இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
03 : சர்ச்சைகளில் ஈடுபடுவதையும், மனோஇச்சைக்கு வழிப்படுவோருடன் உட்கார்ந்திருப்பதையும் விட்டுவிட வேண்டும். (இது அஹ்லுஸ் ஸுன்னாவின் அடிப்படைகளில் ஒன்று)
விளக்கம்:
மார்க்க விஷயங்களில் கருத்து முரண்பட்டுக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்பவர்களாகக் காணப்பட்டனர். அவ்வாறே, அல்குர்ஆன் பற்றிய சர்ச்சைகளில் ஈடுபடுவதையும், விவாதங்கள் புரிவதையும் தடைசெய்துள்ளனர்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:-
நானும் எனது சகோதரனும் ஒரு சபையில் உட்கார்ந்திருந்தோம். சிவந்த ஒட்டகைகள் அதற்குக் கூலியாகக் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். பின்னர், நானும் எனது சகோதரனும் சிறிதளவு முன்னோக்கிச் சென்றோம். அப்போது வயது முதிர்ந்த சில நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வீட்டு வாசலுக்கருகில் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கிடையில் உட்கார்ந்து அவர்களைப் பிரிக்க விரும்பாத நாம், ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டோம். அப்போது அல்குர்ஆனின் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அதில் (கருத்துமுரண்பட்டதன் காரணமாக) சர்ச்சையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது சப்தங்கள் உயர்ந்தன. எனவே, (இதனைச் செவியுற்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் கோபப்பட்டவர்களாக வெளியேறி அவர்களுக்கு மண்ணால் வீசி அடித்தார்கள். அப்போது நபியவர்கள் பின்வருமாறு) கூறினார்கள்: எனது கூட்டத்தினரே! கொஞ்சம் பொறுங்கள்! இதனால் (சர்ச்சை புரிந்ததனால்) தான் உங்களுக்கு முன்னிருந்த சமூகங்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் தமது நபிமார்களின் விடயத்தில் கருத்து முரண்பட்டுக் கொண்டதும், வேதத்தில் சில வசனங்கள் மூலம் வேறு சில வசனங்களைப் புறக்கணித்ததும் தான் அவர்களின் அழிவுக்குக் காரணங்களாகும். நிச்சயமாக அல்குர்ஆன் அதன் சில வசனங்கள் வேறு சில வசனங்களைப் பொய்ப்படுத்துவதற்காக இறங்கவில்லை. மாறாக, அதன் சில வசனங்கள் ஏனைய வசனங்களை உண்மைப் படுத்தக் கூடியதாகவே உள்ளன. ஆகவே, அல்குர்ஆனில் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தவைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துங்கள். அதில் உங்களுக்குத் தெரியாதவைகளைக் தெரிந்த ஆலிம்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
நூல்:முஸ்னத் அஹ்மத்: 6702
மற்றோர் அறிவிப்பில்:
ஒரு நாள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (வீட்டிலிருந்து) வெளியேறினார்கள். அப்போது சிலர் “விதி” பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். இதனைச் செவியுற்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கோபமுற்றனர். இதனால் அவர்களின் முகம் மாதுளம் பழச் சுளைகள் போன்று சிவந்து காணப்பட்டது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
அம்மனிதர்களை நோக்கி, “ஏன் நீங்கள் அல்குர்ஆனின் சில வசனங்களைக்கூறி வேறு சில வசனங்களைப் புறக்கணிக்கிறீர்கள். இதனால் தான் உங்களுக்கு முன்னிருந்த சமூகத்தினர் அழிக்கப்பட்டனர்.”
நூல்: முஸ்னத் அஹ்மத்: 2/179,6668, இப்னு மாஜா: 85, புகாரி: கல்கு அப்ஆலில் இபாத்: 218
எனவே, சர்ச்சைகளை விட்டுவிடுதல், அவற்றில் ஈடுபடுவோரிடமிருந்து ஒதுங்கி விலகி நடத்தல், கருத்து வேற்றுமைகளைத் தவிர்த்துக் கொள்ளுதல், அவ்வாறே சத்தியத்தைப் பின்பற்றுதல், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதிலும் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதிலும் ஆர்வத்துடன் செயற்படுதல் போன்ற அனைத்து விடயங்களையும் மேற்படி நபிமொழி வலியுறுத்துகின்றது. அத்துடன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அல்குர்ஆனையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சுன்னாவையுமே பின்பற்ற வேண்டும் என்பதையும் மேற்கூறப்பட்ட நபிமொழி தெளிவுறுத்துகின்றது.
அல்குர்ஆன், அதன் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களைப் பொய்ப்படுத்துவதற்காக இறக்கியருளப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே! எனவே, அல்குர்ஆன் வசனங்களில் மிகத்தெளிவாகத் தெரிந்தவைகளையே பிறருக்குச் சொல்ல வேண்டும். தெளிவாகத் தெரியாத வசனங்களை அவற்றைத் தெரிந்தவர்களுக்கு விட்டுவிடுவதுடன், அவர்களிடம் அதுபற்றிக் கேட்டறிய வேண்டும்.
ஆனால், மனோ இச்சைக்கு வழிப்படுகின்றவர்களான பித்அத்வாகிகளும், வழிகேட்டின்பால் பிறரை அழைப்போரும் வழிகேட்டில் இருந்து கொண்டே தம்முடனிருப்போருக்குத் தாம் சத்தியத்தில் இருப்பது போன்று காட்டிக்கொள்வர். இதனால் பாமரர்கள் இவர்கள்தாம் சத்தியத்திலேயே உள்ளனர் என்று நம்பி,
ஏமாற்றமடைகின்றனர். இவர்களின் அழகான வார்த்தைகளாலும், பேச்சாற்றலாலும் ஏமாற்றமடைந்த பெருந்திரளான மக்கள் வழிகெட்டுவிட்டனர். இதனால்தான் வழிகெட்டவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடங்களிலும் அவர்கள் விவாதிக்கும் போதும் அவர்களுடன் உட்கார்ந்திருப்பதை ஷரீஅத் தடைசெய்கின்றது.
அல்குர்ஆன் கூறுகின்றது:
அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதை விட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம் என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான்.
– அந்நிஸா: 140
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீங்கள் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்.
– அல் அன்ஆம்: 68
இவை அனைத்தும் பித்அத்காரர்களையும் பாவிகளையும் சமூகப் புறக்கணிப்பிற்கு உட்படுத்தவும், மக்களிடையே அவர்களை இழிவுபடுத்தவும் அவர்களின் பாவங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கவும் இஸ்லாமிய ஷரீஅத் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகும்.
இவ்வாறு செய்வதன் காரணமாக அவர்களின் வழிகேடுகள் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாமல் தடுக்கின்றது. அதேவேளை, வழிகேடர்களும், பெரும்பாவிகளும் தாம் எதிர்கொள்ளும் இழிவையும் உணர்ந்துகொள்ள வழியமைக்கும்.
(“இது ஈமானின் “அல்வலாஉ வல்பராஉ” எனும் அடிப்படை சார்ந்த விடயமாகும். இதன் பொருள், இறை நேசர்களைச் சேர்ந்து நடத்தலும், இறைநிராகரப்பாளர்கள், இணைவைப்பவர்கள், காபிர்கள், முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள், பெரும்பாவிகள் போன்றோரை விட்டும் விலகி நடப்பதுமாகும்.)
அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதை விட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம் என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான்.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: