அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 02 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 02 |

 

தயம்மும் செய்வதற்கான காரணிகள்:

 

தயம்மும் செய்வதற்கு பிரதானமாக இரு காரணிகள் காணப்படுகின்றன :

 

  1. நீர் கிடைக்காமை
  2. நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமை

 

நீர் கிடைக்காமை:

ஒருவர் தனது சொந்த ஊரில் இருக்கும் போதோ, அல்லது பயணத்தில் இருக்கும் போதோ வுழூ செய்வதற்கோ, கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கோ நீரை பெற்றுக்கொள்ளாத போது தயம்மும் செய்யுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. இதற்கான ஆதாரங்களாவன :

 

1. நபிகளார் கூறினார்கள் : ‘…. நீரை நாம் பெற்றுக்கொள்ள முடியாமற் போனால் மண் நமக்கு சுத்தம் செய்துகொள்வதற்காக தரப்பட்டுள்ளது’ (முஸ்லிம், அஹ்மத்).

 

2. நபியவர்களும் ஸஹாபாக்களும் பிரயாணம் ஒன்றில் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்த போது ஒருவர் மாத்திரம் தொழாமல் ஒதுங்கியிருந்தார். அதற்கான காரணத்தை அவரிடம் வினவிய போது, தனக்கு குளிப்பு கடமையாகிவிட்டதாகவும் குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் தன்னால் தொழ முடியவில்லை என்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது நபியவர்கள் ‘நீர் பூமியின் மேற்பரப்பிலுள்ளதை பயன்படுத்தி தயம்மும் செய்திருந்தால் அது உமக்கு போதுமாக இருந்திருக்குமே’ என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

மேற்படி இரு ஹதீஸ்களும் இவை போன்ற வேறு பல ஹதீஸ்களும் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கின்றன.

 

நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமை;

நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாதிருத்தல் என்பது பல காரணங்களினால் ஏற்படலாம் :

 

அ) நோய் அல்லது உடலுறுப்புகளில் காயம் ஏற்பட்டிருந்து தண்ணீரை பயன்படுத்த முடியாத போது தயம்மும் செய்ய முடியும்.

 

1. ‘நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து… தண்ணீரை பெற்றுக்கொள்ளவில்லையாயின் தயம்மும் செய்துகொள்ளுங்கள்’ (அல்குர்ஆன் 5:6).

 

2. ஜாபிர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : ‘நாங்கள் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் கல்லில் தாக்குண்டு அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அன்றிரவு அவருக்கு குளிப்பு கடமையாகிவிட, தான் தயம்மும் செய்து தொழ முடியுமா என ஏனையோரிடம் கேட்ட போது அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது என கூறவே, அவர் குளித்தார். அதனால் மரணித்தும் போனார். பின்னர் நபியவர்களிடம் சென்று இது பற்றி கூறியதும் ‘அவரை அவர்கள் கொன்றுவிட்டார்களே… அவர்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் பிறரிடம் கேட்டிருக்க கூடாதா? (தெரிந்தவர்களிம்) கேட்பதன் மூலமே அறவீனத்தை போக்க முடியும். அவர் தயம்மும் செய்திருந்தாலே அது அவருக்கு போதுமாக இருந்திருக்குமே’ என்று கூறினார்கள் (அபூதாவூத், இப்னு மாஜஹ்). இந்த ஹதீஸ் அறிவிப்பு பலவீனமானதெனினும் வேறு வழிகளிலும் அறிவிக்கப்படுவதன் மூலம் ஆதாரபூர்வமானது என்ற தரத்தை அடைகிறது என ஹதீஸ்துறை அறிஞர்கள் கூறுகின்றனர் (பார்க்க : ‘தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா’, 1/122).

 

ஆ) கடுமையான குளிரின் காரணமாக தண்ணீரை பயன்படுத்த முடியாத போதும் தயம்மும் செய்ய முடியும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.

 

தாதுஸ் ஸலாஸில் எனும் யுத்தத்திற்கான படைத் தளபதியாக அம்ர் இப்னுல் ஆஸ் (றழி) அவர்கள் நபியவர்களால் அனுப்பப்பட்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பிரதேசமோ மிகக் குளிரான பிரதேசம். அவர்களுக்கு அன்றிரவு குளிப்பும் கடமையாகிவிட்டது. கடுமையான குளிரில் குளித்தால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ எனப் பயந்த அம்ர் (றழி) அவர்கள் குளிக்காமல் தயம்மும் செய்துவிட்டு ஸுப்ஹ் தொழுகையை நடத்தினார்கள். பின்னர் நபியவர்களிடம் சென்ற போது இது பற்றி கூறப்பட்டது. அப்போது நபியவர்கள் ‘அம்ரே! குளிப்பு கடமையான நிலையில நீர் உமது தோழர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினாயா?’ என்று கேட்டார்கள். அப்போது அம்ர் (றழி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! ‘உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களோடு மிக இரக்கமுள்ளவனாக இருக்கிறான்’ (4:29) என்ற அல்குர்ஆன் வசனத்தை நினைத்துப் பார்த்தேன். பின்னர் தயம்மும் செய்து தொழுகை நடத்தினேன்’ என்று கூறிய போது நபியவர்கள் சிரித்தார்கள். அவர்கள் எதுவும் கூறவில்லை (அபூதாவூத், அஹ்மத்).

 

நபியவர்கள் அம்ர் இப்னுல் ஆஸ் (றழி) அவர்களின் செயலை கண்டிக்காமல் விட்டமையானது அச்செயலை ஏற்று அங்கீகரித்தமைக்கு அடையாளமாகும்.

 

இவ்வாறே நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமற் போகும் சூழ்நிலைகளாக அறிஞர்கள் பின்வரும் சந்தர்ப்பங்களை குறிப்பிடுகிறார்கள் :

 

1. பயணத்தின் போது அருகில் நீர் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தேடிச் செல்வதன் மூலம் தனது பயணப் பாதையையோ, பயணத் தோழர்களையோ தவற விட்டு விடுதல்

 

2. இருக்கின்ற நீரை பெற்றுக்கொள்ள முடியாதவாறு ஏதேனும் தடைகள், அச்சமான சூழல் காணப்படுதல்

 

3. நீர் இருக்கும் இடம் அருகில் இருந்தும் அவ்விடத்திற்கு நகர்ந்து செல்ல முடியாதவாறான நோய் ஏற்பட்டிருத்தல்.

 

இவை போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தயம்மும் செய்வதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள் :

 

‘நீங்கள் நீரை பெற்றுக்கொள்ளவில்லையெனில் தயம்மும் செய்யுங்கள்’ (5:6).

 

(பார்க்க : ‘அல்முஹல்லா’, 2:165, ‘அல்முக்னீ’, 1/229, ‘தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹுஸ் ஸுன்னா’, 1/124)

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

முந்தைய தொடரை வாசிக்க 

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply