ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்

01: ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது.

“நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது.”

* ஸூரா பனூ இஸ்ராயீல் : 78

இந்த வசனத்தில் கூறப்படும் “சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது” என்பதன் பொருள், இரவு நேரத்து மலக்குகளும், பகல் நேரத்து மலக்குகளும் ஒன்று சேரும் நேரமாக இது உள்ளது என்பதாகும்.

* தஃப்ஸீர் இப்னு கஸீர் – (சூரா அல்-இஸ்ரா/78 & ஸஹீஹுல் புகாரி & ஸஹீஹ் முஸ்லிம்

02: ஃபஜ்ர் தொழுகை மூலமாக மறுமையில் அல்லாஹ்வை காண முடியும்.

“ஆகவே, அவர்கள் சொல்வதைப் பற்றி நீர் பொறுமையோடு இருப்பீராக! மேலும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் (ஃபஜ்ர்) அது அஸ்தமிப்பதற்கு முன்னரும் (அஸர்) உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக!”

* ஸூரா தாஹா : 130

“நிச்சயமாக, நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனை (மறுமையில்) இந்த நிலவைப் பார்ப்பது போல் பார்ப்பீர்கள். அவனைப் பார்ப்பதில் நீங்கள் நெருக்கடியை சந்திக்க மாட்டீர்கள். எனவே, சூரியன் உதிப்பதற்கு முன்னர் (ஃபஜ்ர்) மற்றும் அது மறைவதற்கு முன்னர் (அஸ்ர்) உள்ள தொழுகைகளை நீங்கள் தவறவிடாமல் இருக்க முடிந்தால், அவ்வாறு செய்யுங்கள்.) பின்னர் அவர்கள் இந்த வசனத்தை ஓதினார்கள்.”

* ஸஹீஹுல் புகாரி : 554

“சூரியன் உதிப்பதற்கு முன்னும் அது மறைவதற்கு முன்னும் தொழுகின்ற எவரும் நரகத்தில் நுழைய மாட்டார்.”

* ஸஹீஹுல் புகாரி : 7434

03: ஃபஜ்ருடைய தொழுகை தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பார்.

“யார் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் நாள் முழுவதும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பார்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1530

ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் (கூட்டமாக) தொழுபவர்களுக்கு, அந்த நாள் முழுவதும் அல்லாஹ் பாதுகாப்பை உறுதி செய்கிறான். இது ஒரு முஸ்லிமுக்கு அன்றைய தினத்தை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் தொடங்க உதவும் மிகப்பெரிய அருள்.

04: மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடையச் செய்யும்.

“உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்.”

* ஸஹீஹுல் புகாரி : 1142

05: நயவஞ்சகர்களுக்கு கடினமான தொழுகை.

“நயவஞ்சகர் (முனாஃபிக்) களுக்கு மிகக் கடினமான தொழுகைகள் ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகைகள் ஆகும்.”

* ஸஹீஹுல் புகாரி : 657

06: இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையைப் பெறுதல்.

“யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். யார் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1162

07: நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுத் தரும்.

“சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் (அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுதவர்) எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்“

* ஸஹீஹ் முஸ்லிம் : 1115

08: ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகையின் சிறப்பு.

“ஃபஜ்ருடைய (ஃபர்ளுத்) தொழுகைக்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுகை, உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் விடச் சிறந்ததாகும்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1315

09: பஜ்ர் தொழுத தனது அடியார்களை பற்றி மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான்.

“உங்களிடையே இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) வருகின்றனர். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றனர். பிறகு உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது இறைவன் அ(வ்வான)வர்களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று (மக்களைப் பற்றி நன்கறிந்த நிலையிலேயே) கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1112

10: ஃபஜ்ருடைய தொழுகை சொர்க்கத்தை தரக்கூடியதாக இருக்கிறது.

“பகலின் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ர், அஸர் ஆகிய) இரண்டு குளிர் நேரத் தொழுகைகளை யார் தவறாமல் தொழுகிறாரோ, அவர் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1117

11: ஃபஜ்ருடைய தொழுகையை தொடர்ந்து சூரியன் உதயமாகும் வரை தொழுத இடத்திலே அமர்வது.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதுவிட்டு தொழுத இடத்திலேயே சூரியன் நன்கு உதயமாகும்வரை அமர்ந்திருப்பார்கள்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1189

12: ஃபஜ்ர் தொழுகை ஷைத்தானின் இழிவிலிருந்து பாதுகாக்கச் செய்யும்.

“ஒருவர் விடியும் வரை தூங்கிக் கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்.”

* ஸஹீஹுல் புகாரி : 1144

13: ஃபஜ்ருடைய முன் ஸுன்னத்தை சுருக்கமாகத் தொழுதல்.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுன்னத்) மட்டுமே தொழுவார்கள்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1306

14: ஃபஜ்ருடைய முன் ஸுன்னத்தில் ஓத வேண்டிய ஸூராக்கள்.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத்தில் “குல் யா அய்யுஹல் காஃபிரூன்” அத்தியாயத்தையும், “குல் ஹுவல்லாஹு அஹத்” அத்தியாயத்தையும் ஓதினார்கள்.”

* ஸஹீஹ் முஸ்லிம் : 1316

15: ஃபஜ்ர் முன் ஸுன்னத் தவறினால், அதை ஃபர்ழ் தொழுகைக்குப் பிறகு தொழுதல்.

“நான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகை தொழுதேன். ஆனால் ஃபஜ்ர் தொழுகையின் முன் ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துகளை நான் தொழவில்லை. எனவே, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாம் கொடுத்த பிறகு நான் எழுந்து, விடுபட்ட அந்த இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.”

* ஸஹீஹ் இப்னு ஹிப்ஃபான் : 1563

16 : ஃபஜ்ர் தொழுகைக்கு இகாமத் செல்லப்பட்ட பிறகு ஃபஜ்ர் முன் ஸுன்னத் தொழுவது தடை செய்யப்பட்டது.

(இன்று எம்மில் நிறைய சகோதரர்களிடத்தில் காணப்படும் தவறு)

ஃபஜ்ர் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ﷺ) அவர்கள், *சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.*

📚 – ஸஹீஹுல் புகாரி : 663

ஃபர்ளு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால், எந்த ஒரு உபரித் தொழுகையையும் (நஃபில், சுன்னத்) தொழுவது கூடாது. சுப்ஹுத் தொழுகையின் முன் சுன்னத் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

புத்தக வடிவில் வாசிக்க:

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply