முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள்

முஹர்ரம், ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள்

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனுடைய சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மத் ( ﷺ ) அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற நம் அனைவர் மீதும் என்னென்றும் நின்று நிலவட்டுமாக !

 

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த சுருக்கமான தொகுப்பு. இக்கட்டுரை முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ஹஃபிழஹுழ்ழாஹ்) அவர்களின் சிறு தொகுப்பை தழுவி எழுதப்பட்டது. இதனை யாரெல்லாம் படித்து பயன்பெற்று சமூகம் மக்கள் பயன்பெற வேண்டுமென்பதற்காக பிறருக்கு பகிர்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் இம்மை மறுமை நற்பாக்கியங்களை வழங்குவானாக! என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைப்பதோடு பிரார்த்தனையும் செய்கின்றேன் .

 

1. அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் ஹிஜ்ரி ஆண்டின் முதல்மாதம் ஆகும் .தொடர்ச்சியாக வரும் புனிதமான மூன்று மாதங்களில் (துல் கஃதா , துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் , ரஜப் ) மூன்றாவது மாதமாகும் .

 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; 9:36.

 

காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள். (புஹாரி 3197, முஸ்லிம் 1679 ).

 

2. இந்த மாதத்தின் சிறப்புகளில் ஒன்று அல்லாஹ்வின் மாதம் (நூல் முஸ்லிம் 1163) என்று நபி ﷺ பெயர் சூட்டி இருப்பது .

 

நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் சிலவற்றைத்தான் தன்னோடு இணைத்து சொல்கிறான். அதனால் அது சிறப்பும் மகத்துவமும் பெறுகிறது. உதாரணமாக அல்லாஹ்வின் வீடு , அல்லாஹ்வின் ஒட்டகம் , மேலும் முஹம்மத் ﷺ , இப்ராஹீம் , இஸ்ஹாக் , யஃகூப், என சில நபிமார்களின் பெயர்களை குறிப்பிட்டு தன்னுடைய அடியார்கள் என தன்னோடு இணைத்துச் சொல்வது போல

நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் பக்கம் 36 இமாம் இப்னு ரஜப்

 

3. அறிஞர்களின் சிலர் முஹர்ரம் மாதத்தை மிகவும் சிறப்பிற்குரிய மாதமாக கருதுகிறார்கள்

 

ஹஸனுல் பஸரி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: புனிதமிக்க மாதங்களில் மிகவும் சிறப்பிற்குரியது அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரமாகும்.

மேலும் அவர்கள் கூறுகிறார்கள் ; நிச்சயமாக அல்லாஹ் ஒரு ஆண்டின் ஆரம்பத்தை புனித மாதத்தைக் கொண்டு துவங்குகின்றான் புனித மாதத்தை கொண்டு முடிக்கின்றான். வருடத்தில் ரமழானுக்கு பிறகு அல்லாஹ்விடத்தில் மகத்தான மாதம் முஹர்ரம் மாதம் தான். நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் 34

 

4. முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்களும் சிறப்பு பெறுகின்றது.

 

அபூ உஸ்மான் அந்நஹ்தி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : மூன்று பத்து நாட்களை சிறப்பிப்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் கடைசி 10 நாட்கள் தில் ஹிஜ்ஜாவின் முதல் 10 நாட்கள் முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்கள்

நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் 35

 

5. புனிதமான மாதங்களில் ஒருவர் தனக்குத் தானே தீங்கிழைக்க கூடாது. அல்லாஹ் இதனை தடை செய்துள்ளான்.

 

ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; 9:36

கதாதா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : ஏனைய மாதங்களில் ஒருவர் அநியாயம் இழைப்பதை விட மகத்தான புனித மிக்க இந்த மாதங்களில் அநியாயம் இழைப்பது மிகப்பெரிய குற்றமாகும். அநியாயமாகும் எல்லா நிலைகளிலும் பாவமானது. என்றாலும் அல்லாஹ் தான் நாடியதை மிகவும் மகத்துவப் படுத்துகிறான்.

– தஃப்ஸீர் தப்ரி 14/238 , தஃப்ஸீர் இப்னு கஸீர் 4/148

 

6. இந்த மகத்தான மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பது விரும்பத்தக்க காரியம்

 

நபி ( ﷺ) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘

‘ரமழானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் ”

நூல் முஸ்லிம் 1163

 

இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : ரமழானுக்குப் பிறகு உபரியான நோன்புகளை நோற்பதற்கு மிகச் சிறந்த மாதம் அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதமாகும் எனபது இந்த ஹதீஸிலிருந்து மிகத்தெளிவாக தெரிகிறது.

நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் 33

 

7. முஹர்ரம் மாதத்தில் அதிக நோன்பு நோற்பது விரும்பத்தக்க காரியம் எனினும் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரியக் கூடாது.

 

‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’

(ஸஹீஹ் அல் – புகாரி:1969, 1971, ஸஹீஹ் முஸ்லிம் 1156, 1157

 

8. ரமழான் மாதத்திற்கு பிறகு மிகச் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பு என்று தெளிவாக வந்திருப்பதுடன் முஹர்ரம் மாதம் அல்லாத ஷஃபான் மாதத்தில் நபியவர்கள் அதிகம் நோன்பு நோற்றார்கள் என்பதற்கு உலமாக்கள் இரண்டு விதமான விளக்கங்களை கொடுக்கின்றார்கள்

 

முஹர்ரம் மாதத்தின் சிறப்பை நபியவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் அறிந்திருக்கலாம்.

 

அல்லது பயணம் நோய் போன்ற காரணங்களினால் இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்க இயலாமலிருக்கலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

ஆதாரம் இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஷரஹ் முஸ்லிம் (8/37,55) அல் மஜ்மூஃ 6/387 என்ற நூலிலும் இக்கருத்தை பார்வையிடலாம்

 

9. முன் சென்ற பின் வந்த பெரும்பாலான ஸலஃப் உலமாக்களின் கருத்து ஆஷூரா என்பது முஹர்ரம் மாதத்தின் 10 வது நாள்.

 

அதுதான் ஹதீஸிலிருந்து வெளிப்படையாக தெரிவதும் மொழி வல்லுனர்களிடம் அறியப்பட்டதும் இதுவே . ஆதாரம் இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஷரஹ் முஸ்லிம் (8/12) , அல் மஜ்மூஃ 6/383

 

10. ஆஷூரா என்பது (ஜாஹிலிய்யா ) அறியாமைக்காலத்தில் அறியப்படாத ஓர் இஸ்லாமிய பெயர் ஆகும். நூல் : காழி இயாழ் அவர்களின் மஷாரிகுல் அன்வார் 2/102 ,

 

11. ஆஷூரா எனும் நாளில் நோன்பு நோற்பது மிகவும் விரும்பத்தக்க ஒரு காரியம்

 

ஆஷூரா நோன்பைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன் சென்ற ஒரு வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று கூறினார்கள்.

(முஸ்லிம்:2151)

 

12. ஆஷூரா நோன்பு அனைத்து சிறு பாவங்களுக்கும் பரிகாரமாகும் பெரும் பாவங்களுக்கு அல்ல

 

ஒருவரிடத்தில் சிறு பாவங்கள் இருந்தால் அதற்கு இது பரிகாரமாக அமையும். சிறு பாவங்களோ பெரும்பாவங்களோ அவரிடத்தில் இல்லையெனில் இந்நோன்பின் மூலம் நன்மைகள் பதியப்படுவதுடன் அவருடைய அந்தஸ்து உயர்த்தப்படும். பெரும்பாவங்கள் நிகழ்ந்திருந்தால் அந்த பாவங்களின் வீரியம் இந்நோன்பின் மூலம் குறைக்கப்படும்.

ஆதாரம் இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஷரஹ் முஸ்லிம் (3/113,8/51), அல் மஜ்மூஃ (6/982)

 

13. ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதற்காக குடும்பத்தின் பொறுப்புதாரி தன்னுடைய பிள்ளைகளையும், குடும்பத்தையும் ஸஹர் உணவிற்காக எழுப்பி விட வேண்டும் .

ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.

ஆஷுரா நோன்பை பற்றி கூறினார்கள் ரமழானுக்கு முன் கடமையாக்கப்பட்டிருந்தது எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

ஸஹீஹ் புகாரி : 1960. முஸ்லிம் 1136

 

14. யூத , கிறிஸ்தவர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக முஹர்ரம் மாதம் ஒன்பதும் பத்தும் சேர்த்து நோன்பு நோற்பது விரும்பத்தக்க காரியம்.

 

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 1134

 

15. ஒன்பதாவது நாள் நோன்பு ஒருவருக்கு தவறிவிட்டால் யூதர்களுக்கு மாறு செய்யும் விதமாக 10 (ஆஷூரா தினம் அன்றும் ) அதற்கு அடுத்த நாள் 11 ம் சேர்த்து நோன்பு நோற்கலாம்.

 

16. பிறை தென்படுவதில் ஏற்படுகின்ற குறைபாடு, முஹர்ரம் மாதத்தை அடைவதில் ஏற்படுகின்ற சந்தேகம், நோன்புகள் நோற்பதில் தவறுகள் ஏற்பட்டுவிடும் என்று ஒருவர் அஞ்சினால் பேணுதல் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9,10,11 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பதில் எவ்வித தடையும் இல்லை.

 

17. உலமாக்களில் சிலர் ஆஷூரா நோன்பை மூன்று படித்தரங்களாக வகைபடுத்துகின்றனர்

 

1. முஹர்ரம் மாதம் 9,10,11 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது இது தொடர்பாக வந்துள்ள கீழ்காணும் ஹதீஸ் பலஹீனமானது

 

ஆஷூரா தினத்தில் நோன்பு வையுங்கள் மேலும் (ஆஷூரா) தினத்திற்கு முந்தைய நாளோ பிந்தைய நாளோ நோன்பு நோற்று அதிலே யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் மற்றொரு அறிவிப்பில் (ஆஷூரா) தினத்திற்கு ஒரு நாளைக்கு முன்பாகவும் ஒரு நாளைக்கு பின்பாகவும் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.

நூல் அஹ்மத் 2154, அல் –பைஹகி அல்குப்ரா 4/287, இது பலஹீனமான செய்தி 4297 அஷ்ஷேக் அஹ்மத் ஷாகிர் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் ஹஸன் தரத்தில் உள்ளது என கூறுகிறார் .

 

ஸலஃபுகளில் சிலர் பேணுதல் அடிப்படையில் 9,10,11 ஆகிய தினங்களில் நோன்பு நோறுள்ளனர்

நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் பக்கம் 52

 

2. சுன்னாவில் வந்துள்ளதைப் போன்று அதிகமான ஹதீஸ்களில் இடம்பெற்றிருப்பதைப் போன்று 9,10, ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது.

 

3. ஆஷூரா தினத்தில் மட்டும் நோன்பு நோற்பது இது அனுமதிக்கப்பட்டது. வெறுக்கப்பட்டது அல்ல. நூல் : இமாம் இப்னுல் கையூம் (ரஹீமஹுல்லாஹ்வின்) ஸாதுல் மஆத் 2/72 , ஃபத்ஹுல் பாரி 4/246

 

18. ஆஷூரா தினம் வெள்ளிகிழமை அல்லது சனிக்கிழமை நாட்களில் அமைந்து விட்டால் இந்த நாட்களில் தனித்து நோன்பு வைப்பது தடுக்கப்பட்டதோ வெறுக்கப்பட்டதோ அல்ல.

வெள்ளிகிழமை மாத்திரம் தனித்து நோன்பு வைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்பது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் பலஹீனமானவை என அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். இந்த நோன்பு அந்த வகையை இது சாராது. மார்க்கம் அனுமதித்த நோன்பே நோற்கப்படுகிறது.

ஃபத்ஹுல் பாரி 4/234, ஃபதாவா இப்னு பாஸ் 15/414, ஃபதாவா இப்னு உஸைமீன் 20/58

 

19. ரமழானில் கடமையான நோன்பு விடுபட்ட ஒருவர் ஆஷூரா தினத்தன்று உபரியான நோன்பை நோற்பதில் எவ்வித தடையும் இல்லை. அது அனுமதிக்கப்பட்டதே. பின்னர் அவர் கடமையான விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளலாம்.

 

20. ரமழானில் விடுபட்ட நோன்பை ஆஷூரா தினத்தன்று நோற்பதாக நிய்யத் வைத்து நோற்றாலும் விடுபட்ட நோன்பு சரியாகிவிடும்.

 

அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள் ஆஷூரா நோன்பின் கூலியை ஆதரவு வைத்தவராக அவர் நோற்றாலும் ஆஷூரா மற்றும் கடமையான நோன்பு இரண்டின் கூலியும் அவருக்கு கிடைத்துவிடும்.

அல்லாமா அஹ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹீமஹுல்லாஹ்) தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். ஃபதாவா இப்னு உஸைமீன் 20/48

 

கழாவான அந்த நோன்பை ஆஷூரா அல்லாத நாட்களில் நோற்ப்பது சிறந்தது. ஆஷூரா தினத்தின் நோன்பை உபரியான நோன்பின் நிய்யத்திலும் பின்னர் கழாவான நோன்புகளை நோற்பதின் மூலம் இரண்டுவிதமான சிறப்பையும் அடைகிறார்.

 

21. முஹர்ரம் மாதத்தின் 9,11 ஆகிய தினங்களில் ரமழானில் விடுபட்ட நோன்பை நோற்பது கூடும். ஆஷூரா தினத்தின் நோன்பை உபரியான நிய்யத்தில் நோற்கும் பட்சத்தில் கடமையான மற்றும் உபரியான ஆகிய இரண்டு நோன்பின் கூலியையும் அவர் அடைகிறார் .

 

22. யார் பயணியாக இருக்கிறாரோ சிரமம் இல்லையெனில் அவர் ஆஷூரா நோன்பை நோற்பது குற்றமில்லை

 

23. மாதவிடாய் , பிரசவ தீட்டுடைய பெண்கள் நோயாளி ஆகியவர்களுக்கு ஆஷூரா தினம் தவறி விட்டால் வேறு நாட்களில் அதை கழா செய்ய முடியாது. காரணம் இந்த நோன்பு குறிப்பிட்ட நாளிலே நோற்க வேண்டும். எனவே அந்த நாள் தவறிவிட்டால் அதன் சட்டமும் இல்லாமலாகிவிடுகிறது.

ஃபதாவா இப்னு உஸைமீன் 20/43

 

24. ஒவ்வொரு ஆண்டும் வழமையாக இந்த ஆஷூரா நோன்பை நோற்று வருகின்ற ஒருவர் நோய், மாதவிடாய் , பால்குடி போன்ற காரணங்களினால் தவறிவிடும் பட்சத்தில் அவருடைய (நிய்யத்) எண்ணத்திற்கு ஏற்ப கூலி வழங்கப்படும்.

அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்!

(நூல் : புகாரி : 2996)

 

25. ரமழானின் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பாக ஆஷூரா நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது பின்னர் விரும்பத்தக்கது என்று சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘(ஆஷுராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டுவிட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 1592. ஸஹீஹ் முஸ்லிம் 1125

 

மற்றொரு அறிவிப்பில் இது ஆஷூரா தினம் இந்நாளில் நோன்பு நோற்க அல்லாஹ் கடமையாக்கவில்லை. நான் நோன்பாளி உங்களில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். யார் நோன்பை விட்டுவிட விரும்புகின்றார்களோ அவர் விட்டுவிடட்டும் என்று நபி ( ﷺ ) கூறினார்கள் .

நூல் புகாரி 2003, முஸ்லிம் 1129

26. அரஃபா நாள் ஆஷூரா நாளை விட சிறந்தது. அரஃபா நோன்பு இரண்டு வருட பாவங்களுக்கு பரிகாரம்

இதன் மதிநுட்பங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

ஆஷூரா தினம் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோடு தொடர்புடையது. அரஃபா தினம் முஹம்மத் ( ﷺ ) அவர்களோடு தொடர்புடையது என்ற காரணத்தினால் பறக்கத் பெறுகிறது. இது நமது மார்கத்தின் தனித்தன்மைகளில் ஒன்று என்பதனால் மேலும் சிறப்பு பெறுகிறது.

 

அரஃபா தினம் இரண்டு புனித மாதங்களுக்கு மத்தியில் உள்ள புனித மாதத்தின் ஒரு நாள். (துல் ஹஜ்) அதற்கு முந்தைய மாதம் (துல் கஃதா ) புனிதமாதம் , அதற்கு பிந்தைய மாதம் (முஹர்ரம்) புனித மாதம் இது ஆஷூரா தினத்திற்கு மாற்றமாக உள்ளது.

ஆதார நூல் : பதாயிஉல் ஃபவாயித் 4/211, ஃபத்ஹுல் பாரி 4/249

 

மேலும் இதன் மதினுட்பங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

 

ஆஷூரா தினத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிரியிடமிருந்து வெற்றியைக் கொடுத்து காப்பாற்றியதன் மூலம் அல்லாஹ் தனது அருட்கொடையை பரிபூரணப்படுத்தினான்.

 

அரஃபா தினத்தில் முஹம்மத் ( ﷺ ) அவர்கள் மீது தூதுத்துவத்தை முழுமை படுத்தியதன் மூலம் அல்லாஹ் தனது அருட்கொடையை பரிபூரணப்படுத்தினான்.

 

27. ஹதீஸில் வந்திருப்பதைப் போன்று ஆஷூரா நாள் அல்லாஹ்வின் நாட்களில் மகத்தான ஒரு நாள்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக 14:05

 

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் அவர்களை ஈமான் கொண்ட மக்களையும் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தார்களையும் அல்லாஹ் மூழ்கடித்தான். எனவே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) இந்த அருட் கொடைக்கு நன்றி செலுத்தும் விதமாக நோன்பு நோற்றார்கள் நபி மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுன்னத்தான இந் நோன்பை நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 3943, முஸ்லிம் 1130

 

28. முஸ்லீம்களில் சிலர் சிலருக்கு மத்தியிலுள்ள ஆழமான தொடர்பை ஆஷூரா தினம் நினைவூட்டுவதாக உள்ளது.

காலத்தால் மாறுபட்டாலும் இடத்தால் தூரமானாலும் முஸ்லீம்களுக்கு மத்தியில் உள்ள ஈமானிய சகோதரத்துவ உணர்வை இது பிரதி பலிக்கிறது. அல்லாஹ்வின் மீதும் அவன் தூதரின் மீதும் முஃமினான அடியார்களுக்கு மத்தியிலான நேசத்தை உறுதிபடுத்துகிறது.

 

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர் 9:71

 

29. ஆஷூரா தினம் நன்றிக்குரிய நாள் எதிரியின் மூலமாக ஏற்படும் சிரமங்களை அகற்ற அல்லாஹ்வின் உதவி தேடப்பட்ட நாள்

மூஸா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களிடம் கூறப்பட்டது.

“நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். 26:61

அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார். 26:62.

 

30. ஆஷூரா தினத்தை புனிதப் படுத்துவது ஜாஹிலிய்யா காலத்திலும் அறியப்பட்டதாகவே இருந்தது.

 

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவிகிறார்கள்

முஹர்ரம் 10வது நாளை கண்ணியப்படுத்தக் கூடியவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் கஃபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாகவும் இருந்தது.

நூல் : புகாரி 1893, 1592, 1125

 

31. ஆஷூரா தினத்தை நோன்பு நோற்பதின் மூலமாக கண்ணியப்படுத்த வேண்டும்.

எதிரி அழிக்கப்பட்டு வெற்றி கிடைத்ததற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். அல்லாஹ் தன் எதிரிகளை தன் தூதரின் எதிரிகளை என்ன செய்தான் என்பதை நாம் இந்நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 

32. ஆஷூரா தினத்தில் சில மக்களிடத்தில் அதிகமான பித் அத்கள் காணப்படுகிறது.

 

ஹுஸைன் (ரழி) கொல்லப்பட்ட அந்த நாளை சில பித் அத்வாதிகள் (ஷியாக்கள்) சடங்கிற்குரிய நாளாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்நாளில் கவலைகளை வெளிப்படுத்துவதும், ஒப்பாரி வைப்பதும், கன்னத்திலும் மார்பிலே அடித்துக் கொள்வதும், சட்டையை கிழித்துக் கொள்வதும் இவ்வாறன செயல்களில் ஈடுபடுகின்றனர். அல்லாஹ்வின் மார்கத்தில் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக இது ஜாஹிலிய்யா கால செயல்கள்.

 

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள் துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.’

நூல் : புகாரி 1294, முஸ்லிம் 103

 

சோதனையின் பொது ஒரு முஸ்லிம் பொறுமையை கைபிடிக்க வேண்டும். அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்க்க வேண்டும் அல்லாஹ்வின் விதையை பொருந்திக் கொள்ள வேண்டும்.

 

33. இந்த நாளில் அதிகமான மக்களின் சிந்தனைகளில் ஷைத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறான் முஃமின்களின் பாதையை விட்டும் ஷைத்தான் அவர்களை தூரப்படுத்துகிறான்.

 

இந்த நாளை சிலர் துக்க நாளாக மாற்றிவிட்டார்கள் இன்னும் சிலர் இசைகளை இசைத்து திருவிழாவாக மாற்றிவிட்டனர். இந்த நாளை கண்ணியப்படுத்தி இனிப்பு, மற்றும் உணவு பதார்த்தங்களை செய்து யூத, கிறிஸ்தவர்களுக்கு ஒப்பாக மாற்றிவிட்டனர். இவை அனைத்தும் மார்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவையாகும்.

 

அல்லாஹ்வின் அன்பையும் திருப் பொருத்தத்தையும் பெற்று வாழுகின்ற அடியார்களில் ஒருவராக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌஸி

அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply