ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08

இந்த தொடரில்

24) ஸலாம் கூறுவதன் ஒழுக்கங்கள்

25) ஸலாம் கூறிய பின் போண வேண்டிய ஒழுக்கங்கள்

24) ஸலாம் கூறுதல் :

அத்தஹிய்யாத் , ஸலவாத் , துஆக்கள் ஆகிய அனைத்தும் ஓதி முடிந்த பின் தொழுகையின் முடிவுரையாக ஸலாம் கூற வேண்டும்.

நபியவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று தனது வலது கன்னத்தின் வெண்மை தெரியுமளவும் இடது கன்னத்தின் வெண்மை தெரியுமளவுக்கும் இரு பக்கமும் திரும்பி ஸலாம் கூறுவார்கள்” (திர்மிதி , அபூதாவூத்).

சில வேளைகளில் முதலாவது ஸலாம் கூறும் போது ‘வபரகாதுஹு” என்ற சொல்லையும் மேலதிகமாக சேர்த்து கூறுவார்கள்” (அபூதாவூத் , இப்னு ஹுஸைமா)

– (இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதென இமாம் நவவி , இமாம் இப்னு ஹஜர் , இமாம் அல்பானி ஆகியோர் கூறுகின்றனர்).

25) ஸலாம் கூறிய பின்:

இமாமாக தொழுகை நடத்துபவர் கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் மஃமூம்களை நோக்கி திரும்பி இருப்பது நபியவர்களின் நடைமுறையாகும்.

நபியவர்கள் ஸலாம் கூறியவுடன் எவ்வளவு நேரம் கிப்லாவை நோக்கி அமர்ந்திருப்பார்கள்?

ஆயிஷா (றழி) அறிவிக்கிறார்கள் : ‘நபியவர்கள் ஸலாம் கூறியவுடன் ‘அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்” என்பதை ஓதும் அளவுக்கே உட்கார்ந்திருப்பார்கள்” (முஸ்லிம்).

இதன் அர்த்தம் அந்த திக்ரை ஓதும் அளவுக்கு இருந்து விட்டு பின்னர் எழுந்து சென்றுவிடுவார்கள் என்பதல்ல. ஸலாம் கூறுவதற்கு முன்னர் கிப்லாவை முன்னோக்கி இருந்தது போன்று ஸலாம் கூறிய பின் கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்பதேயாகும்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள் : மேற்படி ஹதீஸின் விளக்கம் என்னவெனில் , ஸலாம் கூறுவதற்கு முன்னர் கிப்லாவை முன்னோக்கியிருந்த அதே அமைப்பில் உட்கார்ந்திருக்காமல் மேற்கூறப்பட்ட ‘அல்லாஹும் அன்தஸ் ஸலாம்…’ எனும் திக்ரை ஓதும் அளவுக்கு இருந்துவிட்டு பின்னர் மஃமூம்களை முன்னோக்கி திரும்புவார்கள் (பார்க்க : ‘பத்ஹுல் பாரி”).

எனவே , மஃரிப் , ஸுப்ஹ் உட்பட அனைத்து தொழுகைகளிலும் ஸலாம் கூறிய பின் அந்த திக்ரை ஓதும் அளவு இருந்துவிட்டு பின்னர் மஃமூம்களை முன்னோக்கி இருப்பதே நபியவர்களின் ஸுன்னாவாகும்.

இமாமாக நின்று தொழுகை நடத்தியவர் மஃமூம்களை நோக்கி எப்படி திரும்புவது ?

அனஸ் (றழி) அறிவிக்கிறார்கள் : ‘நபிகளார் தொழுகை முடிந்தவுடன் வலப்புறமாக திரும்பி மஃமூம்களுக்கு நேராக இருப்பதை நான் அதிகமாக பார்த்திருக்கிறேன்” (முஸ்லிம் , நஸாஈ).

இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கிறார்கள் : ‘நபியவர்கள் தொழுகை முடிந்ததும் அதிகமாக இடப்புறமாக திரும்பி இருப்பதை பார்த்துள்ளேன்” (புஹாரி , முஸ்லிம்).

அதாவது நபிகளார் சில வேளைகளில் வலப்புறமாகவும் சில வேளைகளில் இடப்புறமாகவும திரும்பி மஃமூம்களுக்கு முகத்தை முன்னோக்கி அமர்வார்கள்.

ஸமுரா (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : ‘ நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்தால் தனது முகம் காட்டி எங்களை முன்னோக்கி இருப்பார்கள்” (புஹாரி).

மேற்கூறப்பட்ட நடைமுறைகள் இமாமாக தொழுகை நடாத்துவோருக்குரியவையாகும்.

இதன் பின்னர் இமாம் , மஃமூம்கள் , தனித்து தொழுவோர் அனைவரும் தனித்தனியாக ஓதுவதற்கென பல திக்ருகளை நபியவர்கள் கற்று தந்திருக்கிறார்கள். ஆதாரபூர்வமானவற்றை மட்டும் அறிந்து மனனமிட்டு ஓதுவது அதிக நன்மைகளை பெற்றுதரும்.

பின்வருவன ஸலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய ஆதாரபூர்வமான திக்ருகளாகும் :

அபூஹுரைரா (றழி) கூறுகிறார்கள் : ‘நபியவர்கள் கூறினார்கள் : ‘ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் யார் ஸுப்ஹானல்லாஹ 33 தடவைகள் , அல்ஹம்து லில்லாஹ் 33 தடவைகள் , அல்லாஹு அக்பர் 33 தடவைகள் ஓதி நூறை பூர்த்தியாக்க லா இலாஹ இல்லல்லாஹு வஹ்த ஹு லா ஷரீக ல ஹு , லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர் என்பதையும் ஓதுகிறாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.”(முஸ்லிம் , நஸாஈ).

மற்றுமொரு ஹதீஸில் அல்லாஹு அக்பர் என்பதை 34 தடவைகள் கூறுமாறு வந்துள்ளது (முஸ்லிம் , திர்மிதி).

மற்றுமொரு ஹதீஸில் ஸுப்ஹானல்லாஹ் 10 தடவைகள் , அல்ஹம்து லில்லாஹ் 10 தடவைகள் , அல்லாஹு அக்பர் 10 தடவைகள் கூறுமாறு வந்துள்ளது (திர்மிதி , அபூதாவூத் , இப்னுமாஜஹ்).

இவை அனைத்தும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்பதால் விரும்பியதை கடைப்பிடிக்க முடியும் ,

அல்லது ஒவ்வொரு ஹதீஸையும் ஒவ்வொரு தொழுகைக்கு பின் கடைப்பிடிக்கும் போது அனைத்து ஹதீஸ்களையும் நடைமுறைப்படுத்துவதாக அமையும்.

ஆயதுல் குர்ஸி ஓதுவதன் சிறப்பு :

அபூஉமாமா (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஒவ்வொரு பர்ழ் தொழுகைக்கும் பின்னர் யார் ஆயதுல் குர்ஸி ஓதுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வதற்கு மரணம் மட்டுமே தடையாக இருக்கிறது” (நஸாஈ).

‘குல்” ஸூராக்கள் (முஅவ்விதாத்) :

உக்பா இப்னு ஆமிர் (றழி) கூறுகிறார்கள் : ‘ஒவ்வொரு (பர்ழ்) தொழுகைக்கு பின்னரும் குல்ஹுவல்லாஹு அஹத் , குல் அஊது பிரப்பில் பலக் , குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய ஸூராக்களை ஓதுமாறு நபியவர்கள் என்னை பணித்தார்கள்” (அபூதாவூத்).

26) திக்ருகள் ஓதி முடிந்த பின்: 

தொழுகை முடிவுற்ற பின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் வந்துள்ள திக்ருகளை ஓதிய ஒருவர் தனக்கு தேவையான இம்மை , மறுமை தேவைகளை அல்லாஹ்விடம் தனக்கு தெரிந்த மொழியில் பிரார்த்தனையாக முன்வைப்பது மார்க்கத்தில் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஆயினும் இமாம் துஆ ஓத மஃமூம்கள் ஆமீன் கூறும் கூட்டு துஆ எனப்படும் நடைமுறையானது நபியவர்களால் கடைப்பிடிக்கப்படாத காரியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நபியவர்களால் காட்டித்தரப்படாத எந்த ஒரு செயலும் மார்க்கமாக இருக்க முடியாது என்பதிலும் நமக்கு சந்தேகமோ , சலனமோ இருக்ககூடாது , அந்த செயல் நமது பார்வையில் எத்தனை அழகானதாக இருந்த போதிலும் கூட…

இமாம் மாலிக் (றஹ்) கூறினார்கள் : ‘மார்க்கத்தில் இல்லாத ஒரு நடைமுறையை புதிதாக உருவாக்கிவிட்டு அது நல்லதென்று கருதுபவன் , நபியவர்கள் தனது நபித்துவப் பணியில் மோசடி செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறான்”.

நபியவர்கள் மதீனாவுக்கு சென்ற பின் தொழுகை ஹி. 02ம் ஆண்டு கடமையாக்கப்பட்டதிலிருந்து மரணிக்கும் வரை தனது மஸ்ஜிதுந் நபவியில் ஸஹாபாக்களை மஃமூம்களாக கொண்டு ஐவேளை தொழுகைகள் , ஜும்ஆ தொழுகை போன்றவற்றை தொழுவித்திருக்கிறார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழுகை முடிந்த பின் நபியவர்கள் கூட்டு துஆ ஓதவுமில்லை , ஸஹாபாக்கள் ஆமீன் கூறியதுமில்லை.

துஆ கேட்டால் உடன் அங்கீகரிக்கப்படுகின்ற உயர்ந்த தகுதியை கொண்டிருந்த நபியவர்களே கூட்டு துஆ கேட்கவில்லை எனும் போது , அந்த நபியை பின்பற்ற வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அவர்கள் அறவே செய்யாத ஒரு செயலை எந்த அடிப்படையில் செய்வது?

இதே வேளை , பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களில் செய்யப்படுவது போன்று திருமணம் , ஜனாஸா , பொதுநிகழ்வுகள் ஆகியவற்றின் போது கூட நபிகளார் தமது வாழ்நாளில் கூட்டு துஆ ஓதவில்லை.

திருமணத்தின் போது மணமகன் அல்லது மணமகளை பார்த்து தனியாக பிரார்த்திப்பதற்காக நபியவர்கள் கற்று தந்த துஆ ‘பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்” என்பதாகும் (அபூதாவூத் , திர்மிதி , இப்னுமாஜஹ்).

ஒருபோதும் நபியவர்கள் இன்றிருப்பது போன்று மணமகனின் வீட்டில் ஒரு துஆ , மணமகளின் வீட்டில் ஒரு துஆ என்று கூட்டாக துஆ ஓதியதாகவோ ஸஹாபாக்கள் ஆமீன் கூறியதாகவோ எந்தவோர் ஆதாரமும் இல்லை.

இவ்வாறே நபியவர்கள் பல ஜனாஸாக்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஜனாஸாவை அடக்கம் செய்த பின் நபியவர்களை சுற்றி ஸஹாபாக்கள் அமர்ந்துகொள்ள , அவ்விடத்தில் வைத்தே நபிகளார் சிறிய உபதேசம் ஒன்று நிகழ்த்துவார்கள். பின்னர் ஸஹாபாக்களை நோக்கி

‘(அடக்கப்பட்டிருக்கும்) உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள்” என்றே கூறுவார்கள்.(அபூதாவூத்).

‘பாவமன்னிப்பு கோருங்கள்” என்று நபிகளார் ஸஹாபாக்களை பார்த்து கூறியதே , தனித்தனியாகவே துஆ கேட்க வேண்டும் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கூட்டு துஆவுக்கு ஆதாரமில்லை என்பதற்கு இதை விடவும் வேறு சான்று தேவையில்லை.

பொதுநிகழ்வுகள் பலவற்றிலும் இறைத்தூதர் அவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வெளிநாட்டு அரச பிரதிநிதிகள் , யூத கிறிஸ்தவ சமூக தலைவர்கள் பலரோடு பல சந்தர்ப்பங்களிலும் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஸஹாபாக்களோடு பல அமர்வுகள் , கலந்துரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். எந்தவொரு சபையையும் அல்லாஹ்வை புகழ்ந்து , நபி மீது ஸலவாத் கூறி ஆரம்பிப்பார்கள். சபைகளை முடிக்கும் போது ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது…” என்ற தஸ்பீஹை தனித்தனியாக ஓதிவிட்டே கலைந்து செல்வார்கள். நம்மவர்கள் செய்வது போன்று கூட்டு துஆ ஓதவுமில்லை , முடிக்கும் போது ஸலவாத் பாடல் பாடவுமில்லை.

யுத்த களத்தில் கூட நபியவர்கள் தனியாகத்தான் துஆ செய்தார்கள். பத்ரு யுத்தம் நடைபெற்ற தினத்தில் எதிரிகளின் பெரும் படையை கண்ணுற்ற போது நபியவர்கள் கிப்லாவை நோக்கி திரும்பி அல்லாஹ்விடம் தனியாகவே பிரார்த்தித்தார்கள்.(முஸ்னத் அஹ்மத்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான் :

‘அல்லாஹ்வின் மீதும் , இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து , அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருவோருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது” (33 : 21).

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

 

முந்தைய தொடரை வாசிக்க 

 

 

 

 

 

 

 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply