பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி:
சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?

பதில்:
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான நபர்களால் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன.

வார்த்தைகள் உண்மைதான் ஆனால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் அப்படிச் சொல்பவர் தான் செய்யும் பாவத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.அவர் உள்ளத்தில் நம்பிக்கை போதுமானது என்றும், நற்செயல்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும்,ஹராமான செயல்களைக் கைவிடத் தேவையில்லை என்றும் கூறுகிறார்.இது ஒரு வெளிப்படையான தவறு, ஏனென்றால் ஈமான் என்பது வெறுமனே உள்ளத்தில் மட்டும் உள்ள ஒன்றல்ல;மாறாக ஈமான் (இறைநம்பிக்கை) என்பது அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஆவால் வரையறுக்கப்பட்டபடி,

உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு,உதடுகளால் மொழிந்து மற்றும் உடல் உறுப்புகள் மூலமாக செயல்(உண்மை)படுத்துவது ஆகும்.

இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுவதாவது :

“ஈமான் என்பது வெளியார்ந்த காட்சிப்படுத்தலோ அல்லது உள்ளார்ந்த நம்பிக்கை (மாத்திரமோ) அல்ல!. மாறாக உள்ளத்தில் உறுதிகொள்ளுதலும், அதனை உடலுறுப்புகளால் செயல்படுத்தலும் ஆகும்”.

பாவங்களை செய்வதும், நற்செயல்கள் செய்வதை விட்டும் தன்னை விலக்கிக்கொள்வதானது உள்ளத்தினுள் ஈமான் இல்லை என்பதற்கான அடையாளமாகும். அல்லது ஈமானிய குறைபாட்டின் அடையாளமாகும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டியாகவும் இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.
(அல்குர்ஆன் : 3:130)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், மேலும் அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வணக்க வழிபாடுகளின் மூலம்) தேடிக்கொள்ளுங்கள், மேலும், அவனுடைய பாதையில் யுத்தம் செய்யுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடையலாம்.
(அல்குர்ஆன் : 5:35)

எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து நற்கருமத்தையும் செய்தாரோ-அவர்களுக்கு (மறுமையைப்பற்றி) எவ்வித பயமுமில்லை,
(அல்குர்ஆன் : 5:69)

ஈமானு கொண்டு நற்கருமங்களையும் செய்து தொழுகையையும் நிறைவேற்றி, ஜகாத்தையும் கொடுத்தார்களே நிச்சயமாக அத்தகையோர் – அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களின் இரட்சகனிடத்தில் உண்டு.
(அல்குர்ஆன் : 2:277)

எனவே நற்செயல்கள் செய்து மற்றும் பாவத்தை விட்டுவிடாத வரை ஈமானை முழுமையான ஈமான் என்று கூற முடியாது.

உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான்:

காலத்தின் மீது சத்தியமாக!

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

ஈமான் கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர,
(அல்குர்ஆன் : 103:01-03)

{ஈமான் கொண்டவர்களே, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்,(அவனது) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்}
(அல் குர்ஆன்: 4:59)

ஈமான் கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் – உங்களை வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள்.
(அல்குர்ஆன் : 8:24)

எனவே உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வெறுமனே உடல் உறுப்புகள் மூலமாக செய்யப்படும் செயல்பாடுகள் போதுமானதாக இருக்காது, ஏனென்றால் அது நரகத்தின் கீழ் மட்டத்தில் இருக்கும் நயவஞ்சகர்களின் பண்பு.

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்(ஹபிதஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

ஈமான் என்பது உள்ளத்தில் உள்ள நம்பிக்கையை மட்டும் குறிக்கும், மாறாக உதடுகளில் வார்த்தைகள் (மூலமாக மொழியவோ) மற்றும் உடல் உறுப்புகள் மூலமாக (வணக்க வழிபாடுகள்) செயல்படுத்த தேவை இல்லை என்பது ஜஹ்மியாக்கள் மற்றும் முர்ஜியாக்களின் வழிமுறை. அது ஒரு தவறான பாதை.

மாறாக ஈமான் என்பது, உள்ளத்தால் ஏற்று உதடுகளில் வார்த்தைகள் மூலமாக மொழிந்து மற்றும் உடல் உறுப்புகள் மூலம் வணக்க வழிபாடுகளை செய்வதே.

பாவம் செய்வது உள்ளத்தில் உள்ள ஈமானை பலவீனமாக்கும் மற்றும் குறைக்கும்.

வணக்க வழிபாடு மற்றும் இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் ஈமான் அதிகரிக்கிறது மற்றும் பாவம் செய்வதன் மூலம் குறைகிறது.”

(அல் முன்தஹா மின் ஃபத்வா அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் 1/19).

இந்த வாதத்தை முன்வைக்கும் நபர் குறிப்பிடும் ஹதீஸ் ஸஹிஹ் முஸ்லிமில் (5012) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“அல்லாஹ் உங்கள் செல்வத்தையோ (வெளிப்புற) தோற்றங்களையோ பார்ப்பதில்லை;மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் உங்கள் செயல்களையும் பார்க்கிறான்.

ஒருவருக்கு உள்ளத்தைச் சீர்படுத்துதல் மற்றும் செயல்களைச் சீர்படுத்துதல் இரண்டுமே தேவை என்பதையும், அவர் இரண்டையும் செய்யக் கடமைப்பட்டவர் என்பதையும் தெளிவாகக் குறிக்கும் உரை இது.

எனவே, ஒரு முஸ்லிம், நற்செயல்கள் செய்வதில் குறைபாடு உள்ளவனாகவும் மற்றும் ஹராமான செயல்களைச் செய்துவிட்டு பிறகு அல்லாஹ் மக்களின் உள்ளங்களை மட்டுமே பார்க்கிறான் என்று கூறுவது அனுமதிக்கப்படாது.

மாறாக, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களையும் அவர்களின் செயல்களையும் பார்க்கிறான், மேலும் அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அவர்கள் செய்யும் செயல்களுக்காகவும் (மறுமையில்) கணக்குக் காட்டுவான்.

மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்.

Source : IslamQ&A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply