பெருநாள் தொழுகையின் சட்டம் என்ன?

கேள்வி:

பெருநாள் தொழுகையின் சட்டம் என்ன?

பதில்:

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…

பதிலின் சுருக்கம்:

ஈத் தொழுகை எவ்வாறு தொழ வேண்டும்:

¤முதல் ரக்’அத்தில் இமாம் ஆரம்ப தக்பீர்க்கு பிறகு ஏழு தக்பீர்கள் சொல்ல வேண்டும்.பிறகு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும் பிறகு சூரா காஃப் ஓத வேண்டும்.

¤இரண்டாவது ரக்அத்தில் எழுந்து நின்று தக்பீர் சொல்ல வேண்டும்,பிறகு மீண்டும் ஐந்து முறை தக்பீர் சொல்லி, சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் சூரத்துல் கமர் ஓத வேண்டும்.

ஈத் தொழுகை என்றால் என்ன?

ஈத் தொழுகை என்பது இமாம் கலந்து கொண்டு மக்களை இரண்டு ரக்அத்கள் தொழுவதில் வழி நடத்தும் ஒன்றாகும்.

உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

“ஈதுல்-பித்ர்ன் தொழுகை இரண்டு ரக்அத்கள் ஆகும் மற்றும் ஈதுல்-அதாவின் தொழுகை இரண்டு ரக்அத்கள் ஆகும் என அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அல்-நஸஈ 1420 மற்றும் இப்னு  குஸைமா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நஸஈ-ல் வரும் ஹதீஸினை ஸஹிஹ் என்று கூறியுள்ளார்கள்.

அபூ ஸயீத்(ரழியல்லாஹுஅன்ஹு) அறிவித்தார்கள்:

நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள்.
ஸஹீஹ் புகாரி : 956.

ஈத் தொழுகை எவ்வாறு தொழுவது:

முதல் ரக்அத்தில் இமாம் தக்பிர் அல்-இஹ்ராம் (தொழுகையைத் தொடங்க “அல்லாஹு அக்பர்” என்று சொல்வது) கூறிய பிறகு இமாம் மேலும் ஏழு தக்பீர்களைக் கூற வேண்டும்,

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்:

“ஈதுல்-பித்ர் மற்றும் ஈதுல்-அதாவின் தக்பீர் என்பது ருகூவின் தக்பீரைத் தவிர்த்து முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் ஆகும்.”

அபு தாவூத் 1149 மற்றும் இர்வா அல்-கலீல், 639 இல் அல்பானியால் சஹீஹ் என வகைப்படுத்தப்பட்டது)

பின்னர் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும்,மேலும் முதல் ரக்அத்தில் சூரத் காஃப் ஓத வேண்டும்.

பிறகு இரண்டாவது ரக்அத்தில் எழுந்து நின்று தக்பீர் சொல்ல வேண்டும், முழுமையாக எழுந்து நின்றவுடன் ஐந்து முறை தக்பீர் சொல்லி, சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் சூரத்துல் கமர் ஓத வேண்டும்.

*ஈத் தொழுகையில் எந்த குர்ஆன் வசனம் ஓத வேண்டும்?*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ஈத்களின் போது சூரத்துல் காஃப் மற்றும் சூரத்துல் கமர் ஓதுவார்கள்.  அல்லது (இமாம் விரும்பினால்) முதல் ரக்அத்தில் சூரத்துல்-அலாவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல்-காஷியாவையும் ஓதலாம், ஏனென்றால் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள்  ஈத் தொழுகையில் சூரத்துல் அலா மற்றும் சூரத்துல்-காஷியா ஓதியுள்ளார்கள்.

குறிப்பு:

இமாம் இந்த சூராக்களை ஓதுவதன் மூலம் ஸுன்னாவை உயிர்ப்பிக்க வேண்டும், இதனால் முஸ்லிம்கள் ஸுன்னாவினை நன்கு அறிவார்கள்.

பெருநாள் தொழுகைக்குப் பிறகு குத்பா கொடுப்பது:

ஷெய்க் முஹம்மது இப்னு உதைமின் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்குப் பிறகு, இமாம் மக்களிடம் உரையாற்ற வேண்டும்.குத்பாவின் ஒரு பகுதியாக பெண்களுக்கு உரையாற்ற வேண்டும்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் செய்ததைப் போல,பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்களைக் கூறுவது, மற்றும் அவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்களுக்கு எதிராக அவர்களை எச்சரிப்பது போன்ற விஷயங்களை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

[பக்கம் :398 ஃபதாவா அல்-லஜ்னா அல்-தாயிமா, 8/300-316].

குத்பாவிற்கு முன் தொழுகை:

பெருநாளின் சட்டங்களில் ஒன்று தான் குத்பாவுக்கு முன் தொழ வேண்டும் என்பது .

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழியல்லாஹுஅன்ஹு) அறிவித்தார்கள்:

நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகை தொழப் புறப்பட்டுச் சென்று, உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள்.

(ஸஹீஹ் புகாரி:958,முஸ்லிம்: 885)

தொழுகைக்குப் பிறகு தான் குத்பா என்பதற்கான மற்றொரு ஆதாரம்:

அபூ ஸயீத்(ரழியல்லாஹுஅன்ஹு) அறிவித்தார்கள்:

நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர்.

(மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன்.
அதற்கு மர்வான் ‘நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது’ என்றார்.

நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாகமிகச் சிறந்ததாகும் என கூறினேன்.

அதற்கு மர்வான் ‘மக்கள் தொழுகைகுப் பிறகு இருப்பதில்லை’ எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 956.

Source:IslamQ&A

குறிப்பு:
பெருநாள் தொழுகை பருவ வயதை அடைந்த ஆண்/பெண் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் பேரித்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிட்டுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாளை பொறுத்தவரை தொழுகையை தொழுதுவிட்டு உண்பதும் ஸுன்னாவாகும்.

சூரியன் உதயத்திற்கு சில நிமிடங்கள் கழித்து(மக்ரூஹ் நேரத்திற்கு பிறகு) தொழ வேண்டும்.

பெருநாள் தொழுகை திடலில் நடக்க வேண்டிய தொழுகை ஆகும்.அதற்கு பாங்கோ அல்லது இகாமத்தோ முன் மற்றும் பின் ஸுன்னத் தொழுகைகளோ கிடையாது.அது இரண்டு ரக்அத்களை கொண்ட தொழுகையாகும்.

திடலுக்கு வருவதற்கும் போவதற்கும் பாதையை மாற்றி கொள்வது ஸுன்னாஹ்வாகும்.

அன்றைய தினத்தில் அல்லாஹுவினை தக்பீர்(அல்லாஹு அக்பர்),தஹ்லீல்(லா இலாஹ இல்லல்லாஹ்),தஹ்மீத்(அல்ஹம்துலில்லாஹ்) கொண்டு புகழ வேண்டும்.

பெருநாள் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்வது விரும்பத்தக்க அம்சம் ஆகும்.

‘நபித்தோழர்கள் பெருநாள் தினத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்தால் ‘தகப்பலல்லாஹு மின்னா வமிக்கும்’ என்று கூறிக் கொள்பவர்களாக இருந்தார்கள்.’
அறிவிப்பவர்: ஜுபைர் பின் நுபைல் (ரஹிமஹுல்லாஹ்)
நூல்: அல் ஜாமிஉஸ் ஸஹீஹ் 3{30-321
இந்த ஹதீஸ் ஸஹீஹானது என இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d