பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 04 |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 04 |

-அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…

(இஸ்திஹாழா) தொடர் உதிரப்போக்கும் அது தொடர்பான சட்டங்களும்:

இஸ்திஹாழா என்பது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பிலிருந்து தொடர்ச்சியாக அல்லது மிகக் குறைந்த காலத்திற்கு (மாதாந்தம் இரண்டொரு நாட்களுக்கு) நின்று மீண்டும் வெளிவரும் இரத்தத்தைக் குறிக்கும். (குறிப்பு : மாதவிடாய் இரத்தமானது கர்ப்பப்பையின் ஆழத்திலிருந்து வெளியாகும். (மட்டுமீறிய இரத்தப்போக்கு) தொடர் உதிரப்போக்கு கர்ப்பையின் வாய்ப் பகுதியிலிருந்து கசியும் இரத்தமாகும்)

1- வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்பட்ட முதலாவது பகுதியான தொடராக வெளிவரும் இரத்தம் என்பதற்கான ஆதாரம் ஸஹீஹுல் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறி விக்கிறார்கள்:

‘பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம், ‘நான் மாதவிடாயிலிருந்து துய்மையடைவதில்லை அதாவது (இரத்தம் வெளிவருவது நிற்பதில்லை)’ என்றும், மற்றோர் அறிவிப்பில், ”எனக்கு (மாதவிடாய் காலங்களுக் கிடையில்) நிற்காது இரத்தம் வெளிவருகின்றது அதனால் நான் சுத்தமாகுவதில்லை!’ என்றும் கூறினார்கள்.

2- வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டாவது பகுதியான மிகக் குறைந்த காலத்திற்கு நின்று வெளிவரும் தொடர்ந்து வரும் இரத்தத்திற்கான ஆதாரம்.

நபி (ஸல்லல் லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்த ஹம்னா பின்த் ஜஹ்ஷ் அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனது மாதவிடாய் அளவில் கூடியதும் தாங்க முடியாததுமாகும்!’ எனக் கூறினார்.

(இந்த ஹதீஸை இமாம்களான அஹ்மத், அபூதாவூத், திர்மிதி போன்றோர் அறிவித்துள்ளனர். இமாம் திர்மிதி இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளதோடு இமாம் அஹ்மத் இதனை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டதாகவும் இமாம் புஹாரி ஹஸன் எனக்குறிப்பிட்டதாகவும் இமாம் திர்மிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.)

இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) வின் நிலைகள் :

இஸ்திஹாழா ஏற்படும் பெண்களின் நிலைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

முதாலவது : ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் தொடர் உதிரப்போக்கு ஏற்பட முன்னர், வழக்கமான மாதவிடாய் காலம் அவளுக்கு அறியப்பட்டதாக இருக்கும். இக் குறித்த மாதவிடாய்க் காலத்திலன்றி மற்றைய காலத்தில் வெளி வரும் இரத்தம் ‘இஸ்திஹாழா என கணிக்கப்பட்டு அதற்குரிய சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

உதாரணமாக: ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஆறு நாட்களுக்கு சாதாரணமான நிலையில் மாத விடாய் ஏற்படும்; பின்னர் திடீரென அவளுக்கு இரத்த வெளியேற்றம் நிற்காமல் வெளியேரும். இப் பெண்ணைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் ஆறு நாட்கள் வெளியேறும் இரத்தமே மாதவிடாய் இரத்தமாகவும்; அதைத் தொடர்ந்து வெளியேறும் இரத்தம் இஸ்திஹாழா இரத்தமாகவும் கருதப்படும். இதற்கான ஆதாரம் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பின்வரும் ஹதீதாகும்.

பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி ஸல் லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டதற்கு, அவ்வாறு செய்ய வேண்டாம்’ அது இரத்த நாலத்திலிருந்து ஏற்படும் ஒரு உபாதையாகும். (அது மாதவிடாயன்று) உமக்கு வழமையாக மாத விடாய் இருந்து வந்த நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டுவிடுவீராக பின்னர் குளித்துவிட்டு தொழுவீராக’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். (புஹாரி)

ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் அவர்களுக்கு:

“உமக்கு ஏற்கனவே மாதவிடாய் ஏற்பட்ட கால அளவு வரை இருந்து விட்டு, பின் குளித்து விட்டு தொழுவீராக” என்று கூறினார்கள். இந்த ஹதீஸின் படி வழமையாக அறியப்பட்ட மாதவிடாய் கால அளவிற்கு இருந்துவிட்டு, பின்பு குளித்து தொழுது கொள்வாள். அந்நேரம் வரும் இரத்தம் தொடர்பாக பொருட்படுத்தத் தேவையில்லை.

இரண்டாவது நிலை : தொடர் உதிரப் போக்கு ஏற்பட முன் மாதவிலக்கு நாட்கள் பற்றிய தெளிவான கால வரையொன்றில்லாத ஒரு பெண், அதாவது பருவமடைந்த முதல் மாதத்தில் இருந்தே ஹைழுடைய இரத்தத்துடன் சேர்ந்தே வெளியாகிக் கொண்டிருக்கும். இரத்தத்தின் நிறம் வாடை, அடர்த்தி போன்றவற்றை வைத்து அது மாதவிடாய் இரத்தமா? அல்லது இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) இரத்தமா என்பதை வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். வெளிப்படும் இரத்தத்தில் கருமை, அடர்த்தி, வாடை போன்றன அவதானிக்கப்பட்டால் குறித்த பெண் மாதவிடாய் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். இரத்தத்தின் நிறம் மாறி அடர்த்தி, வாடை குறைந்துவிட்டால் அவள் இஸ்திஹாழாவின் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அதாவது அவளுக்கு அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்ய அனுமதியுள்ளது.

உதாரணமாக, ஒரு பெண் அவள் ஆரம்பமாக மாதவிலக்கினை காண்கிறாள், பின் அது தொடர்கிறது. முதல் பத்து நாட்களில் கருப்பு நிறமாகவும், மாதத்தின் எஞ்சிய நாட் களில் சிவப்பு நிறத்திலும் அல்லது முதல் பத்து நாட்களில் அடர்த்தியாகவும் எஞ்சிய நாட்களில் மென்மையானதாகவும் அல்லது பத்து நாட்கள் துர் நாற்றத்துடனும் எஞ்சிய நாட்கள் நாற்றமில்லாமலும் காண்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அதனடிப்படையில் முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம் உதாரணங்களில் கூறப்பட்டது போல் இரத்தமானது கருப்பு அல்லது அடர்த்தி நிறைந்தது அல்லது துர்நாற்றமிக்கது என்றிருந்தால் இவையனைத்துக் கட்டங்களிலும் மாதவிடாயாகவே கருதப்படும். அதைத்தவிரவுள்ள நிலைகளில் இஸ்திஹாழாவாக கருதப்படும்.

இதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாதிமா பின்த் அபீஹுபைஷ் அவர்களுக்கு கூறியது ஆதாரமாக உள்ளது.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாதிமா பின்த் அபீஹுபைஷ் அவர்களுக்கு ‘மாத விடாய் இரத்தம் அறியப்பட்ட கருப்பு நிறத்திலானது. அவ்வாறு இருந்தால் தொழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அது தவிர வித்தியாசமான இன்னொரு நிலையில் காணப் பட்டால் வுழு செய்து தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், அது நரம்பு நோயாகும். (அபூதாவூத், நஸாஈ)

(இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்) இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் மற்றும் ஹதீஸ் வாசகம் தொடர்பில் பிரச்சினை இருப்பினும் இதனை அறிஞர்கள் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். பெரும்பாலான பெண்களின் வழமையை ஆதாரமாகக் கொள்வதை விட இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்வது மிகவும் பொருத்தமாகும்.

மூன்றாவது நிலை :– மாதவிடாய்க்கான வழமையை அறிய வில்லை, வித்தியாசத்தையும் தெரிந்து கொள்ளவில்லை. அதாவது அவள் இரத்தத்தை கண்டது முதல் ஒரே மாதிரி யாகவும் அல்லது மாதவிடாய் இரத்தமாக இருப்பதற்கு முடி யாதளவு பல்வேறுபட்ட நிறங்களில் காணும் நிலை. இவ்வா றான நிலையிலிருக்கும் பெண்கள் பொதுவாகப் பெண் களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஆறு அல்லது ஏழு நாட்கள் மாதவிடாய் ஏற்படும் என்றிருந்தால் முதலில் காணும் இரத்தம் மாதவிடாய் ஆகும். அதன் பின்னர் ஏற்படுவது இஸ்திஹாழா தொடர் இரத்த போக்காகும்.

உதாரணமாக ஒரு பெண் மாதத்தின் ஐந்தாம் நாள் இரத்தம் வெளிவருவதை முதலாவதாகக் காண்கின்றாள். தொடர்ந்து வெளிவரும் அந்த இரத்தத்தின் நிறம், மணம், அடர்த்தி என்பவற்றைக் கொண்டு எந்த வித்தியாசத்தையும் விளங்கிக் கொள்ள முடியாது இருக்கின்றாள். அந்த நிலையில் அவளது மாதவிடாய் நாட்களை ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தினத்திலிருந்து ஆறு அல்லது ஏழு நாட்கள் எனக் கணிக்க வேண்டும்.

இதற்கு பின்வரும் ஹம்னா பின் ஜஹ்ஷ் அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

‘ஒரு முறை ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை விளித்து, ‘அல்லாஹ்வின் தூதரே! அதிகளவானதும், தாங்க முடியாததுமான மாதவிடாய் எனக்கு ஏற்படுகிறது. அதனால், அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது என்னை தொழுகையிலிருந்தும் நோன்பு நோற்பதிலிருந்தும் தடுத்து நிறுத்தியுள்ளது’ என்றார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ‘நீர் பருத்தித் துணியை பயன்படுத்துவது நல்லது என ஆலோசனை கூறுகிறேன். அதை உமது மறைவிடத்தில் வைக்கவும். அது இரத்தத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.’ என்றார்கள். அப்பொழுது, ‘அதைவிட மிக அதிகமாக வருகின்றதே!’ என்று கூறியதற்கு (இந்த ஹதீஸில்) இவ்வாறு பதிலளித்தார்கள்; ‘உங்களை மார்க்க கடமையிலிருந்து தூரப்படுத்துவதற்கான ஷைத்தானின் சூழ்ச்சிகளிள் ஒன்றாக இது உள்ளது.

எனவே, உங்கள் மாதவிடாயை ஆறு அல்லது ஏழு நாட்கள் எனக் கணியுங்கள். அது எதுவாக இருக்க வேண்டும் என்பதை மிக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, பின்னர் கழுவிக் கொள்ளுங்கள்; நீங்கள் நன்கு சுத்தமாக இருப்பதாகக் கண்டால் இருப்பத்தி மூன்று (23) அல்லது இருபத்து நான்கு (24) நாட்கள் தொழுங்கள்; அத்துடன் நோன்பும் நோற்றுக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்குப் போதுமானதாகும். என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி. இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது (ஸஹீஹானது) எனக்குறிப்பிட்டுள்ளார்). அதே போல் இமாம் அஹ்மத் அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்திலானது என்றும் இமாம் புஹாரி இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது என்றும் குறிப்பிட்டதாகவும் அவர் (திர்மிதி) கூறியுள்ளார்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இங்கு ‘ஆறு அல்லது ஏழு நாட்கள்’ என குறிப்பிட்டது விரும்பிய எதை யேனும் தெரிந்தெடுத்துக் கொள்வதற்கல்ல. மாறாக, அது இஜ்திஹாத் அடிப்படையிலாகும். அதாவது ஒரு பெண் தனது வயது, உடல் அமைப்பு போன்ற விடயங்களில் தனக்கு நெருக்கமானவர்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறு தன்னுடன் ஒத்துப்போகும் பெண்களுக்கு ஆறு நாட்கள்தான் மாதவிடாய் என்றால் அவள் தனக்கும் ஆறு நாட்கள் என எடுத்துக் கொள்வாள்; சிலவேளை அவர்க ளுக்கு ஏழு நாட்கள் என்றால் அவளும் ஏழு நாட்கள் என எடுத்துக் கொள்வாள்.

தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்களுக்கு ஒப்பானவர் களின் நிலை :

சில வேளை பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் தொடராக வெளிவருவதற்கு கருப்பை மற்றும் அதனை அண்டிய பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொண்டது போன்ற ஏதே னும் காரணிகள் இருக்க முடியும். அவ்வாறு வெளிவரும் இரத்தம் இரண்டு வகைப்படும் :

1- சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் ஏற்படுவது சாத்தியமில்லை என்ற நிலை. அதாவது இரத்தம் வெளியே வர முடியாத வகையில் கருப்பையை முழுமை யாக அகற்றிவிடல் அல்லது கருப்பையிலிருந்து வெளிவரும் வழியை அடைத்து விடுவிடல் போன்றவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இத்தகையவற்றிற்கு இஸ்தி ஹாழாஹ் தொடர்பான சட்டங்கள் கடைப்பிடிக்கத் தேவை யில்லை. சுத்தமாகியதின் பின் மஞ்சள் நிறத்திலான அல்லது கபில நிறத்திலான இரத்தம் அல்லது ஈரத்தன்மை போன் றவை வெளியேறும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட் டங்களையே இங்கு பின்பற்ற வேண்டும்.

எனவே, அவள் தொழுவது, நோன்பு நோற்பது போன்றவற் றிலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்ளக் கூடாது. அவற்றை உரிய முறையில் செய்துவர வேண்டும். மேலும், இத்தகைய கட்டத்தில் அவள் தனது கணவனுடன் உடலுறவு கொள்வ தும் தடையாகாது. இவ்விரத்தத்திற்கு கடமையான குளிப் பும் கிடையாது. எனினும், அவள் தொழும் நேரத்தில் இரத் தத்தைக் கழுவி, இரத்தம் வெளியே வராது இருப்பதை தடுப் பதற்காக ஒரு துணியினால் மறை உறுப்பை கட்டிக் கொண்டு பின்னர் தொழுகைக்காக வுழு செய்து கொள் வாள். பர்ளான தொழுகை போன்று நேரம் குறிப்பிடப்பட்ட தொழுகையாக இருந்தால் நேரம் நுழைந்ததன் பின்னரே வுழூச் செய்ய வேண்டும். நப்லான தொழுகையை நிறை வேற்ற விரும்பினால் அவ்வப்போது அவள் அதற்காக வுழு செய்து கொள்வாள்.

இரண்டாம் வகை : சத்திர சிகிச்சை தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் வருவது நின்றுவிடும் என்று கூற முடியாத நிலை. இந்நிலையில் மாதவிடாய் வருவது சாத்தியம் என்ற அடிப்படையை வைத்து முஸ்தஹாழாவுக்குரிய சட்டங்கள் பின்பற்ற வேண்டும். இதற்காதாரமாகக் கீழ்க்காணும் ஹதீஸ் அமைகின்றது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் அவர் களுக்கு பின்வருமாறு கூறினார்கள் ‘அது மாதவிடாயல்ல அது இரத்த நாலத்திலிருந்து ஏற்படும் ஒரு உபாதையாகும். எனவே, (உண்மையான) மாதவிடாய் ஆரம்பமானால் தொழுகையை விட்டுவிடுங்கள்’. ‘மாதவிடாய் ஆரம்பித் தால்’ என்ற கூற்றானது முஸ்தஹாழாவிற்குரிய சட்டங்க ளான ஆரம்பமும் முடிவுமுள்ள மாதவிடாய் ஏற்படுகின்ற ஒரு பெண்ணுக்கு பொருந்தும் என்பதையும் மாதவிடாய் ஏற்பட வாய்பற்ற பெண்ணைப் பொருத்தவரை அவளிடம் வெளிவரும் இரத்தம் இரத்த நாலத்திலிருந்து ஏற்படும் என்பதைக் காட்டுகிறது.

(இஸ்திஹாழாவின் ) தொடர் உதிரப் போக்கின் சட்டங்கள்:

மேற்கூறப்பட்டவற்றிலிருந்து பெண்களிடமிருந்து வெளி வரும் இரத்தம் எப்போது மாதவிடாய் இரத்தமாக இருக்கும், எப்போது இஸ்திஹாழா –தொடர் உதிரப்போக்கு- இரத்த மாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டோம். எனவே மாதவிடாயாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்குரிய சட்ட ஒழுங்குகளையும், இஸ்திஹாழாவாக இருந்தால் அதற் குரிய சட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்

மாதவிடாய்குரிய முக்கிய சட்ட ஒழுங்குகள் பற்றி நாம் முன் னரே அறிந்து கொண்டோம். தற்போது ‘இஸ்திஹாழாவின்’ தொடர் உதிரப்போக்கின் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வோம்.

‘இஸ்திஹாழாவின்’; தொடர் உதிரப்போக்கின் சட்டதிட்டங் கள் யாவும் ஒரு பெண் தூய்மையாக இருக்கும் நிலையில் பின்பற்ற வேண்டிய சட்ட ஒழுங்குகளேயாகும். அந்த வகை யில் ‘முஸ்தஹாழா’ தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண் களுக்கும் தூய்மையடைந்த பெண்களுக்குமிடையில் பின் வரும் விடயங்களில் தவிர எவ்வித வேறுபாடும் கிடையாது. அவைகள் வருமாறு :

முதலாவது : -முஸ்தஹாழா- தொடர் உதிரப்போக்கு ஏற் பட்ட பெண்கள் தமது ஒவ்வொரு தொழுகைக்காகவும் தனித்தனியாக வுழூ செய்வது கடமையாகும். இதற்கான ஆதாரம் பின்வரும் ஹதீதாகும்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாத்திமா பின்த் அபி ஹுபைஷ் அவர்களுக்கு ‘நீங்கள் ஒவ்வொரு தொழுகைக் கும் வுழூ செய்யுங்கள்’ என்று கட்டளை பிறப்பித்தார்கள். (புஹாரி. பாடம் : இரத்தத்தைக் கழுவிக் கொள்ளுதல்.) இதன் கருத்தாவது, பர்ழான தொழுகைகளுக்கு அதற்குரிய நேரம் வந்த பின்னரே வுழூ செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால் நேரம் குறிக்கப்படாத நப்லான தொழுகையாக இருந்தால் அவள் அதனை நிறைவேற்ற விரும்பும் வேளை வுழூ செய்து கொள்ளல் வேண்டும்.

இரண்டாவது: வுழூ செய்ய முன்னர் இரத்த கறைகளைக் கழுவி தூய்மைப்படுத்தி, இரத்தத்தை உறிஞ்சி வைத்துக் கொள்வதற்காக அவளது மறைவான பகுதியில் ஒரு துணித் துண்டை கட்டிக்கொள்ள வேண்டும். இதற்கு நபியவர்கள் ஹம்னா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கூறிய வழி காட்டல் ஆதாரமாக உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் அவர் களுக்கு: ‘நீர் பருத்தித் துணியை பயன்படுத்துவீராக. அது இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும்’ அப்பொழுது அவள், ‘அதைவிட மிக அதிகமாக வருகின்றதே’ எனக் கூறினாள். ‘அவ்வாறாயின் (பெரிய அளவிலான) துணியை வையுங் கள்.’ என்றார்கள். ‘அப்பொழுதும் அதைவிட அதிகமாக வருகின்றதே எனக் கூறினாள் அந்தப் பெண். ‘அவ்வாறா யின் உமது மறைவான இடத்திலிருந்து வரும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு துணியை வைத்து, இருக்கமாக கட்டிக்கொள்ளவும் என்று கூறினார்கள். அவ்வாறு இருகக் கட்டியதன் பின் வெளி வரும் எதுவும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதிமா பின்த் அபீ ஹுபைஷ் அவர்களுக்கு இவ்வாறு கூறினார்கள்: ‘உமது வழமையான மாதவிடாய் நாட்களில் தொழுவதிலிருந்து விலகி இருங்கள். பின்பு குளித்துக் கொள்ளுங்கள். மேலும் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூ செய்து கொண்டு தொழுகையை நிறைவேற்றுங்கள். அப்பொழுது இரத்தத் துளிகள் விரிப்பில் விழுந்தாலும் சரியே!’ (அஹ்மத், இப்னு மாஜஹ்)

மூன்றாவது : உடலுறவு கொள்ளுதல் : இதற்கான அனுமதி பற்றி அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொண்டுள்ளார்கள். இதனை விட்டுவிடுவதால் விபச்சாரம் நிகழும் என்று பயந்தால் உடலுறவு கொள்வதற்கு அனுமதியுள்ளது. என்றாலும் இந்த சட்டப்பிரச்சினையில் சரியான கருத்து விபச்சாரம் நிகழும் என்று பயந்தாலும் பயப்படாமல் இருந் தாலும் உடலுறவு அனுமதிக்கப்பட்டது என்பதாகும். ஏனெ னில் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் (இஸ்திஹாழா) தொடர் உதிரப்போக்கு ஏற்படுவோராக இருந்துள்ளனர். என்றாலும் அல்லாஹ்வோ அவனின் தூதரோ இதனைத் தடுக்கவில்லை. ‘மாதவிடாய்க் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்வதை விட்டு விலகி இருங்கள்’ (அல் பகரா: 222)

இந்த வசனமானது பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது மாத்திரம் உடலுறவு கொள்வது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரமாவும் ஏனைய காலத்தில் உடலுறவில்; ஈடுபடுவது அனுமதிக்கப் பட்டது என்பதற்கான ஆதாரமாகவும் காணப்படுகிறது. ஆகவே இஸ்திஹாழாவின் போது பெண்களுக்குத் தொழு வதற்கு அனுமதியுள்ளது என்றால் உடலுறவு கொள்வது என்பது அதை விட எளிதான சிக்கலற்ற விடயமுமாகும். மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது உடலுறவு கொள்வது தடுக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இஸ்திஹா ழாவுடைய நிலமையிலும் அதனை அனுமதிக்காது தடை செய்வதென்பது ‘கியாஸ் மஅல் பாரிக்;’ அதாவது வித்தியாச மான வேறுபட்ட விடயங்களை ஒன்றினைத்து ஒப்புநோக்கி சட்டத்தை பெறுதல் என்ற நிலைக்கு உட்படுகிறது. இந்த வகையில் இஸ்திஹாழா நிலமையில் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டது என்பதே சரியான நிலைப்பாடாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

தமிழில்:இஸ்லாம்ஹவுஸ் இணையதளம்

முந்தைய தொடரை வாசிக்க இங்கே CLICK செய்யவும் 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply