ரமழான் காலங்களில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய நோன்பை முறிக்கும் நவீன பிரச்சினைகள்.
நோன்பை முறிக்கும் விஷயங்கள் குறித்து அறிஞர்கள் நான்கு விஷயங்களில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்:
1. உண்ணுதல்
2. குடித்தல்
3. உடலுறவு
4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப்போக்கு
ஆனால், நவீன காலத்தில் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் உள்ளன, அவற்றில் எவை நோன்பை முறிக்கும் அல்லது முறிக்காது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கமாகக் கூறியுள்ளனர். இந்தத் தகவல்கள் சரியானவையே, ஆனால் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நவீன காலத்தில் உள்ள நோன்பை முறிக்கும் மற்றும் முறிக்காத விஷயங்கள் பல உள்ளன, அவை பின்வருமாறு:
1. ஆஸ்துமா ஸ்ப்ரே (சுவாச மருந்து):
இது நோன்பை முறிக்காது. இது ஷேக் பின் பாஸ், ஷேக் இப்னு உதைமீன், ஷேக் இப்னு ஜிப்ரீன் (ரஹிமஹுமுல்லாஹ்) மற்றும் லஜ்னா தாஇமா பத்வா குழுவின் கருத்து.
2. நாக்கின் கீழ் வைக்கும் மாத்திரைகள் (இதய நோய்க்கானவை):
இவை நோன்பை முறிக்காது.
3. வயிற்றுக்கான அகநோக்கி (Gastroscopy / Endoscopy):
இது நோன்பை முறிக்காது. ஆனால், அகநோக்கியை எளிதாக நுழைப்பதற்காக மருத்துவர் ஊட்டச்சத்து கொண்ட எண்ணெய் பூசினால், அது நோன்பை முறிக்கும்.
4. மூக்கு மூலம் செலுத்தப்படும் துளிகள் (Nasal Drops):
நான்கு இமாம்களும், மூக்கு துளிகள் தொண்டை அல்லது உட்பகுதியை அடைந்தால் நோன்பை முறிக்கும் என்று கூறியுள்ளனர். எனவே, இது நோன்பை முறிக்கும் என்று ஷேக் பின் பாஸ் மற்றும் ஷேக் இப்னு உதைமீன் (ரஹிமஹுமுல்லாஹ்) கூறியுள்ளனர்.
5. மூக்கு ஸ்ப்ரே:
இது நோன்பை முறிக்காது.
6. மயக்க மருந்து:
இது பல வகைகளை உள்ளடக்கியது:
– மூக்கு மூலம் செலுத்தப்படும் மயக்க மருந்து, அதாவது வாயுவை நுகரும் போது பாதி மயக்கம் ஏற்படுதல்:
இது நோன்பை முறிக்காது.
– சீன முறை (தோலில் குறிப்பிட்ட பகுதியில் ஊசி ஏற்றி உணர்வை இல்லாமல் செய்தல்) மயக்க மருந்து: இது நோன்பை முறிக்காது, ஏனெனில் இது உட்பகுதியை அடையாது.
– ஊசி மூலம் செலுத்தப்படும் (பாதி) மயக்க மருந்து (சில நொடிகள் நோயாளியின் மூளை மயக்க நிலையில் இருக்கும்) : இது நோன்பை முறிக்காது, ஏனெனில் இது உட்பகுதியை அடையாது.
– முழு மயக்க மருந்து: இது நோன்பை முறிக்கும் நிலையா என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்:
• பகல் முழுவதும் மயக்கம் இருப்பின் பெரும்பாலான அறிஞர்கள் அது நோன்பை முறிக்கும் என்று கூறுகின்றனர்.
• பகலில் ஒரு பகுதியில் மயக்கம் தெளிந்தால் நோன்பு முறியாது என்பது வழுவான கருத்தாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
7. காது துளிகள் (Ear Drops :
இது நோன்பை முறிக்காது. ஆனால், காதின் படலம் கிழிந்திருந்தால், இது மூக்கு மூலம் போடும் மருந்தின் நிலைக்கு ஒத்ததாக அமைந்துவிடும்.
8. காது கழுவுதல்:
– காதின் படலம் முழுமையாக இருந்தால், நோன்பை முறிக்காது.
– காதின் படலம் கிழிந்திருந்தால், நோன்பை முறிக்கும்.
9. கண் துளிகள் ( Eyes Drops) :
இது நோன்பை முறிக்காது. இது ஷேக் பின் பாஸ் மற்றும் ஷேக் இப்னு உதைமீன் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோரின் கருத்து.
10. மருந்து ஊசிகள்:
– தோல் மற்றும் தசை ஊசிகள்: இவை நோன்பை முறிக்காது.
– ஊட்டச்சத்து கொண்ட ஊசிகள்: இவை நோன்பை முறிக்கும்.
✓ மேலும் நீரிழிவு நோயாளிகள் பயன் படுத்தும் மருந்து ( insulin) ஊசி நோன்பை முறிக்காது.
11. உடலில் பூசும் மருந்து எண்ணெய் மற்றும் பசைகள் (க்ரீம்):
இவை நோன்பை முறிக்காது.
12. தமனி / நாளங்கள் அகநோக்கி (Arterial Catheterization) :
இது நோன்பை முறிக்காது.
13. சிறுநீரக டயாலிசிஸ் (Kidney Dialysis) :
இது நோன்பை முறிக்கும்.
ஏனெனில் இந்த சிகிச்சையின் போது ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்கள் (Nutrients and Mineral salts) பயன்படுத்தப்படும்.
14. சிகிச்சைக்காக பெண்களின் யோனி மூலம் செலுத்தப்படும் மருந்துகள்(Suppository / Vaginal Douche) :
இவை நோன்பை முறிக்காது.
15. மலவாயில் மூலம் செலுத்தப்படும் மருந்துகள் (like Enema):
இவை நோன்பை முறிக்காது.
இது இப்னு உதைமீன் ரஹ் அவர்களின் கருத்தாகும்.
16. மலவாயில் அகநோக்கி:
இது நோன்பை முறிக்காது.
17. ஆணுறுப்பு மூலம் செலுத்தப்படும் மருந்துகள், அகநோக்கி :
இவை நோன்பை முறிக்காது.
18. இரத்த தானம்:
இது ஹிஜாமத் (இரத்தம் குத்தி எடுப்பது) சட்டத்துடன் தொடர்புடையது.
இமாம் அஹ்மத் ரஹ் அவர்களின் கருத்துப்படி நோன்பை முறிக்கும்.
ஏனைய இமாம்களிடம் இரத்ததானம் நோன்பை முறிக்காது.
19. இரத்த பரிசோதனை:
இது நோன்பை முறிக்காது.
20. பற்பசை மற்றும் தூரிகை:
இது நோன்பை முறிக்காது, ஆனால் இஃதார் நேரத்திற்குப் பிறகு பயன்படுத்துவது நல்லது.
21. இரத்த மாற்றீடு:
இது நோன்பை முறிக்கும்.
22. இரத்த மாதிரி எடுத்தல்:
இது நோன்பை முறிக்காது.
23. மருந்து கொண்டு வாய் கொப்பளித்தல்:
இது நோன்பை முறிக்காது, ஆனால் இஃதார் நேரத்திற்குப் பிறகு பயன்படுத்துவது நல்லது.
24. மருந்து கொண்டு தொண்டை கொப்பளித்தல்:
இது தொண்டையை அடைந்தால் நோன்பை முறிக்காது, ஆனால் வயிற்றை அடைந்தால் நோன்பை முறிக்கும்.
25. தொண்டை அகநோக்கி:
இது நோன்பை முறிக்காது.
அகநோக்கியை உட்செலுத்தும் போது ஊட்டச்சத்து பதார்த்தங்கள் உபயோகிக்கக் கூடாது.
26. பல் துளைத்தல்:
இது நோன்பை முறிக்காது.
27. பல் பிடுங்குதல்:
இது நோன்பை முறிக்காது, ஆனால் இஃதார் நேரத்திற்குப் பிறகு செய்வது நல்லது.
28. லேசர் மூலம் பல் சிகிச்சை:
இது நோன்பை முறிக்காது.
29. பல் நடுதல்:
இது நோன்பை முறிக்காது.
30. பொய்ப் பல் உபயோகிப்பது (Removable Dental Implants):
இவை நோன்பை முறிக்காது.
31. செயற்கை கருவூட்டல்:
ஆணைப் பொருத்தவரையில் விந்து வெளியாக்குதல் நோன்பை முறிக்கும்.
பெண்ணைப் பொருத்தமட்டில் தாக்கம் இல்லை, என்றாலும் இது தொடர்பாக பலத்த கருத்து வேற்றுமைகள் உள்ளன.
32. கருப்பை அகநோக்கி:
இது நோன்பை முறிக்காது.
33. கருத்தடை சாதனம் பொருத்துதல்:
இது நோன்பை முறிக்காது.
34. மூளை மற்றும் உட்பகுதி சிகிச்சை:
இது நோன்பை முறிக்காது.
இரைப்பை குடல் சிகிட்சை இதில் அடங்காது.
35. புகைப்பிடித்தல்:
இது நோன்பை முறிக்கும்.
36. Hypnosis மூலம் சிகிச்சை(மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அறிதுயில் நிலை):
இது நோன்பை முறிக்காது.
ஏனெனில் இது தூக்கத்தைப் போன்றது இக்கலை மூலம் முழு மயக்கம் ஏற்பட வைத்தால் மேற்குறிப்பிடப்பட்ட சட்டம் இங்கும் பொருந்தும்.
இவை நோன்பு காலங்களில் ஏற்படும் நவீன பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பதில்களாகும்.
– ஷேக் காலித் அல்-முஷைகிஹ்
தமிழில் : Ahsan Asman Muhajiri
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
நன்று . முறிக்கும் முறிக்காத விஷயங்கள் தனித்தனியாக வரிசை படித்திருந்தால் இன்னும் இலகுவாக புரியும் .