கேள்வி09:
ஸகாத் கடமையான பொருட்கள், சொத்துக்கள் ஸகாத் கொடுப்பவரின் கைவசம் காணப்பட வேண்டும்.இது பற்றிய விளக்கத்தை தரவும்?
பதில்:-
அதாவது, ஸகாத் கடமையாகும் பொருட்கள், சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட வேண்டும். சில நேரங்களில் இவருக்கு சொந்தமான சொத்துக்கள் வேறொருவரின் கைவசம் காணப்படும். ஆனால் இவருக்கு அவைகள் கிடைப்பதற்கு பல நாட்கள் செல்லலாம். அல்லது சில நேரங்களில் அவைகள் அழிந்து விடலாம். எனவே இப்படிப்பட்ட சொத்துக்களில் ஸகாத் கடமையாக மாட்டாது.
⛳ பார்க்க:-
“الشرح الممتع للشيخ ابن العثيمين” (2/457)
கேள்வி 10:
ஸகாத்துடைய பொருட்களில் வருடம் பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையிடப்படாத பொருட்கள் யாவை? அவைகளுக்கான ஆதாரங்கள் என்ன?
பதில்:
1. வித்துக்கள், பழங்கள்.
இதற்கான ஆதாரம்:
அல்லாஹ் கூறினான்:- (( அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். ))
(அல்குர்ஆன் : 6:141)
2. கால்நடைகள் ஈன்றெடுத்த குட்டிகள்.
அதற்கான ஆதாரம்:-
அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கால்நடைகளிலிருந்து ஸகாத்தை சேகரிப்பதற்காக வேண்டி சிலரை அனுப்பி வைத்தார்கள். அவைகளில் சிறியவைகளும், (வருடம்) பூர்த்தியான பெரியவைகளும் காணப்பட்டன. ஆனால், அவைகளுக்கு மத்தியில் வேறு பிரித்து (ஸகாத்தை சேகரிக்குமாறு) அவர்கள் கூறவில்லை.
3. வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபம்.
அதற்கான ஆதாரம்:-
முஸ்லிம்கள் தங்களது வியாபாரப் பொருட்களின் ஸகாத்தை இலாபத்துடன் சேர்த்தே வழங்குவார்கள். ஏனெனில், இலாபம் என்பது அடிப்படையான ஒன்றிலிருந்து பிரிந்த ஒன்றாகும். எனவே, பிரிந்த (இலாபம்) அடிப்படையான (பொருட்களையே) பின்தொடர்கிறன.
4. பூமியிலிருந்து வெளிப்படும் புதையல்.
அதற்கான ஆதாரம்:
அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:- (( புதையலில் ஐந்தில் ஒரு பகுதியையே (ஸகாத்தாக) வழங்க வேண்டும். )) (புஹாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் இதனது ஸகாத்தை வருடம் பூர்த்தியானதன் பின்னரே வழங்க வேண்டுமென்று கூறவில்லை.
அத்துடன், இது பழத்திற்கு ஒப்பானதாகும். பழம் அறுவடை செய்யப்பட்டதும் ஸகாத் வழங்கப்படுகின்றன.
5. பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிமங்கள்.
இவைகள் ஏனையவைகளை விட பழத்திற்கு மிக ஒப்பானதாகும்.
தேனில் ஸகாத் கடமையாகும் என்ற கருத்தின் அடிப்படையில் அதிலும் இவ்வாறே ஸகாத் வழங்கப்பட வேண்டும்.
⛳ பார்க்க:-
“الشرح الممتع للشيخ ابن العثيمين” (2/458)
இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.
அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.
தமிழில்:-
அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: