ஸுன்னாவின் ஒளியில் வுழூ
– தொடர் : 06 [ இறுதி தொடர் ]
9) கணுக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்:
வுழூவின் நிறைவாக இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது இறுதியாக கால்களை கழுவுமாறு குறிப்பிடுகிறான் (5:6).
கால்களை கழுவும் போது முதலாவதாக வலது காலையும் இரண்டாவதாக இடது காலையும் கழுவ வேண்டும்.
நபிகளார் வுழூ செய்த முறை பற்றி விபரிக்கின்ற உஸ்மான் (றழி), அபூஹுரைரா (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) போன்ற அனைத்து ஸஹாபாக்களும் நபியவர்கள் கால்கள் இரண்டையும் கழுவும் போது முதலாவதாக வலது காலையும் அடுத்து இடது காலையும் கணுக்கால் வரை கழுவியதாக விபரிக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்).
பொதுவாகவே வலப்பக்கத்திலிருந்து ஆரம்பிப்பது நபியவர்களின் வழக்கமாக இருந்துள்ளது.
ஆயிஷா(றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் செருப்பணியும்போதும் தலை சீவும் போதும் வுழூச் செய்யும் போதும் இன்னும் எல்லா விடயங்களிலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள் (புஹாரி, முஸ்லிம்).
‘நீங்கள் ஆடை அணியும் போதும் வுழூ செய்யும் போதும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பம் செய்யுங்கள்’ என நபிகளார் கூறியதாக அபூஹுரைரா (றழி) அறிவிக்கிறார்கள் (அபூதாவூத், திர்மிதி).
இவ்விடயத்தில் பிரதானமாக இரு தவறுகள் இடம்பெறுகின்றன :
1. கைகள் மற்றும் கால்களை கழுவும் போது இடதை முதலாவதாக செய்தல். இது தவிர்க்கப்பட வேண்டும். பலர் இது பற்றி அறிந்திருந்தாலும் பொடுபோக்கின் காரணமாக இத்தவறு அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது.
2. முதலில் வலது, பின்னர் இடது, பின்னர் மீண்டும் வலது, பின்னர் இடது என மாறி மாறி கைகளையும் கால்களையும் கழுவிக் கொண்டிருத்தல். இதுவும் திருத்தப்படவேண்டிய ஒன்றாகும். முதலாவதாக வலதை மூன்று முறை கழுவி விட்டால் பின்னர் இடதை மூன்று முறை கழுவி நிறைவு செய்துவிட வேண்டும்.
கால்களை கழுவும் போது குதிகால் மற்றும் புறப் பகுதியை பேணி கழுவ வேண்டியது அவசியமாகும். அதிகமானோர் இதிலும் பொடுபோக்காக இருந்துவிடுகின்றனர். ஆனால் நபிகளார் குதிகால்களை முறையாக கழுவாதவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்திருக்கிறார்கள் :
1. அப்துல்லாஹ் பின் அம்ர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். பாதையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக வுழூ செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ‘(சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு கேடுதான்/நரக வேதனைதான். வுழூவை முழுமையாகச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).
2. மக்கள் வுழூச் செய்யும் தொட்டியிலிருந்து வுழூச் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற அபூ ஹுரைரா(றழி) (எங்களைப் பார்த்து) ‘வுழூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக இறைத்தூதர் அவர்கள் ‘குதிகால்களை சரியாகக் கழுவாதவர்களுக்கு கேடுதான்/ நரகம்தான்’ என்று கூறினார்கள்’ என்றார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி).
இவ்வாறே கால்களை கழுவும் போது கால் விரல்களை கோதி அதன் இடுக்குகளுக்குள்ளும் தண்ணீரை செலுத்தி கழுவுவது அவசியமாகும் :
நபியவர்கள் லகீத் இப்னு ஸப்ரா (றழி) அவர்களுக்கு இவ்வாறு கூறினார்கள் : ‘நீ வுழூ செய்தால் விரல்களுக்கிடையே கோதி கழுவிக்கொள்…’ (திர்மிதி, அபூதாவூத் ).
இதே வேளை மற்றுமொரு ஹதீஸ் இவ்வாறு வருகிறது :
‘நபிகளார் வுழூ செய்தால் தமது கால் விரல்களை (அவற்றின் இடுக்குகளுக்குள்) கையின் சின்ன விரலினை விட்டு கோதி கழுவுவார்கள்’ (அபூதாவூத், திர்மிதி).
மேற்படி ஹதீஸின் அடிப்படையில் கையின் சின்ன விரலால் கால்விரல்களை கோதி கழுவ வேண்டும் என சிலர் கூறுவர். ஆயினும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு லஹீஆ என்பவர் இடம்பெறுகிறார். ஹதீஸ் துறையில் இவர் பலவீனமானவர் என்பதால் இவர் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்களை ஆதாரமாகக்கொள்ள முடியாது என்பது இமாம் இப்னு அபீஹாதிம், இமாம் இப்னு ஹஜர் உள்ளிட்ட பல ஹதீஸ்துறை விமர்சகர்களின் கருத்தாகும்.
எனவே, கால் விரல்களை ஏதோ ஒரு வகையில் கோதி கழுவ வேண்டும். ஆயினும் கையின் சின்ன விரலால்தான் கோதி கழுவ வேண்டும் என்பது அவசியமல்ல.
10) வுழூவின் பின்னரான துஆ
வுழூவை பூரணமாக நிறைவேற்றிய பின் துஆ ஓதுவது முக்கியமான ஸுன்னத்தாகும்.
நபிகளார் கூறினார்கள் : ‘உங்களில் ஒருவர் முழுமையான முறையில் வுழூ செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரஸூலுஹு (மற்றுமோர் ஹதீஸ் அறிவிப்பின் படி, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்
(ஸஹீஹ் முஸ்லிம்).
மேற்படி துஆ மிக ஆதாரபூர்வமான துஆவாகும். வுழூச் செய்து முடித்த பின் இதை ஓதுவதன் மூலம் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அளப்பரிய பாக்கியத்தை மறுமையில் அடைந்துகொள்ள முடியும்.
இதே வேளை மேலும் இரு துஆக்கள் வுழூச் செய்து முடித்த பின் ஓதுவதற்கென வந்துள்ளன. அவற்றின் ஆதாரத்தன்மை தொடர்பில் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன.
முதலாவது துஆ:
‘அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன் வஜ்அல்னீ மினல் முததஹ்ரீன்’ (திர்மிதி)
இது ஆதாரபூர்வமானது என இமாம்களான இப்னுல் கையிம், அல்பானி, பின் பாஸ் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் கூறுகின்ற அதே நேரம், இது பலவீனமான ஹதீஸ் என இமாம்களான இப்னு ஹஜர், அஹ்மத் ஷாகிர் உட்பட மற்றும் பலர் குறிப்பிடுகின்றனர்.
இரண்டாவது துஆ :
ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஹ்பிருக வஅதூபு இலைக
இதுவும் ஆதாரபூர்வமான துஆ என ஷெய்க் அல்பானி போன்ற அறிஞர்கள் குறிப்பிடும் அதே வேளை, இது இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூஸஈத் அல்குத்ரீ (ரழி) என்ற ஸஹாபியின் கூற்றேயன்றி நபிகளார் கூறியதல்ல என இமாம்களான நஸாஈ, இப்னு ஹஜர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (நூற்கள் : ‘அல்புதூஹாதுர் ரப்பானிய்யா’, ‘ஸஹீஹுல் ஜாமிஃ’, ‘ஹாஷியா அலத் திர்மிதி’, ‘பதாவா பின் பாஸ்’)
எனவே வுழூ செய்த பின் ஓதுவதற்கென வந்துள்ள மூன்று துஆக்களில் முதலாவது துஆவை நாம் தவறாமல் ஓதும் அதே நேரம், ஏனைய இரு துஆக்கள் தொடர்பில் சர்ச்சை இருப்பதால் அவற்றை தவிர்ந்துகொள்ள முடியும். ஆயினும் அவற்றை ஆதாரபூர்வமானவை என குறிப்பிடும் அறிஞர்களின் ஆய்வின் அடிப்படையில் யாரேனும் அவற்றை ஓதினால் அதை தவறென கூற முடியாது.
இது தவிர, வுழூவின் உறுப்புகள் ஒவ்வொன்றையும் கழுவும் போது ஓதுவதற்கென எந்த ஒரு துஆவும் ஹதீஸ்களில் வரவில்லை. அவ்வாறு யாரேனும் ஏதேனும் துஆக்களை ஓதினால் அது மார்க்கத்தில் இல்லாத தெளிவான பித்அத் ஆகும்.
ஷாபிஈ மத்ஹபின் முன்னணி அறிஞரான இமாம் நவவி (ரஹ்) கூறுகிறார்கள் :
‘ வுழூவின் உறுப்புகளை கழுவும் போது ஓதுவதற்கென நபியவர்களிடமிருந்து எந்தவொரு துஆவும் ஹதீஸ்களில் வரவில்லை’ (நூல் : ‘அல்அத்கார்’, 30).
இமாம் இப்னு கையிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகிறார்கள் : ‘ வுழூவின் ஆரம்பத்தில் ஓதப்படவேண்டிய பிஸ்மில்லாஹ் மற்றும் வுழூ செய்து முடித்த பின் ஓதப்படும் துஆ ஆகிய இரண்டையும் தவிர வேறு எந்தவொரு துஆவையும் நபிகளார் வுழூவின் போது ஓதியதில்லை, தமது சமூகத்துக்கு அவ்வாறான துஆக்களை கற்றுத்தரவுமில்லை. ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது (சிலரால்) ஓதப்படுகின்ற அனைத்தும் நபியவர்களின் பெயரால் புனையப்பட்ட பொய்களாகும்’ (பார்க்க : ‘ஸாதுல் மஆத்’ , 1/195).
11) வுழூவின் பின்னரான ஸுன்னத்தான தொழுகை:
வுழூச் செய்து துஆவும் ஓதிய பின் இரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுவது மற்றுமொரு முக்கியமான ஸுன்னத்தாகும். அதற்கென வாக்களிக்கப்பட்ட நற்கூலி அளப்பரியதாகும்.
1. யாரேனும் ஒருவர் அழகிய முறையில் வுழூ செய்து பின்னர் அகமும் முகமும் ஒன்றித்த நிலையில் இரண்டு றக்அத் தொழுதால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகிவிடும் (முஸ்லிம்).
2. யாரேனும் நபியவர்கள் வுழூ செய்தது போன்று வுழூ செய்து பின்னர் இரண்டு றக்அத்துகளை மன ஒருமைப்பாட்டுடன் தொழுதால் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புஹாரி, முஸ்லிம்).
முடிவுரை
கடந்த சில தினங்களாக ‘ஸுன்னாவின் ஒளியில் வுழூ’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுத அருள்புரிந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். இத்தொடரில் எழுதப்பட்ட விடயங்களை எழுதியவர் உட்பட அனைவரும் முடியுமான வரை பின்பற்றியொழுகும் வாய்ப்பை அல்லாஹ் வழங்கிட வேண்டும். இத்தொடரை எழுதுமாறு அன்புடன் வேண்டிக்கொண்ட, உளமார பிரார்த்தித்த, உற்சாகப்படுத்திய, பல வலைத்தளங்களிலும் இதை பகிர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் நிறைவான நற்கூலிகளை வழங்குவானாக. இத்தொடரை எழுதுவதற்காக பல அறிஞர்களின் நூற்களை உசாத்துணையாக கொண்டேன்.
‘அல்லாஹ்வின் உயர்ந்த மார்க்கத்தை எத்திவைத்தல்’ என்ற உன்னத பணியில் தம்மை அர்ப்பணித்த அந்த அறிஞர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிந்து நிறைவான நற்கூலிகளை வழங்குவானாக.
உசாத்துணை நூல்கள் :
1. ‘ஸாதுல் மஆத் பீ ஹத்யி கைரில் இபாத்’, இமாம் இப்னு கையிம் அல்ஜவ்ஸிய்யா
2. ‘மின்ஹதுல் அல்லாம் ஷர்ஹு புலூஹில் மராம்’, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்பவ்ஸான்
3. ‘பத்ஹு தில் ஜலாலி வல் இக்ராம்’, அல்லாமா முஹம்மத் ஸாலிஹ் அல்உதைமீன்
4. ‘தவ்ழீஹுல் அஹ்காம்’, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்பஸ்ஸாம்
5. ‘ஸிபது வுழூஇந் நபி’, பஹ்த் பின் அப்திர் ரஹ்மான் அத்தவ்ஸரி
6. ‘தமாமுல் மின்னா பித்தஃலீகி அலா பிக்ஹிஸ் ஸுன்னா’, அல்லாமா முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி
7. ‘தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா’, ஆதில் பின் யூஸுப் அல்அஸ்ஸாஸி
ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: