இந்த பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்

நான் 31 வயதான ஒரு ஆசிரியை, 1996இல் இருந்து நான் ஆசிரியை பணியில் இருக்கிறேன், 1997இல் என்னுடன் பணியாற்றும் ஆசிரியர் என்னை பெண் கேட்டு வந்தார், நான் “எனது மூத்த சகோதரியின் திருமணம் முடியும் வரை காத்திருங்கள்: என்று கூறினேன்.

எனது சகோதரிக்கு 2000ஆம் ஆண்டு திருமணம் முடிந்த பின் அவர் எனது வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். எனது தாய் அவரை ஏற்ற போதும் எனது தந்தை மறுத்துவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், நான் முதுகலை பட்டம் பெறப்போவதும், பல்கலைக்கழகத்தில் எனக்கு வேலை கிடைக்கப்போகிறது என்பதும்.

இதற்குப் பின்னர், இதே காரணத்தைக் கூறி பல ஆண்களை என் தந்தை மறுத்துள்ளார், அதில் பொறியாளர்கள் கூட இருந்தனர். எனக்கு பல்கலைகழகத்தில் வேலை கிடைத்தால் இதை விட சிறந்த நபர்கள் வருவார்கள் என்று கருதினார்.

நான் பின்னர் பல்கலைக் கழகத்திலும் வேலைக்கு சேர்ந்தேன், பின்னரும் பெண் தேடிவந்த பல ஆண்களை என் தந்தை திருப்பி அனுப்பினார், அதில் ஒரு மருத்துவரும் இருந்தார், அவர் எனது சம்பளத்திற்கு ஆசைப் படுகிறார் என்று கூறினார். இதற்கிடையில் என்னை முதல் முதலாக பெண் கேட்டுவந்தவர், மீண்டும் என்னை பெண் கேட்டார், எனது தந்தை அவரை மறுத்தார், நான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாக இருக்கிறேன், அவர் பள்ளி ஆசிரியராக இருக்கிறார் என்று கூறி. நான் அவரை கணவராக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று எனது தந்தையிடம் கூறினேன்، நாங்கள் கல்வியில் சமமாக இருக்கிறோம், அவர் மார்கத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்தவராக இருக்கிறார், அதே போன்று அவர் செல்வத்திலும் குறைந்தவர் அல்ல.

2003இல் இருந்து 2006வரை என்னை யாரும் பெண் கேட்டு வரவில்லை, என்னை முதலாவதாக கேட்ட அந்த மனிதரை தவிர, அவர் என்னை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார், எனது தந்தை நான் ஒரு ஆசிரியரை திருமணம் செய்வதை விட திருமணம் செய்யாமல் இருப்பதே மேல் என்று கருதுகிறார்.

உனக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும் வரை திருமணம் தேவை இல்லை என்கிறார், அவரின் பார்வையில் நல்ல வாய்ப்பு என்பது குறிப்பிட்ட சில வேலையில் இருக்க வேண்டும், செல்வந்தராக இருக்க வேண்டும்.

வாழ்வில் எனது நோக்கம் எனது வேலையில் சிறக்க வேண்டும் என்பதல்ல, எனக்கு ஒரு குடும்பம் வேண்டும்.

எனது கேள்வி: நான் எனது வலியின் (பொறுப்பாளரரின்) அனுமதி இன்றி, நானே திருமணம் செய்து கொள்ளலாமா, அவர் எனக்கு குதியான வலி தானா, தயவுசெய்து தெளிவான விளக்கத்தைக் கூறுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும், நற்கூலியை வழங்கட்டும்

 

பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே.

பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி ஒரு பெண் வலி இல்லாமல் திருமணம் செய்வது ஆகுமானதும் அல்ல அவ்வாறு செய்யப்பட்ட திருமணம் செல்லவும் செல்லாது. நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “வலி இல்லாமல் திருமணம் இல்லை”, இந்த ஹதீஸை இமாம் அபூ தாவூத், இமாம் அத் திர்மிதீ, இமாம் இப்னு மாஜா ஆகியோர் அபூ மூஸா அல் அஷ்அரி رضي الله عنه அவர்களின் வழியாக அறிவிக்கின்றனர், இதை இமாம் அல் அல்பானி ஸஹீஹ் அத் திர்மிதீ எனும் நூலில் ஸஹீஹ் என்று கூறுகிறார்.

மேலும் நபி صلى الله عليه وسلم கூறினார்கள், “இரு நேர்மையான சாட்சிகள் இல்லாமல் திருமணம் இல்லை ” இதை இமாம் பைஹகீ இம்ரான் மற்றும் ஆயிஷா அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார், அல்பானி இதை ஸஹீஹ் அல் ஜாமிஃ எனும் நூலில் ஸஹீஹ் என்கிறார்.

மேலும் நபி صلى الله عليه وسلم  கூறினார்கள்: “தன்னுடைய வலியின் சம்மதம் இல்லாமல் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால், அவளின் திருமணம் செல்லாது,செல்லாது, செல்லாது. ஆனால் அவர் அவளுடன் இல்லறம் மேற்கொண்டிருந்தால், மஹ்ர் அவளுக்கே சொந்தம், ஏனென்றால் அவள் தன்னை அவருக்கு ஆகுமாக்கியதனால் . அவர்களுக்கு மத்தியில் சச்சரவு வந்தால், ஆட்சியாளர் தான் அவளின் வலி ” இதை இமாம் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ ஆகியோர் அறிவிக்கின்றனர். இமாம் அல்பானி ஸஹீஹ் அல் ஜாமி எனும் நூலில் இதை சரி காண்கிறார்.

ஒரு பெண்ணின் வலி: அவளது தந்தை, பின்னர் அவளது தந்தையின் தந்தை, அவரின் தந்தை, அது எத்தனை தலைமுறைகள் முன்பு இருந்தாலும் சரி. பின்னர் அவளின் மகன்கள், பின்னர் மகனின் மகன்கள், இவ்வரிசை எத்தனை தலைமுறைகள் சென்றாலும் சரி. பின்னர் அவளின் தாய் மற்றும் தந்தை இருவருக்கும் பிறந்த சகோதரர்கள், பின்னர் தனது தந்தைக்கும் வேறு தாய்க்கும் பிறந்த சகோதர்கள். பின்னர் அவளது சகோதரர்களின் பிள்ளைகள் எத்தனை தலைமுறையாக இருந்தாலும் சரி, பின்னர் அவளின் தந்தையின் சகோதரர்கள், பின்னர் அவர்களின் பிள்ளைகள் எத்தனை தலைமுறை சென்றாலும் சரி, பின்னர் அவளின் தந்தையின் சகோதரர்கள். பின்னர் முஸ்லீம் ஆட்சியாளர். (இமாம் இப்னு குதாமாவின் அல் முஃநீ எனும் நூல் )

 

ஆனால் ஒரு பெண்ணின் வலி அவளை பெண் கேட்டு வரும் தகுதியான ஒருவரை மறுத்துவிடுவார் என்றால், அவர் தனது பொறுப்பில் இருக்கும் ஒருவரின் திருமணத்தை தடுப்பதாக கருதப்படும், அவரின் பொறுப்பு உரிமை (விலாயத்) செல்லாததென கருதப்படும், அவரின் பொறுப்பு உரிமை அவளின் தந்தை வலி உறவின் அடுத்த மனிதருக்கு மாற்றப்படும்.

இரண்டாவது: கணவரின் தகுதி என்பது மார்க்கத்தில் அவரது பற்றைத்தான் குறிக்கும், அரபுகளுக்கும் அரபு அல்லாதவர்களுக்கும், கருப்பருக்கும் வெள்ளையருக்கும், எந்த வேறுபாடும் இல்லை, இறை அச்சத்தினாலேயே தவிர,

சில அறிஞர்கள் வேறு நிபந்தனைகளை குறிப்பிட்டிருந்தாலும், அவர் ஒரு பள்ளி ஆசிரியர் நீங்கள் ஒரு பல்கலைக்கழக ஆசிரியை என்பதனால் அவர் உங்களுக்கு தகுதியானவர் அல்ல என்று பொருள் அல்ல. அவர் நல்லொழுக்கம், மார்க்கப்பற்று மற்றும் போதுமான அளவு பொருளாதாரம் கொண்டிருந்தால் அது போதுமானது.

மூன்றாவதாக: உங்களுக்கு எமது அறிவுரை, நீங்கள் உங்கள் தந்தைக்கு மீண்டும் அறிவுரை சொல்லுங்கள், இது விடயத்தில் உங்கள் தந்தை உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களில் யாருடைய அறிவுரையை கேட்பாரோ அவருடைய உதவியை தேடுங்கள். அவர் ஒத்துக் கொண்டால் , அதுவே உங்கள் விருப்பம். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், மேல் குறிப்பிடப்பட்ட வரிசையில் அடுத்த வலியிடம் உங்களது விடயத்தை எடுத்துச் செல்லுங்கள். அவரும் மறுத்தால், அல்லது இவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காழியிடம் (நீதிபதியிடம்) கொண்டு செல்லுங்கள். அவர் உங்களது திருமணத்தை நடத்தி வைக்கட்டும் .

நான்காவதாக: உங்கள் தந்தையாகிய இவரும் இவரைப் போன்ற சில வலிகளும் செய்யும் விடயம் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது, இவர்கள் தங்கள் பெண் மக்களை அதிக விலை கொடுப்பவர்களுக்கு, அல்லது செல்வத்தில் சிறந்தவருக்கு விற்கப்படும் வியாபாரப் பொருட்களாக ஆக்கி விடுகிறார்கள்.

அதைவிட ஆச்சரியமானதும் வித்யாசமானதும் என்னவென்றால் , இவர்கள் தங்கள் பெண் மக்களுக்கு திருமணம் தேவையில்லை என்று கூறுவது. இந்த மிஸ்கீனுக்கு தேவையை பற்றி என்ன தெரியும். இவருக்கு மக்கள் ஆதரவு, நேசம், கருணை ஆகியவற்றின் மீது தேவை உடையவர்களாக உள்ளார்கள் என்பது தெரியாதா? அதே போன்று மனிதர்களை இயற்கையான சில விடயங்கள் மீது தேவையுடைவர்களாக அல்லாஹ் தன்னுடைய உயர் ஞானத்தைக் கொண்டு படைத்துள்ளான் என்பது இவர்களுக்கு தெரியாதா?
பெண்களின் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும், தங்கள் பொறுப்பில் உள்ள பெண் பிள்ளைகள், சகோதரிகள் ஆகியோரை பெண் கேட்டு வரும் தகுதியான ஆண்களை திருமணம் செய்யவிடாமல் தடுப்பது பாவமாகவும், அநியாயமாகவும் கருதப்படும். அவர் பாவியாக (ஃபாஸிகாக ) கருதப்படுவார், அவர் அநியாயக் காரர்களில் ஒருவராக கருதப்படுவார், அவரின் சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஷேக் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

ஒரு பெண்ணின் வலி தன் பொறுப்பில் உள்ள பெண்ணை மார்க்கப் பேணுதலும் ஒழுக்கமும் உடைய ஒரு ஆணை திருமணம் செய்வதில் இருந்து தடுத்தால், அப்பெண்ணின் பொறுப்பு தந்தை வழியில் அடுத்த நெருங்கிய ஆண் உறவினரிடம் செல்கிறது, பின்னர் அடுத்த நெருங்கியவர், பின்னர் அவ்வாறு தொடரும். அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டால் – பொதுவாக அவ்வாறே நடக்கிறது – பின்னர் பொறுப்பு மார்க்க நீதிபதியிடம் செல்கிறது, அவர் அந்த பெண்ணிற்கு பொறுப்பேற்று நடத்த வேண்டும். விடையம் அவரிடம் வந்து அவருக்கு அப்பெண்ணின் பொறுப்பாளர்கள் அவளின் திருமணத்தை தடுத்தார்கள் என்று தெரிந்தால், அவர் திருமணம் செய்து வைக்க வேண்டும், ஏனென்றால் பொறுப்பாளர் இல்லாத பெண்ணுக்கு மார்க்க நீதிபதியே பொறுப்பாளர் (வலி) ஆவார்.

 

சட்ட அறிஞர்கள், ஒரு பெண்ணின் வலி பெண் கேட்டு வரும் தகுதியான ஆண்களை திரும்ப திரும்ப மறுத்தால், அவர் பெரும் பாவியாக (ஃபாசிக்) ஆகிவிடுகிறார், அவரின் பொறுப்புரிமை நீங்கிவிடுகிறது என்றும் கூறுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் ஹன்பலி மத்ஹபின் பிரபல்யமான கருத்தின் படி அவர் தொழ வைக்க தகுதி இழக்கிறார், அவரின் பின்னால் முஸ்லிம்கள் தொழுவது செல்லாது, இது மிகப்பெரிய விடையம்!!

நாம் முன்னர் கூறியது போல் சிலர் தன் பொறுப்பில் இருக்கும் பெண்களுக்கு தகுதியான ஆண்கள் பெண் கேட்டு வந்தும் திருமணம் செய்து வைப்பதில்லை, ஆனால் சில பெண்கள் நீதிபதியிடம் சென்று இவ்விடையம் குறித்து முறையிட தயங்கக் கூடும். அவள் தனக்கு எது நல்லது எது கேட்டது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். வாழ்வில் தனியாக இருந்து, பொறுப்புதாரர்  தன் விருப்பம் மனஇச்சையின் படி இவளின் வாழ்வை கட்டுப்படுத்தி அவளின் முதுமை அடைந்து பின் அவளுக்கு மாப்பிளை தேடுவார், இது மோசமானதா? அல்லது (இஸ்லாமிய)நீதிபதியிடம் சென்று தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்பது சிறந்ததா, மேலும் இரண்டாவது விடையம் ஷரியத் அவளுக்கு கொடுத்த உரிமை.

இரண்டாவது விடயமே சிறப்பானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை – அதாவது நீதிபதியிடம் சென்று திருமணம் செய்து வைக்குமாறு கேட்பதே சிறந்தது – ஏனென்றால் அது அவளின் உரிமை.

 மேலும் அவள் அவ்வாறு செய்வதன் மூலம் அவளைப்போல் உள்ள பிற பெண்களும் பயனடைவார்கள். அவள்  செய்ததை பார்த்து பிற பெண்களும் பின்பற்றுவார்கள். மேலும் அவள் அவ்வாறு செய்வது இது போன்று தங்கள் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அநியாயம் செய்யும் பொறுப்புதாரர்களுக்கு பாடமாக அமையும்.

அதாவது இவ்வாறு செய்வதில் மூன்று நன்மைகள் உள்ளது:

1. அப்பெண்ணுக்கு திருமணம் நடக்கும்.
2. பிற பெண்களுக்கு நன்மையாக அமையும், சில பெண்கள் யாரவது இது போன்று நமக்கு முன் உதாரணமாக செய்து காட்டுவார்களா என்று காத்துக் இருக்கின்றனர்
3. இது போன்று தன் பெண் பிள்ளைகளையும், தன் பொறுப்பில் உள்ள பெண்கள் விடயத்திலும் தான் தோன்றித்த தனமாக முடிவு எடுத்து அநியாயம் செய்யும் பொறுப்புதாரர்களுக்கு இது ஒரு தடையாக அமையும் .

நபி صلى الله عليه وسلم அவர்களின் கட்டளையை செயல்படுத்தவும் இது உதவும், அவர்கள் கூறினார்கள்:
“மார்கத்திலும் ஒழுக்கத்திலும் நீங்கள் திருப்தி அடையும் ஒருவர் உங்களிடம் வந்து பெண் கேட்டால், அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் உலகத்தில் குழப்பங்களும் பெரும் சீரழிவும் விளையும்.” (சில அறிஞர்கள் இந்த ஹதீஸை ஹஸன் தர ஹதீஸ் என்று கூறுகிறார்கள்)

பதாவா அல் இஸ்லாமியா 3/148

நன்மையும், வெற்றியும் எதில் உள்ளதோ அதை செய்ய உங்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ் உதவட்டும் என்று கேட்கிறோம்.

மூலம்: https://islamqa.info/ar/answers/95405/

தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply