அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |  

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |

 

  • குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்:

 

பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.

 

ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் குர்ஆன் ஓதுவதை விட தஸ்பீஹ் எனும் திக்ரைச் செய்வதே சிறந்ததாகும். அங்கு குர்ஆன் ஓதுவதற்குத் தடை கூட வந்துள்ளது. அதேபோன்றுதான் தொழுது ஸலாம் கொடுத்ததற்குப் பிறகு திக்ருகளை ஓதுவது, அதானுக்குப் பதில் சொல்வது குர்ஆனை ஓதுவதில் ஈடுபடுவதை விடச் சிறந்தது. பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆன் ஓதுவது சிறந்ததாக இருந்தாலும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அச்சந்தர்ப்பங்களுக்குரிய திக்ர்களையும் துஆகளையும் ஓதுவது குர்ஆனை ஓதுவதை விடச் சிறந்ததாகும். அதேபோன்றுதான் ஒரு அடியானுக்கு சில நிலைகளில் குர்ஆனை ஓதுவதை விட திக்ர் செய்வது அல்லது துஆ கேட்பது அவனுக்கு அதிக பயனைத் தரக்கூடியதாக இருக்கும். உதாரணமாக ஒருவன் தனது பாவங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது, அவன் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, பாவமன்னிப்புத் தேடுவது குர்ஆன் ஓதுவதை விடச் சிறந்ததாகும். அதேபோன்று மோசமான மனிதர்களால் அல்லது ஜின்கள், சைதான்களால் தனக்கு ஆபத்து வரும் என்று அஞ்சுகின்ற சந்தர்ப்பங்களில் திக்ர்களையும் துஆகளையும் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது பயனுள்ளதாக அமையலாம். அதேபோன்று பொதுவாக குர்ஆன் திலாவதும் திக்ரும் துஆவை விடச் சிறப்பானதாகவும் நன்மை தரக்கூடியதாகவும்  இருந்தாலும், ஒருவருக்கு அவசியமான ஒரு தேவை ஏற்பட்டால் அவர் அதை அல்லாஹ்விடம் கேட்பதை விட்டுவிட்டு திக்ரிலும் திலாவதிலும் ஈடுபட்டால் சில நேரம் அவருடைய உள்ளம் முழுமையான ஈடுபாட்டோடு அந்த வணக்கங்களைச் செய்ய முடியாமல் போகலாம். இந்த நிலையில் அந்த வணக்கங்களில் ஈடுபடுவதை விட முழு ஈடுபாடு, பணிவு, பக்தி ஆகியவற்றுடன் துஆ கேட்பதே அதிக பயனுள்ளதாக இருக்கும்.

 

மேற்கூறப்பட்ட குர்ஆன் திலாவத், திக்ர், துஆ ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகத் தொழுகை இருக்கின்றது. அத்தோடு உடல் உறுப்புக்கள் அடிபணிந்து வணக்கத்தில் ஈடுபடும் பூரணமான ஒரு நிலையையும் அதில் காணமுடியும். இதனால் தொழுகையானது திலாவத், திக்ர், துஆ ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் செய்வதை விடச் சிறந்ததாகும்.

 

ஒவ்வொரு வணக்கத்திற்குமுரிய சிறப்பு என்ன? ஒவ்வொரு வணக்கமும் எந்த நேரத்தில் அதிக சிறப்பைப் பெறுகின்றது? போன்றவற்றை அறிவது மிகவும் பயனுள்ளதாகும். ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். கண்ணுக்கு ஒரு இடம் இருக்கிறது, காலுக்கு ஒரு இடம் இருக்கிறது, தண்ணீருக்கு ஒரு இடம் இருக்கிறது.. ஒரு ஆடையை ஒரு நேரத்தில் சவர்க்காரத்தி(soap)னால் கழுவுவது அதற்குப் பயனுள்ளதாக இருக்கும்; அதே ஆடைக்கு இன்னொரு நேரத்திலே வாசனைத் திரவியங்களைப் பூசுவது அயன்பண்ணுவது பயனுள்ளதாக இருக்கும்.

 

ஓர் அறிஞரிடத்தில், தஸ்பீஹ் செய்வதா அல்லது இஸ்திக்ஃபார் செய்வதா ஒரு அடியானுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்? என்று கேட்டதற்கு, ஆடை சுத்தமாக இருந்தால் வாசனைத் திரவியமும் பன்னீரும் அதற்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்; அது அழுக்கடைந்திருந்தால் சவர்க்காரமும் சுடுநீரும் அதற்கு மிகப் பயன் தரும் என்று பதிலளித்தார்கள்.

 

இது போன்று தான் ஸூறதுல் இக்லாஸ் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஈடாகக் கூடியதாக இருந்தாலும், வாரிசுரிமை, தலாக், குல்ஃ, இத்தஹ் போன்று சட்டங்களைப் பற்றிப் பேசுகின்ற ஆயத்கள் அவற்றுக்குத் தேவை ஏற்படுகின்ற பொழுது ஸூறதுல் இக்லாஸை ஓதுவதை விடப் பயனுள்ளதாக இருக்கும்.

 

இதுபோன்ற விடயங்களை அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும். இதற்கு மார்க்க அறிவு அவசியமாகும். அமல்களின் தரங்களைப் பற்றியும் அவற்றின் நோக்கங்களைப் பற்றியும், எந்த நேரத்தில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஷைதான் எம்மை ஏமாற்றி விடுவான். அவனுக்கு எங்களை வழி கெடுக்க முடியாமல் போனால் சிலவேளை சிறப்பான ஒரு அமலை விட்டுவிட்டு சிறப்புக் குறைந்த ஒரு அமலில் ஈடுபடுத்த முயற்சிப்பான். அதேபோன்று அடிப்படையில் சிறப்புக் குறைந்த ஒரு அமல் அதற்குரிய நேரத்தில் சிறப்புப் பெறுகின்ற போது அதனை விட்டுவிட்டு அடிப்படையில் சிறப்பான ஒரு அமலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அதில் அதிக நன்மை இருக்கிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்து அந்த நேரத்திற்குரிய அமலை செய்ய விடாமல் அந்த நேரத்தை கடந்து செல்ல வைப்பான்.

குர்ஆன் ஓதுவது மிகச் சிறப்பானதாக இருந்தாலும் ஸலாம் கூறியவருக்குப் பதில் அளிப்பதற்காக அல்லது தும்மியவருக்குப் பதிலளிப்பதற்காக அதனை நிறுத்துவது ஏற்றமானது; ஏனெனில் அந்த சந்தர்ப்பம் தவறிவிட்டால் அதே அமலைச் செய்வதற்கு மீண்டுவர முடியாது. ஆனால் அவரால் அந்த அமலை முடித்துவிட்டு  மீண்டும் குர்ஆனை ஓத முடியும்.

பெரும்பாலானவை இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆய்விலிருந்து சுருக்கி எடுக்கப்பட்டுள்ளன.

 

முக்கிய உசாத்துணை:

الوابل الصيب للإمام ابن القيم

 

தொடரும்..

– ஹுஸைன் இப்னு றபீக் மதனி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply