ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் – தொடர் 02

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் – தொடர் 02

 

இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்:

🔟 இஹ்றாம் என்பது வெறும் ஆடை என்று சிலர் நம்புவது தவறாகும். இஹ்றாம் என்பது உம்றஹ்வை அல்லது ஹஜ்ஜை ஆரம்பிப்பதற்கான நிய்யத் – எண்ணமாகும்.

1️⃣1️⃣ மீகாத்தைத் தாண்டியதற்குப் பிறகு இஹ்றாம் செய்தல்.
உம்றஹ் / ஹஜ் செய்யச் செல்பவர் இஹ்றாம் செய்யாமல் மீகாத்தைத் தாண்டிச் சென்றால் அவர் மீண்டும் மீகாத்திற்குத் திரும்பி வந்து இஹ்றாம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அவர் செய்யாமல் மீகாத்தைத் தாண்டி இஹ்றாமை ஆரம்பித்தால் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தின் படி இத்தகையவர் ஃபித்யஹ் கொடுக்க வேண்டும். அதாவது மக்கஹ்வில் ஒரு பலிப் பிராணியை அறுத்து அங்குள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். வசதியுள்ளவர்களுக்கு அதனைக் கொடுக்கக் கூடாது. அதில் அவர் எதுவும் சாப்பிடக் கூடாது. அது ஒரு குற்றப் பரிகாரத்தின் இடத்தில் இருக்கிறது.
ஒருவர் விமானத்தில் மீகாத்தைத் தாண்டும் பொழுது இஹ்றாமை ஆரம்பிக்கவில்லையானால் அவர் ஜித்தஹ் விமான நிலையத்தில் இறங்கியதற்குப் பிறகு அங்கிருந்து இஹ்றாம் செய்ய முடியாது. அவர் திரும்பவும் தரை வழியாகவேனும் அவர் தாண்டி வந்த மீகாத்திற்குச் சென்று அங்கிருந்து இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும்.

1️⃣2️⃣ இஹ்றாமிற்குரிய ஆடை கைவசம் இல்லை என்பதனால் இஹ்றாமை ஆரம்பிக்காமல் மீகாத்தைத் தாண்டிச் செல்லல் தவறாகும். சிலர் விமானத்தில் பயணிக்கும் பொழுது இஹ்றாமுக்குரிய ஆடை இல்லை என்பதனால் ஜித்தஹ்வுக்குச் சென்று இஹ்றாமை ஆரம்பிக்கின்றனர். இது தவறாகும். அவர் தன்னிடம் இருக்கும் உடல் உறுப்புக்கள் அளவுக்குத் தயாரிக்கப்படாத துணியைக் கொண்டு தனது அவ்றத்தை மறைத்துக் கொண்டு இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும். தன்னிடம் எந்தத் துணியும் இல்லை என்றால் தான் அணிந்திருக்கும் பேன்ட்டுடன் இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும். உடல் உறுப்புக்களின் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ள ஷேர்ட், டி-ஷேர்ட், பனியன் போன்ற ஆடைகளைக் கலைந்து, தலையையும் திறந்து கொள்ள வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யாரிடம் வேஷ்டி இல்லையோ அவர் ஸறாவீலை அணிந்து கொள்ளட்டும். (முஸ்லிம்)

ஸறாவீல் என்பது பேன்ட் போன்ற ஆடையாகும். ஒருவர் ஷேர்ட் போன்ற மேலாடையுடன் இஹ்றாமை ஆரம்பித்தால் கஃப்பாறஹ்வாக – குற்றப் பரிகாரமாக ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது மூன்று நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும்.

1️⃣3️⃣ இஹ்றாமை ஆரம்பிக்க முன்னால் தொழுவது கட்டாயம் அல்லது நிபந்தனை என்ற நம்பிக்கை தவறானதாகும். ஃபர்ளான தொழுகைக்குப் பின்னால் அல்லது வுளுவின் சுன்னத் தொழுகைக்கு அல்லது தஹிய்யதுல் மஸ்ஜிதிற்குப் பின்னால் இஹ்றாமை செய்து கொள்வது விரும்பத்தக்கது என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் செய்ய சென்ற பொழுது மதீனஹ்வின் துல்ஹுலைபஹ் மீகாத்திருந்து ளுஹர் தொழுகைக்குப் பின்னர் இஹ்றாமை ஆரம்பித்தார்கள்.

1️⃣4️⃣ இஹ்றாமிற்கு என்று ஒரு தொழுகை இருப்பதாக நம்புவதும் தவறாகும். அதற்கென்று எந்த ஒரு விசேடமான தனித் தொழுகையும் கிடையாது.

1️⃣5️⃣ இஹ்றாம் ஆடைக்கு மேல் மனம் பூசிக் கொள்வது தவறாகும். இஹ்றாமை ஆரம்பிப்பதற்கு முன்னால் உடம்பில் மாத்திரம் மணம் பூசிக் கொள்வது சுன்னத் ஆகும். இஹ்றாமை ஆரம்பித்ததற்குப் பிறகு உடம்பிலும் மனம் பூசிக் கொள்வது தடையாகும்.

1️⃣6️⃣ ஒரு ஆண் இஹ்றாமில் இருக்கும் நிலையில் காலுறைகள் போன்றவை அணியக்கூடாது. ஆனால் அவரிடத்தில் பாதனி இல்லை என்றால் அவ்வாறு அணிவதற்கு அனுமதி இருக்கிறது.

1️⃣7️⃣ இஹ்றாமிற்காகக் குளித்துக்கொண்டதிலிருந்து இஹ்றாமுடைய நிலையில் தடை செய்யப்படக்கூடியவைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சிலர் நம்புவது தவறாகும். எப்போது இஹ்றாம் ஆரம்பிக்கப்படுகிறதோ அப்போதிலிருந்துதான் அவை தடைசெய்யப்படும்.

1️⃣8️⃣ இஹ்றாமிற்காகக் குளித்துக் கொள்வதோ அல்லது வுளூ செய்வதோ கட்டாயம் என்ற நம்பிக்கை தவறானதாகும். அது மார்க்கத்தில் விரும்பத்தக்கதே தவிர கட்டாயமானதல்ல. மாதவிடாய் அல்லது நிபாஸ் நிலையிலுள்ள பெண்கள் கூட குளித்துக் கொள்வது சுன்னத் ஆகும். இஹ்றாமிற்காகக் குளித்துக் கொள்வது சுன்னத் என்று இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்-ஷாஅ-ல்லாஹ் தொடரும்…

 

ஆக்கம்:ஷெய்க் ஹுஸைன் இப்னு றபீக் மதனி

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply