அத்தியாயம் இஃக்லாஸ் – ஓர் அறிமுகம்.

அத்தியாயம் இஃக்லாஸ் – ஓர் அறிமுகம்.

• இந்த அத்தியாயம் இறக்கப்பட்ட இடம் தொடர்பாக தஃப்ஸீர் கலை அறிஞர்களிடம் இரண்டு கருத்துக்கள் உள்ளன. சிலர் அது மக்காவில் இறக்கப்பட்டது என்றும், இன்னும் சிலர் மதீனாவில் இறக்கப்பட்டதும் கூறுகிறார்கள்.

• இந்த அத்தியாயம் இறக்கப்பட்டதற்கான காரணம் திர்மிதி மற்றும் அஹ்மத் முதலிய ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகி இருக்கிறது. இனணவைப்பாளர்கள் நபியவர்களிடத்தில் உமது இறைவனது வம்சத்தை எமக்குச் சொல்லுங்கள் என்றார்கள். உடனடியாக அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கினான்:

“நபியே கூறுங்கள்: அல்லாஹ் ஆகிய அவன் ஒருவன். அல்லாஹ் தேவையற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை; யாராலும் பெற்றெடுக்கப் படவுமில்லை. அவனுக்கு நிகராகவும் எவருமில்லை”.

• அத்தியாயம் இஃக்லாஸுக்கு பல கிரந்தங்களில் பல பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இமாம் ராஸி தனது தஃப்ஸீர் கிரந்தத்தில் இந்த அத்தியாயத்தின் பெயர்களுக்கென்று தனியான பகுதியொன்றை அமைத்து அதில் 20 பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்.

5 பெயர்களை மாத்திரம் இங்கு நாம் தருகிறோம்:

1-அத்தியாயம் அல் இஃக்லாஸ்

2-அத்தியாயம் குல்ஹுவல்லாஹு அஹத்

3-அத்தியாயம் அல் அஸாஸ்

4-அத்தியாயம் அத் தவ்ஹீத்

5-அத்தியாயம் அஸ் ஸமத்

• இந்த அத்தியாயத்தின் சிறப்பு சம்பந்தமாக பல அறிவிப்புக்கள் வந்துள்ளன. அறிவிக்கப்படுள்ளவற்றுள் அதிகமானவை இட்டுக்கட்டப்பட்டவையும், பலவீனமானவையும் ஆகும்.

பலமான ஆதாரங்களைக் கொண்ட நபிமொழிகளுள் இரண்டை மாத்திரம் தருகிறோம்:

1- இமாம் புகாரி -ரஹிமஹுல்லாஹ்- ஆயிஷா -ரழியல்லாஹு அன்ஹா- அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள்:

நபி -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் ஒவ்வொரு இரவிலும் தன் படுக்கை விரிப்புக்குச் சென்றதும் இரு கைகளையும் சேர்த்து அவ்விரண்டிலும் ஊதி, அத்தியாயம் அல்-இஃக்லாஸ், அத்தியாயம் அல்-பலக், அத்தியாயம் அந்-நாஸ் என்பவற்றை ஓதுவார்கள். பின்பு தலையிலிருந்து ஆரம்பித்து, முகம், உடம்பின் முன் பகுதி என இரு கைகளாலும் முடிந்தளவு தடவிக் கொள்வார்கள். அவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

2-இமாம் புஹாரி -ரஹிமஹுல்லாஹ் – அபீ சயீத் அல் குத்ரி -ரழியல்லாஹு அன்ஹு – அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள்.

இந்த அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்ற ஒரு மனிதர் செவிமடுத்தார் . அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதுவரிடம் வந்து அதைப் பற்றி கூறினார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆன் மூன்றின் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.

அத்தியாயம் இஃக்லாஸ் உடைய விளக்கமும், அது கற்றுத்தரும் பாடமும், அதனை அமுல் படுத்தும் முறையும்:

• அத்தியாயம் இஃக்லாஸ் வஹ்தானியத் என்ற ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்திகிறது, அல்லாஹ் அவன் ஒருவன், அவனுக்கு தந்தை கிடையாது, பிள்ளை கிடையாது, காரணம் அவைகளை விட்டும் அவன் தேவையற்றவன், அவன் தான் அனைவருக்கும் தேவையானவன், அவனே ஆரம்பமானவனும், இறுதியானவனும் ஆவான்.

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்! ( ஆரம்பம் செய்கிறேன்)

1-قل هو الله أحد

((நபியே) கூறுவீராக! அவன் அல்லாஹ் ஏகன்))

• நபியே! அவர்கள் உம்மிடம் கேட்கின்ற விடயத்திற்கு நீங்கள் கூறுங்கள், அல்லாஹ் ஒருவன் , அவன் மட்டுமே வணங்கப்பட தகுதியானவன்,அவனுடைய மெய்மையிலும், நாமங்களிலும், தன்மைகளிலும் அவன் தனித்தவன்.

• நாம் அல்லாஹ்வை ஒருமை படுத்த முயற்சிக்க வேண்டும்,

• அவனுக்கே நம்முடைய அடிமைத்தனத்தை சமர்பிக்க வேண்டும்,

• இணைவைப்பை விட்டும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

2-الله الصمد

(அல்லாஹ் எவரிடத்திலும் எவ்வித தேவையும் இல்லாதவன்)

• அனைத்து படைப்பினங்களும் அவன் பக்கமே தேவை காண்கின்றன, பூர்த்தியான அழகிய தன்மைகளுடையவன், அனைத்து கண்ணியத்திற்க்கும் சொந்தக்காரன் அவனே, அனைவரும் தங்கள் தேவைகளின் போது அவனையே நாடுகிறார்கள், காரணம் அவனால் மட்டுமே அதனை சிறப்பாக நிறைவு செய்ய முடியும், அவனோ அனைவரையும் விட்டும் தேவையற்றவன்.

• நாம் எங்கள் உள்ளங்களை சிந்தனைகளை அவன் பக்கமே திருப்புவோம்.

• அனைத்து நலவுகளை அடைந்துக்கொள்ளவும், அனைத்து கெடுதிகளிலிருந்தும் காத்துக்கொள்ளவும் அவனை மாத்திரமே நாடுவோம்.

3-لم يلد ولم يولد

(அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெற்றடுக்கப்படவும் இல்லை)

• அவன் எவரையும் பெற்றெடுக்கவும் இல்லை, அவனை யாரும் பெறவுமில்லை, அவனுக்கு தந்தையுமில்லை, பிள்ளையுமில்லை, அவனுடைய பரிபூரண கண்ணியத்தினால் அவன் அவைகளை விட்டும் தேவையற்றவன், அவன் எல்லா விதங்களிலும் பரிபூரணமானவன், தூய்மையானவன்.

• எனவே நாம் அவனுடைய கண்ணியத்தை பேணி நடப்போம்,

• எவ்வித குறைகளையோ, கெடுதிகளையோ அவனுக்கு சேர்க்காமல் இருப்போம்.

3-ولم يكن له كفوا أحد

(எவரும் அவனுக்கு நிகரானவர் அல்லர்)

• அவனுடைய படைபினங்களில் அவனுக்கு நிகராக ஒன்றுமே இல்லை, அவனுடைய மெய்மைக்கோ, அவனுடைய ஆற்றலுக்கோ அவனுடைய பெயர்களுக்கோ அவனுடைய தன்மைகளுக்கோ நிகராக எதுவுமே கிடையாது, அவனுக்கு நிகராக எங்கும் எதுவும் இல்லை, அவன் தூய்மையானவன்.

• இதனை நாம் நம்முடைய உள்ளத்தில் ஆழமாக பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்…

அரபு மூலம்:

المختصر في تفسير القرآن الكريم ( إعداد نخبة من صفوة العلماء)
تدارس القرآن الكريم.
(إعداد مؤسسة النبأ العظيم بمكة المكرمة)

தமிழில்:இஷ்fபாக் அல் இன்’ஆமி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply