முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும் 

முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும்

~~~~~~~~~~~~~~~~~~~~

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

 

ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம்.

 

வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக .

 

கடந்த வருடத்தில், செய்ய தவறிய நற்கருமங்களை செய்வதற்கும் , குறைகளை சரி செய்து நிறைகளாக ஆக்கி கொள்வதற்கும் அருள் புரிவானாக !!

 

அரபு மாதத்தின் முதல் மாதம் முஹர்ரம் மாதமா?அதை, புது வருடமாக, அதாவது, முதல் மாதமாக ஆக்கியது யார் ?

இறைவனின் தூதுவரா?

இல்லை …!!!

 

கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தானே!

இதைத்தானே, இஸ்லாமிய வரலாற்றில் நாம் காண்கிறோம்.

பிறகு, எங்கிருந்து பல அனாச்சாரங்கள், இந்த மாதத்தில் செய்யப்பட வேண்டும் என்று, நம்மில் சிலர்,நபியவர்கள் காட்டிய வழி என்றும் கூட கூறி, தவறாக பிரச்சாரங்கள் செய்து கொண்டு,மக்களை பாவத்தின் பக்கம் இழுத்துக் கொண்டுச் செல்கின்றனர் .

 

அதில் சில …..

 

குறிப்பிட்ட சில திக்ருகள், தொழுகைகள் விஷேடமான பெயரில் செய்வது .

இந்த மாதத்தில் தான், ‘ஹுசைன்(ரலி) அவர்கள் ஷஹீதாக்கபட்டார்கள்’ என்று அவர்களுக்காக துக்கம் அனுஷ்டாங்கம் செய்து, ஷீஆக்களின் சுய வதை செய்வது என்பது ஒரு தெளிவான வழிகேடு .

 

பச்சைப்புல் மிதிப்பது அல்லது தீ மிதிப்பது , அன்றய தினம் சிறப்பு மிக்க மவ்லூதுகள், பாத்திஹாக்கள் , கந்தூரிகள் என்று, ஊருக்கு ஒரு பித்அத்கள் (மூட நம்பிக்கைகள்) இன்னும் பல …..!!!

 

செய்ய வேண்டிய சுன்னத்தான விடயங்கள்:

———————————————————-

 

1-முஹர்ரம் பிறை காணுதல் :-

வருட முதல் பிறையை காணும் துஆ என்றெல்லாம், எந்த ஒரு ஆதாரபூர்வமான பிரார்த்தனைகள் ஏதும் இல்லை. ஆனால் பின்வரும் ஸஹீஹான ஹதீஸில், பொதுவாக பிறையை கண்டால் ….

 

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறையை கண்டால்,

” இறைவா ! இந்த பிறையை எங்களுக்கு பாதுகாப்பான,இறைநம்பிக்கையான,சாந்தியான, கட்டுப்பாடுடன், இறை அருளினாலும், நீ விரும்பும் விதத்திலும், நீ எங்களை பொருந்திக் கொள்ளும் விதத்திலும் (பிறையை) உதிக்க செய்வாயாக!!!எங்களின் இரட்சகனும், உன்னுடைய இரட்சகனும் அந்த அல்லாஹ்வே!!!

 

இந்த ஹதீஸ் கலை வல்லுனரான அல்லாமா ஷுஐப் அல் அர்நாவூது (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் இப்னு ஹப்பான் கிரந்தத்தின் அடிப்படையில், இது ‘ஆதாரபூர்வமான ஹதீஸ்’ என்கிறார்கள்.

ஆதாரம் – ஸுனன் திர்மிதி – 3451

முஸ்னத் அஹ்மத்-1397

 

عن ابن عمر قال : كان رسول الله صلى الله عليه و سلم إذا رأى الهلال قال : ( اللهم أهله علينا بالأمن الإيمان والسلامة والإسلام والتوفيق لما نحب وترضى ربنا وربك الله )

قال شعيب الأرنؤوط رحمه الله : حديث صحيح لغيره في صحيح ابن حبان رحمه الله

سنن الترمذي ( 3451 )

مسند أحمد ( 1397 )

 

இதிலாவது சர்வதேச பிறையா, கணகீட்டு பிறையா என்ற வீண் பிரச்சனைகளைத் தவிர்த்து,இஸ்லாம் நமக்கு வழங்கி இருக்கும் விசாலத்தினை முறை கேடாக பயன்படுத்தாமல், இணக்கமாக, ஒற்றுமையாக, நாமும் நமது சமுதாயமும் இருக்க வழி வகுக்க வேண்டும் .

 

2-வாழ்த்து கூறுவது :-

இன்று மாற்று மத நண்பர்களின் வழக்கங்கள் போல், நாமும் சற்று மிகையாகவே வாழ்த்துக்களை அள்ளி தெளித்து விடுகின்றோம்.

ஆங்கில புத்தாண்டுக்கு இணையாகவே, முஹர்ரம் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

இதிலும், இரண்டு நிலைப்பாடுகள், நம்மிடையே காணப்படுகின்றது.

 

1 – ஒன்று புத்தாண்டு வாழ்த்துக் கூறுவது பித்அத் (அனாசாரம் ). அதற்கு, நபியவர்களின் காலத்தில், எந்த ஒரு ஆதாரமும் காணப்படவில்லை என்று கூறி, இதை மிகைப்படுத்தி சர்ச்சையாக்குவது .

 

2 – மற்றொன்று, நாம் முந்திக்கொண்டு வாழ்த்து கூறுவது கூடாது. ஆனால், பதில் சொல்லலாம். இதை இக்கால சலஃபு சிந்தனை உடைய அறிஞர்கள் கூட (பின் பாஸ், இப்னு உஸைமின் (ரஹிமஹுமுல்லாஹ்) அனுமதிக்கின்றார்கள்… பின்வரும் ஆதாரங்களை முன் வைத்து.

 

அதாவது, தபூக் யுத்தத்தின் போது, கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள், போரை விட்டு பின் வாங்கிய அந்த சம்பவத்தில், இறைவன் அவர்களை மன்னித்த அத்தருணத்தில், நபி (ஸல்) அவர்களின்

முன்னிலையில்,

தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் வாழ்த்தினார்கள். அதற்கு, ‘நபியவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை’

என்ற ஹதீஸ் ஆதார பூர்வமான புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றது. இதை வைத்து சஹாபாக்களும், குறிப்பாக, இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூட வாழ்த்து கூறுவது முபாஹாக(ஆகுமானதாக) இருக்கும் ஆதாத் என்ற பழக்க வழக்கங்களை சார்ந்தது. இது இபாதாத் (வணக்க வழிபாடுகள் ) என்ற ரீதியில் கவனிக்க முடியாது என்கின்றனர்

 

وتهنئة طلحة بن عبيد الله لكعب بن مالك، وبحضرة النبي -صلى الله عليه وسلم- ولم ينكر عليه، انظر ما رواه البخاري (4418) ومسلم (2769)

قال ابن تيمية -رحمه الله-: قد روي عن طائفة من الصحابة أنهم كانوا يفعلونه، ورخص فيه الأئمة كأحمد وغيره.

 

அறிஞர் சல்மான் பின் ஃபஹத் அல் அவ்தா என்ற அறிஞரும், வாழ்த்து கூறலாமா என்பதற்கு பதில் அளிக்கையில்,

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,” இவ்வாறு வாழ்த்து செய்தி நமக்கு கூறப்படும்பொழுது பதில் அளிக்கலாம்” என்று இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களின் ஆய்வை முன்வைத்து, பின் வரும்

வசனத்திலிருந்து ஆதாரத்தை எடுத்துரைக்கின்றார்கள் .

 

உங்களுக்கு வாழ்த்து கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) வாழ்த்து கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் -4:86)

 

3-நோன்பு நோற்பது :-

புனிதமான 4 மாதங்களில், இறைவனின் மாதம் என்று அல்குர்ஆனில் வர்ணிக்கபட்டு,

முஹர்ரம் மாதம் இருப்பதினால், இதில் அனாச்சாரங்களை தவிர்த்து விட்டு, சுன்னத்தான ஆஷூரா நோன்பினை நோற்கலாம்.

 

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில், வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை

(அல்குர்ஆன் -9:36)

 

وعن أبي بكرة رضي الله عنهُ عن النَّبي صلى الله عليه وسلم: «السنة اثنا عشر شهراً منها أربعة حُرُم: ثلاثة متواليات ذو القعدةِ وذو الحجة والمحرم، ورجب مُضر الذي بين جمادى وشعبان» (رواه البخاري 2958) والمحرم سمي بذلك لكونه شهراً محرماً وتأكيداً لتحريمه.

 

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «أفضل الصّيام بعد رمضان شهرُ الله المحرم» (رواه مسلم 1982).

 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில், இந்த வசனத்தில் வரும் 4 மாதங்கள் என்பதில் முஹர்ரம் மாதமும் இடம் பெறுகிறது. ‘இந்த மாதங்களில், பாவங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்’ என்றும் ‘நன்மைகள் அதிகமாக புரியப்பட வேண்டும்’ என்றும், தப்ஸீர் தபரியில்எழுதப்பட்டுள்ளது .

 

கீழ்க்காணும் ஹதீஸில் …

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் –

“ரமலான் விதியாக்கப்படுவதற்கு முன் ஆஷூரா நோன்பை வைத்து வந்தனர். கஃபாவிற்கு ஆடை, அந்த நாளில் தான் அணிவிக்க படும். எப்பொழுது ரமலான் கடமையாக்கபட்டதோ ,இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாடியவர்கள் நோன்பு வைக்கலாம். விடவும் செய்யலாம்” என்றார்கள் .

صحيح البخاري ( 1893, 2001, 2002, 3831, 4502, 4504 )

صحيح مسلم ( 1125 )

سنن أبي داود ( 2442 )

سنن الترمذي ( 753 )

موطأ مالك ( 822 )

سنن الدارمي ( 1804 )

مسند أحمد ( 24011, 24230, 25294, 26068, 26107 )

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ :

كاانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ “.

 

முஹர்ரம் மாத படிப்பினைகள் :-

ஆக, இந்த மாதத்தை, மார்க்கத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் என்கின்ற விதத்தில் கையாளாமல், படிப்பினைகள் இன்னும் சிந்தனைத் தெளிவை அடைய முயற்சித்தல்

 

1-ஹிஜ்ரா கணக்கீட்டின் அடிப்படையில் தான், நாம், இந்த புது வருட மாதமான முஹர்ரமை நினைவு கூறுகின்றோம். ஹிஜ்ரத்தை (தியாகத்தை ) ஓர் உணர்வு மிக்க வழிகாட்டுதலாக, நாம் கண்டு,இறைவனுக்காக நாம் எதை, எதை தியாகம் செய்தோம் இது வரை ? நமது வாழ்நாளில், அசத்தியமாக காட்சி அளிக்கும் நமது சொந்த பந்தங்கள், வியாபாரங்கள்,நட்புகள் இவைகளில், நாம் சத்தியம் ஓங்க வேண்டும் என்பதற்காக, எத்தனை விடயங்களை தியாகம் செய்துள்ளோம் இது வரை ?

 

2- அசத்தியத்திற்கு எதிரான, மிகப்பெரிய ஒரு புரட்சியை, நபி மூஸா (அலை) அவர்கள் செய்து, அக்கிரமம் செய்த அந்த பிர்அவ்னிடமிருந்து, பனீ இஸ்ராயீலர்களை மீட்டார்கள் அன்று. நாம், நம்மீதே ஒற்றுமையின்மை, அறியாமை ,இறைவனுக்கு கீழ்ப்படியாமை போன்ற அநீதங்களின் மூலம்,சுய வதை செய்துக் கொண்டிருக்கின்றோம். இன்று , நமது சமுதாயத்தை பற்றியான, அதன் மீது அழைக்கப்படுகின்றது.அநீதியை பற்றியான அக்கறை நமக்கு எதற்கு !!

 

3- அசத்தியத்தின் வெளிப்பாடு,எவ்வளவு கோரமாக சத்தியவாதிகளை, வாய்மையாளர்களை அச்சுறுத்தினாலும், இறுதி வெற்றி ஹக்கான சத்தியத்திற்கே என்பதினை, அன்று மூஸா(அலை) அவர்கள் பிர்அவனிற்கு எதிராக செய்த புரட்சியும்,நேற்று, இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மதீனத்து ஹிஜ்ரத்தும் , இன்றும் நாளையும் இறை விசுவாசிகளான நம்மாலும் அசத்தியதிற்கு எதிரான, ஒரு முற்றுப் புள்ளியை வைக்க இயலும் என்பதினை தெள்ள தெளிவாக நமக்கு படிப்பினைகளாக, காட்சி அளிக்கின்றன.

இந்த முஹர்ரம் மாதமான 1445 ஹிஜ்ரி, இது ஒரு நல்ல பிறையாக, நமது ஒற்றுமைகளை இனியாவது ஓங்க செய்யும் பிறையாக பெறுவோம் வாருங்கள் .

நபியே! (தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன

(அல்குர்ஆன் -2:189)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply