன்று மாதவிடாய்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். கர்ப்பினி அல்லாத மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கே இந்த சட்டமாகும்.

இதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்(அல் பகரா: 228)

வசனத்தில் இடம் பெற்ற ،،குரூஉ،، என்பது மூன்று மாத விடாய் காலம் என்பதைக் குறிக்கும். விவாகரத்திற்குள்ளான பெண், கருத்தரித்திருந்தால் அவளுடைய இத்தா பிரசவம் வரையிலாகும். குறிப்பிட்ட இத்தாக் காலம் அவளுக்கு குறைவானதாக இருந்தாலும் நீண்டதாக இருந்தாலும் சரியே!

இதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

இன்னும் கர்ப்பிணிகளுக்குரிய இத்தாக் கால எல்லை அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்.’ (அத்தலாக்: 4)

சிலவேளை, குறிப்பிட்ட பெண் பருவமடையாத மாத விடாய் ஏற்டாத (சிறு பிள்ளை போன்று) இருந்தால், அல்லது மாதவிடாய் ஏற்படும் வயதெல்லையைக் கடந்து விட்டவளாக இருந்தால், அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் அவளது கருப்பை அகற்றப்பட்டவளாக இருந்தால் அல்லது இதையொத்த நிலைகளில் இருந்தால் அவளுடைய இத்தா சரியாக மூன்று மாதங்களாகும்.

இதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :

உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயைவிட்டும் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவிடயத்தில்) நீங்கள் சந்தேகம் கொண்டால் அவர்களுக்கும் இதுவரை மாதவிடாய் ஏற்படாதவர்களுக்குரிய இத்தாக் காலமும் மூன்று மாதங்களாகும் (அத்தலாக்: 4)

சிலபோது, மாதவிடாய் ஏற்படும் ஒரு பெண்; நோய், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற சில காரணங்களால் மாதவிடாய் நின்று விட்டதை உணர்கிறாள்;. அவள் தனது மாதவிடாய் மீண்டும் வரும் வரை அது மிக நீண்ட கால மாயினும் இத்தா இருப்பதோடு, அதன் மூலம் தனது இத்தா காலத்தை கணக்கிட்டுக் கொள்வாள். குறிப்பிட்ட காரணங்கள் நீங்கியதன் பின்னரும் (அதாவது, அவளுடைய நோய் குணமாகிறது அல்லது பாலூட்டலிலிருந்து முடி வடைகிறாள்) மாதவிடாய் ஏற்படவில்லையாயின், அப்பொழுது அக்காரணங்கள் நீங்கிய காலத்திலிருந்து ஒரு வருடம் பூர்த்தியாக இத்தாக் காலத்தைக் கணித்தல் வேண் டும். இதுதான் இஸ்லாமிய சட்டவிதிகளுக்குப் பொருந்தும் மிகச் சரியான கருத்தாகும்.

குறிப்பிட்ட காரணங்கள் நீங்கி மாதவிடாய் ஏற்படவில்லையாயின் அவளது நிலை, அறியப்படாத எதுவிதக் காரணங்கள் இல்லாது மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களின் நிலைக்கு ஒப்பானதாகும். அவ்வாறு இருந்தால் பேணுதலின் அடிப்படையில் அவளது இத்தாக் காலம் ஒரு வருடமாகும். பொதுவாக பிள்ளைப் பிரசவக் காலமாக ஒன்பது மாதமும் இத்தாவுடைய காலம் மூன்று மாதமுமாக சேர்த்து ஒரு வருடமாக கணிக்கப்படும். ஒரு பெண்ணுக்கு விவாக ஒப்பந்தம் நடைபெற்று தனது கணவனுடன் அவள் தனித் திருப்பதற்கும் உடலுறவு கொள்ளவதற்கு முன் விவாகரத்து நிகழுமாயின், அப்பொழுது எத்தகைய இத்தாவும் அவள் அனுஷ்டிக்க வேண்டியதில்லை.

இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

விசுவாசங் கொண்டோரே! நீங்கள் விசுவாசங் கொண்ட பெண்களைத் திருமணம் செய்து, பிறகு அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் தலாக் கூறி விட்டால், (மற்ற விவாகரத்து செய்யப் பட்ட பெண்களுக்காக) நீங்கள் எதைக் கணக்கிடுவீர்களோ அத்தகைய எந்தஇத்தாவும் அவர்களின் மீது (நிர்ணயிக்க) உங்களுக்கு (உரிமை) இல்லை. (அல் அஹ்ஸாப் : 49)

ஒன்பதாவது சட்டம் : ஒரு பெண் கருவை சுமக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்குதல்.

இந்தத் தலைப்பில் பல விடயங்கள் காணப்படுகின்றன. அவை மாதவிடாயுடன் தொடர்புபடுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:

ஒருவர் தனது மனைவி கருவுற்ற நிலையில் மரணித்து விடுகிறான் என்றால் அந்த கருப்பையில் உள்ள சிசு அவனின் வாரிசாக கருதப்படுகின்றான். குறிப்பிட்ட அவளின் கணவர், மாதவிடாய் ஏற்படும் வரையில் அல்லது அவள் கருவுற்றிருப்பது தெளிவாகத் தெரியும் வரையில் அவளுடன் உடலுறவு கொள்ளாதிருந்தால் பின்வரும் நிலைப்பாடுகள் காணப்படுகின்றன :

1: அந்தப்பெண் கருவுற்றது தெளிவாகத் தெரிந்தால் அந்த அனந்தரச் சொத்துக்குரியவனாக கருப்பையில் உள்ள சிசு கருதப்படும். காரணம் சொத்துக்குச் சொந்தக்காரரான தந்தை மரணிக்கும் வேளை அச்சிசு இருக்கிறது.

2: குறித்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் அச்சிசு அனந்தரச் சொத்தை பெற்றுக் கொள்ளாது என்று தீர்ப்பளிக்கப்படும். காரணம், மாதவிடாயின் மூலம் அப்பெண் கருவுறவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

பத்தாவது : குளித்தல்.

மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த பெண் முழு உடலையும் சுத்தப்படுத்தி குளிப்பது கடமையாகும். இதனை பின்வரும் ஹதீதில் பார்க்க முடியும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அபூ ஹுபைஷின் மகள் ஃபாத்திமாவுக்கு இவ்வாறு கூறினார்கள்:

‘உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தொழுகையை விட்டுவிடுங்கள், அது நின்று விட்டால் குளித்து சுத்தமாகி தொழுது கொள்ளுங்கள் ‘ என்றார்கள். (புஹாரி)

குளிப்பைப் பொறுத்த வரையிலான குறைந்தபட்ச கடமை என்னவெனில் தலையின் மேற்பகுதி உட்பட உடலின் எல்லாப் பகுதிகளையும் நன்கு கழுவி விடுவதாகும். எனினும் ஹதீதில் கூறப்பட்ட முறைப்படி குழிப்பது மிகச் சிறந்ததாகும்.

அஸ்மா பின்த் ஷக்ல் ரழியல்லாஹு அன்ஹா மாதவிடாய் ஏற்பட்ட பெண் சுத்தமாவதற்கான கட்டாயக் குளிப்பு சம்பந்தமாக நபியவர்களிடம் கேட்ட போது, நபி யவர்கள் :

“உங்களில் ஒவ்வொருவரும் ஸித்ர் மரத்தின் (இலைகள் கலந்த) நீரைப் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் நீரை ஊற்றி தலையின் மேற்பரப்பை சென்றடையும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் (நீரை) ஊற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு கஸ்தூரி கலந்த பருத்தித் துன்டொன்றை எடுத்து அதன் மீது சுத்தம் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது ‘அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது? என்று மீளவும் அப்பெண் வினவ, நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆச்சரியத்துடன் “சுப்ஹானல்லாஹ்” என்று அல்லாஹ்வை துதித்தார்கள். அப்போது ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், இரத்த அடையாளங்கள் நீங்கும் வரை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்குப் பதிலளித்தார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்)

மாதவிடாய் உண்டான பெண் தனது தலை முடியின் அடிப்பாகம் வரை நீர் செல்வதை தடுக்கும் வகையில் முடியை நெருக்கமாக பின்னிடாத வரையில் அதனை அவிழ்த்து விடுவது கடமையில்லை.

உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்

“நான் தலை முடியை பின்னிய நிலையில் இருக்கும் ஒரு பெண், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது) அல்லது (மாத விடாயிலிருந்து தூய்மையடைவதற்காக) குளிப்பதற்கு பின்னிவிடப்பட்ட முடியை அவிழ்த்து விட வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை நீங்கள் ‘மூன்று முறை கை நிறைய நீரை எடுத்து உங்கள் தலையில் ஊற்றிக் கொண்டால் போதுமானது. பின்னர் உங்கள் உடல் மீது நீரை ஊற்றுங்கள். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் சுத்தம் அடைவீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மாதவிடாய் உண்டான ஒரு பெண் குறிப்பிட்டதொரு தொழுகைக்குரிய வேளையில் சுத்தமடைவாளாயின், அத் தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக உடனே குளிக்க வேண்டும். என்றாலும், அவள் பிரயாணத்தில் இருக்கின்றாள்; நீர் கிடைக்கவில்லை, அல்லது நீரிருந்தும் அதைப் பயன்படுத்தினால் அவளுக்குத் தீங்கு (நோய் அல்லது வேரேதும்) ஏற்படும் என்ற அச்சம் இருக்குமாயின், அவள் தயம்மும் செய்யலாம். அவள் நீரைப் பயன் படுத்தத் தடையாயுள்ள நிலை நீங்கும் வரை அப்படிச் செய்யலாம். பின்னர் அவள் குளிக்க வேண்டும்.

குறித்ததொரு தொழுகை நேரத்தின் போது சுத்தமாகிவிடும் சில பெண்கள் உள்ளனர்; அவர்கள் குளிப்பதைப் பிற்படுத்திவிட்டு; ‘குறித்த தொழுகைக்குரிய காலத்தினுள் தம்மை சுத்தப்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை’ என்று நியாயம் கூறுவர். இது ஏற்றுக் கொள்ளமுடியாத கடமையை தட்டிக் கழிக்கும் கூற்றாகும். ஏனெனில், அவர்களுக்கு குளிப்பில் குறைந்த கடமையை நிறைவேற்றி குளித்துவிட்டு, குறித்த தொழுகையை உரிய நேரத்தில் தொழ முடியும். பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு கிட்டும் போது முழுமையாக குளித்து சுத்தமாக முடியும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

தமிழில்:இஸ்லாம்ஹவுஸ் இணையதளம்

முந்தைய தொடரை வாசிக்க இங்கே CLICK செய்யவும் 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply