சுவர்க்கத்தில் விமானங்களும் விமான நிலையங்களும் இருக்குமா?



கேள்வி :

எனது கேள்வி சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம், ஒருவன் இவ்வுலகில் எதையாவது மிகுந்த அன்புடன் நேசித்தால், அவன் அதை சுவர்க்கத்தில் பெறுவானா? உதாரணமாக, அவன் விமானங்களை விரும்பினால், அவற்றை சுவர்க்கத்தில் பெறுவானா ? விமான நிலையமும் அங்கு இருக்குமா ?

பதில் :
அல்ஹம்துலில்லாஹ்.


இந்தக் கேள்வி சிறுபிள்ளைத் தனமானதல்ல, மாறாக நல்லதைக் கேட்டுப் பலனடைவதற்கும் சுவர்க்கத்தின் மீதான ஆசையையும்,அதனை அடைவதற்கான நற்கருமங்களை அதிகப்படுத்துவதற்கும் காரணமாக அமையக்கூடிய மார்க்கம் சார்ந்த அறிவுபூர்வமான விடயமாகவே இது உள்ளது.

சில நபித்தோழர்கள் இது மாதிரியான கேள்விகளை கேட்டுள்ளனர்.

சுலைமான் பின் புறைதா (றழி) அவர்கள் தனது தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள் :

சுவர்க்கத்தில் குதிரை இருக்கிறதா? என்று நபியவர்களிடம் ஒருவர் கேட்டார்.

அதற்கு நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

அல்லாஹ் உங்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அதில் மாணிக்கத்தினாலான சிவப்பு நிற குதிரை மீது உங்களை அமரச்செய்து அது நீங்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் உங்களைச் சுமந்து பறக்க வேண்டுமென நீங்கள் விரும்பினாலும் அதுவும் நடக்கும்.

மேலும், சுவர்க்கத்தில் ஒட்டகம் இருக்கிறதா? என்று வேறொரு மனிதர் நபியவர்களிடம் கேட்ட போது, மேற்சொன்ன பதிலைக் கூறாமல் அவருக்கு பின்வருமாறு பதிலுரைத்தார்கள் :

நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்தால், அங்கு உங்களது உள்ளம் விரும்புகின்ற உங்களது கண்கள் இதமாக காண்கின்ற அனைத்தையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

திர்மிதி (2543) ஸஹீஹுத் தர்கீப் எனும் நூலில் ஷெய்க் அல்பானி (றஹ்) அவர்கள் இதனை “ஹஸன்” எனும் தரத்திலுள்ள ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

உங்களது கேள்வியில் குறிப்பிடப்பட்டதற்கேற்ப விமானங்களில் பறப்பது போன்ற இன்பகரமான விடயங்கள் சுவர்க்கத்தில் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தக்கூடிய பல்வேறு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

ஷுஹதாக்களின் ஆத்மாக்கள் சுவனப் பறவைகளின் வயிற்றுப் பகுதிகளில் பாதுகாக்கப்படுகின்றன. அங்கு, அவை விரும்பும் இடங்களுக்கெல்லாம் பறந்து கொண்டிருக்கின்றன என்பதை முஸ்லிமில் இடம்பெறும் செய்தி உறுதி செய்கின்றது (2410)

முஃதா போரின் போது துண்டிக்கப்பட்ட கைகளுக்குப் பதிலாக, ஜஃபர் பின் அபீ தாலிப் (றழி) அவர்கள் இரண்டு இறக்கைகளுடன் சுவர்க்கத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது அல்லாஹ் அவருக்கு வழங்கிய கௌரவமாகும்.

“ஜஃபர் மலக்குகளுடன் சுவர்க்கத்தில் பறப்பதை நான் கண்டேன்.” என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைறா ( றழி) அறிவிக்கிறார்கள்.

திர்மிதி (3763) ” ஸஹீஹுல் ஜாமிஃ ” எனும் நூலில் ஷெய்க் அல்பானி ( றஹ்) அவர்கள் இதனை “ஸஹீஹ் ” என்று குறிப்பிடுகின்றார் (3465)

இப்னு உமர்( றழி) அவர்கள் இப்னு ஜஃபர் (றழி) அவர்களுக்கு ஸலாம் கூறும் போது இரண்டு இறக்கைகள் உடையவரின் மகனே என்று தான் விளிப்பார்களாம். புகாரி ( 3506)

ஒருவர் விமானம் மூலம் பறப்பதைக் காட்டிலும், தானாகவே பறந்து செல்வது மிகப் பெரிய விடயமாக தெரிகிறது.

மேலும், கேள்வியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸில் உள்ளதைப் போல, குதிரைகள் மூலம் சுவர்க்கத்தில் பறப்பது விமானங்களில் பறப்பதை விடவும் மிகவும் மேலானதாகும்.

உள்ளம் விரும்புகின்ற அனைத்து விதமான இன்ப சுகங்களும் சுவர்க்கத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்குமென்பதை உறுதிப்படுத்துகின்ற குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன.

இது குறித்து அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :


يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ‌ وَفِيْهَا مَا تَشْتَهِيْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْيُنُ‌ وَاَنْتُمْ فِيْهَا خٰلِدُوْنَ‌‏


பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!”
(என அவர்களிடம் சொல்லப்படும்.)

(அஸ் ஸுஹ்ருப் :71)

அனைத்து விதமான முழு இன்ப சுகங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் யாவற்றையும் குறிப்பதாகவே “ما تشتهيه الأنفس” என்ற சொற்பிரயோகங்கள் காணப்படுகின்றன என்று ஸஃதி (றஹ்) அவர்கள் இந்த குர்ஆன் வசனத்திற்கு விளக்கமளிக்கிறார்கள்.

அல்லாஹ் மேலும் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ لَهُمْ فِيْهَا مَا يَشَآءُوْنَ‌ كَذٰلِكَ يَجْزِى اللّٰهُ الْمُتَّقِيْنَۙ‏

என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.

(அந் நஹ்ல் :31)

எந்தக் கண்ணும் காணாத, எந்தக் காதும் கேட்காத, எந்த மனித இதயமும் சிந்தனை செய்து கூட பார்க்க முடியாத இன்ப சுகங்களை , எனது நல்லடியார்களுக்காக நான் தயார் செய்து வைத்துள்ளேன், நீங்கள் விரும்பினால்

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ جَزَآءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

“அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது” என்ற இந்த வசனத்தை படித்து பாருங்கள்
என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

புகாரி (3072)
முஸ்லிம் (2824)

எனவே, சுவர்க்கம் மற்றும் சுவனவாதிகள் அடையும் இன்ப சுகங்களின் பரிபூரண நிலைகளை மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சுவர்க்கத்தில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளன என்பன போன்ற கண்ணுக்கு தெரியாத குர்ஆன், ஹதீஸ்கள் மூலம் நிரூபிக்கப்படாத விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு ஆதாரங்கள் அவசியமாகும்.


“அல்லாஹ் உங்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்தால், அங்கு உங்களது உள்ளம் விரும்புகின்ற உங்களது கண்கள் இதமாக காண்கின்ற அனைத்தையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் ” என்று நபியவர்கள் குறிப்பிட்டது போல நாமும் கூறுவோம்.

சுவர்க்கத்தின் நிலையான இன்பங்களை அடைந்து கொள்ள துனைநிற்கும் அனைத்துவித நற்கருமங்களையும் செய்ய நம்மனைவருக்கும் அல்லாஹ் உதவி செய்ய வேண்டுமென அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply