கேள்வி :
ஜும்ஆத் தினத்தில் பெரும்பாலான மஸ்ஜித்களில் இரண்டு அதான்கள் கூறப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தவ்ஹீத் பள்ளிகளில் இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் மட்டும் ஒரே ஒரு அதான்தான் கூறப்படுகின்றது. இது குறித்து சில உலமாக்கள் விமர்சனம் செய்கின்றனர். ஜூம்ஆ தினத்தில் இரண்டு அதான்கள் கூறுவது குறித்த சரியான விளக்கம் என்ன?
பதில்:
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதும், அபூபக்கர்(ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் உமர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களினதும் ஆட்சிக் காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான்தான் கூறப்பட்டது. உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலத்தின் ஆரம்பப் பகுதியிலும் இந்த நடைமுறைதான் இருந்து வந்தது. அந்த அதான் இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்த பின்னர் கூறப்பட்டுவந்தது. மேலதிகமான ஒரு அதானை சந்தையில் கூறும் வழக்கத்தை உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் ஆரம்பித்தார்கள். அவ்வாறு சந்தையில் கூறப்பட்ட அதானைத் தற்போது ஜும்ஆவுடைய அதானுக்கான நேரத்தில் மஸ்ஜிதில் கூறுகின்றனர். இது குறித்து மாற்று அபிப்பிராயம் நிலவுவதால் சற்று விரிவாக விளக்குவது பொருத்தமானது எனக் கருதுகின்றோம்.
ஸஹீஹ் புஹாரியில், “அதான் சொல்லும் போது இமாம் மிம்பரில் அமர்ந்திருக்க வேண்டும்” எனும் தலைப்பில் பின்வரும் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலும் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலங்களிலும் ஜூம்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் அதான் சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (அதான் – இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமாக்கப்பட்டது. இது நிலைபெற்று விட்டது.” (புஹாரி: 916)
இந்த அறிவிப்பின் மூலம் இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன்னர் கூறப்படும் அதான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலோ. அபூபக்கர்(ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் உமர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது காலத்திலோ நடைமுறையில் இருக்கவில்லை என்பது புலனாகின்றது.
உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது காலத்தில்தான் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது இஜ்திஹாதின் அடிப்படையில் இமாம் மிம்பரில் அமர்வதற்கு முன்னர் கூறப்படும் அதான் ஆரம்பிக்கப்பட்டது. அது கூட இன்று மஸ்ஜித்களில் கூறப்படுவது போன்று கூறப்படவில்லை. சந்தையில்தான் அந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குலபாஉர் ராஷிதூன்களில் ஒருவர். எனவே. அவர் ஏற்படுத்திய வழிமுறையை அப்படியே பின்பற்றலாமா? என்றால் கூட அவர் மஸ்ஜிதில் அந்த அதானைக் கூறவில்லை. அதனை சந்தையிலேயே கூறினார். எனவே நாம் கலீபாவின் நடைமுறையையே பின்பற்றுகின்றோம் எனக் கூறமுடியாது என பதில் கூறப்படுகின்றது.
இந்த அதிகரிக்கப்பட்ட அதான் குறித்து அறிஞர்களின் நிலைப்பாட்டை ஆராய்ந்தால் இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இப்னு உமர்(ரழியல்லாஹு அன்ஹு)
5437 عن نافع عن بن عمر قال الأذان الأول يوم الجمعة بدعة
مصنف ابن أبي شيبة (470 / 1)
ஜும்ஆ தினத்தில் கூறப்படும் முதலாவது அதான் பித்அத் ஆகும் என இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக நாபிஃ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸன்னப் இப்னு அபீஷை 5437)
(குறிப்பு: பித்அத் என்று இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வழிகேட்டைக் குறிக்கும் விதத்திலும் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது புதியது என்று கூறும் முகமாகவும் கூறியிருக்கலாம். உமர்(ரழியல்லாஹு அன்ஹு) ஜமாஅத்தாக தராவீஹ் தொழுவிக்கப்படுவதை “பித்அத்” என்று கூறியதை இதற்கு உதாரணமாக எடுக்கலாம்.
2. இமாம் குர்துபி(ரஹிமஹுல்லாஹ்)
وقد كان الاذان على عهد رسول الله صلى الله عليه وسلم كما في سائر الصلوات، يؤذن واحد إذا جلس النبي صلى الله عليه وسلم على المنبر.
وكذلك كان يفعل أبو بكر وعمر وعلي بالكوفة.
ثم زاد عثمان على المنبر أذانا ثالثا على داره التي تسمى ” الزوراء ” حين كثر الناس بالمدينة. فإذا سمعوا أقبلوا، حتى إذا جلس عثمان على المنبر اذن مؤذن النبي صلى الله عليه وسلم، ثم يخطب عثمان
تفسير القرطبي (100 / 18)
ஏனைய தொழுகைகளுக்குப் போன்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் அமர்ந்த பின்னர் ஒரேயொரு அதான்தான் கூறப்பட்டது. இவ்வாறே அபூபக்கர்(ரழியல்லாஹு அன்ஹு), உமர்(ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரும் அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூபாவிலும் செய்து வந்தார்கள். மக்கள் மதீனாவில் அதிகரித்த போது சந்தையில் உள்ள “ஸவ்ரா..” எனும் இடத்தில் மூன்றாவது அதானை உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அதிகப்படுத்தினார். (சந்தையில் கூறப்படும்) அதானை செவியேற்றதும் மக்கள் பள்ளியை நோக்கி வருவார்கள். உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மிம்பரில் அமர்ந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களது முஅத்தின் அதான் கூறுவார். பின்னர் உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குத்பாவை ஆரம்பிப்பார்கள் என இமாம் குர்துபி குறிப்பிடுகின்றார்.
3. இமாம் மாவர்தி (ரஹிமஹுல்லாஹ்)
இமாம் மிம்பரில் அமர்வதற்கு முன்னர் முதலாவது கூறப்படும் அதான் புதிதாக உருவாக்கப்பட்டதாகும் என இமாம் மாவர்தி) அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் குர்தூபி(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
4. இமாம் சுப்யானுத் தவ்ரீ(ரஹிமஹுல்லாஹ்)
சூரியன் சாய்வதற்கு முன்னர் ஜும்ஆவுக்காக அதான் கூறப்படமாட்டாது. முஅத்தின் அதான் கூறிவிட்டால் இமாம் மிம்பரில் நின்று குத்பா உரையாற்றுவார். அவர் இறங்கிவிட்டால் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலும் அபூபக்கர்(ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் காலத்திலும் ஒரு அதானும் ஒரு இகாமத்தும்தான் நடைமுறையில் இருந்தது. மேலதிகமாக அதிகரிக்கப்பட்ட அதான் புதிதாக உருவாக்கப்பட்டதாகும் என்று இமாம் சுப்யானுத்தவ்ரி(ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிட்டதாக பத்ஹுல் பாரி5/452 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. இமாம் ஷாபிஈ(ரஹிமஹுல்லாஹ்)
இமாம் அதாஃ(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் இந்த அதானை புதிதாக உருவாக்கினார்கள் என்பதை மறுப்பவராக இருந்தார்கள். முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் புதிதாக உருவாக்கியதாக அவர்கள் கூறுபவராக இருந்தார்கள். அல்லாஹு அஃலம் (இமாம் ஷாபிஈ(ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்.) “(உஸ்மானோ முஆவியாவோ) இருவரில் எவர் ஆரம்பித்திருந்தாலும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இருந்த நடைமுறைதான் எனக்கு விருப்பமானதாகும்.” (கிதாபுல் உம்மு : 1/224)
இந்த அடிப்படையில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதும், உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களதும் நடைமுறையில் இல்லாத பள்ளியில் கூறப்படும் அதிகரிக்கப்பட்ட அதானை விட்டு விடுவதே சிறந்ததாகும். ஜும்ஆ தினத்தில் மஸ்ஜிதுக்கு நேரத்துடன் வருமாறு ஆர்வமூட்ட வேண்டும்.
இதே வேளை ஒரு மஸ்ஜிதில் இரண்டு அதான்கள் கூறப்படுகின்றது என்பதற்காக அந்த ஜும்ஆவைப் புறக்கணித்தல், வேறு ஜூம்ஆ மஸ்ஜிதுகள் இல்லாத போது ஜும்ஆத் தொழாமல் லுஹர் தொழுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது எல்லை மீறுவதாகவே அமையும் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
ஏனெனில் நாம் கூறிய அறிஞர்களில் கூற்றுக்கள் போன்றே ஜும்ஆ நேரத்தை அறிவித்து மக்களை விழிப்பூட்டிய உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்களது இஜ்திஹாதை அன்று வாழ்ந்த நபித்தோழர்கள், நல்லோர்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர். எனவே,இரண்டு அதான் கூறுவோரும் நல்லதையே செய்கின்றனர். ஒரேயொரு அதானைக் கூறுவோரும் நல்லதையே செய்கின்றனர் எனக் கூறும் அறிஞர்களும் உள்ளனர்.எனவே ஜும்ஆவுக்கு ஒரு அதானே சிறந்ததாகும்.இரண்டு அதான்கள் கூறப்பட்டால் அது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது அல்ல என்ற நிதானம் பேணப்படவேண்டியதாகும்.
வல்லாஹு அஃலம்
எஸ்.எச்.எம் இஸ்மாயில் (ஸலபி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: