இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா?

கேள்வி

இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்;
‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள். மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள்.குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று. மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முனைந்தார்கள்.
‘கல்லே என் துணி! கல்லே என் துணி!’ என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர், மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை, அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்றது. உடனே, மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள், தம் துணியை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரழியல்லாஹுஅன்ஹு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான்,
‘இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ என்றும் [அல்-அஹ்ஸாப் 33:69]. இறைவசனம் குறிக்கிறது.

-ஸஹீஹ் புகாரி : 3404

ஒருவர் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பது அனுமதிக்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக நிர்வாணமாக குளிப்பது போன்ற காரணங்களுக்காக இந்த ஹதீஸை அறிஞர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஃபத்ஹ் அல் பாரி எனும் நூலில் (1/385) அல்-ஹாஃபிழ் (இப்னு ஹஜர் அல் அஸ்கலானி) ரஹிமஹுல்லாஹ் கூறியது போல்,பெரும்பாலான அறிஞர்கள் இது அனுமதிக்கப்பட்டதாகக் கருதினர்.
இமாம் அல்-புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த அத்தியாயத்திற்கு “தனியாக இருக்கும்போது நிர்வாணமாக குளிப்பவர் பற்றிய அத்தியாயம்,மேலும் யார் தன்னை மறைத்து கொண்டாலும்,மறைப்பது விரும்பத்தக்கது” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள்.

இருப்பினும் தன்னை மூடி மறைப்பது விரும்பத்தக்கது என்பது உண்மை.இந்த கருத்தானது ஸுனன் ஆசிரியர்களால் விவரிக்கப்பட்ட ஹதீஸிலிருந்து எடுக்கப்பட்டது.

முஆவியா இப்னு ஹைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நான் அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களிடம்,

‘அல்லாஹ்வின் நபியே, நாங்கள் எப்போது எங்கள் ‘அவ்ரத்தை மறைக்க வேண்டும்,எப்போது அதை வெளிப்படுத்தலாம்?’ என கேட்டேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்
“உங்கள் மனைவி மற்றும் உமது வலது கரம் உடையவர்( அடிமைகள்) தவிர மற்ற அனைவரிடமிருந்தும் உங்கள் ‘அவ்ராவைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே, எங்களில் ஒருவர் தனியாக இருக்கும்போது என்ன செய்வது?’ என்று கேட்டதற்கு,

‘மக்களை விட அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்” என்று கூறினார்.

இந்த ஹதீஸ் இமாம் திர்மிதியால் ஹசன் என்றும் இமாம் ஹாகிம் மூலம் ஸஹீஹ் என்றும் வகைப்படுத்தப்பட்டது.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

Source:IslamQ&A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply