ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07

 

21) முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) :

22) இரண்டாவது அத்தஹிய்யாத் :

A)இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையில் அத்தஹிய்யாத்தில் அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா,இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா?

23) முதலாவது மற்றும் இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போதான நடைமுறைகள் :

A)வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை :

24) அத்தஹிய்யாத் & ஸலவாத் மற்றும் துவாக்களை ஓதுதல்:

போன்றவற்றின் விரிவான சட்டங்களை இந்த தொடரில் காணலாம்…

 

21) முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) :

இரண்டாவது றக்அத்தின் முடிவில் முதலாவது அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத் ஓத வேண்டும்.

முதல் அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது பின்வருமாறு நபிகளார் அமர்வார்கள் :

‘இடது பாதத்தை விரித்து அதன் மீது உட்காருவார்கள். வலது பாதத்தை நேராக நட்டிவைப்பார்கள்.வலது கால்விரல்களை (மடக்கி) கிப்லாவை முன்னோக்கிவைப்பார்கள்” (புஹாரி, நஸாஈ).

(இந்த இருப்புக்கு அரபியில் ‘இப்திராஷ்’ எனப்படும்).

முதல் அத்தஹிய்யாத்தில் உட்கார மறந்து விட்டால்…

‘நபியவர்கள் முதல் அத்தஹிய்யாத்தில் அமர மறந்து விட்டால் (தொழுகையின் இறுதியில்) மறதிக்கான ஸுஜூத் செய்வார்கள்”“ (புஹாரி, முஸ்லிம்).

22) இரண்டாவது அத்தஹிய்யாத் :

இரண்டாவது அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது மூன்று முறைகளில் நபியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் :

1 )இடது காலை வலப்புறமாக வெளியாக்கி விரித்து வைப்பதோடு, வலது காலை நட்டி வைத்தல். (புஹாரி)

2 )இரு பாதங்களையும் வலப்புறமாக வெளியாக்கி இரண்டையும் விரித்து வைத்தல் (அபூதாவூத்)

3 )வலது பாதத்தை விரித்து வைத்து இடது பாதத்தை தொடைக்கும் கெண்டைக்காலுக்குமிடையில் வைத்தல் (முஸ்லிம்)

(பார்க்க : ஆதில் பின் யூஸுப் :”தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா”,1ஃ270).

குறிப்பு :

ஒரு அத்தஹிய்யாத்தை மாத்திரம் கொண்ட இரண்டு றக்அத்துகள் கொண்ட தொழுகையில் (உ-ம் :ஸுப்ஹ், ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகை, முன் பின் ஸுன்னத் தொழுகை போன்றவை)

அத்தஹிய்யாத்தில் அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா,இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா என்பதில் அறிஞர்களிடையயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

முதலாவது கருத்து :

முதலாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர வேண்டும்.

இரண்டாவது கருத்து :

இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர வேண்டும்.

இவ்விரு கருத்துகளுள் முதலாவது கருத்தே ஆதார வலுக் கூடிய கருத்தாக காணப்படுகிறது.

என்பதாக இந் நூற்றாண்டின் பிரபல அறிஞர்களான ஷெய்க் அல்பானி, ஷெய்க் இப்னு பாஸ்,ஷெய்க் இப்னு உதைமீன், ஷெய்க் பின் சௌத் உட்பட பலர் கூறுகிறார்கள். இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர் :

1. அபூ ஹுமைத் அஸ்ஸாது (றழி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகிறார்கள் : நபியவர்கள் தொழுகையில் இரண்டு றக்அத்துகளின் முடிவில் முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வார்கள் (புஹாரி).

2. ஆயிஷா (றழி அல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள் : நபியவர்கள் ஒவ்வொரு இரண்டு றக்அத்துகள் முடிவிலும் அத்தஹிய்யாத் ஓதுவார்கள். அப்போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வார்கள் (முஸ்லிம்).

மேற்படி இரு ஹதீஸ்களிலும் கூறப்பட்டதன் படி, இரண்டு றக்அத்தோ, மூன்று றக்அத்தோ, நான்கு றக்அத்தோ எத்தனை றக்அத்துகள் கொண்ட தொழுகையாயினும் இரண்டு றக்அத்துகளின் முடிவில் முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வதே அடிப்படையானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

எனவேதான் இரண்டு றக்அத்துகள் உள்ள, ஒரு அத்தஹிய்யாத்தை மாத்திரம் கொண்ட தொழுகையில் அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வதே வலுவான ஆதாரம் கொண்டது என மேற்கூறப்பட்ட சமகால அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டாவது கருத்தானது ஆதார வலுக் குறைந்ததாயினும், இவ்விடயம் மார்க்கத்தில் அனுமதிக்கத்தக்க கருத்து வேற்றுமை சார்ந்த ஒரு விடயம் என்பதால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை. அல்லாஹு அஃலம்.

அவற்றுள் நபியவர்களின் ஸுன்னாவுக்கு மிகவும் நெருக்கமான கருத்து யாதெனில், ஒரு அத்தஹிய்யாத் கொண்ட, இரண்டு றக்அத்துகள் உள்ள தொழுகைகளில் முதல் அத்தஹிய்யாத்துக்கு அமர்வது போன்று அமர வேண்டும் என்பதாகும்.ஏனெனில் இரண்டு றக்அத்துகளின் முடிவில் (அது எத்தனை றக்அத்துகள் கொண்ட தொழுகையாயினும் ) நபியவர்களின் பொதுவான நடைமுறை முதல் அத்தஹிய்யாத்தில் அவர்வது போன்றே அமர்வதாகும் என்பதை பல ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. (பார்க்க : ‘அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி”, 3ஃ984).

குறிப்பு :

இரு அத்தஹிய்யாத்துகளுக்காக அமரும் போதும் நடு இருப்பின் போதும் இரு வகையான இருப்புகளை நபியவர்கள் தடுத்துள்ளார்கள் :

1. நாய் உட்காருவது போன்று உட்காருதல் :

“நாய் உட்காருவது போன்று உட்காருவதை எனது நேசரான நபிகளார் தடுத்தார்கள்” என அபூஹுரைரா (றழி அல்லாஹு அன்ஹு அல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அஹ்மத், அத்தயாலிஸி).

” ஒருவர் தனது பின்பகுதியை நிலத்தில் வைத்து இரு கெண்டைக்கால்களையும் நட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றியவாறு அமர்மதே நாய் இருப்பு” என முற்கால பிரபல ஹதீஸ் துறை அறிஞரான இமாம் இப்னுஸ் ஸலாஹ் (ரஹ்) தெளிவுபடுத்துகிறார்கள் (பார்க்க :”அல்மஜ்மூஃ” , 3ஃ439).

2. யூதர்களின் இருப்பு :

இடது கையை நிலத்தில் ஊன்றியவாறு அமர்வதை யூதர்களின் இருப்பு எனக் கூறி அல்லாஹ்வின் தூதர் அவ்வாறு இருப்பதை தடுத்தார்கள்.

ஒரு மனிதர் தொழுகையின் போது தரையில் இடது கையை ஊன்றிய வண்ணம் அமர்ந்திருந்ததை நபியவர்கள் கண்டபோது,”இவ்வாறு இருக்க வேண்டாம், இது யூதர்களின் இருப்பு” என குறிப்பிட்டார்கள் (அஹ்மத், ஹாகிம், பைஹகி).

23) முதலாவது மற்றும் இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போதான நடைமுறைகள் :

1- இரு கைகளையும் வைக்கும் முறை :

இரு அத்தஹிய்யாத்துகளுக்கு உட்காரும் போது தமது கைகளை இரு முறைகளில் வைத்துக் கொள்வார்கள்:

1.”நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்தால் தமது வலது உள்ளங்கையை வலது தொடையிலும் (மற்றுமொரு ஹதீஸின் படி வலது முழங்காலில்) இடது உள்ளங்கையை இடது தொடையிலும் (மற்றொரு ஹதீஸின் படி இடது முழங்காலில்) வைப்பார்கள்” (முஸ்லிம், அபூஅவானா).

2.”நபியவர்கள் தமது முழங்கையின் ஓரத்தை தமது தொடைக்கு மேலே வைத்துக் கொள்வார்கள்”(அதாவது தமது முழங்கையை விலாவை விட்டும் விலக்கி வைக்காமல் விலாவுக்கு நெருக்கமாக வைப்பார்கள்) – (அபூதாவூத், நஸாஈ).

இரு ஸுஜூதுகளுக்கிடையிலான நடு இருப்பின் போதும் இவ்வாறே தமது இரு கைகளையும் வைத்துக் கொள்வார்கள் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

2- வலது கைவிரல்களை வைக்கும் முறை :

இரு அத்தஹிய்யாத்துகளின் போதும் நபிகளார் இரு முறைகளில் வலது கைவிரல்களை வைத்திருக்கிறார்கள் :

1 )விரல்கள் அனைத்தையும் பொத்தி சுட்டு விரலை நீட்டிவைப்பார்கள் (முஸ்லிம்)

2 )பெருவிரலை நடுவிரல் நுனியில் வைத்து வளையம் போன்றாக்கி, சுட்டு விரலை நீட்டிவைப்பார்கள்(அபூதாவூத், நஸாஈ).

3- வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை :

இரு அத்தஹிய்யாத் இருப்புகளிலும் வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை தொடர்பில் அறிஞர்களிடையே முக்கியமாக மூன்று நிலைப்பாடுகள் காணப்படுகின்றன :

முதல் நிலைப்பாடு :

சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்க வேண்டும். இக்கருத்தை மாலிக் மத்ஹப், ஹம்பலி மத்ஹப் அறிஞர்கள், மற்றும் சில ஷாபிஈ மத்ஹப் அறிஞர்கள், இமாம் இப்னுல் கையிம், ஷெய்க் அல்பானி,ஷெய்க் பின் பாஸ், ஷெய்க் இப்னு உஸைமீன் உள்ளிட்ட பலர் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகின்றனர் :

‘நபியவர்கள் அத்தஹிய்யாத்தின் போது சுட்டுவிரலை உயர்த்தி அசைத்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்” என வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அபூதாவூத், நஸாஈ,அஹ்மத்).

இரண்டாவது நிலைப்பாடு :

சுட்டு விரலை அசைக்காமல் நீட்டி வைத்திருக்க வேண்டும். இக்கருத்தை ஹனபி மத்ஹப் அறிஞர்கள், பெரும்பாலான ஷாபிஈ மத்ஹப் அறிஞர்கள், சில மாலிக் மத்ஹப் அறிஞர்கள் மற்றும் இமாம் இப்னு ஹஸ்ம் ஆகியோர் கொண்டிருக்கின்றனர். இதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகின்றனர் :

‘நபியவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் தனது இடது கையை இடது தொடையில் வைத்து,வலது கையை வலது தொடையில் வைத்து சுட்டு விரலினால் சுட்டிக்காட்டுவார்கள்” (முஸ்லிம்).

இந்த ஹதீஸில் ‘அசைத்தல்” என்பது வரவில்லை என்பதால் அசைக்காமல் விரலை நீட்டி சுட்டிக்காட்டுவது போல் வைத்திருக்க வேண்டும் என்பது இரண்டாம் தரப்பினரின் கருத்தாகும்.

முதல் தரப்பினர் முன்வைக்கின்ற ‘நபியவர்கள் அசைத்துக்கொண்டிருந்தார்கள்” என்ற ஹதீஸுக்கு இரண்டாம் தரப்பினர் விளக்கமளிக்கும் போது, அந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் பலர் இருந்த போதும் ஸாஇதா என்ற அறிவிப்பாளர் மாத்திரமே நபியவர்கள் விரலை அசைத்ததாக குறிப்பிடுகிறார், மற்ற யாரும் அவ்வாறு குறிப்பிடவில்லை என்பதால் ஹதீஸ்கலை விதிகளின் அடிப்படையில் அந்த ஹதீஸ் பலவீனமானது, ஆதாரமாக கொள்ள முடியாது என்று குறிப்பிடுகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் முதல் தரப்பினர், ஸாஇதா என்பவர் மாத்திரம் நபியவர்கள் விரல் அசைத்தார்கள் என்று அறிவித்தாலும் அவர் நம்பகமானவர் என ஹாபிழ் இப்னு ஹஜர் (நூல் :’அத்தக்ரீப்”) போன்ற ஹதீஸ் கலை மேதைகள் குறிப்பிடுவதால் அது ஆதாரபூர்வமான ஹதீஸே என நிறுவுகின்றனர்.

மூன்றாவது நிலைப்பாடு :

அத்தஹிய்யாத்தில் விரல் அசைப்பதும் அசைக்காமல் இருப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே,

ஏனெனில் இரண்டுக்கும் ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிடுகின்றனர். இந்நிலைப்பாட்டை இமாம் குர்துபி (நூல் :”அல்ஜாமிஉ லிஅஹ்காமில் குர்ஆன்” , 1ஃ361), இமாம் ஸன்ஆனி (நூல் :”ஸுபுலுஸ் ஸலாம்” , 1ஃ368) ஆகியோர் கொண்டிருக்கின்றனர்.

(பார்க்க : ஷெய்க் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான்,”மின்ஹதுல் அல்லாம்”, 4ஃ151

இம்மூன்று கருத்துகளுள் மூன்றாவது கருத்தே சரியானதாக தெரிகிறது. ஏனெனில் விரலை அசைத்தல் அல்லது அசைக்காமல் நீட்டி வைத்திருத்தல் ஆகிய இரண்டு செயற்பாடுகளுக்கும் மேற்கூறப்பட்டவாறு ஸுன்னாவில் ஆதாரங்கள் உள்ளதால் இரண்டையும் ஏற்றுக் கொள்வதுதான் ஸுன்னா பற்றிய சரியான புரிதலாக அமையும். பலமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்படும் இத்தகைய கருத்து வேற்றுமைகளின் போது ஒரு தரப்பினரை மறு தரப்பினர் விமர்சிக்காமல் விட்டுகொடுப்புடன் நடந்துகொள்வதே நமது முன்னோர்களான ஸஹாபாக்கள், நன்மக்களின் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது.

அதே நேரம், எந்த ஆதாரமும் இல்லாமல் அல்லது பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்படும் கருத்து வேற்றுமைகள் மார்க்கத்தில் நிராகரிக்கப்பட்டவையாகும் என்பதும் கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.அல்லாஹு அஃலம்.

4 – சுட்டு விரலை நீட்டுவது அல்லது அசைப்பது எப்போது?

அத்தஹிய்யாத் ஓதும் போது ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இடத்தில்தான் வலது கை சுட்டுவிரலை நீட்ட வேண்டும் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்தவுடன் இடது கையை இடது தொடையிலும் (அல்லது இடது முழங்காலில்) வலது கையை வலது தொடையிலும் (அல்லது வலது முழங்காலில்) வைத்து வலது கை சுட்டு விரலை நீட்டி வைப்பார்கள் அல்லது அசைப்பார்கள் என்றே அனைத்து ஹதீஸ்களும் குறிப்பிடுகின்றன (முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ).

எனவே, அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்ததிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை வலது சுட்டுவிரலை நீட்டி வைத்திருப்பது அல்லது அசைத்து கொண்டிருப்பதே நபியவர்களின் நடைமுறையாகும்.

அத்தஹிய்யாத் இருப்பில் பார்வையை எங்கே செலுத்துவது?

தொழுகையின் ஏனைய நிலைகளில் ஸுஜூத் செய்யும் இடத்தை நோக்கி பார்வையை தாழ்த்த வேண்டும் என்பது போல் அத்தஹிய்யாத் இருப்பில் வலது கை சுட்டு விரலை நோக்கி பார்வையை செலுத்த வேண்டும்.

‘நபியவர்கள் அத்தஹிய்யாத்தின் போது நீட்டப்பட்டிருக்கும் சுட்டு விரலை நோக்கி தமது பார்வையை செலுத்துவார்கள்” (நஸாஈ, இப்னு ஹுஸைமா ).

24) அத்தஹிய்யாத் & ஸலவாத் மற்றும் துவாக்களை ஓதுதல்:

முதல் அத்தஹிய்யாத்தின் போது:

அத்தஹிய்யாத் ஓதுவதோடு நபியவர்கள் மீது முழுமையாக – ‘இன்னக ஹமீதுன் மஜீத்” வரை ஸலவாத் கூற வேண்டும்.

நபியவர்கள் இரு அத்தஹிய்யாத்களிலும் தன் மீதே ஸலவாத் கூறியிருக்கிறார்கள் (நஸாஈ)

 

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ،

அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு .

அ‌ல்லது

التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ “.

அத்தஹிய்யா(த்)துல் முபார(க்)கா(த்)துஸ் ஸலவா(த்)துத் தய்யிபா(த்)து லில்லாஹி அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் நபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஆலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி

இரண்டில் ஏதாவது ஒன்றை ஓதலாம்.

ஸலவாத்:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ “.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போது :

அத்தஹிய்யாத் ஓதுவதோடு ஸலவாத் முழுமையாக கூற வேண்டும். அத்தோடு 04

விடயங்களிலிருந்து பாதுகாப்பு கோருமாறு நபியவர்கள் கூறினார்கள்.

‘உங்களில் ஒருவர் கடைசி அத்தஹிய்யாத் ஓதி முடித்தால் நான்கு விடயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவும் :

 

اَللّٰهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ

நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வினதும் மரணத்தினதும் சோதனைகள், தஜ்ஜாலின் தீங்குகள் ஆகியவையாகும்” (முஸ்லிம்).

அதன் பின் தனக்கு தேவையானற்றை அல்லாஹ்விடம் கேட்டு துஆ செய்யமாறும் நபியவர்கள் கூறினார்கள். அவ்வாறான பல துஆக்களை நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்).

இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அத்தஹிய்யாத்தும் ஸலவாத்தும் ஓதி முடிந்த பின் ஓத வேண்டிய துஆக்களாவன:

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ

அல்லாஹ்வே! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், எல்லை மீறிச் செய்ததையும், என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும், எனக்கு நீ மன்னித்துவிடு! நீதான் முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)

اَللّٰهُمَّ إِ نِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّلَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் எனக்கு அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன்; உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை; உன் புறத்திலிருந்து எனக்கு விசேஷமான மன்னிப்பை வழங்கு! எனக்குக் கருணை காட்டு! நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன். (ஸஹீஹுல் புகாரி)

اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹ்வே… உன்னை நினைவு கூருவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்! (ஸுனன் அபூதாவூது)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

ஆக்கம் :ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply