ரமலானுக்கு தயராவதற்கான 10 குறிப்புகள்

 

நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்? இந்த புனித மாதத்தில் செய்யும் அமல்களிலேயே மிகச் சிறந்த அமல்கள் என்ன?

பதிலின் சுருக்கம்

ரமலானுக்காக தயராகவது

1) உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பது

2) துஆ(பிராத்தனை) செய்வது

3) புனித மாதம் வருவதால் சந்தோஷம் அடைவது

4) விடுபட்ட நிலுவையில் உள்ள கடமையான நோன்புகளை நோற்பது

5) மார்க்க அறிவை தேடுவது

6) வழிபாடுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய  பணிகளையு விரைந்து முடிப்பது.

7) குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து நோன்பு குறித்த சட்டங்களை கூறுவது.

8) சில புத்தகங்களை படிக்க முயற்சிப்பது

9) ஷஃபான் மாதத்தில் சில நோன்புகளை நோற்பது

10) குர்ஆனை ஓதுவது.

முதலில் கண்ணியம் வாய்ந்த சகோதரரே “ரமழான் மாதத்திற்கு” எப்படி தயாராவது என்று  சிறந்ததோர் கேள்வியை நீங்கள்  கேட்டுள்ளீர்கள்.ஆனால் பல மக்கள்  நோன்பின் உண்மை நிலையை தவறாக புரிந்து கொண்டு உண்பதிலும், பருகுவதிலும், சிறப்பு இனிப்பு வகைகளை செய்வதிலும், இரவில் வெகுநேரம் விழித்திருந்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செலவிடுகிறார்கள் – சில உணவுப் பொருட்களை வாங்க இயலாமல் போய்விடும் என்ற அச்சத்தில், அதை வாங்குவதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நேரங்களை பார்ப்பதிலும் செலவிடுகிறார்கள், நோன்பின் உண்மை இபாதத்தையும், தக்வாவையும் அதிலிருந்து எடுத்துவிட்டு, அதை கண்ணிற்கும் வயிறுகளுக்குமானதாக மாற்றிவிட்டார்கள்.

ஆனால் மற்றும் பலர் நோன்பின் முக்கியத்துவத்தை உணர்துள்ளனர், ஷாபான் மாதத்திலிருந்தே அதற்கான ஆயத்தம் செய்கிறார்கள், இன்னும் சிலர் அதற்கு முன்னரே செய்கிறார்கள். உங்களுக்கு ரமழானுக்கு ஆயத்தம் ஆக 10 குறிப்புகளை குறிப்பிடுகிறோம்:

1.உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பது:

இது எல்லா நேரங்களிலும் கடமையானதாகும். ஆனால் மகத்தான மற்றும் புனிதமான பரகத் நிறைந்த மாதம் நெருங்கி வருவதால், உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் மற்றும் உங்களுக்கும் பிற மக்களுக்கும் இடையே உள்ள பாவத்திலிருந்து பாவமன்னிப்பு பெறுவது முக்கியமானது. அப்போது தான் புனிதமான மாதம் தொடங்கும் போது, நீங்கள் தூய்மையான உள்ளத்துடன், மன அமைதியுடனும் நற்செயல்களில் ஈடுபட முடியும்

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

وَتُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

மேலும், முஃமின்களே! ( நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

(அல் நூர் : 24:31)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5235.

 

2) துஆ (பிரார்த்தனை):

சில ஸலஃப்கள்(முன்னோர்கள்) தாங்கள் ரமழான் மாதத்தை அடைய வேண்டும் என்று ஆறு மாதங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்,  பின்னர் ஐந்து மாதங்கள், (ரமழான் மாதத்தில்) அவர்கள் செய்த அமல்களை அல்லாஹ் ஏற்றுகொள்ள வேண்டும் என்று துஆ செய்வார்கள்

 

முஸ்லிம் தனது இறைவனிடம் ரமழான் மாதத்தை வலுவான இறையச்சத்துடன் , நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் அடைய வேண்டும் என்று கேட்க வேண்டும்,மேலும் அந்த மாதத்தில் அவனுக்கு கட்டுப்பட்டு அமல்கள் செய்வதற்கு அவன் உதவ வேண்டும் என்றும், மேலும் தனது நற்செயல்களை ஏற்றுக்கொள்ளும்படியும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும்.

 

3) புனித மாதம் வருவதால் சந்தோஷம் அடைவது:

 

ரமழானின் வருகையை அல்லாஹ் தனது முஸ்லிம் அடியாருக்கு வழங்கும் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும், ஏனென்றால் ரமலான் மாதத்தின் வருகை என்பது சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல் மூடப்படும் நல்ல சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். மேலும் இது குர்ஆனின் மாதமாகும், இந்த மாதத்தில் தான் முஸ்லிம்கள் பல போர்களில் வெற்றிகண்டுள்ளனர்.

 

قُلْ بِفَضْلِ ٱللَّهِ وَبِرَحْمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا۟ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.

10:58

 

4)விடுபட்ட கடமையான நோன்புகளை நோற்பது:

 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.

ஸஹீஹ் புகாரி : 1950.

ஷஅபானில் அதைச் செய்ய அவர்கள் குறிப்பாக இருந்ததில் இருந்து, அடுத்த ரமழான் தொடங்கும் வரை அவற்றைத் தாமதப்படுத்துவது அனுமதிக்கப்படாது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலனி (ரஹ்) கூறியுள்ளார்கள்.

ஃபதஹ் அல் பாரி-4/191

5) ரமழானின் சிறப்புகளை புரிந்துகொள்வதற்கும், நோன்பின் சட்டங்கள் அறிந்து செயல்படுத்துவதற்கும் மார்க்க அறிவை தேட வேண்டும்.

 

6) வழிபாடுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய  பணிகள் எதேனும் இருந்தால் அதை விரைந்து முடிப்பது

7) உங்களது குடும்ப உறுப்பினர்களான- மனைவி-குழந்தை ஆகியோர்களுடன் உட்கார்ந்து நோன்பின் சட்டங்களை எடுத்துரைப்பது. மேலும், குழந்தைகளை நோன்பு நோற்குமாறு ஊக்குவிப்பதும்

 

8)வீட்டிலேயே படிக்கக் சில எளிய புத்தகங்களைத் ஏற்பாடு செய்தல் அல்லது ரமலானின் போது மக்களுக்கு முன் படிப்பதற்காக பள்ளிவாசல் இமாமிடம் அவற்றை  கொடுப்பது.

 

9) ஷஃபான் மாதத்தில் சில நோன்புகளை நோற்று ரமலான் மாதத்திற்கு தயாராவது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’

ஸஹீஹ் புகாரி : 1969

 

யா ரஸூலுல்லாஹ், நீங்கள் ஷஅபானை விட வேறு மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்று நான் பார்த்ததில்லையே? என்று கேட்டேன். அதற்கு நபி ﷺ அவர்கள் இது ரஜப் மற்றும் ரமலானுக்கு இடைப்பட்ட இந்த மாதம், மக்கள் அதிகமாக கவனம் செலுத்தாத மாதமாகும்.இம்மாதம் அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்ற மாதம். நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்

அறிவிப்பவர்-உஸாமா பின் ஸைத்(ரலி)

சுனன் நஸாயி-2357

 

இமாம் நாசிருதீன் அல்பானி (ரஹ்) ஹஸன் தர செய்தி என்று தனது ஸஹீஹ் அல் நஸாயி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த ஹதீஸ் ஷஅபான் நோன்பின் சிறப்பை விளக்குகிறது, அதாவது இம்மாதத்தில் செய்யபடுகின்ற நற்செயல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படுகின்றன என்பது. சில அறிஞர்கள் வேறு சில காரணங்களும் கூறுகிறார்கள். இந்த நோன்புகள் கடமையான தொழுகைக்கு முன்பு நிறைவேற்றப்படும் சுன்னத்தான தொழுகை போன்றது. சுன்னத்தான அமல்கள் அவர்கள் உள்ளத்தை கடமையான அமல்களை செய்ய தயார்படுத்துகிறார்கள். ரமழானுக்கு முன்பு நிறைவேற்றப்படும் ஷஅபான் நோன்பிற்கும் அது பொருந்தும்.

 

10) குர்ஆன் ஓதுதல்:

ஷஅபான் மாதம் குர்ஆன் ஓதுபவர்களின் மாதமாகும் என்று ஸலாமா இப்னு குஹைல் (ரஹ்) கூறுகிறார்கள்.

 

ஷஅபான் மாதம் தொடங்கி விட்டால், அம்ர் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் கடையை அடைத்துவிட்டு குர்ஆன் ஓதுவதற்கு நேரத்தை ஒதுக்குவார்கள்

 

ரஜப் மாதம் பயிர்கள் நடுவதற்கான மாதமாகும், ஷஃபான் மாதம் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் மாதமாகும், ரமழான் மாதம் பயிர்களை அறுவடை செய்யும் மாதமாகும் என்று அபுபக்கர் அல் பல்கீ(ரஹ்) கூறியுள்ளார்கள்

 

மேலும் அவர்கள் கூறினார்கள், ரஜப் மாதத்திற்கு ஒப்பாக காற்றும், ஷஅபான் மாதத்திற்கு ஒப்பாக மேகமும், ரமலான் மாதத்திற்கு ஒப்பாக மழையுமாகும்.

 

ரஜபில் நடவு செய்யாமல், விதைக்காமல், ஷஅபானில் நீர் பாய்ச்சாமல் இருப்பவர் ரமலானில் எப்படி அறுவடை செய்வார்? இப்போது ரஜப் நம்மை விட்டு கடந்துவிட்டது. நீங்கள் ரமலானை தேடினால் ஷஅபானில் என்ன செய்வீர்கள்? இந்த அருள்மிகு மாதத்தில் உங்கள் நபியும், உம்மத்தின் ஆரம்ப தலைமுறைகளும் இப்படித்தான் இருந்தார்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்?”

அல்லாஹ்வே நன்றாக அறிந்தவன்

Source:islamqa

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d