அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 |

 

எதில் தயம்மும் செய்வது?

தயம்மும் செய்வதற்கு எதை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் உள்ளன :

 

01. புழுதி மண்ணில் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும். இந்நிலைப்பாட்டை இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (றஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் கொண்டுள்ளனர்.

 

02. பூமியின் மேற்பரப்பிலுள்ள, பூமியோடு சார்ந்த மண், மணல், களி, பாறை, கல் போன்ற அனைத்திலும் தயம்மும் செய்ய முடியும். இக் கருத்தை இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் அதாஃ, இமாம் அவ்ஸாஈ, இமாம் ஸுப்யானுத் தவ்ரீ (றஹிமஹுமுல்லாஹ்) உட்பட பலர் கொண்டிருக்கின்றனர். (பார்க்க : ‘தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா’, 1/124).

 

இவ்விரு கருத்துகளுள், இரண்டாவது கருத்தே ஆதார வலுக்கூடிய கருத்தாக அமைகிறது. இதற்கான ஆதாரங்களாவன :

 

1.நீங்கள் தண்ணீரை பெற்றுக்கொள்ளவில்லையாயின், சுத்தமான ‘ஸஈதில்’ தயம்மும் செய்யுங்கள்’ என அலலாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்(5:6). இவ்வசனத்தில் ‘ஸஈத்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

 

இவ்வாறே தயம்மும் குறித்த சில ஹதீஸ்களிலும் ‘ஸஈத்’ எனும் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 

எடுத்துக்காட்டாக, நபியவர்களும் ஸஹாபாக்களும் மேற்கொண்ட ஒரு பயணத்தின் போது குளிப்புக் கடமையான நிலையில் தண்ணீரை பெற முடியாதிருந்த ஒரு ஸஹாபியை நோக்கி நபியவர்கள் ‘ஸஈதை’ பயன்படுத்தி தயம்மும் செய்திருந்தால் உமக்கு அது போதுமாக இருந்திருக்குமே’ என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

மேற்படி அல்குர்ஆன் வசனத்திலும் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘ஸஈத்’ என்ற சொல்லானது “புழுதி மண்ணை மட்டுமன்றி பூமியின் மேற்பரப்பிலுள்ள; பூமியோடு சார்ந்த மணல், கல், களி, பாறை போன்ற அனைத்தையும் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்’ என பிரபல அறபு மொழி வல்லுநர்களான அல்அஸ்மஈ, அல்ஹலீல், தஃலப், இப்னுல் அஃராபீ, அஸ்ஸஜ்ஜாஜ், அபூஉபைதா உட்பட பலர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : ‘அஹ்காமுத் தயம்மும் : திராஸா பிக்ஹிய்யா முகாரனா’, 1/474).

 

2.நபியவர்களும் ஸஹாபாக்களும் மணல், பாறை போன்றவற்றிலும் தயம்மும் செய்துள்ளார்கள்:

 

இமாம் இப்னுல் கையிம் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

 

‘நபிகளார் அவர்கள் மேற்கொண்ட தபூக் யுத்தத்திற்கான பயணத்தின் போது தயம்மும் செய்திருக்கிறார்கள். மணல் பூமியாக இருந்த அப்பிரதேசத்துக்கு செல்லும் போது நபியவர்களோ, உடன் சென்ற ஸஹாபாக்களோ தயம்மும் செய்வதற்காக தம்மோடு புழுதி மண்ணை சுமந்து சென்றதாக எந்த சான்றும் இல்லை. அங்கிருந்த மணலிலும் பாறையிலும்தான் தயம்மும் செய்திருக்கிறார்கள். இவ்வாறே நபிகளார் வாழ்ந்த ஹிஜாஸ் பிரதேசமும் அதை அண்டியுள்ள பகுதிகளும் பெரும்பாலும் மணலும் பாறைகளும் நிறைந்தவையே. மிக அரிதாகவே புழுதி மண்ணை காண முடியும். இதை சிந்திக்கும் ஒருவர் நபியவர்கள் பாறை, மணல் போன்றவற்றிலும் தயம்மும் செய்துள்ளார்கள் என்று உறுதியான முடிவுக்கு வர முடியும்’ (பார்க்க : ‘ஸாதுல் மஆத்’ , 1/193).

 

3.”நபியவர்கள் ஒரு தடவை தயம்மும் செய்த போது கைகள் இரண்டையும் மண்ணில் அடித்த பின் தமது இரு கைகளிலும் ஊதினார்கள்’ என அம்மார் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் (ஸஹீஹுல் புஹாரி). 

 

ஊதுவதன் மூலம் புழுதி நீங்கிவிடும். புழுதி நிறைந்த மண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்றால் நபிகளார் கைகளில் ஊதியிருக்கமாட்டார்கள் (பார்க்க : ‘அஷ்ஷர்ஹுல் மும்திஃ’, 1/394).

 

மண், மணல், கல் போன்றவை மட்டுமன்றி, புழுதி என்பதும் பூமியோடு சார்ந்ததாகும். பூமியோடு சார்ந்த அனைத்திலும் தயம்மும் செய்ய முடியும் என்ற வகையில் புழுதி காணப்படும் இடங்களிலும் தயம்மும் செய்ய முடியும். எனவே சுவர், விரிப்பு, தரை போன்றவற்றில் படிந்துள்ள புழுதி மீதும் தயம்மும் செய்வது ஆகுமானது’ என இந்நூற்றாண்டின் பேரறிஞர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் இப்னு உதைமீன் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : ‘பதாவா அத் தஹாரா’, பக் : 240).

 

இதே வேளை மண்ணில் தயம்மும் செய்யுமாறு சில ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன:

 

உ-மாக, ‘(புழுதி)மண் சுத்தம் செய்யத்தக்கதாக நமக்கு ஆக்கப்பட்டுள்ளது’ (முஸ்லிம்).

 

மேற்படி ஹதீஸில் புழுதி மண்ணை நபியவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அதை மட்டுமே தயம்மும் செய்ய பயன்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. புழுதி மண்ணும் அதில் அடங்கும் என்ற வகையில்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். முன்னர் குறிப்பிட்ட ஏனைய ஹதீஸ்கள் இதற்கு சான்றாதாரமாக உள்ளன.

 

சுருங்கக் கூறின், தயம்மும் செய்வதற்கு புழுதி மண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல; புழுதி மண்ணாயினும், புழுதி கலக்காத மணல், களி, பாறை, கல், புழுதி போன்றவையாயினும் அல்லது மழையில் நனைந்த மண்ணாயினும் அவற்றில் தயம்மும் செய்ய முடியும் என்பதையே மேற்படி ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. அல்லாஹு அஃலம்.

 

(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply