இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்

 

திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் பெண்கள் சலங்கை மணிகள் இல்லாத ரப்பான் (துஃப்) அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல ஏற்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன.

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“திருமணம் போன்ற வைபவங்களில் பல்வேறு வகையான கேளிக்கை விடயங்களை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

அந்த வகையில் திருமணம் மற்றும் ஏனைய மங்கலகர நிகழ்வுகளின் போது பெண்கள் ரப்பான் அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள். 

நபியவர்களது காலத்தில் இருந்த ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் யாரும் ரப்பான் அடிக்கவோ அல்லது கையால் தட்டி இசையொலி எழுப்பவோ இல்லை.

கை தட்டுவது பெண்களுக்குரியது தஸ்பீஹ் செய்வது ஆண்களுக்குரியது என்று நபியவர்கள் கூறியதோடு ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களையும் பெண்களுக்கு ஒப்பாகும் ஆண்களையும் சபித்தார்கள் என்ற செய்தி ஆதாரபூர்வமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாடுவதும், ரப்பான் அடிப்பதும் பெண்களின் வேலையாக இருந்ததால், ஸலஃபுஸ் ஸாலிஹீன் அதைச் செய்த ஆண்களை பெண்மை கொண்டவர்கள் என்று அழைத்தனர்.

இது அவர்களுக்கு மத்தியில் காணப்பட்ட மிகப் பிரபலமான கூற்றாகும்.

 

இவ்வாறானவர்கள் இன்று நிறையவே உள்ளனனர்! ”

 

ஆயிஷா (றழி)அவர்களிடம் இரண்டு இளம் யுவதிகள் புஆதுடைய நாளில் அன்சாரிகள் தங்களுக்கிடையில் கூறிக்கொண்டதை அடிப்படையாக வைத்து பெருநாள் தினத்தன்று பாடிக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு அபூ பக்ர் (றழி) அவர்கள் வந்து பார்த்த போது(போரில் மக்கள் என்ன சொல்லி இருப்பார்கள் என்பதை விவேகமுள்ளவர்கள் புரிந்துகொள்வர்) இறைத் தூதரின் வீட்டில் ஷைத்தானின் புல்லாங்குழல் இசைக்கப்படுகிறதே என்று கூறினார்கள்.

 

அந்நேரம் நபியவர்கள் அவ்விரு யுவதிகளையும் பார்க்காமல் தங்கள் திருமுகத்தை சுவர் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

(அபூபக்கர் (றழி)அவர்கள் யாரையும் இறைத் தூதரின் முன்னிலையில் கண்டிதததில்லை

ஆனால்,என்ன நடக்கிறது என்பது இறைத் தூதருக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்)

 

இந்த சமயத்தில் நபியவர்கள் ஆபூ பக்ர் (றழி) அவர்களை பார்த்து “அவர்களை விட்டு விடுங்கள் அபூபக்கரே, ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு பெருநாள் உள்ளது, இது இஸ்லாமியர்களான எங்களின் பண்டிகை நாளாகும் ” என்றார்கள்.

 

 

இது நபி(ஸல்)அவர்கள் மற்றும் அவரது தோழர்களின் வழக்கமான செயலல்ல என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.

 

அதனால்தான் அபூ பக்ர் (றழி) அவர்கள் இதனை ஷைத்தானின் புல்லாங்குழல் என்று குறிப்பிட்டார்கள்.

 

இவ்வாறு கூறியதை நபியவர்கள் ஏற்றுக் கொண்டு இதனை அனுமதித்தமைக்கான காரணம் பெருநாள் தினங்கள் என்ற விடயம் தான் என்பதை “அவர்களை விட்டு விடுங்கள் அபூபக்கரே, ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு பெருநாள் உள்ளது, இது இஸ்லாமியர்களான எங்களின் பண்டிகை நாளாகும் ” என்று கூறிய இந்த கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

 

திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்கள் போன்ற மங்கலகர நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய எல்லா சந்தப்பங்களிலும் இது தொடர்ந்தும் ஹராமான நிலையில் தான் இருக்கும் என்றும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மேலும், ஷெய்க் அல்பானி (றஹ்) அவர்கள் “தஹ்ரீம் ஆலாதித் தர்ப் ” என்ற தனது நூலில் இது பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார்.

 

எங்களது மார்கத்தில் இது போன்ற தளர்வு  உள்ளது என்பதை முஷ்ரிகுகள் அறிந்து கொள்வதற்காக ஹதீஸில் உள்ளது போல நபியவர்கள் பண்டிகைகளில் அடிமைப் பெண்கள் இசைப்பதைக் அங்கீகரித்தனர்.

 

நபி (ஸல் ) அவர்கள் இசைப்பதை செவியுற்றதாக இரண்டு அடிமைப் பெண்கள் பற்றிய இந்த ஹதீஸில் தகவல்கள் இல்லை.

 

ஏவல் மற்றும் விலக்கல் என்பன காது கொடுத்து தேவையோடு செவியேற்கும் விடயத்தோடு தான் தொடர்புபடுமே தவிர காதில் தானாகவே விழுவதற்கெல்லாம் அல்ல.

 

ஹராமான பார்வையும் இவ்வாறு தான் எதிர்பாராத நிலையில் பார்க்க நேர்ந்தால் அது குற்றமாகாது.

 

வேண்டுமென்றே தடுக்கப்பட்ட ஒன்றினை பார்க்கும் போது தான் அது ஹராமாகக் கருதப்படும்.

 

மேற்சொன்னவாறு ரப்பான் இசைப்பது பெண்களுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயமே என்பதும் இங்கு தெளிவாக விளங்குகின்றது.

 

“துஃப்”என்ற அறபுச் சொல்லை வரைவிலக்கணப்படுத்தும் போது இமாம் அபூ உபைத் (றஹ்)அவர்கள் ” பெண்கள் இசைக்கின்ற ஒருவகை இசைக்கருவி” என்று கூறுமளவிற்கு இது பெண்களுக்கு மாத்திரம் உரியதாகும்.

 

(கரீபுல் ஹதீஸ் 3/64)

 

 

இதன் போது இஸ்லாமிய ஹிஜாப் வரையறைகளைப் பேணுவது அவசியமாகும்.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

1 thought on “இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்”

Leave a Reply