அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான… என்று வரும் துஆ ஸஹீஹானதா?

ரஜப் மாதத்தின் முதல் நாள், பின்வரும் துஆவை கேட்பது சுன்னத்தாகுமா என்று அறிய விரும்புகிறேன்

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ 

அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷாபான, வ பல்லிக்னா ரமதான.

யா அல்லாஹ் ரஜப், மற்றும் ஷாபான் மாதங்களில் எங்களுக்கு பரகத் தருவாயாக, மேலும் ரமதான் மாதத்தை எங்களை அடைய செய்வாயாக.

தூய்மை மற்றும் கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்விடம், ஆதாரப்பூர்வமான சுன்னத்தின் அடிப்படையில் செயல்படும் பாக்கியத்தை கொடுக்குமாறு கேட்கிறேன்.

பதில்:

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.

முதலாவதாக: ரஜப் மாதத்தின் சிறப்பு குறித்து யாதொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்:

“ரஜப் மாதத்தின் சிறப்பு குறித்து யாதொரு ஸஹீஹான ஹதீஸும் இல்லை, ரஜப் மாதத்திற்கு முன்னர் வரும் ஜமாதுல் ஆகிரா மாதத்திற்கும் அதற்கும் அது சங்கைநிறைந்த (அல்அஷஹுருல் ஹரும்) நான்கு மாதத்தில் ஒன்று என்பதை தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லை. இதை தவிர்த்து ரஜப் மாதத்திற்கு தனியாக நோன்போ, தொழுகையோ, உம்ராவோ, மற்ற அமல்களோ எதும் இல்லை” (லிகா அல்பாப் அல்மஃப்தூஹா)

இரண்டாவது:

இமாம் அஹ்மத் அவர்களின் மகனார் அப்துல்லாஹ், மற்றும் தபரானி, அல்பைஹகீ, அபூ நுஅய்ம், ஆகியோர் பின் வரும் ஹதீஸை, ஸாயிதா இப்னு அபிர் ருக்காத் வாயிலாக அறிவிக்கின்றனர்.

ஜியாத் அன் நுமைரி எங்களுக்கு அனஸ் இப்னு மாலிக் கூறியதாக கூறுகிறார்: “ரஜப் மாதம் துவங்கியவுடன் நபி صلى الله عليه وسلم அவர்கள்: யா அல்லாஹ் ரஜப், மற்றும் ஷாபான் மாதங்களில் எங்களுக்கு பரகத் தருவாயாக, மேலும் ரமதான் மாதத்தை எங்களை அடைய செய்வாயாக. என்று துஆ கேட்டார்கள்

ஆனால் இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது. ஜியாத் அன் நுமைரி என்பவர் பலவீனமானவர், அவ்வாறே இப்னு மயீன் கூறுகிறார். அபூ ஹாதிம் அவாின் அறிவிப்புகளை ஆதாரமாக எடுக்கக்கூடாது, என்கிறார். இப்னு ஹிப்பான் அவரை தன்னுடைய பலவீனமானவர்கள் எனும் நூலில் குறிப்பிட்டு, அவரை ஆதாரமாக எடுப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல என்கிறார். (மீஸான் அல் இதிதால்)

ஸாயிதா இப்னு அபிர் ருக்காத் என்பவர் அதை விட மிக பலவீனமானவர்

அபூ ஹாதிம் கூறுகிறார்: இவர் ஜியாத் அந் நுமைரியிடம் இருந்து அனஸ் இப்னு மாலிக் அறிவிப்பதாக பல மறுக்கப்பட்ட(முன்கர்) ஹதீஸ்களை அறிவிக்கிறார். இவற்றை ஜியாத் அந் நுமைரியும் அறிவித்தது இல்லை அனஸும் அறிவித்தது இல்லை.

புகாரி, நசாயி ஆகியோர், இவரின் ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை(முன்கய்) என்கின்றனர். அல் குனா எனும் நூலில்: நம்பகத்தன்மை அற்றவர் என்று வந்துள்ளது

இப்னு ஹிப்பான்: இவர் பிரபல்யமான அறிவிப்பாளர்கள் கூறுவதாக முன்கர் ஹதீஸ்களை அறிவிப்பார், இவரின் அறிவிப்புகளை ஆதாரமாக எடுக்க கூடாது, பலவீனமான ஹதீஸ்களின் உதாரணமாக அன்றி எழுதவும் கூடாது. இப்னு அதீ: இவரிடம் இருந்தது மிக்தாமி மற்றும் சிலர் கேள்விப்படாத ஹதீஸ்களை அறிவிக்கின்றனர், அவற்றில் சில மருக்கபட்டவை என்று கூறுகிறார்.(தஹ்தீபுத்தஹ்தீப்)

இந்த ஹதீஸை அத்கார் எனும் நூலில் நவவீ, லதாயிப் அல் மஆரிஃப் எனும் நூலில் இப்னு ரஜப், தயீஃப் அல்ஜாமிஃ எனும் நூலில் அல்அல்பானி, ஆகியோர் பலவீனமான ஹதீஸ் என்று கூறுகின்றனர்.

அல் ஹைஸமீ, ஸாயிதா இப்னு அபிர் ருக்காத் இதை அறிவிக்கிறார், அல் புகாரி அவரை நிராகரிக்கப்பட்டவர் என்று கூறுகிறார். பல உலமாக்கள், இவர் அறிவீனர் என்று கூறுகின்றனர். (மஜ்மூ ஃஅல் ஸவாயித்)

மூன்றாவது: இந்த ஹதீஸ் பலவீனமானது தான், இருந்தாலும் கூட அதில் ரஜப் மாதத்தின் முதல் இரவு ஓத வேண்டும் என்று யாதொரு வாசகமும் இல்லை. ரஜப் மதத்திலும், அதற்கு முன்னரும் பரகத் கேட்கலாமே.

நான்காவது:

ஒரு முஸ்லிம், தான் ரமதான் மாதத்தை அடைய வேண்டும் என்று தன் ரப்பிடம் துஆ கேட்பதில் யாதொரு தவரும் இல்லை.

ஹாஃபித் இப்னு ரஜப் رحمه الله கூறுகிறார்:

முஅல்லா இப்னு ஃபத்ழ் கூறுகிறார்: அவர்கள் ஆறு மாதங்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ்விடம் ரமதான் மாதத்தை அடைவதற்கு துஆ கேட்பார்கள், மேலும் ஆறு மாதங்களுக்கு, ரமதான் மாதத்தில் செய்த நல் அமல்களை ஏற்குமாறு துஆ செய்வார்கள். யஹ்யா இப்னு அபீ கஸீர் கூறுகிறார்: எண்களின் துஆக்களில் ஒன்று: ‘ அல்லாஹ்வே என்னை ரமதானை அடைய செய்வாயாக, ரமதானை என்னை அடைய , அதில் என் செயல்களை ஏற்றுக்கொள்வாயாக’ (லதாயிஃப் அல் மஆரிஃப்)

அப்துல் கரீம் அல் ஃகுதைர் அவர்களிடம் இந்த ஹதீஸின் நம்பக தன்மை குறித்து கேட்கப்பட்டது:

அதற்கு அவர்: “இந்த ஹதீஸ் ஸஹீஹானது அல்ல, ஆனால் முஸ்லிம் ஒருவர் அல்லாஹ்விடம், ரமதான் மாதத்தை அடைய, மேலும் அதில் நோன்பு, கியாமுல் லைல், ஆகியவற்றை அடையும் பாக்கியம், லைலதுல் கத்ர் இரவை அடையும் பாக்கியம் ஆகியவற்றை கேட்பதில் யாதொரு தவரும் இல்லை இன் ஷா அல்லாஹ். அதாவது, இது போன்ற பொதுவான வாசகங்களை கொண்டு துஆ கேட்பதில் யாதொரு தவரும் இல்லை” என்று பதில் அளித்தார்

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

மூலம்: https://islamqa.info/ar/answers/202017/حديث-اللهم-بارك-لنا-في-رجب-وشعبان-وبلغنا-رمضان-ضعيف-لا-يصح

மொழிப்பெயர்ப்பு: அஹ்மத் கபீர் ரிஃபாயி, நயீம் இப்னு அப்துல் வதூத்

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 
%d