ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 01

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -01

சுவர்க்கத்தின் திறவுகோலாக தொழுகை அமைந்திருப்பது போல் தொழுகையின் திறவுகோலாக வுழூ அமைந்திருக்கிறது என்பது நபி மொழியாகும் (திர்மிதி).

 

தொழுகை என்ற உயர்ந்த, உன்னதமான வணக்கத்தை ஓர் அழகிய அரண்மனையாக கற்பனை செய்தால் அதை திறக்கும் திறவுகோலாக வுழூவை கருத முடியும். அனைத்தலுகினதும் இரட்சகனான அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் உரையாடல் என நபியவர்களால் வர்ணிக்கப்பட்ட வணக்கமாகிய தொழுகையை வுழூ இன்றி நிறைவேற்றவே முடியாது என்பதன் மூலம் வுழூவின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

 

வுழூவின் மகிமை, அதன் சிறப்பு குறித்து நபிகளார் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலாகித்திருக்கிறார்கள். அவற்றுள் சில :

 

ஒரு தடவை நபிகளார் அவர்கள் ‘(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, அந்தஸ்துகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்; அல்லாஹ்வின் தூதரே!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் வுழூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும்’ எனக் கூறினார்கள்

(ஸஹீஹ் முஸ்லிம்).

 

நாம் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படுவது மட்டுமன்றி மறுமையில் நமது அந்தஸ்துகள் உயர்த்தப்படுவதற்கும் நாம் செய்கின்ற சில விநாடிகள் கொண்ட வுழூ காரணமாய் அமைகிறது என

மேற்படி ஹதீஸ் குறிப்பிடுகிறது. கீழ்வரும் ஹதீஸ்களும் இதை மேலும் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன :

 

1. நபியவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் வுழூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார் (ஸஹீஹ் முஸ்லிம்).

 

2. ஒருவர் முறையாக வுழூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகங்களுக்கு கீழிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன (ஸஹீஹ் முஸ்லிம்).

 

3. நிச்சயமாக எனது சமூகத்தினர் வுழூ செய்ததன் அடையாளமாக முகம், கைகள், கால்கள் பிரகாசித்து இலங்கும் நிலையில் மறுமையில் வருவார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

மேற்படி ஹதீஸ்கள் வுழூவின் அதியுன்னத மகிமையை தெளிவாக புலப்படுத்துகின்றன.

 

‘வுழூ என்பது முன்வாழ்ந்த எந்தவொரு சமூகத்துக்கும் வழங்கப்படாத, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்துக்கு மட்டும் வழங்கப்பட்ட விசேட இறை அருட்கொடைகளுள் ஒன்றாகும் என்பதை,

 

“எனது சமூகம் வுழூ செய்ததன் அடையாளமாக முகம், கைகள், கால்கள் பிரகாசித்து இலங்கும் நிலையில் மறுமையில் வருவார்கள்” (புஹாரி, முஸ்லிம்) என்ற ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.

 

அதே நேரம் இப்னு மாஜாவிலும் முஸ்னத் அஹ்மதிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸான,

 

“ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு வுழூவை கற்றுத்தந்தார்கள். இந்த வுழூ எனக்கும் எனக்கு முன் வாழ்ந்த நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட ஒன்றாகும்”

என்பது ஆதாரமாக கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸாகும்’ என வுழூவின் சிறப்பம்சம் குறித்து ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (பார்க்க : ‘தவ்ழீஹுல் அஹ்காம்’ , 1/193).

 

இவ்வகையில் இச்சமூகத்துக்கென பிரத்தியேகமாக வழங்கப்பட்ட தனித்துவமிக்க வணக்கமாக வுழூ திகழ்கிறது.

 

நாம் நிறைவேற்றுகின்ற எந்த வணக்கமாயினும் அது அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் இரண்டு பிரதான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பது அவசியமாகும் :

 

1. அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றுதல்

 

2. நபியவர்கள் நிறைவேற்றியது போன்று, அதே ஒழுங்கு முறைப் பிரகாரம் நிறைவேற்றுதல்.

 

மேற்படி இரு நிபந்தனைகளில் எது விடுபட்டாலும் அல்லாஹ்வினால் எந்தவொரு வணக்கமும் – சிறியதாயினும் பெரியதாயினும் – ஏற்றுக்கொள்ளப்படாது.

 

வுழூ என்பதும் பிரதான ஒரு வணக்கம் என்ற வகையில், அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு அதை நிறைவேற்றுவது அவசியம் என்பது போல், நபியவர்கள் வுழூ செய்த முறைகளை அறிந்து தெரிந்து அதே முறைப்படி வுழூ செய்வதும் அவசியமாகும்.

 

நபிகளார் வுழூ செய்த முறைகளை இந்த சமூகத்துக்கு கற்றுகொடுப்பதற்காகவே பல ஸஹாபாக்கள் தமது மாணவர்கள், தோழர்கள் பலர் பார்த்திருக்க, அவர்கள் முன்னிலையில் தண்ணீர் கொண்டு வரச்செய்து வுழூ செய்து காட்டி செயல்முறை ரீதியாக வுழூ செய்யும் முறையை கற்பித்திருப்பதை பல ஹதீஸ்களின் வாயிலாக அறிகிறோம்.

 

குறிப்பாக உஸ்மான் (றழி), அலி (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி), அபூஹுரைரா (றழி), அனஸ் (றழி) போன்றோரும், பெண் ஸஹாபியாவான றுபையிஃ (றழி) போன்றோரும் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி செயல்முறை ரீதியாக விளக்கிய ஸஹாபாக்களுள் முக்கியமானவர்களாவர். அவர்கள் விளக்கிய ஒழுங்கில் நபியவர்கள் வுழூ செய்த முறையை நாம் தொடராக நோக்கலாம்.

 

(தொடரும் இன் ஷா அல்லாஹ்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply