ரஜப் மாதமும் , இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழிமுறைகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~
-உஸ்தாத் SM இஸ்மாயில் நத்வி
ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பான பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் என்ற ஒன்று குறிப்பிடப்பட்டதாக வரவில்லை. அதிலே சில ஸலவாத்துக்கள் என்றும் பிரார்த்தனைகள் என்றும் வரக்கூடிய அறிவிப்புக்கள் அனைத்துமே ஆதாரபூர்வமற்றது. அவைகளைப் பற்றி கீழே விளக்கமாகப் பார்ப்போம்.
அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது அவைகளில் குறிப்பிட்ட சில நோன்புகள் நோற்பது பற்றியோ அல்லது அதிலே குறிப்பிட்ட இரவில் நின்று வணங்குவது சம்பந்தமாகவோ எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களோ வரவில்லை. மேலும் “அல்ஹாபில் அபூ இஸ்மாஈல் அல்ஹரவி” அவர்களும் எனக்கு முன்னர் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.” (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
இன்னும் கூறினார்கள்: ரஜப் மாத சிறப்பைப் பற்றியோ அல்லது அதில் நோன்பு நோற்பது பற்றியோ அல்லது அதில் சில நாட்கள் தெளிவாக நோன்பு நோற்பது பற்றி வரக்கூடிய ஹதீஸ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று பலவீனமானது மற்றையது இட்டுக்கட்டப்பட்டது. (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
ரஜப் மாத துஆவும் அது பற்றிய தெளிவும்:
ரஜப் மாதம் வந்து விட்டால்
‘அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப வஷஃபான வபல்லிக்னா ரமழான’
யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் றமழான் மாதத்தை அடைந்துகொள்ளும் பாக்கியத்தை தந்தருள்வாயாக!
என்று துஆ செய்யம் பழக்கம் அதிகமானவர்களிடம் இருக்கிறது.
இந்த துஆவை நபி (ஸல்) கற்றுத்தந்ததாகவே பலரும் சொல்லவும் செய்கின்றனர்.
அப்படி ஒரு ஹதீஸ் இருப்பது உண்மையே. ஆனால் அந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் இருவர் ஹதீஸ் துறை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதால் அந்த ஹதீஸ் மிகவும் பலகீனமானது என்பதே ஹதீஸ் துறை அறிஞர்களின் முடிவு.
எனவே இந்த துஆவை நபி கற்றுத் தந்த துஆ என்று கூறுவதும் அவ்வாறு நம்பி ஓதிவருவதும் தவறாகும்.
ஆனால் நமது சான்றோர்கள் ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே ரமளானை வரவேற்க ஆரம்பிப்பார்கள் ரமலானில் நல் அமல்கள் புரிய இறைவனிடத்திலே பிரார்த்தித்துக் கொள்வார்கள் என்று இமாம் இப்னு ரஜப் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் தனது புத்தகமாகிய “லதாயிபிஃல் மஆரிபிஃல்” குறிப்பிடுகிறார்கள்
நபி கற்றுத்தந்த துஆ என்று இல்லாமல் நாம் அல்லாஹ்விடம் இந்த வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்திக்கிறோம் என்று யாராவது கூறினால் அப்படி துஆ கேட்பதில் தவறு ஏதும் இருப்பதாக கூறவோ அதனைத் தடுக்கவோ முடியாது.
சங்கையான இமாம்களின் கூற்றுக்கள்
ரஜப் மாத பிஃத்அத் (அனாச்சாரங்கள்) பற்றி :
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்வது குற்றம். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
– இமாம் ஷாபி(ரஹ்) | இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கம்.
“மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.
– இமாம் ஷாஃபி(ரஹ்) | பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கம்.
“பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும்.
-ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கம்.
அல்ஹாபிள் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
ரஜப் மாதத்தின் சிறப்பு, அதில் நோன்பு நோற்றல், அதில் சில நாட்கள் குறிப்பாக நோன்பு நோற்றல், மேலும், அதில் மாத்திரம் குறிப்பாக்கப்பட்ட இரவுத்தொழுகை ஆகிய விடயங்களில் ஆதாரம் பிடிப்பதற்குத் தகுதியான எந்த ஸஹீஹான ஹதீஸும் இடம்பெறவில்லை.
மேலும், அவர் ரஜப் மாதம் குறித்து வரக்கூடிய ஹதீஸ்களை பலவீனமானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை என்று இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளார். அதனடிப்படையில் அவர் ரஜப் மாதம் குறித்து வரக்கூடிய பதினொரு பலவீனமான ஹதீஸ்களையும் இட்டுக்கட்டப்பட்ட இருபத்தி ஒரு ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்திருக்கின்றார்.
ரஜப் மாதம் குறித்து வரக்கூடிய சில பொய்யான மற்றும் பலவீனமான ஹதீஸ்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.
1. சுவர்க்கத்தில் ஓர் ஆறு உண்டு, அதன் பெயர் ரஜபாகும். இது பலவீனமான ஹதீஸாகும்.
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாதம் வந்தால், எனது இறைவனே எங்களுக்கு ரஜப் மற்றும் ஷஃபான் மாதத்தில் அபிவிருத்தி செய்வாயாக. இன்னும், எங்களுக்கு ரமழான் மாதத்தை அடையச்செய்வாயாக என்று கூறுவதாக இடம் பெற்ற ஹதீஸும் பலவீனமானதாகும்.
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பின்பு ரஜப் மற்றும் ஷஃபானைத்தவிர வேறு தினங்களில் நோன்பு நோற்கவில்லை. இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
4. ரஜப் அல்லாஹ்வுடைய மாதமாகும். இந்த ஹதீஸ் பொய்யானதாகும்.
5. ஏனைய மாதங்களைவிட ரஜப் மாதத்திற்கு சிறப்பு உள்ளதாக வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
6. ரஜப் மாதத்தின் நாட்கள் ஆறாவது வானத்தின் வாசல்களில் எழுதப்பட்டுள்ளன. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒரு பொய்யன் இருக்கின்றான்.
7. ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் தொழுவதின் சிறப்பு குறித்து வரக்கூடிய ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
8. ரஜப் மாதம் இருபத்தி ஏழாம் தினத்தில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். இதன் அறிவிப்பாளர் வரிசை மறுக்கப்பட்டதாகும்.
இன்னும், பல செய்திகள் இது குறித்து இடம்பெற்றுள்ளன. அவைகளில் ஒன்று கூட சரியான ஹதீஸாக இடம்பெறவில்லை.
அல்இஸ்ராஃ, அல்மிஃராஜ் – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இராப்பயணம் மற்றும் விண்ணுலகப் பயணம் – இடம்பெற்றது ரஜப் மாதத்திலா?
அபூஷாமா என்ற அறிஞர் அல்பாஇஸ் அலா இன்காரில் பிதஇ வல்ஹவாதிஸ் என்ற தன்னுடைய நூலில் இஸ்ரா ரஜப் மாதத்தில் நடைபெறவில்லை என்று குறிப்பிடுகின்றார்.
சில கதை கூறும் வழக்கமுடையவர்கள் இஸ்ரா ரஜப் மாதத்தில் நடைபெற்றது என்று கூறியிருக்கின்றார்கள். இது ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் பொய்யான ஒரு தகவலாகும்.
அபூ இஸ்ஹாக் அல்ஹர்பீ என்ற அறிஞர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணத்தை ரபீஉல் அவ்வல் இருபத்தி ஏழாம் தினத்தில் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்ரா மிஃராஜுடைய இரவு குறித்து அது எம்மாத்தில் இடம்பெற்றது என்பதில் அறியப்பட்ட ஆதாரங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة
‘நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்’
இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பவர்- ஆயிஷா (ரலி) .நூல் ஸஹீஹுல் புகாரி-2697, முஸ்லிம்-3242
اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;
(அல்குர்ஆன் : 5:3)
எனவே இஸ்லாம் காட்டித்தந்த வழியில் நமது வாழ்க்கையை அமைத்து கொள்வோம். பித்அத்களை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாத்து நேர்வழியில் செலுத்துவதாக.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: