ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள்

ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள்

– அபூ ஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனி)

உண்மையான நஷ்டமென்பது அல்லாஹுத்தஆலா வஹி மூலம் எமக்கு இனங்காட்டிய நஷ்டமாகும். மனிதன் வியாபாரம், கற்றல், மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஏற்படக்கூடிய இழப்புக்களை நஷ்டமாகப் பார்க்கிறான். மாறாக, இவைகள் எதார்த்தமான நஷ்டமாகக் கருதப்படமாட்டாது.

மார்க்கம் இனங்காட்டிய நஷ்டங்கள் பல உள்ளன. அவற்றுள் ஸுபஹுத் தொழுகையை தவறவிடுவதும் ஒன்றாகும். அந்தவிதத்தில் ஸுபஹுத் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக் கூடிய நஷ்டங்களில் சிலவற்றை குறிப்பிடுகின்றேன்.

1. நயவஞ்சகத்தன்மையில் இருந்து ஈடேற்றம் பெறக்கூடிய உத்தரவாதத்தை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்:

“நயவஞ்சகக்காரர்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகள் இஷாத் தொழுகையும் பஜ்ர் தொழுகையுமாகும்.” (ஸஹீஹுல் ஜாமிஃ)

2. சுவனம் நுழைவதற்கு மகத்தான காரணமாகத் திகழக்கூடிய ஒன்றை நழுவவிட்டவர்களாக ஆகிவிடுவோம். நபியவர்கள் கூறினார்கள்:

“யார் இரண்டு குளிர்நேரத் தொழுகைகளைத் தொழுகிறாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார்.” (புகாரி, முஸ்லிம்) அவை பஜ்ர் தொழுகையும் அஸர் தொழுகையுமாகும்.

3. நரகத்தில் இருந்து விடுதலையைப் பெற்றுத்தரக்கூடிய பாக்கியத்தை இழந்தவராக ஆகிவிடுவார். நபியவர்கள் கூறினார்கள்:

“சூரியன் உதயமாவதற்கு முன்னுள்ள தொழுகையையும் சூரியன் மறைவதற்கு முன்னுள்ள தொழுகையையும் தொழக்கூடியவர் நரகம் நுழையமாட்டார். அதாவது, பஜ்ர் தொழுகையும் அஸர் தொழுகையுமாகும்.” (முஸ்லிம்)

4. அல்லாஹ்வுடைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்:

“யார் ஸுபஹுத் தொழுகையில் ஈடுபடுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருப்பார்.” (ஸஹீஹுல் ஜாமிஉ)

5. இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்:

“யார் இஷாத் தொழுகையில் ஜமாஅத்துடன் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரவின் அரைவாசிப் பகுதி நின்று வணங்கிய கூலி கிடைக்கும். மேலும், யார் இஷாத் தொழுகையையும் ஃபஜ்ர் தொழுகையையும் ஜமாஅத்தாகத் தொழுகின்றாரோ அவருக்கு இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியைப் போன்ற ஒன்று கிடைக்கும்.” (திர்மிதி)

6. மலக்குகளை சந்திக்கின்ற வாய்ப்பும் எமது பெயர் அவர்களுடைய பதிவேடுகளில் பதியப்படுகின்ற வாய்ப்பும் கைநழுவிப் போய்விடும். நபியவர்கள் கூறினார்கள்:

“இரவினுடைய மலக்குகளும் பகலினுடைய மலக்குகளும் தொடராக உங்களை கண்காணித்து வருகின்றார்கள். அவர்கள் ஸுபஹ் தொழுகையின் போதும் அஸர் தொழுகையின் போதும் ஒன்றிணைவார்கள். பின்னர் உங்களுடன் இரவுப் பொழுதைக் கழித்த மலக்குகள் மேல்நோக்கிச் செல்வார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா அவர்களை நோக்கி – அவன் அனைத்தையும் பற்றி மிக அறிந்தவனாக இருக்க – நீங்கள் என்னுடைய அடியார்களை எப்படியான நிலையில் அடைந்து கொண்டீர்கள்? எனக்கேட்பான். அதற்கு அவர்கள்: நாங்கள் அவர்களை தொழக்கூடிய நிலையில் விட்டுவிட்டு வந்தோம். மேலும், அவர்கள் தொழுக்கூடிய நிலையில் நாங்கள் அவர்களை அடைந்தோம் என்பார்கள்.” (புகாரி)

7. மறுமை நாளில் ஒளியை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்:

“இரவு நேரத்தில் பள்ளிவாசலை நோக்கி நடந்து வரக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் பூர்த்தி மிக்க ஒளியைக்கொண்டு நன்மாறாயம் கூறுவீராக!” (பத்ஹுல் பாரி)

8. உலகிக்கும் அதில் உள்ளவற்றிக்கும் நிகரான கூலியைப் பெற்றுத்தரக்கூடிய காரியத்தை தவறவிட்டவர்களாக ஆகிவிடுவோம். நபியவர்கள் கூறினார்கள்:

“ஃபஜ்ருடைய – சுன்னத்தான – இரு ரக்அத்துகள் உலகம் மற்றும் அதில் உள்ளவற்றை விடவும் மிகச் சிறந்ததாக இருக்கும்.” (முஸ்லிம்)

இது ஃபஜ்ருடைய சுன்னத்தான தொழுகைக்கு இருக்கின்ற கூலி! இக்கூலியே இவ்வளவு பெருமதி மிக்கதாக இருக்கும் போது ஃபஜ்ர் தொழுகைக்கு இருக்கின்ற கூலி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள்!

9. பல நலவுகள், அபிவிருத்திகள் மற்றும் நற்கூலிகள் போன்றன கைகூடாமல் போய்விடும். நபியவர்கள் கூறினார்கள்:

“மனிதர்கள் இஷா தொழுகையில் இருக்கின்ற நலவையும் ஃபஜ்ர் தொழுகையில் இருக்கின்ற நலவையும் அறிவார்களென்றால் அவற்றுக்கு துவண்டு துவண்டாவது போய் சேருவார்கள்.” (ஸஹீஹுல் ஜாமிஉ)

10. அன்றைய நாள் முழுவதும் சோம்பேறித்தனம் மிக்கதாகக் காணப்படும். நபியவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒருவர் தூங்கச் செல்கின்ற போது ஷைத்தான் அவரின் பிடறிப் புறத்தில் மூன்று முடிச்சுக்களை இடுவான். உனக்கு இன்னும் இரவு நீளமாக இருக்கிறது என்று கூறியவனாக அவற்றின் மீது அடித்துக் கொண்டிருப்பான். அப்போது அவர் தூக்கத்தைவிட்டு எழுந்து அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால் அவருடை ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பின்னர், அவன் வுழூச் செய்தால் அடுத்த முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு, அவர் தொழுகையில் ஈடுபட்டால் இறுதி முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அதன் காரணமாக அவர் உட்சாகமானவராகவும் நல்லுள்ளம் படைத்தவராகவும் காலைப் பொழுதை அடைவார். அவ்வாறல்லாமல் ஒருவர் (தாமதித்து) கண்விழித்தால் மேசமான உள்ளமுடையவராகக் காலைப் பொழுதை அடைவார்.” (புகாரி, முஸ்லிம்)

11. அபிவிருத்திற்குரிய சிறந்த நேரத்தை இழந்தவனாகக் கருதப்படுவான். ஏனெனில், காலைப் பொழுதானது அபிவிருத்திற்குரிய நேரமாகும்.

“அல்லாஹ்வே! என்னுடைய உம்மத்தினருக்கு காலைப்பொழுதில் அருள் செய்வாயாக!”

என்று நபியவர்கள் இந்த உம்மத்திற்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

அந்த அடிப்படையில், இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ஸுப்ஹ் நேரத்தில் தூங்குவது ரிஸ்கை தடை செய்துவிடும்! ஏனெனில், அந்நேரம் ரிஸ்க்கள் பகிர்ந்தளிக்கப்படும் நேரமாகும்.”

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தனது மகன் ஸுப்ஹுடைய வேளையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் தனது மகனை நோக்கி: “ரிஸ்க்கள் பகிர்ந்தளிக்கப்படும் நேரத்திலா நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்!? எழுந்து விடு!” என்று கூறினார்கள்.

12. ஷைத்தான் காதுகளில் சிறுநீர் கழிக்கின்ற சந்தர்ப்பம் உண்டாகும். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபியவர்களிடத்தில் காலைப் பொழுதை அடையும் வரை உறங்கிய நபர் குறித்து சொல்லப்பட்ட போது: அம்மனிதனானவன், இரு காதுகளிலும் ஷைத்தான் சிறுநீர் கழித்தவனாவான்” என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே, கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! நாம் சுட்டிக்காட்டிய நஷ்டங்கள் எம்மைச் சேராதிருக்க இனிவரக்கூடிய காலங்களில் ஃபஜ்ர் தொழுகையை கண்ணும் கருத்துமாக தொழுதிட முயற்சி செய்வோமாக!

والحمد لله رب العالمين

 

 

 

 

 

 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d