கணக்கீட்டு முறைப்படி ரமழான் / துல்ஹஜ் போன்ற மாதங்களின் துவக்கத்தை அறிந்து செயற்பட அனுமதியுள்ளதா?

கேள்வி:

கணக்கீட்டு முறைப்படி ரமழான் / துல்ஹஜ் போன்ற மாதங்களின் துவக்கத்தை அறிந்து செயற்பட அனுமதியுள்ளதா?

பதில்:

பொதுவாக நபியவர்கள் பிறையைப் பார்ப்பதைத் தொடர்புபடுத்தி நோன்பு விதியாவது தொடர்பாகக் குறிப்பிட்ட செய்திகள் யாவும் கணக்கீட்டு முறைப்படி நோன்பை விதியாக்கிக் கொள்ளலாம் என்று கூறுவோருக்கு சிறந்த மறுப்பாக அமைந்துள்ளன.

இப்னு தகீகில் ஈத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

நான் (இது குறித்து) கூறக்கூடிய அம்சமாவது, நிச்சயமாக கணக்கீட்டு முறையான நட்சத்திர சாஸ்திரவாதிகள் சந்திரனை சூரியனுடன் ஒப்பீடு செய்து அவர்கள் கருதும் விதத்தில் நோன்பு விடயத்தில் நடந்து கொள்வது ஆகுமான முறையன்று. ஏனெனில், நிச்சயமாக அவர்கள் ஒரு நாள் அல்லது இரு நாட்களில் (பிறையைப்) பார்ப்பதை மையமாக வைத்து கணக்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு சில சமயங்களில் மாதத்தை முற்படுத்தக்கூடியவர்களாக உள்ளார்கள். இப்படியான கணக்கீட்டு முறையின் மூலம் அல்லாஹ் அனுமதிக்காத விடயத்தில் புதிதாக ஒரு சட்டத்தை உருவாக்கிய குற்றத்திற்கு ஆளாவார்கள். (ஷரஹுல் உம்தா: 2/206)

இப்னு பத்தால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த) ஹதீஸில் நட்சத்திரங்களைக் கொண்டு கணக்கீடு செய்பவர்களுக்கு மறுப்பு உள்ளது. மேலும், நிச்சயமாக பிறை பார்த்தலின் பால் மீள வேண்டும். இன்னும், எங்களை நாங்களே சிரமப்படுத்திக் கொள்வதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டும் உள்ளோம்.

சுபுலுஸ் ஸலாம் (4/110).

இப்னு பரீரா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

அது ஒரு தவறான போக்காகும், நட்சத்திர சாஸ்திரக் கலையில் மூழ்கிச் செல்வதைவிட்டும் மார்க்கம் உறுதியாக (எம்மை)த் தடுத்துள்ளது. ஏனெனில், அவ்விடயம் சந்தேகத்திற்குரியதும் உறுதித்தன்மையற்ற குழப்பத்திற்குரியதுமாகும்.

சுபுலுஸ் ஸலாம் (4/110)

இமாம் அஸ்ஸன்ஆனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

அவர்களுக்கு வழங்கப்படும் தெளிவான பதிலில் நின்றும் உள்ளது, இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கும் (பின்வரும்) செய்தியாகும்:

நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நாங்கள் எழுதவோ கணக்கிடவோ தெரியாத உம்மி சமுகமாகும், (எனவே) மாதம் என்பது இவ்வாறு இவ்வாறு இவ்வாறுதான் இருக்கும் என (விரல்களைக் கொண்டு) சைக்கினை செய்து சுட்டிக்காட்டினார்கள். (அதன் போது) மூன்றாம் விடுத்தத்தில் ஒரு விரலை மடித்துக் காட்டினார்கள். (மீண்டும்) இவ்வாறு இவ்வாறு இவ்வாறுதான் என்று (விரல்களைக் கொண்டு) சைக்கினை சுட்டிக்காட்டினார்கள். (அதாவது 30 ஆகப் பூர்த்தி செய்வதை உணர்த்தினார்கள்.)

ஸித்தீக் ஹஸன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அர்ரஹ்ழதுந் நதிய்யா (1ஃ224) என்ற நூலில் கூறும்போது:

நாட்கள் மற்றும் மாதங்கள் விடயத்தில் சந்திரன் உதித்கும் இடங்களை மையமாக வைத்துக் கணக்கிடுவது சமூகத்தின் ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் பித்அத்தான அம்சமாகும்.

இதுவிடயம் குறித்து அல்லஜ்னா அத்தாஇமா என்ற மார்க்கத் தீர்ப்பு வழங்கும் சங்கத்திடம் வினவப்பட்டபோது (இல: 386), அது தனது விடையில் கூறிய அம்சமாவது:

சந்திர மாதங்களை உறுதி செய்வதின் பால் மீளுகின்ற வேளையில் நட்சத்திர சாத்திரத்தை மையமாக வைத்து வணக்கங்களின் ஆரம்பத்தையும் அவைகளில் இருந்து மீளுவதையும் (சந்திரனை) நேரடியாகப் பார்க்காமல் தீர்ப்பெடுப்பது எவ்வித நலவுமில்லாத பித்அத்களில் உள்ளதாகும். மேலும், அதற்கு மார்க்கத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை என்கிறது.

இன்னும், சந்திரன் உதிக்கும் இடங்களை மையமாக வைத்து கணக்கிடும் முறையை தாபியீன்களில் உள்ள முதர்ரிப் இப்னு அப்தில்லாஹ் மற்றும் இப்னு குதைபா ஆகியோர் கொண்டிருப்பாதாக ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது.

ஆயினும், அக்கருத்து தொடர்பாக

இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது:

முதர்ரிப் என்பவரை குறித்து இடம்பெற்ற செய்தி சரியான செய்தியன்று என்றும் இப்னு குதைபா என்பவரைப் பொருத்தளவில் இதுவிடயத்தில் கருத்தில் கொள்ளப்பட முடியாதவராகக் கருதப்படுகின்றார் என்றும் கூறுகின்றார்கள். (அத்தம்ஹீத் 7/156, அல்பத்ஹ் 1906, சுபுலுஸ்ஸலாம் 4/110, மஜ்மூஉல் பதாவா 25/132,133, பதாவா அல்லஜினா 10/105-106)

பார்க்க: அஷ்ஷெய்க் அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அல்பழ்லி அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் பத்ஹுல் அல்லாம் பீ திராஸதி அஹாதீஸி புலூகில் மறாம் (2/557)

மொழிபெயர்ப்பு: ஷெய்க் அபுஹுனைப் ஹிஷாம் (ஸலபி,மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d