அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 |

 

தயம்மும் செய்யும் முறை:

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் மிக எளிமையான தயம்மும் செய்யும் முறையை கற்றுத் தருகின்றன :

 

  • 1)நிய்யத் வைத்தல்:

வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் அவசியம் என்பதனால் தயம்முமின் போது நிய்யத் வைப்பதும் அவசியமாகும். நிய்யத் என்பது உள்ளம் சார்ந்த ஒரு வணக்கமாகும். எனவே தயம்மும் செய்வதாக மனதில் நினைத்தால் அதுவே நிய்யத் ஆகும். வாயினால் மொழிகின்ற எந்த வாசகங்களையும் அல்லாஹ்வோ, நபியவர்களோ நமக்குக் கற்றுத் தரவில்லை.

 

  • 2)இரு உள்ளங்கைகளையும் சுத்தமான மண் அல்லது கல் அல்லது பாறை போன்றவற்றில் ஒரு தடவை அடித்தல்:

 

நபியவர்கள் அம்மார் (றழி) அவர்களுக்கு தயம்மும் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த போது ‘உமது கையை பூமியில் அடிப்பது உமக்கு போதுமாகும்’ என்று கூறினார்கள் (புஹாரி).

 

  • 3)இரு கைகளிலும் மண் ஒட்டியிருந்தால் அதை ஊதி விடுதல் அல்லது இரு கைகளையும் தட்டிவிடுதல்:

 

கைகளில் ஊதி விடுதல் அல்லது இரு கைகளையும் தட்டிவிடுதல் ஆகிய இரு முறைகளும் ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெறும் அம்மார் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றன.

 

  • 4)இரு கைகளாலும் முகத்தில் தடவுதல்:

 

இது பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘உங்கள் முகங்களில் தடவுங்கள்’ (5:6, 4:43 ) .

 

  • 5)இரு கைகளின் மேற்புறங்களிலும் மணிக்கட்டு வரை தடவுதல்.

 

அல்குர்ஆன் கூறுகிறது : ‘…உங்கள் கைகளிலும் (தடவுங்கள்)’ (5:6, 4:43).

 

இதுவே இஸ்லாம் சொல்லித் தரும் தயம்மும் செய்யும் முறையாகும்.

 

சிலர் தயம்முமை பிழையாக புரிந்து வைத்திருக்கிறார்கள். வுழூவினுடைய எந்த உறுப்பிலாவது காயம் இருந்தால் அந்த உறுப்பில் மண்ணால் தடவ வேண்டும் என்பதாக சிலர் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

 

அதாவது உதாரணமாக கரண்டைக் காலில் காயம் இருந்தால் அந்த இடத்தில் மண்ணால் தடவ வேண்டும் என்பதாக என்பதாகவும் தலையில் காயம் இருந்தால் தலையில் மண்ணால் தடவ வேண்டுமெனவும் சிலர் நினைத்திருக்கிறார்கள். இது மிகத் தவறாகும்.

 

தயம்முமின் உறுப்புகள் இரண்டுதான் :

 

1. முகம்

2. மணிக்கட்டு வரையான இரு கைகள்

 

வுழூவினுடைய எந்த உறுப்பில் காயங்கள் இருந்தாலும் இவ்விரண்டு உறுப்புகளிலும் தான் தயம்மும் செய்ய வேண்டும்.

 

கடமையான குளிப்புக்கு பதிலாக தயம்மும் செய்வதாயினும் இவ்விரண்டு உறுப்புகளில் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும்.

 

முக்கிய குறிப்புகள்:

தயம்முமுடன் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

 

குறிப்பு 01 :

 

தயம்மும் செய்யும் போது இரு தடவைகள் கைகளை பூமியில் அடிப்பதா? அல்லது ஒரு தடவை மாத்திரம் அடிப்பதா?

 

– தயம்மும் செய்யும் போது முகத்தில் தடவுவதற்காக ஒரு தடவையும் கைகளில் தடவுவதற்காக ஒரு தடவையும் என இரு தடவைகள் கைகளை மண்ணில் அடிக்கவேண்டுமென இமாம் ஷாபிஈ (றஹ்) போன்ற சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

அதே வேளை, முகத்துக்கும் கைகளுக்குமாக ஒரு தடவை மாத்திரமே கைகளை மண்ணில் அல்லது பூமியின் மேற்பரப்பில் அடிக்க வேண்டுமென இமாம் அஹ்மத், இமாம் அவ்ஸாஈ, இமாம் இஸ்ஹாக் இப்னு றாஹவைஹி (றஹிமஹுமுல்லாஹ்) முதலான பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். (பார்க்க : ‘தைஸீருல் அல்லாம்’, 1/85).

 

இவ்விரு கருத்துகளுள் ஒரு தடவை மட்டும் கைகளை மண்ணில் அடிக்க வேண்டும் என்ற கருத்தே ஆதாரபூர்வமானதாகும். இதற்கான ஆதாரங்களாவன :

 

1. ஸஹீஹுல் புஹாரியில் பதிவாகியுள்ள ஆதாரபூர்வமான ஹதீஸில் அம்மார் (றழி) அவர்களுக்கு தயம்மும் செய்யும் முறை பற்றி கற்றுக்கொடுத்த போது ‘நபியவர்கள் ஒரு தடவை கைகளை மண்ணில் அடித்தார்கள்’ என்று தெளிவாகவே குறிப்பிடப்படுகிறது.

 

2. இரு தடவைகள் கைகளை அடிக்க வேண்டும் எனக் கூறும் அறிஞர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள் :

 

‘தயம்மும் என்பது முகத்துக்கு ஒரு தடவையும் முழங்கை வரை கைகளுக்கு ஒரு தடவையும் என இரு தடவைகள் (கைகளை மண்ணில்) அடிப்பதாகும்’ (தாரகுத்னீ).

 

ஆனாலும் இந்த ஹதீஸ் மிக பலவீனமானதாகும். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலி இப்னு ழப்யான் என்பவர் ஹதீஸ் அறிவிப்பில் நிராகரிக்கப்பட வேண்டிய மிக பலவீனமான அறிவிப்பாளர் என ஹதீஸ்துறை மேதைகளான இமாம் இப்னு மஈன், இமாம் புஹாரி, இமாம் நஸாஈ, இமாம் அபூஸுர்ஆ (றஹிமஹுமுல்லாஹ்) உட்பட பலர் குறிப்பிடுகிறார்கள்.

 

வேறு ஒரு வழியாக அறிவிக்கப்படும் இதே கருத்தை தரும் ஹதீஸிலும் ஸுலைமான் இப்னு அர்கம், ஸுலைமான் இப்னு அபீதாவூத் ஆகிய ஆதாரமாக கொள்ள முடியாத இரு அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் அதுவும் பலவீனமான ஹதீஸ் என இமாம் பைஹகீ (றஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : ‘மின்ஹதுல் அல்லாம்’ , 2/85).

 

இது தொடர்பில் பிரபல ஹதீஸ்துறை அறிஞரான இமாம் இப்னு அப்தில் பர் (றஹ்) அவர்கள் பின்வருமாறு முடிவுரை கூறுகிறார்கள் :

 

‘தயம்மும் தொடர்பாக வந்த மிக அதிகமான ஹதீஸ்கள் ஒரு தடவை மாத்திரம் கைகளை அடிப்பதையே குறிப்பிடுகின்றன. இரு தடவைகள் அடிக்க வேண்டுமென குறிப்பிடுகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்’ (பார்க்க : ‘நைலுல் அவ்தார்’, 1/328).

 

எனவே, முகத்தில் தடவுவதற்காக கைகளை ஒரு தடவை பூமியில் அடித்தால் இரு கைகளில் தடவுவதற்கும் அதுவே போதுமானது என்பது தெளிவாகிறது.

 

(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)

 

ஆக்கம்: ஏ.ஆர்.எம் ரிஸ்வான்(ஷர்கி) M.A.

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply