பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

ஒருவர் அஷ்ஷைக் அஹ்மத் அஸ்ஸய்யத் ஹஃபிழஹுல்லாஹு அவர்களிடம் ட்விட்டரில் : “காசா மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்த அல்லாஹ், எங்கே இருக்கிறான் ? ஒடுக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு அவன் பதிலளிப்பான் என்று எப்படி சொல்ல முடியும்? ” என்று கேள்வி கேட்டார்.

 

ஷேக் அவர்கள் ஒரு விரிவான மற்றும் திருப்திகரமான பதிலை அளித்தார்கள். அதை, உங்கள் நலனுக்காக, நான் இங்கே மேற்கோள் காட்டுகிறேன்:

 

இத்தகைய ஷைத்தானிய ஊசலாட்டங்களை தவிர்ப்பதற்காக, உங்களுக்கு இந்த விளக்கம் தரப்படுகிறது:

 

1- ‘சர்வ வல்லமையுள்ள அல்லாஹ், நாம் படும் துன்பங்களுக்கு அவன் பதிலளிக்கிறான்’ என்று அவனே நமக்குத் தெளிவுபடுத்தியவன். ‘அவன் துன்பத்தின் ஊடாக சோதிக்கவும் செய்கிறான்’ என்பதையும் ஒரு சேர தெளிவுபடுத்தியுள்ளான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏

 

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)” என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது” என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்.

(அல்குர்ஆன் : 2:214)

 

எனவே, முதல் தகவலை எடுத்து கொண்டு, இரண்டாவதை விட்டு விடாதீர்கள் !!!

 

2- சர்வ வல்லமையுள்ள அல்லாஹ், காசாவில் என்ன நடக்கிறதோ அதைப் போல அல்லது அவற்றை விட மோசமான துன்பங்களை கொண்ட வரலாறுகளை, அவனுடைய குர்ஆனில், நமக்குக் கூறியிருக்கிறான். அவன் பிஃர்அவ்னைப் பற்றி கூறுகிறான்:

 

اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ‏

 

நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ வைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்.

(அல்குர்ஆன் : 28:4)

 

பின்னர் அவன், இந்த ஒடுக்கப்பட்ட மக்களை சிறிது காலத்திற்குப் பிறகு காப்பாற்றினான் என்பதை விளக்கி இருக்கிறான்:

 

وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْا‌ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ‏

 

இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.

(அல்குர்ஆன் : 7:137)

 

ஆக, அவர்கள் பொறுமையாக இருந்ததால் விமோசனத்தை அடைந்தார்கள். ஒரு சம்பவத்தின் முடிவில், தெளிவு கிடைக்குமே தவிர, ஆரம்பத்தில் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

3- ‘தவறு செய்பவர்களுக்கு அவகாசம் அளித்து, பிறகு அவர்களைத் தண்டிப்பது என்பது அல்லாஹ்வின் நியதியாகும்’ என்பதை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான்

 

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ‌ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏

 

நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப்படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணி விட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மேன்மேலும்,) அதிகரிப்பதற்காகவே தான். மேலும், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் : 3:178)

 

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்

 

அல்லாஹ் அநீதம் இழைப்பவனை (தண்டிக்காமல் ) தாமதப்படுத்துகிறான்.

 

நூல் 📚- ஸஹீஹ் முஸ்லிம்

எண்-3852

 

إنَّ اللَّهَ عزَّ وجلَّ يُمْلِي لِلظّالِمِ، فإذا أخَذَهُ لَمْ يُفْلِتْهُ، ثُمَّ قَرَأَ وكَذلكَ أخْذُ رَبِّكَ، إذا أخَذَ القُرَى وهي ظالِمَةٌ إنَّ أخْذَهُ ألِيمٌ شَدِيدٌ.

الراوي : أبو موسى الأشعري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2583 | خلاصة حكم المحدث : [صحيح]

 

இங்கு, இரண்டு நிலைமைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஒடுக்கப்பட்டவர் தொடர்பான ஒரு நிலைமை. அடக்குமுறையாளருக்கு உள்ள இன்னொரு நிலைமை.

 

நாம் அவசரப்படாமல், சற்று அமைதி காக்க வேண்டும். ‘அநீதம் இழைத்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் அல்லாஹ் தாமதப்படுத்துவது, அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கு தான்’ என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

4- இறை விசுவாசிகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைப்பது என்பது வெற்றியின் ஊடாக என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், ‘அது துன்பங்களுக்கு எதிராக, தாங்கக்கூடிய வலிமையான இதயங்களாக மாற்றி, அதில் மன நிம்மதியை தருகிறான்’ என்று நாம் விளங்க முடியும்.

 

اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا‌ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ‏

 

(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்” என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.

(அல்குர்ஆன் : 8:12)

 

இதைத்தான், தற்பொழுது பாலஸ்தீனத்தில் மனிதர்களால் தாங்க முடியாத துன்பங்களை சகித்துக்கொள்ளும் காசா மக்களாகவும், அதே நேரத்தில் தோல்வியை கொஞ்சம் கொஞ்சமாக தழுவி சகிப்புத்தன்மை அற்றவர்களாக மாறிக்கொண்டிருக்கும் எதிரிகளின் நிலைமையுமாக நாம் பார்க்க முடிகிறது.

 

5- அல்லாஹ், தனது வேதத்தில் ‘மறுமை வெகுமதி’ யைப் பற்றியும், ‘இந்த உலகம் மாயையின் இன்பம் என்றும், அது அற்பமானது’ என்றும், ‘மறுமை நாளில், எந்த ஆன்மாவும் அநீதி இழைக்கப்படாமல் இருக்க, அவன் நியாயமான தராசுகளை அமைப்பான்’ என்றும் கூறி இருக்கிறான்.

அங்கு, ‘அநீதம் இழைத்தவர்கள் தப்ப முடியாது. நியாய தீர்ப்பு நாள் வந்தே தீரும்’ என்று ஆழமாக, இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் நம்ப வேண்டும் .

 

இவ்வுலகத்தில் நடக்கும் விடயங்களை மட்டும் பார்த்து, மறுமையை மறந்து போய், துவண்டு விடக்கூடாது.

 

6- இவ்வாறு இருக்க, ‘இறுதி முடிவு, இறையச்சம் உடையவர்களுக்கே’ என்ற இறைவேத வாக்குறுதிகளை நாம் மறந்து விடக்கூடாது. நமக்கு முன் சென்ற சமூக த்தினரின், இறைத் தூதர்களான நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா அலைஹிஸ்ஸலாம் போன்றவர்களுக்கு, அல்லாஹ் வழங்கிய வெற்றிகளை, நாம் நினைவு கொள்ள வேண்டும்.

 

இந்த வெற்றி, முன் சென்ற நபிமார்களின் சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்த வாக்குறுதி, மறுமை வரை தொடரும். ஆனால், அந்த வெற்றியை இறை உதவியை பெறுவதற்கு முன்பு, நாம் பட வேண்டிய துன்பங்களையும் சோதனைகளையும் நாம் கடந்து தான் செல்ல வேண்டும்.

 

حَتّٰۤى اِذَا اسْتَيْــٴَــسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ‌ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏

நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும் வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது.

(அல்குர்ஆன் : 12:110)

 

“எந்த நிலையிலும், ஒரு முஃமின் நிராசையடையக் கூடாது. அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை இழக்கக் கூடாது. நடப்பவை எல்லாம், அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன. ” என்பதைத் தான், ஷேக் அவர்களின் விளக்கம் நமக்கு கற்றுத்தருகிறது.

தமிழில் : உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply